எஸ் வி வேணுகோபாலன்/என் இனிய பொன் நிலாவே!

மைதிலி சிவராமன் எனும் மகத்தான தலைவர் என்னை ஒரு திருமண வரவேற்பில் பார்த்தவர், “ஏய் வேணு…வா இங்கே” என்று அழைத்து, அவர் ஒரு நாற்காலியில் அமர்ந்து எதிரே என்னையும் அமர்த்தி, “என்ன சும்மா இப்படியே டபாய்ச்சுட்டுப் போகலாம்னு எண்ணமா ….. கம் ஆன் வேணு… வாட்ஸ் இன் யூர் மைண்ட்…. கரெக்ட் சாய்ஸ் சொல்லியாச்சு..” என்று அடிக்காத குறையாக ஓர் அன்பின் முறை முறைத்தார்.
நானும் தீர்மானம் செய்து விட்டு இருந்தேன்… இருந்தாலும், “சொல்றேன் தோழர்… என்னை விடுங்க” என்று மீண்டும் நழுவித் தப்பித்தேன்..
என்னிடம் இப்படி பேசி இருந்தாரா, ராஜியிடம் “நீ என்ன இத்தனை கண்டிஷன் போட்ற… உனக்கேத்த பையன்னா….வேணுன்னு பேங்க் காம்ரேட் ஒருத்தன் இருக்கான், அவன் தான் மேட்ச் உனக்கு” என்று சொல்லி விட்டிருக்கிறார்.
ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் பரஸ்பரம் நாங்கள் இருவரும் முடிவு செய்துவிட்டிருந்தோம்……காதல் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பெற்ற இல் வாழ்க்கை 33 ஆண்டுகள் கடந்து விட்டன ….. அதாவது முழு பென்ஷன் பெறத் தகுதி மிக்க காலம்!
பேரன்பு மிக்க வாழ்க்கை இணையர் ராஜி, இன்று அரசுப் பணி நிறைவு செய்கிறார்….38 ஆண்டுப் பணி, அதில் தலைமைச் செயலகத்தில் 31 ஆண்டு ஆறு மாதங்கள்.
மே 1991இல் திருமணம் செய்து கொள்வது என்று நாங்கள் முடிவெடுத்து விட்டோம். அவர் வீட்டைத் தேடிக் கண்டுபிடிக்க மகளிர் சிந்தனை தான் உதவியது. ராஜீவ் காந்தி மரணம் நிகழ்ந்த அந்தக் கொடும் நேரத்தில் அம்பத்தூரில் தோழர் உ ரா வரதராஜன் அவர்களுக்கான தேர்தல் பிரச்சாரக் கலை நிகழ்ச்சிகளில் சென்னை கலைக்குழு நாடகக் கலைஞராக அவர் பங்கு பெற இருந்தார். அன்றைய நாள் ஏற்பட்ட கலவரங்களில் எப்படியெப்படியோ சிதறித் தப்பித்துச் சென்றவர்களில் ஒருவராக பத்திரமாக வீடு சென்றடைய 2 நாட்களாகி இருந்தது அவருக்கு.
நான் அன்றைய இரவு சங்கராபுரத்தில் தொழிற்சங்க மையக்கூட்டத்தில் உரையாற்றிவிட்டு இரண்டு மூன்று பேருந்துகள் மாறி நள்ளிரவு வீடு வந்து சேர்ந்திருந்தேன். விடியற்காலை தெருமுனையில் பால் கடையில் வரிசையில் போய் நிற்கையில்தான் ஸ்ரீ பெரும்புதூர் பயங்கர சம்பவம் கேள்விப்பட்டது. எனது முதல் கவலை ராஜிக்கு என்ன நேர்ந்திருக்கும்…..
என்னிடமோ முகவரி இல்லை. அவர் வீடு தெரியாது. மயிலாப்பூர் சாய்பாபா கோயில் அருகே என்று சொல்லி இருந்தார். கெனால் பேங்க் சாலை என்று நினைவில் இருந்தது, மறைந்த தோழர் ஏபி விசுவநாதன் தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மூன்று முறை அந்தப் பகுதியை வலம் வந்தார், கண்டுபிடிக்க முடியவில்லை. வீட்டு எண் பத்து என்று நினைவில் இருந்தும்.
