
வித்தியாசமான புதிய தொடர்
விளையாட்டாக சிலர் சிறுவயதில் தொடங்குகிற விஷயங்கள் அவர்களை வாழ்நாள் முழுவதும் கூடவே வந்து அந்த விஷயத்தில் பெரிய இடத்தில் அமர வைக்கும். இது சந்திரமௌலி எனும் நவீன விருட்சம் அழகியசிங்கருக்கு மிகவும் பொருந்தும்.
1978 நான் (மேற்கு மாம்பலத்தில் தற்போது இருக்கும் சாரதா ஸ்டோர் மாடியில் முருகன் டைப் ரைட்டிங் பள்ளி ஒன்று இருந்தது. அங்கே சொல்லித்தருகிற சொர்ணவேலு – இப்போது இல்லை – மிகவும் அழகான கையெழுத்தில் கவிதைகள் எழுதுவார். அவரும் சந்திரமௌலியும் நண்பர்கள்) கல்லூரி இளங்கலை படித்துக்கொன்டே கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். சொர்ணவேலு மூலம் மௌலி அவர்களின் தொடர்பு கிடைத்தது. அவர் ‘இளங்கவிஞர் இயற்றமிழ் மன்றம்’ என்று தொடங்கி என்னைப் போன்ற கவிஞர் போர்வையில் அலையும் இளைஞர்களுக்கு வாய்ப்பு தந்தார்.

அது மட்டுமா? போஸ்டல் காலனி இரண்டாவது தெரு எட்டாம் நம்பர் வீட்டின் அவுட் ஹவுசில் குடியிருந்த ஒரு புலவரிடம் எங்களை அழைத்துச் சென்று ‘மரபுக்கவிதை’ கற்றுக் கொள்ளச் செய்தார். (நான் சில நாட்களில் ஓடி விட்டேன் என்பது வேறு விஷயம்) ஒரு நாள் எங்களை தி நகர் தஞ்சாவூர் ரோடு வீட்டு மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றார். அங்கே நிறைய பேர் கவிதை வாசித்துக் கொண்டிருந்தனர்.. ஆளுக்கு ஒரு கவிதை எனும் விதியோடு. நேரமாகி விட்டது. அடுத்த முறை பார்க்கலாம் என்ற ஒருவரிடம் போராடி எங்களைக் கவிதை வாசிக்க வைத்தார் சந்திரமௌலி. அந்த கெக்கபிக்கே கவிதை பெரிய அளவில் அரங்கேறிய மகிழ்ச்சியில் புறப்பட்டோம். பின்னர் தான் தெரிந்தது அது வானவில் அமைப்பின் தலைவர் மந்திரச் சொற்களின் அதிபதி வவேசு அவர்கள் வீடு என்று.

பின்னர் ஒரு கையெழுத்துப் பிரதி இதழ் தொடங்கி ஒவ்வொரு மாதமும் ஒருவரைத் தயாரிக்கச் சொன்னார். (நானும் ஒன்று தயாரித்தேன்). அதன் பின்னர் எனக்கு அவர் தொடர்பு விட்டுப்போனது. நான் மும்பை மற்றும் மஸ்கட் என்று கிளம்பி விட்டேன். பின்பொரு நாள் கும்பகோணம் அருகே கோவிலுக்குச் சென்று திரும்பும் சமயம் பஸ் ஸ்டாப்பில் நின்றவரை அடையாளம் கண்டு பேசிய போது அவர் ரூரல் என்று அழைக்கப்படும் கிராமப்புற வங்கிக்கிளைக்கு மாற்றலாகி பணி புரிந்து கொண்டிருக்கிறார் என்று அறிந்தேன்.

