
ஆஸ்திரேலியா செல்லும் அவசரத்தில் இருந்தார் கவிஞர் வைதீஸ்வரன்! அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடிக்கொண்டிருந்த போது பாவை சந்திரன் அவர்களின் ‘நல்ல நிலம்’ நாவல் வாசித்துக்கொண்டிருப்பதை நான் சொல்ல, முகம் மலர்ந்து, “அடடா, எவ்வளவு நல்ல நாவல். வாசித்து ரொம்ப நாள் ஆச்சு. ஒருமுறை கொடுங்கள், பார்த்துவிட்டுத் தருகிறேன்” என்றார் கவிஞர். ஒரு படைப்பாளியின் வாசிப்புத் தாகமும், ரசிப்புத் தன்மையும் ஒருங்கே வெளிப்பட்ட இனிமையான தருணம் அது.
தினமணி தீபாவளி மலர் பற்றி பாவை அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, வைதீஸ்வரன் ‘நல்ல நிலம்” பற்றிக் கூறியதைச் சொன்னேன். எழுத்தாளர்களுக்கே உரிய மகிழ்ச்சியுடன், உடனே ஒரு பிரதி ‘நல்ல நிலம்’ கொடுத்து, “என் சார்பில் கவிஞரிடம் கொடுத்துவிடுங்கள்” என்றார் பாவை.

ஏதேதோ காரணங்கள், வைதீஸ்வரன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. ‘நல்ல நிலம்’ என்னிடமே காத்திருந்தது!
நேற்று, 3-2-2025, மாலை குவிகம் கிருபானந்தன், அவரது வீட்டில் வைதீஸ்வரன் அவர்களைச் சந்திக்க ஓர் வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தார். குவிகம், விருட்சம் நண்பர்களை அழைத்திருந்தார். அழகிய சிங்கர் (வைதீஸ்வரன் சாரை எனக்கு அறிமுகம் செய்தவர்), எஸ்.வி.வேணுகோபால், திருமதி ராஜி வேணுகோபால், இந்திரநீலன் சுரேஷ், பூபாளம் ஹரிஹரன், ஆர் கே ராமநாதன், திருமதியுடன் பி எஸ் என் எல் ராஜாமணி, திருமதியுடன் இராய செல்லாப்பா, எஸ் எல் நாணு, திருமதியுடன் சிறகு ரவிச்சந்திரன் என நண்பர்கள் கூட்டம்!
உள்ளே நுழைந்தவுடன், நண்பர்களைக் கண்ட வைதீஸ்வரன் அவர்களின் மகிழ்ச்சியும், ஆச்சரியமும் முகத்தில் பளிச்சென்ற பெருஞ்சிரிப்பாய் வெடித்தது. வார்த்தைகளால் விவரிக்கமுடியாத கணம்!

கிட்டத்தட்ட இரண்டு மணிநேர அளவளாவல் – எல்லோருக்கும் அவரிடம் பேசுவதற்கு விஷயங்கள் இருந்தன. அவரது நகைச்சுவைக்கு இரண்டு துளிகள் – ‘ஓ, சிங்கர்’ என்று அவர் அழைக்க, வேறு யாரோ, ‘அழகிய சிங்கர்’ என்று சொல்ல, உடனே கவிஞர், “அது அப்போது” என்றாரே பார்க்கலாம்….! அடுத்து வந்த சிறகு ரவியைப் பார்த்து, இரண்டு கைகளையும் பறவை போல அசைத்து, “பறந்து வந்தீர்களா?” என்றார்.
திருமதி வைதீஸ்வரன் அவர்களும் வந்திருந்தது கூடுதல் மகிழ்ச்சி. இரண்டு முதியவர்களையும், ஊரிலிருந்து வந்திருக்கும் அவர் மகன் அழைத்து வந்தது அதைவிடக் கூடுதல் மகிழ்ச்சி!
விபரம் சொல்லி, ‘நல்ல நிலம்’ புத்தகத்தைக் கொடுத்தேன். புத்தகத்தைப் புரட்டியவர், கோபுலுவின் கோட்டோவியங்களை ஒரு நிமிடம் நிதானமாகப் பார்த்து வியந்தது, கவிஞருக்குள் இருக்கும் ஓவியரை அடையாளம் காட்டியது!
திராட்சை, மலைவாழை, ஆப்பிள், சோன்பப்டி, உருளை போண்டா, மிளகுடன் வருத்த முந்திரி, மணத்துடன் கும்மோணம் காபி என கெளரியும், கிருபானந்தனும் மாலை சந்திப்பின் சுவையைக் கூட்டிவிட்டனர்.

பேச்சுக்கிடையே வைதீஸ்வரன் அவர்கள் சொன்னது வியப்பளித்தது – எல்லோருக்கும் ஒரு செய்தியாகக் கூட இருக்கலாம். “உங்களை எல்லாம் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நானும், மீண்டும் எல்லாவற்றையும் (கவிதை, கதை, ஓவியம், கட்டுரை என) ஆரம்பிக்க வேண்டும்” – ஒரு படைப்பாளியின் மனம் என்றுமே உறங்குவதில்லை என்பதாக இருந்தது அவர் சொன்னது!
நல்லதோர் மாலை. நட்பும் நேயமும் பொங்கி வழிந்த இனிமையான நேரம். கிருபானந்தன், கெளரி கிருபானந்தன் இருவரும் பாராட்டுக்குரியவர்கள்.
