
எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர்
நாற்பது வயதுக்காரர்
ஊழல் ராமசாமித் தெருவில் சற்று
பெரியதாய் க்ளினிக் வைத்திருந்தார்
ஒரு மின்விசிறி
இரண்டு பெஞ்ச்சுகள்
இரண்டு வரிசைகள்
டோக்கன் கொடுக்க ஒரு மடந்தை
அவர் சொன்னார்
நோயாளிகள் சிலபேர் அவரைத்
தொலைபேசியில் கூப்பிட்டுத் திட்டுவார்களாம்
படிச்சுதான் கிடைத்ததா டாக்டர் பட்டம் என்பார்களாம்
நீ சொன்ன மாத்திரையைத் தின்றதும்
வலது கணுக்காலில் வீக்கம் வந்ததென்பார்களாம்
ஆபரேஷனுக்குக் குறித்த நாளை
மாற்றச் சொல்லிக் கேட்டுக் கொள்வார்களாம்
ஏனென்று கேட்டால்
நாலு சாமியைக் கும்பிட்டால்தானே
உங்கள் கையில் ஆபரேஷன் செய்யலாம்
என்று திருப்பதி பயணத்தைக் கூறுவார்களாம்
டாக்டர் முன்பு உட்கார்ந்திருந்தேன்
வலது கணுக்காலில் வீக்கம் என்றேன்
என்றிலிருந்து வீக்கம் என்றார் டாக்டர்
நீங்கள் எடுத்துக் கொடுத்த மாத்திரையைத்
தொடங்கிய பிறகுதான் டாக்டர் என்றேன்.
