
புத்தக அறிமுகம் 14.
சொல்லட்டுமா கொஞ்சம்? – இராய செல்லப்பா (தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை 600020).
நம் எல்லோருக்கும் இளமைக்கால நினைவுகள் நிச்சயமாக இருக்கும். அவற்றைச் சுவைபட, சுவாரஸ்யமாகச் சொல்வதும், எழுதுவதும் எல்லோருக்கும் வந்துவிடாது. தனது ‘அழியாமல் நிற்கும் அனுபவங்கள்’ சிலவற்றை, ‘சொல்லட்டுமா கொஞ்சம்?’ என்று தலைப்பிட்டுப் புத்தகமாகக் கொடுத்திருக்கிறார் இராய செல்லப்பா. அவரது இயல்பான நடையில், நகைச்சுவை கலந்து, பதினோரு கட்டுரைகளை ‘உயிர்ப்புனை கதை’ (பயோஃபிக்ஷன்) வடிவில் எழுதியுள்ளார். ‘அப்பாவின் சிநேகிதிகள்’ கட்டுரையின் முடிவில், அக்கட்டுரையை அசோகமித்திரனுக்கு அஞ்சலியாகச் சொல்கிறார். செகந்திராபாத் கதைகள், 18 வது அட்சக்கோடு போன்றவை அ.மி. யின் இளமைக்கால நினைவுகளின் பதிவுகள் என்றால் மிகையில்லை. அதே வழியில் செல்லப்பாவின் பதிவுகள் உள்ளன!
“என்னுடைய வாழ்வில் இதுவரை நடந்ததைத் தெரிந்திராதவர்களுக்கு இது சுவாரசியமான கதைத் தொகுப்பாகவே தெரியும். கதையின் அடிநாதமாக உண்மைகள் இருப்பது தெரியாமல் போய்விடாது என்பது உறுதி” என்கிறார் தனது முன்னுரையில்!

‘அப்பாவின் சிநேகிதிகள்’ கட்டுரையில் அவரது ஒரே சிநேகிதியைப் பற்றி எழுதியிருக்கிறார். அன்றைய நாளில் இருந்த விறகுத் தொட்டி (மரத் தொட்டி), விறகு அடுப்பு, குமுட்டி அடுப்பு, வீட்டிலேயே செய்யப்படும் மண் அடுப்பு, கொடி அடுப்பு என பல விபரங்களைப் பதிவு செய்கிறார். விறகு நிறுக்கும் தராசு, சைக்கிளில் விறகைக் கட்டி வருதல், புளியம் விறகு, சவுக்கு விறகு, உருட்டைக் கட்டை போன்றவை இன்று வழக்கொழிந்துவிட்டாலும், நினைவில் நீங்காமல் இருப்பவை. பாலாற்றுக் களிமண்ணில் அவர் அம்மா செய்யும் அடுப்புகளைப் பற்றிய விவரணை சுவாரஸ்யம்!
‘முனியம்மாவின் இளங்கழுதை’ – ‘தோழி’ கழுதையுடன் சலவை முனியம்மா, சாம வேத பண்டிதர் தாத்தா, துர்கா பூசை, பாட்டியின் பாயசமும், மனித நேயமும் என அன்றைய சமூகத்தின் யதார்த்தங்கள். தனியாக வாழும் முனியம்மா, அனாதை இளைஞனைத் திருமணம் செய்துகொள்வது, அவன் கொலைகாரன் என்று போலீசில் பிடித்துச்செல்வது எனக் கதை நீள்கிறது. எப்படிப்பட்ட நல்ல மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள், சமூக நல்லிணக்கம் எப்படியெல்லாம் இருந்திருக்கிறது என்பதற்கான நல்ல பதிவு இது.
