
குழந்தைப் பருவத்தில் எப்படிப்பட்ட
கனாக்களை நான் கண்டேன் என்பது
முற்றிலும் மறந்துவிட்டது.
எனது குழந்தை நண்பர்கள் என்னிடம்
எந்தக் கனவையும் சொன்னதில்லை
ஏதோ ஒரு முறை ஒரு கனவை
விளக்கு வைக்கும் நேரம்
அம்மாவிடம் சொன்னேன். என் வாயை
ஒற்றை விரலால் அம்மா மூடினாள்
பல கனவுகள் நைந்து கிழிசலாகி
மறதிக் காற்றில் பறந்து விட்டன.
அப்புறம் நான் எனது கனவுகளில்
ரெயில் நிலையங்களில் நின்று கொண்டிருந்தேன்
சில சமயம் பேருந்து நிலையங்களில் இருப்பேன்
ஒரு கனவில் கையில் ஒரு தாளுடன்
யாரிடமோ விபரம் கேட்பேன். எனது
தாளைப் பறிக்க முயல்வார். நான் பயந்து
வீதியில் ஓட்டம் பிடிப்பேன். அவர் துரத்துவார்
விழித்துக் கொள்வேன்
எனது கனவுகள் அப்படி ஆகிவிட்டன
கனவை விட்டு வெளியே வருகிறேன்
நிம்மதி கொள்கிறேன். அவரால்
விழித்தபின் துரத்த முடியாதல்லவா?
ஞானக்கூத்தன்/கேள்வி – விருட்சம் நாளிதழ்

One Comment on “ஞானக்கூத்தன்/எனது கனவுகள்”
Comments are closed.