
எங்கே போகிறாய் பசுவே?
எங்கள் தலைவர் எங்களை மீட்டார்
ஊருக்குப் போகிறேன் பையா.
ஊருக்குள் போகும் மார்க்கம்
நினைவில் உள்ளதா பசுவே?
கழனியில் எத்தனை நடவுகள்
எத்தனை அறுப்புகள் நடந்ததென்றாலும்
வளர்த்தவர் மார்க்கம் மறக்குமோ பையா?
உன்னைத் திருடிச் சென்றவர் உனக்குக்
காலம் தவறாமல் பசும்புல் தந்து
கழுநீர் காட்டிக் காத்தாரோ பசுவே?
எல்லாம் கிடைத்தன என்றாலும்
மனதில் மகிழ்ச்சி இல்லையே பையா!
கரை புரண்டோடும் காவிரி ஆற்றில்
ஆபத்தில்லாத துறையில் இறங்கித்
தண்ணீர் பருகி அப்புறம் போவாய் பசுவே
அப்பா அம்மா அண்ணன் தம்பி
அக்காள் தங்கை மாமன் அத்தை
ஆருடம் சொன்ன வள்ளுவன் என்று
ஊரின் எல்லையில் பலபேர் உன்னை
எதிர்பார்த்திருக்கின்றார் பசுவே
பசுவே வா.
கழுத்து மணிகள் அசைந்து ஒலியிட வா
இன்றை காலையின் மங்கல ஓசை
உனது மணிகளின் ஓசைதான் பசுவே.
ஞானக்கூத்தன்/சுசீலாவும் பிறரும் – விருட்சம் நாளிதழ்
ஞானக்கூத்தன்/பட்டாம்பூச்சி – விருட்சம் நாளிதழ்
ஞானக்கூத்தன்/கணுக்காலில் கொஞ்சம் வீக்கம் – விருட்சம் நாளிதழ்

One Comment on “ஞானக்கூத்தன்/பால் பல ஊறுக”
Comments are closed.