
90 களின் தொடக்கத்தில் சுஜாதா சென்னைக்குடி பெயர்ந்து விட்டார். ஆழ்வார்ப்பேட்டையில் வீடு. ஒரு தெரு தள்ளி கணையாழி கி கஸ்தூரிரங்கனின் இல்லம், மற்றும் கணையாழியின் ஆபீஸ். கிட்டத்தட்ட கௌரவ ஆசிரியர் போல கணையாழி இதழை சுஜாதா மேற்பார்வையிட்டார். அவ்வப்போது இபாவும் வருவார். இந்த மூன்று ஜாம்பவான்களும் பொடியனான என்னையும் சில சமயம் ஆட்டத்தில் சேர்த்துகொள்வதுண்டு- ஒப்புக்கு சப்பாணியாகத்தான். எனக்கு பாதி நேரம் “ஆ”வென்று வாயைத்திறந்து கொண்டு இவர்களின் பேச்சைக்கேட்பதிலேயே நேரம் போய்விடும்.
ஒருமுறை என் மேல் பரிதாபப்பட்டு கி க ஒரு புஸ்தகத்தைக்கொடுத்து, “இத வேணா ரெவ்யு பண்ணுங்களேன்” என்றபோது, சென்னை மாநகரமே துல்லியமாக அலம்பிவிட்டார்போல இருந்தது. அடுத்த இதழ் கணையாழியில் அது வெளிவந்ததும், சுஜாதா என்னிடம், “ரெவ்யூக்குப்போய்ட்டியா” என்று கிண்டலடித்து, “நன்னா இருந்தது’ என்று சொன்னதை இன்னும் காட்சியும் வசனமும் மாறாமல் freeze செய்து வைத்திருக்கிறேன்.
கட்டையோடுதான் வேகும்.
”அவனிடம் கொடுத்து ஒரு ரிவ்யூ எழுதச்சொல்லுங்கள்” என்று வாத்யார் ரெகமெண்டேஷன் – எனக்கு பின்னால்தான் தெரியும்!
அப்போது மாதமொருமுறை கிக வீட்டில் கணையாழி கவிதைக்கூட்டம் நடைபெறும். அது ஒரு அபார தினம். மாடியில் அசௌகரியமாக சுருங்கி சுருங்கி பின் பாகத்தை அறுத்து எடுக்கும் ஜமக்காளத்தில் பாட்டரி மைக்குடன் சுஜாதா, கிக மற்றும் கணையாழியில் வெளிவந்த கவிதைகளின் கலைஞர்கள் கூடுவார்கள். ஓரிரு முறை ஞாக்கூத்தனும் கலந்து கொண்டிருக்கிறார். அழகியசிங்கர், லட்ச்ஹுமிகுமாரன் ஞானதிரவியம், சி. ஸ்ரீதரன், சுஜாதா விஜயராகவன் போன்ற கணையாழிக்கவிஞர்கள் கலந்து பார்த்திருக்கிறேன்.
சுஜாதா எடுக்கும் பாடம் அட்சர லட்சம் பெரும்.
Humour at his best!
“நீங்க ரொம்ப constipation ல எழுதினா மாறி இருக்கே “
“இந்த மலர், இயற்கை, மங்கை இதெல்லாம் சங்க காலத்தோட ஓவர். இனிமே try பண்ணாதீங்க”
“இந்த முப்பத்தாறு வரி கவிதையில் முப்பத்தைந்து வார்த்தை விரயம்”
செமத்தியா கோட்டா பண்ணுவார். கூட்டம் முடிந்த பின்பு, அந்தக்கவிஞருடன் அன்னியோன்னியமாக வாத்சல்யத்துடன் பேசுவார். புரிய வைப்பார்.
ஒரு கூட்டத்தில் என் அத்தை கவிதை படிக்கப்பட்டது இன்றும் எனக்கு பெருமை சேர்க்கும் விஷயம்!
கணையாழி ஆஃபீசின் மாடியில் வெள்ளை வேட்டி வெள்ளை கதர் சட்டையோடு கி க உட்கார்ந்திருப்பார். பல முறை போய் பேசி இருக்கிறேன். அதிகம் சுஜாதா பற்றித்தான். அவன் என்றுதான் விளிப்பார். ஆனால் சுஜாதாவின் மேல் மிகுந்த ப்ரேமை உடையவர். 6 9 61 போல் ஒரு கதை இதுவரை படித்ததே இல்லை என்பார். கணையாழி சரித்திரத்திலேயெ மிக அதிகம் கடிதங்கள் வந்த கதை அது என்றார்.
”கஸ்தூரிரங்கன் போல ஒரு ஆசிரியர் கிடைத்ததற்க்கு நான் போன ஜென்மத்தில் யாரோ ஒரு அந்தணருக்கு ஆட்டுக்குட்டி தானம் செய்திருக்க வேண்டும்” என்று ஒரு முறை சுஜாதா எழுதியிருந்தது நினைவில் இருக்கலாம்.
கணையாழிக்காக இத்தனை செய்திருக்கிறாரே, ஆனால் அவர் அது பற்றி பேசுவதைக்கேட்டால் ஒரு பற்றற்ற தன்மைதான் தெரியும். இமோஷனல் சைடே இல்லாமல் ஒரு வித மூன்றாம் மனிதத்தன்மை யோடுதான் கணையாழி பற்றி பேசுவார்.
ஒரு சமயம் பெண் எழுத்தாளர் பற்றின சர்ச்சை ஒன்றைப்பற்றி நான் ஏதோ சொல்லப்போக, “அலையாதே வம்புக்கு” என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, “ எல்லா இஷ்யூவுக்கும் இன்னொரு பக்கம் உண்டு. அது தெரியாமல் ஜட்ஜ்மெண்டலாக ஏதும் பேசக்கூடாது” என்று சொன்னதை நான் கடைசி வரை என் ஆஃபீசில் கடைபிடித்தேன்.