‘என்னைப் பிடித்த பிசாசு எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்று கூறிய சந்திரமௌலி ‘அழகியசிங்கர்’ என்று இலக்கிய உலகில் அறியப்பட்டார். இன்று 70+ வயது தாண்டி விட்டது. இருந்தாலும் அவரின் உற்சாகம் குறையவில்லை என்பதை அவரை நன்கு அறிந்த டாக்டர் வ வே சு, ஹரிஹரன், குவிகம் கிருபானந்தன், டாக்டர் பாஸ்கர், பானுமதி, நாகேந்திர பாரதி போன்ற பலர் அறிவர். இலக்கியத்தை வணிகமா(க்)க நினைப்பவர்கள் இவரை எந்த ஆட்டத்திலும் சேர்த்துக் கொள்வதில்லை. அதைப் பற்றி இவரும் கவலை கொள்வதில்லை.
கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதுவதுடன் நவீன விருட்சம் எனும் இலக்கிய இதழை தனது தந்தையை விட, நெருக்கமாக இருந்த அசோகமித்திரன் மற்றும் பாக்கியம் ராமசாமி போன்றவர்களை விட உயிருக்கு உயிராக நேசித்து ஒரு யாகமாக தவமாக நடத்தி வருகிறார். ஒரு சிற்றிதழ் நடத்துவது விளையாட்டு வேலையில்லை. இப்போது 127, 128 ஆவது இதழ் என்று 30 ஆண்டுகளாக கொண்டு வருகிறார். அதில் பல பிரபல எழுத்தாளர்களை எழுத வைக்கிறார்.

இலக்கியக் கூட்டங்கள் நடத்துவது, நூல்கள் எழுதி வெளியிடுவது, நண்பர்களின் நூல்களை வெளிக்கொணர்வது, நூல்களின் மதிப்புரை நிகழ்ச்சிகள் (நேரடியாக மற்றும் மெய்நிகர் இணையம் வழியாக) என்று தொடர்ந்து செய்கிறார் ஒரு வேள்வியாக. பார்வையாளர்கள் அதிகம் வருவதில்லை என்று ஒருபோதும் வருத்தம் கொள்ள மாட்டார். நான்கைந்து பேர் வந்தாலும் கூட்டம் தொடர்ந்து நடக்கும்.
விருட்சம் பரிசு பெற்ற கதைகள் என்று விருட்சம் வெளியீடாக சுமார் 27+ நூல்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சியில் ஸ்டால் எடுத்து மிகவும் சிரத்தையாக தமது இலக்கியப் பணியினை தொடரும் இவர் இந்த ஆண்டும் செய்தார் என்பது வியப்பொன்றும் இல்லை. ‘அழகிய சிங்கர் சிறுகதைகள்’ நூல் இம்முறை ஜொலிப்புடன் அங்கே காட்சி கொண்டது.