‘உள்ளுணர்வு என்பது சக்தி வாய்ந்த கருவி. உனக்கு வழிகாட்டவும், எச்சரிக்கை செய்யவும் வல்லது’ என்ற அரவிந்த அன்னையின் வாக்குப்படி, தனது உள்ளுணர்வு எச்சரித்த பல நிகழ்வுகளைச் சொல்கிறார் ‘உள்ளிருந்து பேசும் குரல்’ கட்டுரையில்! தத்துவமும், அறிவியலும் ஒரே தேடலைத்தான் மேற்கொண்டிருக்கின்றன என்றார் ஐன்ஸ்டீன். இரண்டிற்கும் அடிப்படை உள்ளுணர்வே என்று முடியும் கட்டுரை ஒரு நல்ல அறிவியல் கட்டுரை. அதுபோலவே ‘கனவுகள் பலிக்கும் நேரம்’ கட்டுரையும் கனவுகளின் தாக்கங்களைப் பற்றிப் பேசுகிறது.
‘இலஞ்சம் என்னும் அழகு தேவதை’ – இன்றைக்கு எங்கும் நிறைந்து காணப்படும் இலஞ்சங்களைப் பற்றிப் பேசுகிறது. அரசு அலுவலகங்களில் கொடி நாள் என்று, கொடிகளை விற்பதில் நடக்கும் ஏமாற்று வேலைகளை, மிக யதார்த்தமான நகைச்சுவையுடன் சொல்கிறார். சிறிய பெட்டிக்கடை, பெரிய ஓட்டல், தாலுக்கா அலுவலகம் என எங்கும் வியாபித்திருக்கும் ‘லஞ்சம் எனும் தேவதை’ தவிர்க்கமுடியாதவளாகி விட்டாள் என்றே தோன்றுகிறது.
‘அப்துல்லாவிடம் ஏழு பசுக்கள் இருந்தன’ அன்றைய காலக் கட்டத்திலிருந்த மத நல்லிணக்கம் வியக்க வைக்கிறது. மதத்தைத் தாண்டிய மனித நேயம் இன்று எங்கே மறைந்துவிட்டது? நாற்பது வருடங்களுக்குப் பிறகு, வேலூர் செல்லும் வழியில் இராணிப்பேட்டையில் தர்காவையும், சாம்பிராணிப் புகை, வாசனையையும், மந்திரிக்கக் காத்திருக்கும் எல்லா மதத்தினரையும் தேடுகிறார் இராய செல்லப்பா. நாமும்தான், கனத்த இதயத்தோடு.
அன்றே வோட்டுக்குப் பணம் கொடுத்திருக்கிறார்கள்! வோட்டுரிமைக்கு விலை வைக்கத் தொடங்கிய நாட்கள்…
வக்கீலுக்குப் பகுதி நேரக் கல்லூரியில் சேர முடியாமல், அஞ்சல் வழியில் படித்ததையும், அவருக்குப் பாடப் புத்தகங்கள் வந்த அவலத்தையும், தப்பும் தவறுமாக அச்சிடப்பட்டிருந்த புத்தகங்கள் பற்றியும் சொல்கிறார், ‘பாதிக் கிணறு தாண்டினேன்’ கட்டுரையில்! “சட்டம் என்பது இருட்டறை என்று ஒருவரும், சட்டம் என்பது கழுதை என்று ஒருவரும் சொன்னதை வள்ளுவப் பெருந்தகையிடம் சொன்னபோது, அவர் “மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்று ஒரே போடாகப் போட்டார். அதற்காகத்தான் சட்டம் படிக்க விரும்பினேன்” என்கிறார் செல்லப்பா!
இராணிப்பேட்டை நண்பன் கிரியைப் பற்றியும், தேன்கனிக் கோட்டை பள்ளித் தோழன் கோவன் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) பற்றியும் எழுதப் பட்டுள்ளவை, பயோஃபிக்ஷனுக்கு நல்ல உதாரணங்கள்! திருப்பங்களுடன், சுவாரஸ்யமான சஸ்பென்சுடன் சொல்லப்பட்டுள்ள கதைகள்!
வாசித்து முடித்தபோது, இராய செல்லப்பாவுடன் சூடான காப்பியுடன் வரவேற்பறையில் உரையாடிய உணர்வு! வாசிக்க வேண்டிய தொகுப்பு.
