அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் பற்றி சில குறிப்புகள் 2

27.07.2016 அன்று காலையில் எழுந்தவுடன் பொழுது சரியாக இல்லை என்று தோன்றியது. ஞானக்கூத்தன் வீட்டிலிருந்து தொலைப்பேசி வந்தது. நான் திகைத்துப் போய் தொலைப்பேசியை எடுத்தேன். காலை ஐந்தரை மணிக்கு ஒரு தொலைப்பேசி வந்தால் அது சற்று திகைப்பாகத்தான் இருக்கும் ஞானக்கூத்தன் நேற்று இரவு இறந்து விட்டார் என்று துக்க செய்தியைச் சொன்னார்கள். என்னால் நம்ப முடியவில்லை. “நீங்கள் தயவுசெய்து எல்லோருக்கும் தகவல் சொல்லி விடுங்கள்,” என்றார்கள்.
ஞானக்கூத்தன் இறக்கும்போது அவருக்கு வயது 78. அவரைப் பார்த்தால் அப்படித் தெரியாது. மிடுக்காகவும் கம்பீரமாகவும் தோற்றம் தருபவர். சமீபத்தில்தான் அவர் மலாயிலிருந்து சென்னைக்குத் திரும்பி வந்திருந்தார். வந்தவுடன் எனக்குப் தொலைப்பேசி செய்தார் : “நான் இந்தியாவிற்கு வந்துவிட்டேன்,”என்று. எப்போதும் அவர் தொலைப்பேசியில் பேசும்போது இரண்டு மூன்று வார்த்தைகள் பேசிவிட்டு வைத்து விடுவார்.
புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு நான் கொண்டு வந்த ஒரு கவிதைத் தொகுப்பின் வெளியீட்டுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேச முடியுமா என்று கேட்டேன். அவர் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். ஆனால் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. உடல்நிலை சரியில்லாமல் திருவல்லிக்கேணியில் உள்ள சக்தி மருத்துவமனையில் சேரும்படி நேர்ந்துவிட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேரும் ஆபத்தான நிலை ஏற்பட்டு விட்டது. நான் ஏற்பாடு செய்த கூட்டத்திற்குக் கலந்துகொள்ள முடியவில்லை என்பதை அவருடைய புதல்வன் மூலம் தெரிவித்தார். அந்த நிலையில் அவர் தெரிவிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. ஆனால் ஞானக்கூத்தன் வித்தியாசமானவர்.
பெரும்பாலான நேரம் அவர் கவிதையைத் தவிர வேற எதுவும் சிந்திக்க மாட்டார். மேலும் அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தார். அவரை இலக்கியக் கூட்டங்களில் பேச எல்லோரும் அழைத்துக் கொண்டே இருப்பார்கள். தவறாமலும் அவர் கலந்து கொள்வார்.
கூட்டங்களில் முறையாகப் பேசக் கூடியவர். அவர் ஞாபகசக்தி அபாரம். ஒரு கவிதைத் தொகுதியை அவர் படித்தால் அந்தத் தொகுதியில் உள்ள நல்ல தன்மையை எடுத்துஇயம்புவதில் வல்லவர்.
சில கவிஞர்களின் கவிதைத் தொகுதியைப் பார்த்தவுடன், அந்தத் தொகுதியைப் பற்றி என்ன சொல்லிவிடப் போகிறார் என்று தோன்றும். ஆனால் சரியாகச் சொல்லி விடுவார். அவர் மூலம் பல கவிஞர்கள் அறிமுகம் ஆகியிருக்கிறார்கள். எப்போதும் அவரைச் சுற்றி இளம் கவிஞர்கள் கூட்டம் இல்லாமல் இருக்காது. ஒரு மூத்த கவிஞர் என்ற கர்வம் அவரிடம் எப்போதும் இருந்ததில்லை.
ஒரு சாரார் அவர் கவிதைகளைப் படித்துப் பாராட்டிக் கொண்டே இருப்பார்கள். இன்னொரு சாரார் அவரை திட்டவும் செய்வார்கள். அவர் எதற்கும் கவலைப்பட மாட்டார். எல்லாவற்றுக்கும் பதிலும் சொல்லாமல் இருக்க மாட்டார்.
ஒரு முறை பிரமிள் என்ற கவிஞர் நான் பணிபுரியும் அலுவலகத்திற்கு என்னைப் பார்க்க வந்திருந்தார். அப்போது இன்னொரு கவிதை எழுதும் நண்பரும் தற்செயலாக வந்திருந்தார். அந்த நண்பரைப் பார்த்தவுடன், ஞானக்கூத்தனையே பார்த்ததுபோல் பிரமிகளுக்குத் தோன்றி விட்டது. ஞானக்கூத்தன் தமிழ் என்ற பெயரில் ஒரு கவிதை எழுதியிருந்தார். அந்தக் கவிதை இப்படி எழுதியிருக்கும்.


எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால்
பிறர்மேல் அதைவிட மாட்டேன்

என்னுடைய கவிதை எழுதும் நண்பரைப் பார்த்தவுடன், பிரமிள் சத்தமாக 'அதென்னய்யா தமிழ்தான் மூச்சு...நான் பிறர் மேல் மூச்சுவிடத்தான் விடுவேன்’என்று சத்தமாகப் பேசினார்.  இதைக் கேட்கும்போது எனக்குச் சங்கடமாக இருந்தது.  பிரமிள் என்னைப் பார்க்க வந்தால் இப்படியெல்லாம் பேச மாட்டார்.
ஞானக்கூத்தன் இப்படித்தான் அவர் கவிதைகள் மூலம் பலருடைய எதிர்ப்புக்கு ஆளாகியிருக்கிறார்.  ஆனால் உண்மையிலேயே தமிழர்கள் பெருமைப்படுகிற உண்மையான கவிஞர் அவர்.  இன்று இந்தியா முழுவதும் எடுத்துக்கொண்டாலும் இப்படிப்பட்ட ஒரு கவிஞரைப் பார்ப்பது அரிது. 
சக்தி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குத் திரும்பிய ஞானக்கூத்தனை தொலைப்பேசியில் விசாரித்தேன்.    
      "உங்களைப் பார்க்க வரட்டுமா?" என்று கேட்டேன்.  
      "வரவேண்டாம்.  என்னை ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள்.  நிமோனியாவின் ஆரம்ப நிலை," என்று சொன்னார்.  அதைக் கேட்கும்போது எனக்கு வருத்தமாக இருந்தது. பிரமிளும் நிமோனியா நோயால்தான் இறந்தார்.
டிஸ்கவரி புத்தக நிலையத்தில் ஞானக்கூத்தனை ஒரு கூட்டத்தில் பேசுவதற்காகப்  பார்த்தபோது, அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.  இருமிக் கொண்டே இருந்தார்.  அவர் பக்கத்தில்தான் நானும் அமர்ந்திருந்தேன்.  கூட்டத்தின் பாதியில் அவர் உடல்நிலை சரியில்லை என்று எழுந்தும் போய்விட்டார்.  அவர் பொதுவாக அப்படியெல்லாம் செய்ய மாட்டார்.  எந்தக் கூட்டத்திலும் அவர் கடைசி வரை இருப்பார்.
சக்தி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்து ஒரு மாதம் ஆகியிருக்கும், ஒருநாள் அவரிடமிருந்து தொலைப்பேசி வந்தது. ‘அப்பா எப்படி இருக்கிறார்,’என்று கேட்டு.  