மூன்றாம் நாள், ஏதோ பொறி தட்டியது, மாதர் சங்க அலுவலக எண்ணில் தொடர்பு கொண்டேன். தோழர் மாதம்மா இருந்தார். ‘ராஜி முகவரி எனக்குத் தெரியாதே தோழர்’ என்றார். ‘மகளிர் சிந்தனை சந்தாதாரர் பட்டியல் இருக்கும் நோட்டுப் புத்தகத்தில் பாருங்கள் தோழர்’ என்றேன் நான்.
“ஆமா..அது நல்ல ஐடியா ஆச்சே” என்று சிரித்தபடி, “இதோ இருக்கு…பிடிச்சுட்டேன்… குறிச்சுக்குங்க தோழர்” என்று படித்தார்.
பத்து அல்ல, 10X வீட்டு எண். கெனால் பேங்க் சாலை பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் இருந்தது. கூடுதல் க்ளூ, சாரதா நகர் !
தோழர் கே.கிருஷ்ணன் தனது வாகனத்தில் அழைத்துச் செல்ல, அன்று மாலை அந்த 10 X வீட்டுக்குச் சென்றபோது பார்த்த ஆசை முகம், எப்போதும் மறக்காது! (ஆசை முகம் மறந்து போச்சே…இதை ஆரிடம் சொல்வேனடி தோழி என்றான் மகாகவி). அதற்குப் பிறகு என்ன, 12B தான்!
பாவம், கோமதி அம்மாள், ராஜியின் அம்மா…. இன்றைக்கு GBம்மா, வர்ற லேட் ஆகும் என்று ஒரு நாள் ராஜி சொன்னதை, யூனியனில் பேரவைக் கூட்டம் என்று எடுத்துக் கொண்டார். ராஜியும் நானும் அன்று GB தான் போயிருந்தோம், கோல்டன் பீச் !
வளர்ப்பானேன், செப் 11, 1991 எளிய முறையில் எந்தச் சடங்குகளும் அற்று இணைந்தோம் வாழ்க்கையில்! மறைந்த அன்புத் தோழன் இந்தியன் வங்கி வைத்தீஸ்வரன் தான் அழைப்பிதழை அருமையாக ஸ்க்ரீன் பிரின்டிங் போட்டுக் கொடுத்தது.
எனது எழுத்துகள் வாசித்திருந்தார் ராஜி. இயக்கக் கூட்டங்களில் மற்றவரோடு உரையாடிக் கொண்டிருப்பதை உற்று கவனித்திருக்கிறார். ஜோல்னாப் பை, ஓரிடத்தில் நிற்காது பேர் பேராய்த் தேடிப்போய் சிரிப்பும் கும்மாளமுமாக ஏதாவது பேசிக் கொண்டே நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு கோமாளியை ஏனோ அவருக்குப் பிடித்துப் போய்விட்டிருந்தது…
“”2 ஆண்டுகள் காத்திருந்தேன், எவ்வளவு நாள் தான் போகும் பார்போம்னு…என்னவோ நீங்க வந்து ப்ரபோஸ் செஞ்ச மாதிரி பந்தா காட்டிக்கிறீங்க!”என்று சொன்ன அன்று முற்றிலும் என்னைத் தொலைத்து விட்டிருந்தேன்….வேறென்ன வேண்டும் வாழ்க்கைக்கு!