தவிர, ‘daily.navinavirutcham.in’ என்ற பிளாக் மூலம் கவிதைகள், கட்டுரைகள் என்று வெளியிடுகிறார். இவரது வார நிகழ்ச்சிகள் பெரும்பாலும் மெய்நிகராக நடைபெறும். அவற்றில் கவிதைகள் வாசிக்கப்படும். கதைகள் பற்றி விவாதிக்கப்படும். ஒரு கவிஞரை அல்லது எழுத்தாளரை எடுத்துக் கொண்டு அவரைக் கொண்டாடும். ஞானக்கூத்தன் போன்ற கவிஞர்களை இவர் பெரிதும் கொண்டாடுவார்.
இவருக்குத் தெரியாத தமிழ் எழுத்தாளர்களே இல்லை. இவரைத் தெரியாத தமிழ் எழுத்தாளர்களும் இல்லை. அசோகமித்திரன் போன்ற மூத்த எழுத்தாளர்கள் பலருடன் குடும்ப நண்பராகப் பழகிய ‘பாக்கியம்’ இவருக்கு உண்டு. எது இவரை இப்படி இலக்கியத்திற்காக ஓடிக்கொன்டே இருக்க வைக்கிறது என்று யோசித்துப் பார்த்தால் இவருக்கு பெயர், புகழ், பணம் எதிலும் ஆர்வம் கிடையாது. தமிழ் மீது மட்டும் தான். என்ன ஆச்சரியம். பித்தன்… ஏமாளி என்று பாரதியையே சொன்ன சமூகம் இன்னும் இன்றும் மாறவில்லை. இவர் என்ன விதிவிலக்கு…!!
இவர் சந்தித்த எழுத்தாளர்கள், படித்த பல்வேறு புத்தகங்கள் தான் இந்த உந்துதலுக்கு காரணமாக இருக்க முடியும். வாசிப்பின் வழியே இவர் இலக்கியத்தின் மீது தீராத ஈடுபாடு மற்றும் விடாத நம்பிக்கை மற்றும் பற்று கொண்டிருக்கிறார். இவர் தான் உண்மையான இலக்கியவாதி என்று கூறலாம். யாருடைய சீண்டல், கேலி எதுவுமே இவரைப் பாதிக்காது. ஓரே ஒரு புன்னகை உதிர்த்து விட்டு தமது பணியில் ஈடுபடுவார்.
வெறுமென எழுதுவது, வாசிப்பது மட்டுமல்ல, நல்ல இலக்கியத்தை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது, தேடித்தேடி இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்வது, சிற்றிதழ் வெளியிடுவது, படைப்பாளிகளுக்கு கூட்டம் நடத்துவது தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே என்பது தான் இந்த ‘அழகிய’ சிங்கர். தன்னைத்தானே கூட சில நேரம் கேலி செய்து கொள்ளுவார். துணிச்சல் மற்றும் வெளிப்படையான மனது இவை தான் இவரின் பெரிய சொத்து.
எப்போதும் ஒரு ஜோல்னா பையுடன் அலையும் இவர் வைத்திருந்த – வீட்டு- நூலகத்தில் உள்ள புத்தகங்கள் சென்னை வெள்ளம் வந்த பொழுது நனைந்து விட்டன. எதற்கும் வருத்தம் கொள்ளாதவர் அந்த சமயம் மிகவும் வேதனை அடைந்தார். இருந்தாலும் ஈரப் புத்தகங்களை கனத்த இதயத்தோடு காயவைத்து பாதுகாத்தார். இப்போதும் அரிய பல நூல்கள் கொண்ட ஒரு நூலகத்திற்கு தனது ஒரு பிளாட்டை ஒதுக்கி இருக்கிறார்.
சென்னை கிருத்துவ கல்லூரியில் பயின்ற இவர் இந்தியன் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இலக்கியம் யாருக்கு சோறு போடும்…போட்டது….இவரது இலக்கிய தாகம் இவரை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்பது என்னவோ நிதர்சனமான உண்மை. இவரது மனைவி மற்றும் மகள் மாப்பிள்ளை எல்லோரும் இவரது இலக்கிய ஆர்வத்தை மிகவும் மதிக்கிறார்கள். இவரது பேரன் இவர் போன்று கவிஞராக வருவானா என்று காலம் தான் பதில் சொல்லும்.
சிட்டுக்குருவிகள் இன்று அரிதாகிப் போயின. அப்படித்தான் இலக்கியத்தை நேசித்துக் கட்டிக் காக்கிற அரிய மனிதர்களும். அழகிய சிங்கர் ஓர் அற்புதச் சிட்(டி)டுக்குருவி.
ஒருவகையில் எனக்கு கவிதை ஆசான் வழிகாட்டி என்று பெருமைப்படும் அன்பர் அழகியசிங்கர் நெடுங்காலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். இவரைப் பற்றி இங்கே பதிவு செய்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இலக்கியதற்காக மட்டுமே வாழும் இந்த எளிய மனிதரை இலக்கிய உலகம் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை போன்றோர் இன்னும் வயதாவதற்குள் இவரைச் சரியாக கௌரவிக்க வேண்டும். அதுவே இவருக்கு தமிழ் செய்யும் கைமாறாக இருக்கும்.

மிக்க நன்றி🙏💕 அழகிய சிங்கர் ஜி.
நீங்கள் நிச்சயமாக போற்றப்பட வேண்டிய அற்புதமான மனிதர்.
தமிழ் இலக்கிய உலகம் உங்களைச் சரியாக கொண்டாட வேண்டும் எனும் எனது ஆசை விரைவில் நிறைவேற வேண்டும்.
அன்புடன்
பாலசாண்டில்யன்
Very True