“அப்பா படுத்தப் படுக்கையாக இருக்கிறார். வயது 94,”என்றேன். என் அப்பாவிற்கு ஞானக்கூத்தன் கவிதைகளைப் பிடிக்கும். நான் கொண்டு வந்த அவர் கவிதைத் தொகுதியிலிருந்து சில கவிதைகளை ஞானக்கூத்தனிடமே படித்துக் காட்டியிருக்கிறார்.
எப்போது அவரைப் போய்ப் பார்க்கப் போவது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில்தான் அவர் வீட்டிலிருந்து தொலைப்பேசி வந்தது. ஞானக்கூத்தனை மயிலாப்பூரிலுள்ள இசபெல்லா மருத்துவமனையில் சேர்த்து விட்டதாக. என்னையும் ராஜகோபலனையும் (ஆங்கில பேராசிரியர்) பார்க்க விரும்புவதாக. நாங்கள் இருவரும் ஒருநாள் மாலையில் மருத்துவமனைக்குச் சென்றோம். அப்போது அவர் ஐசியூவில் இருந்தார். வயிறு வீக்கமாக இருந்ததாலும், மூச்சுவிடச் சிரமமாக இருந்ததாலும் அவரைச் சேர்த்ததாகச் சொன்னார்கள். வார்டில் பளிச்சென்று அதே புன்னகையுடன் காட்சி அளித்தார். எனக்கு அவரை அங்குப் பார்க்க வருத்தமாக இருந்தது. படுக்கையிலிருந்தபடியே ’அப்பா எப்படி இருக்கிறார்?’என்று கேட்டார். அவர் கேட்ட விதம் எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. ஒருவர் அந்தச் சூழ்நிலையிலும் விசாரிக்கிறாரே என்று தோன்றியது.
எனக்கு என்னமோ அவர் அந்த இடத்திலிருந்து சாதாரண வார்டிற்கு வந்து திரும்பவும் வீட்டிற்கு வந்து விடுவார் என்றுதான் தோன்றியது. அவரைப் பார்த்துவிட்டு வந்தபின்னும் அடிக்கடி அவர் குடும்பத்தாரிடம் அவரைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தேன். வைதீஸ்வரன், அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்களிடம் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதைச் சொல்லவும் செய்தேன்.
ஆனால் ஒருவரை மருத்துவமனையில் போய்ப் பார்க்கும் தர்மசங்கடமான நிலையை நான் யோசிக்காமலில்லை.
வயிற்றில் ஏற்பட்ட ஒரு தொற்று நோயால் அவருடைய முக்கிய அவயங்கள் செயலிழக்கத் தொடங்கி விட்டன. என்னால் நம்பவும் முடியவில்லை. அவர் இறந்தும் விட்டார்.
எனக்கும் அவருக்கும் 40 ஆண்டுகளாகப் பழக்கம். அவரை முதலில் சந்தித்தபோது அவருடைய கவிதைகள் எல்லாம் முழுதாக தொகுக்கப்படாமலிருந்தது. . அலுவலகம் போய்க் கொண்டிருக்கும்போது அவர் கவிதைகளை ரசித்துக் கொண்டே போவேன். அவர் கவிதைகளைப் படிக்கும்போது ஒரு விசித்திரமான உணர்வு ஏற்படும்.
ஞானக்கூத்தன் கவிதைகள் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு பெரிய புத்தகம் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தேன். அதற்காக எல்லா முயற்சியும் செய்து ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற புத்தகத்தைக் கொண்டு வந்தேன். டிசம்பர் 1998ல் அத் தொகுப்பைக் கொண்டுவந்தேன். அத் தொகுதியில் சில கவிதைகளைத் தீபம் நா பார்த்தசாரதியின் புதல்வர் வீட்டிற்குச் சென்று பழைய தீபம் பத்திரிகையிலிருந்து எடுத்தேன். அத் தொகுப்பில் ஞானக்கூத்தன் சில ஓவியங்களையும் வரைந்திருப்பார். அதையும் கொண்டு வந்தேன்.
ஞானக்கூத்தன் எப்போதும் ஒன்று சொல்வார். எழுத்தாளர்களைக் கொண்டாட வேண்டும் என்று. யானை மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்துக்கொண்டு போக வேண்டுமென்று. அப்படி அழைத்துக் கொண்டு போக வேண்டியவர்தான் ஞானக்கூத்தன். இன்று உலகத்தில் எழுதப்படுகிற கவிதைகளுடன் அவர் கவிதைகளை தாராளமாக ஒப்பிடலாம். அந்த அளவிற்குச் சிறப்பாகக் கவிதைகள்
எழுதிக் குவித்தவர். அவருடைய எந்தக் கவிதையை எடுத்துப் படித்தாலும் படிப்பவரை நோக்கி அந்தக் கவிதை நகர ஆரம்பிக்கும். சிந்திக்க வைக்கும். அவர் கவிதைகளை ஒரு முறைக்குப் பல முறைகள் எடுத்துப் படித்துக் கொண்டே இருக்கலாம். அந்த அளவிற்குச் சிறப்பாக எழுதியிருப்பார். தமிழில் அவர் எழுதுகிற உரைநடையே வித்தியாசமாகவும் இலக்கியத் தரமாகவும் இருக்கும். .

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் பற்றி சில குறிப்புகள் – விருட்சம் நாளிதழ்