ராஜியின் விஷய ஞானம் மலைக்க வைப்பது. கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவ விஷயங்கள், செடி கொடி தாவரங்கள் குறித்த நுட்பம், இயற்கை வேளாண்மை, உயர் கல்வியின் உலகளாவிய நிலவரம், வேலை சந்தையில் மதிப்பு பெறும் கல்வி எது, வெவ்வேறு மருத்துவமனைகளின் தன்மை, தரம், அட்டகாசம், எந்தெந்தத் துறை குறித்து யாரைக் கேட்டால் சரியான விவரம் அறிய முடியும், அண்மைக் காலத்தில் கவன ஈர்ப்பாக இருக்கும் திரைப்படம், நிறைய பேசப்படும் கருத்தியல் தாக்கம், சமையல் குறிப்புகளில் இருந்து உளவியல் வரை உருப்படியான யூ டியூப் சானல்………என்ன தான் தெரியாது தோழர் ராஜிக்கு. நடமாடும் தகவல் களஞ்சியம் அவர். ஏழை எளிய மாணவர்கள் எண்ணற்றோர் உதவித் தொகை பெற அவர் ஆற்றியுள்ள பங்களிப்பு மகத்தானது. அரசுத் துறையில் எண்ணிப் பார்க்க முடியாத காரணங்களுக்காக எல்லாம் இடையறாது எங்கெங்கிருந்தோ யார் யாரெல்லாமோ எந்தெந்த முனையிலிருந்து கிடைக்கப்பெற்ற தொடர்பு எண் கொண்டு அணுகும் போதெல்லாம் ஓயாது உதவிக் கொண்டும், எடுத்துக் கொண்ட காரியம் முடிகிற வரை அவர்கள் கேளாமல் கூட, தானாக அதைப் பின்பற்றி நிறைவுப் புள்ளி வரை தொடர்வதிலும் அசாத்திய பிடிமானம்.
அநீதி குறித்த ஒற்றை புகார் எங்கிருந்து ஒலித்தாலும், அறச்சீற்றம் பொங்க எவராயிருந்தாலும் போய்த் தட்டிக் கேட்கும் அபாரத் துணிச்சல். தொழிற்சங்க அறைகூவல் என்றால், அதிகார பீடத்தின் எதிரே அஞ்சாது சமரசமற்ற சமரில் முன்னிற்கும் அசாத்திய போராளி தோழர் ராஜி.
2003 தெரியும் பலருக்கும். அதன் நுண்ணிய தருணங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
“எறக்கிடு” என்ற ஒற்றைச் சொல் அறிவுரை கொடுத்த அற்புதத் தலைவர் தோழர் எம் ஆர் அப்பன் இன்றில்லை. அது ஜூலை 1, 2003 காலை எட்டு மணிக்கு அவர் அருளிச் செய்த சொல்…. இரண்டாம் தேதி தான் தொடங்க இருந்தது காலவரையற்ற வேலை நிறுத்தம். அதை ஜூன் 30 அன்றே இரவே தடுத்து நிறுத்தத் தலைவர்கள் எண்ணற்றோரை மாநிலம் முழுவதும் சிறைப்படுத்தி விட்டிருந்தது அரசு எந்திரம். ஜூலை 1 அன்றே, அதுவும் தலைமைச் செயலகத்திலேயே போராட்டம் தொடங்கிவிடும் என்று யார் எதிர் பார்த்திருக்க முடியும்…..
கர்ணன் திரைப்படத்தில் கிருஷ்ண பகவானாக வந்த என் டி ராமராவ் செய்த யுத்த தந்திரம் படத்தில் பார்த்திருந்தோம். அமாவாசையை தலைவர் ஒரு நாள் முன்னதாகவே அட்வான்ஸாக வரவழைத்து விட்டிருந்தார். சூரியனும் சந்திரனும் அலறியடித்துக் கொண்டு கீழிறங்கி வந்து கேட்கும்போது, நீங்கள் இருவர் சந்திப்பது தானே அமாவாசை, எதிரும் புதிரும் சந்தித்து விட்டீர்களே…இது தான் அமாவாசை என்று தர்ப்பணம் செய்வதைத் தொடர ஆரம்பிப்பார். அறிவியலுக்கு முற்றிலும் அப்பாற்பட்ட அந்தக் காட்சியை மெய் சிலிர்க்க பார்த்திருந்தேன் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன். ஆனால், ஜூலை 1 நடந்தது ஆகப் பெரிய அறிவியல் பூர்வமான போராட்டக் காட்சி. எப்பேற்பட்ட நெருப்புத் தருணங்கள்…..
