ரேவதி பாலு/குழந்தை வித்வான்!

அனுவின் ஒரே மகன் பத்து வயது அருண். சிறு வயதிலிருந்தே கையில் கிடைக்கும் எல்லாவற்றிலும் தட்டித் தட்டி ஒலி வரவழைப்பது அவனுக்கு பிடித்தமான விஷயம். அவனுக்கு தாள வாத்தியத்தில் ஆர்வம் இருந்தது புரிய வர, அவனைத் தகுந்த குருவிடம் சேர்த்து மிருதங்கம் கற்றுக் கொள்ள வைத்தார்கள். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததுமே மிருதங்க வாத்தியர் வீட்டுக்கு சைக்கிளில் சென்று விடுவான். ஆயிற்று! இதோ நன்றாகக் கற்றுக் கொண்டு, இன்று மிருதங்க அரங்கேற்றம் நடக்கிறது.
அரங்கேற்ற நிகழ்ச்சியில் ஒரு பிரபல மூத்த வித்வான், அவர்கள் குடும்பத்திற்கு மிகவும் வேண்டியவர், பாட ஒத்துக் கொண்டார். பெரிய மிருதங்க வித்வானை போல அங்க அசைவுகளுடன் அருண் வாசித்ததை எல்லோரும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்த தனி ஆவர்த்தனம் ஆரம்பமாயிற்று.
சிரித்த முகத்துடன், சதுஸ்ர நடையில் கோர்வைகள் போட ஆரம்பித்த அருண், பிறகு நடை மாற்றி, ஃபரன்கள் பொறி பறக்க, மோஹராக்கள் அழகுற மின்ன, அநாயஸமாக வாசித்து முடிக்க, ஒரே கைதட்டல் மழை!
கச்சேரி முடிந்ததும் உறவினர்கள், நண்பர்கள் ஒவ்வொருவராக வரிசையில் நின்று மேடையேறி மாலை மரியாதைகள், பரிசுகள் தந்து பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அருண் புன்சிரிப்பு மாறா முகத்துடன் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டிருப்பதை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அனு.
“அட! தோற்றத்திலேயே ஒரு வித்வானோட கம்பீரம் வந்திருக்கே நம்ப அருணுக்கு!” அனுவின் சகோதரன் சிலாகிக்க, மேடையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த அருணையே உற்றுப் பார்த்த அனுவுக்கு ஒரு நொடி மனம் கலங்கிப் போனது.
‘அம்மா, அம்மா!’ என்று நொடிக்கு நூறு தடவை கூப்பிட்டுக் கொண்டு என்னையே சுற்றிக் கொண்டிருந்த என் குழந்தை அருண் காணாமல் போய் விட்டானா? மேடையில நிற்கிற இந்த மிருதங்க வித்வான் எனக்கு ரொம்ப அன்னியமாகத் தோன்றுகிறானே?’
விழா முடிந்து கூட்டம் மெதுவாகக் கலைய ஆரம்பித்தது. அரங்கத்தில் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட அறையில் விழாவிற்காக தான் கொண்டு வந்திருந்த சாமான்களை சரி பார்த்து எடுத்து வைத்துக் கொண்டிருந்த அனுவின் இடுப்பை பின்புறமிருந்து ஒரு கரம் வளைக்க, காதருகே ஒரு அலறல், “அம்மா!” என்று.
“சாயந்திரம் சாப்பிடக் குடுத்தியே, அந்த கேசரி மிச்சமிருந்ததே? எங்க வச்சிருக்கே?”
அவள் பதிலை எதிர் பாராமல், அந்த அறையில் கேசரி வைத்திருந்த எவர்சில்வர் சம்புடத்தை அருண் தேட ஆரம்பிக்க,
“அட என் சமர்த்துக் குட்டீ!” என்று திரும்ப குழந்தையாக மாறிய அந்த மிருதங்க வித்வானைக் கட்டியணைத்து முத்தமிட்டாள் அனு.

One Comment on “ரேவதி பாலு/குழந்தை வித்வான்!”

Comments are closed.