ஞானக்கூத்தன்/கடுகளவு இருள்

நான்கு சக்கர வண்டி ஒன்றும்
இரண்டு சக்கர வண்டி ஒன்றும்
தெருவில் மோதிக் கொண்டன.
அப்போது இரவு மணி ஒன்பது.
நான்கு சக்கர வண்டிக்காரர்
வண்டியை விட்டு வெளியே வந்து
இரண்டு சக்கர வண்டியைத் திட்டினார்.
அவரும் பதிலுக்குத் திட்டினார்.
தனக்குப் பெரிய பெரிய ஆளைத் தெரியும் என்று
நான்கும் இரண்டும் சொல்லிக் கொண்டன.
நான்கு சக்கரம் போலீசுக்கு போன் செய்ய
இரண்டு சக்கரமும் போன் செய்தது.
நேரம் ஆயிற்று. போலீசார் வரவில்லை.
நின்றிருந்த ஐந்தாறு பேர்கள் போய்விட்டார்கள்.
இரண்டு சக்கரம் போய்விட்டது.
நான்கு சக்கரமும் போய்விட்டது.
வேடிக்கை பார்த்தவர் விட்டெறிந்த
சிகரெட்டில் தீ அணைந்தது.
தெருவில் கடுகளவு இருள் கூடிற்று.

ஞானக்கூத்தன்/பால் பல ஊறுக – விருட்சம் நாளிதழ்