காலத்தின் கருணை இருப்பின், போராட்டக் களத்தின் அனுபவங்கள் ஓர் அற்புதமான இலக்கியமாக மலரும் சாத்தியங்கள் உண்டு. பெருமித மிக்க நாட்கள் அவை. அதையடுத்தும் வெவ்வேறு ஆண்டுகளில் எண்ணற்ற தருணங்கள் போராட்ட முனையில் சுடர் விட்டு நின்றவர் தான் இன்று பணி நிறைவு செய்கிறார்!
அணி திரட்டப்படாத தொழிலாளர்களுக்காக, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாநில அமைப்பாளராக அவர் ஆற்றியுள்ள பணிகள் அபாரமானவை. எழுச்சிகர பேச்சாளர் மட்டுமல்ல ஆகச் சிறந்த செயல்பாட்டாளர். பணிகளைச் செவ்வனே திட்டமிட்டுக் கூட்டாக நடத்தி முடிப்பதில் திறன் மிக்க உழைப்பாளி. மிகப் பெரிய செயலூக்கி. அமைப்புகளில் செயலாற்றுவோரை முன்னிலைப்படுத்தி முன்னணி செயல்பாட்டாளராக வளர்த்தெடுப்பதில் தொடர் கவனம் செலுத்தும் அரிய தலைவர்களில் ஒருவர் ராஜி.
‘வேரென நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்’ என்று ஒரு வரி எழுதி இருப்பார் கண்ணதாசன், வியட்நாம் வீடு படத்திற்கான ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்…’ பாடலில். அதில் ஒரு சரணத்தில், ‘பொன்னை மணந்ததனால் சபையில் புகழும் வளர்ந்ததடி’ என்ற ஒரு காதல் வரியும் உண்டு. பாலின சமத்துவத்திற்கான போராட்டத்தை ஒரு போதும் கை நழுவ விட்டுவிடாத பக்குவத்தில் வாழ்க்கை ஓட்டத்தில் எனது படிநிலையை அவர் உயர்த்தி வந்திருப்பது, இன்னும் நான் முன்னேற்றிக் கொள்ள வேண்டிய தேவையை விடாது உணர்த்திக் கொண்டிருப்பது குறிப்பிட வேண்டியது.
ராஜியைக் கொண்டாடுவோரில் இரண்டு முக்கிய மனிதர்கள் இப்போது இல்லை… ஒருவர் எனது அருமையான மாமனார் திரு வி. மாத்ருபூதம், 21 ஆண்டுகள் முன்பே மறைந்து விட்டார். அன்பு கொண்டாடி அவர். மற்றொருவர், என்னுடைய அன்புத் தந்தை எஸ் ஆர் வரதாச்சாரி, 2021இல் மறைந்தார். ராஜி பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்த போது நேரில் வந்து சால்வை அணிவித்துப் பெருமையாக உணர்ந்து, ‘ஒரு போதும் சளைக்காதே’ என்று ஊக்கமளித்துச் சென்றவர். மாமனார் பொதுப் பணித் துறை, தந்தை வருவாய்த் துறை. நேர்மையின் சிகரங்கள் இருவரும் மறைந்தது, வியாழக்கிழமை, தற்செயல் ஒற்றுமை.
இந்துவும் நந்தாவும் அன்னை ராஜியின் பேரன்பில் திளைப்பவர்கள். நானும் அம்மா என்றே அழைக்கும் ராஜியின் அன்னை கோமதி, எங்கள் தாய் மைதிலி, ராஜியின் தமக்கை கங்கா – நடராஜன், தம்பி குருமூர்த்தி – தீபா…. என்று குடும்ப உறவுகள், நட்பு யாவும் செழித்தோங்கும் உள்ளம்.
மன நிறைவு மிக்க பணி நிறைவு…. சமூக மாற்றத்திற்கான இலட்சிய வேட்கையில் இனி தொடரும் பணி!

