
ஆசிரியர் பக்கம்
மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: வணக்கம்.
அழகியசிங்கர் : வணக்கம்.
ஜெகன் : என்ன ஆயிற்று உங்களுக்கு. திரும்பவும் கூட்டம் போட ஆரம்பித்து விட்டீர்களே?
அழகியசிங்கர் : சமீபத்தில் நான் கொண்டு வந்த புத்தகங்களில் ஒன்று 'விருட்சம் பரிசு பெற்ற கதைகள் 24 ' என்ற புத்தகம். 12 எழுத்தாளர்களின் 12 கதைகள். இதை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளத்தான் இந்தக் கூட்டம்.
மோகினி : நல்ல விஷயம்
அழகியசிங்கர் : இலக்கியச் சிந்தனை 50 ஆண்டுகளாகச் சாதித்த ஒரு நிகழ்ச்சியைப் பாராட்டாமல் இருக்க முடியாது. வருடத்திற்கு ஒரு முறை ஏவிஎம் ராஜேஸ்வரியில் கூட்டம் நடத்தி ஒரு சிறுகதை ஆசிரியருக்குச் சிறப்புச் செய்வார்கள்.
மோகினி : இனிமேல் அதுபோல் ஒன்று உருவாக வாய்ப்பே இல்லை.
அழகியசிங்கர் : உண்மைதான்.
ஜெகன் : ஆனால் சிறு கதைத் தொகுப்பு நூல்கள் இல்லாமல் இல்லை.
அழகியசிங்கர் : நிச்சயமாக இருக்கிறது. எழுத்தாளர் விட்டல்ராவுடன் இணைந்து 20வதாம் நூற்றாண்டு சிறுகதைகள் தொகுப்பு நூல்களின் 4,5,6 பாகங்களைக் கொண்டு வர நானும் பங்கு கொண்டேன்.
அதில் என் பங்கு சிறு பத்திரிகைகளிலிருந்து பல எழுத்தாளர்களின் கதைகளை எடுக்க உதவி செய்தேன்.
மோகினி : இலக்கியச் சிந்தனை கதைகளில் கூட பெரும்பாலான கதைகள் வெகுஜன பத்திரிகைகளிலிருந்துதான் எடுப்பார்கள்.
அழகியசிங்கர் : எப்போதும் எனக்குப் பெரிய குறை உண்டு. இலக்கியச் சிந்தனை அமைப்பு சிறுபத்திரிகைகளிலிருந்து கதைகளை எடுப்பதில்லை என்று.
மோகினி : சிறுபத்திரிகைகள் குறிப்பிட்ட காலத்தில் வருவதில்லை என்பதுகூட காரணமாக இருக்கலாம்.
அழகியசிங்கர் : சிறுபத்திரிகைகள் எந்த மாதத்தில் வருகிறதோ அந்த மாதத்துக் கதைகளை எடுக்கலாம். ஜோதி விநாயகம் நினைவு சிறுகதைப் பரிசுத் திட்டம் 1997ன் சிறந்த சிறுகதைகளைக் கொண்டு வந்திருக்கிறது. முதலில் 12 மாதங்களில் 12 கதைகள் வீதம் சிறப்புக் கதைகளாக மூன்று கதைகள் கொண்ட தொகுப்பை வெளியிட்டிருக்கிறது.
ஜெகன்: அந்த வருடத்திற்குப் பிறகு தொடர்ந்து கொண்டு வர முடிந்திருக்கிறதா என்பது தெரியவில்லை.
அழகியசிங்கர். வரவில்லை என்றுதான் நினைக்கிறேன். வந்திருந்தால் தெரிந்திருக்கும். இலக்கியச் சிந்தனை 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்தது சாதனை என்று சொல்கிறேன்.
மோகினி : உங்கள் தொகுப்பை எப்படிக் கொண்டு வந்திருக்கிறீர்கள்?
அழகியசிங்கர் : நான் முதலில் சிறுபத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் தர நினைக்கிறேன். சிறுபத்திரிகைகளில் வெளிவந்த கதைகளைத் தேர்ந்தெடுத்துள்ளேன். அந்தத் தொகுப்புதான் விருட்சம் பரிசு பெற்ற கதைகள் 2024.
மோகினி : தொடர்ந்து இன்னும் பேசலாம்.
அழகியசிங்கர் : பேசலாம்.இரவு மணி 10.27 ஆகிவிட்டது. இத்துடன் முடித்துக்கொள்ளலாம்.
(இரவு 10.28மணி)