அன்பு ராஜி!

நம்மை இணைப்பதில் அத்தனை பேருவகை கொண்டிருந்த தோழர் மைதிலி சிவராமன் நினைவில், தோழர் உ.ரா வரதராஜன் நினைவில், தோழர்கள் அ.ரெங்கராஜன், கே.அசோகன் நினைவில் மற்றும் எண்ணற்ற அன்புத் தோழர்கள் சார்பில் உனக்கு என் அன்பு வாழ்த்துகள் !

12 Comments on “எஸ் வி வேணுகோபாலன்/என் இனிய பொன் நிலாவே!”

    1. சிறப்பான பதிவு தோழர்.. பாராட்டுக்கள்..
      *காலத்தின் கருணை இருப்பின், போராட்டக் களத்தின் அனுபவங்கள் ஓர் அற்புதமான இலக்கியமாக மலரும் சாத்தியங்கள் உண்டு.*..உண்டு தோழர்..அவசியம் இருக்கு.. தங்கள் இருவரின் பயணம் நூலாக பதிலாக வேண்டும் தோழர்..பலருக்கு பாதையாக அமையும்..எழுதத் தொடங்குங்கள் தோழர்..வாழ்த்துகள்💐👍👏🙏

  1. எஸ்.வி.வி. சார், உங்களுக்கும், உங்கள் உயர்வு சால் இணையருக்கும் வாழ்த்துகள். நிறை வாழ்வில் இன்னும் பல சிறப்புகள் சேரட்டும். அரசுப்பணி நிறைவுற்றாலும் அன்புப் பணிகள், அறப் பணிகள் தொடரட்டும். இருவரும் வாழிய இன்பமொடு பல்லாண்டு.

  2. அருமை!! இதைவிட ஒருவர் தன் இணையருக்கு பெருமை சேர்க்க முடியாது!! “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!!இறைவா!!”என்பதுபோல் இணையரைப்பற்றி எத்தனை கோடி புரிதல்கள் கூறினாய் வேணு!! வேணு!!

    பலபேர்கள் இணையரைப்பற்றி இரண்டு விஷயங்களைக்கூட தெரிந்து வைத்திருக்கமாட்டார்கள்… எனவே மனமார்ந்த பாராட்டுகள்.

  3. பணி நிறைவு புது அவதாரம் எடுக்கலாம். அந்தக் களத்தின் அனுபவங்கள் அற்புதமான இலக்கியமாய் மலர சாத்தியம் ஆகலாம்!

  4. ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல நீங்கள் இருவரும்,
    மக்கள் பணியாற்றுவதில்,
    உண்மை அன்பு செலுத்துவதில்,
    போராடி வெற்றி பெறுவதில்,
    மக்களை மக்களாக பார்ப்பதில்,
    (Accept people as they are)
    உங்கள் குழந்தைகளை வளர்த்தெடுத்ததில்
    இன்னும் பல பல.

    அன்பே சிவம் என்பதை உங்களை சார்ந்த எல்லோருக்கும் நன்கு புரிய வைத்த உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துகள்.

    உங்கள் நற்பணிகள் தொடர, “அன்பே சிவத்தை” பணிந்து வேண்டுகிறேன்.

  5. இது என்ன காதல் கதையா?
    தொழிற்சங்க போராளியின் வரலாறா?
    சமுக செயல்பாட்டாளரின் கதையா? அனைத்தும் தான் அருமை அருமையான இலக்கிய நடை பணி ஓய்வு பெற்ற தங்கள் இணையர் நீண்ட ஆயுலோடும் உடல் ஆரோக்யத்தோடும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்

  6. தோழர் மைதிலி சிவராமன் போன்றவர்கள்
    தங்களைப் போன்றவர்களுக்கு
    செய்த அந்த ஏற்பாட்டை
    தாங்களும்
    கடமையாக
    பொறுப்பாக
    அடுத்த தலைமுறைகளுக்கு செய்ய வேண்டும்!

    இது என் தனிப் பட்ட வேண்டுகோள்!

Comments are closed.