தமிழ்நதி/குட்டி ரேவதி பதில்

தமிழ்நதி:‘முலைகள்’என்ற உங்கள் கவிதைத் தொகுப்பின் தலைப்பு இவ்வளவு சர்ச்சைக்கு ஆளாக்கப்பட்டதன் அடிப்படையான காரணம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

குட்டி ரேவதி:இப்போது கேரளாவிலிருந்து என்னை நிறைய இலக்கியக்கூட்டங்களுக்கு அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டிலே என்னை இலக்கியக்கூட்டங்களுக்கு அழைப்பதில்லை. காரணம், என்மீது இருக்கின்ற அந்த அடையாளம்…! ‘முலைகள்’என்ற பெயரில் ஒரு தொகுப்புப் போட்ட காரணத்தினால் என்னை யாரும் அழைப்பதில்லை. அந்தச் சொல் ஆபாசமான,அசிங்கமான,அருவருப்பான ஒரு விடயமாகியிருக்கிறது. தமிழ் சினிமாவில், மலிவு இலக்கியத்தில், வெகுஜன இதழ்களில் பெண்களுடைய மார்பகங்கள் வணிகப் பொருளாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், நான் அதை ஒரு எதிர்நிலையில் நின்று பார்க்கிறேன். அதாவது, நம்முடைய உடலை நான் ஒரு பெரிய நிலவெளியாகப் பார்க்கிறேன். ஒரு புவியியல் நிலப்பரப்பானது இலையுதிர்காலம்,இளவேனில்,கோடை என எப்படிப் பலவிதமான பருவங்களைக் கடந்து வருகின்றதோ அப்படியான ஒரு நிலவெளியாகத்தான் உடலைப் பார்க்கிறேன். அதையொரு உறுப்பாக,பொருளாகப் பார்க்கவில்லை.
அப்படி நான் அந்தச் சொல்லைப் பிரயோகித்தது ஆண்களுக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கவேண்டும். பெண்கள் அவர்களுக்கென வரையறுக்கப்பட்ட எல்லைகளுள் நின்று எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், பாலியல் உரிமைகளைப் பற்றிப் பேசிவிடமுடியாது. அதற்கான அதிகாரம் பெண்களுக்குக் கிடையாது என அவர்கள் நினைக்கிறார்கள். இன்னுமொரு விடயம் என்னவென்றால், சாதீயம் மிகப்பெரியதொரு விடயமாக இருக்கிறது. இப்போது பாலியல் உரிமைகள் குறித்துப் பேசுவதற்கான வெளி திறந்துவிடப்படுகிறதெனில் அடுத்து சாதீயம் பற்றித் தயக்கமின்றிப் பேசப் புறப்பட்டுவிடுவார்கள் என்ற பயம். மூன்றாவதாக, தமிழ்த்தேசியவாதம் என்றொரு விடயம்…. இங்கு பேசப்படுகிற தமிழ்த்தேசியவாதம் என்பது வேறு. ஈழத்தில் அதன் பொருள் வேறு. இங்கே பேசப்படும் தமிழ்த்தேசியவாதத்திலே பெண்களின் கற்பு என்பது முக்கியமான அம்சம். தனக்கு உடமையான ஒரு பெண் இன்னொருவனோடு போய்விடக்கூடாது என்பதில் கவனமாயிருக்கிறார்கள்.
அதன் அடிப்படையிலேதான் கண்ணகியைத் தூக்கிப்பிடிக்கிறார்கள். இவர்கள் மணிமேகலை மற்றும் மாதவியைத் தூக்கிப் பிடிப்பார்களா என்றால்… இல்லை! என்னை மிகவும் ஈர்த்த கதாபாத்திரம் என்றால் அது மணிமேகலைதான். தன்னைக் காதலித்த உதயகுமாரன் மீது அவளுக்கும் காதல் இருக்கிறது. அதைக்; குறித்த மனவெளிப் போராட்டங்கள் அவளுக்கு இருந்திருக்கின்றன. ஆனால், அதை அவள் வெளிப்படுத்தாமல் அறநெறியில் போய் இணைந்துகொள்கிறாள். இந்த மாதிரியான கதாபாத்திரங்களை இவர்கள் தூக்கிப்பிடிப்பதில்லை. அதற்கு இன்னொரு காரணம் இங்கு வேரோடியிருக்கும் இந்துத்துவம் என்று சொல்லலாம். பௌத்தத்தைப் பேசும் மணிமேகலையை அவர்கள் கண்டுகொள்ளாமல் போய்க்கொண்டிருப்பதற்கு இந்த இந்துத்துவம்தான் காரணம். ஆணாதிக்கத்தினுடைய மூலாதாரம் இந்துத்துவம்தான். ஒரு பெண் பத்தினியாகச் சித்திரிக்கப்பட்டிருந்த சிலப்பதிகாரத்தை தலைமேல் தூக்கிவைத்துக் கொள்வதற்கும் மணிமேகலையை இருட்டடிப்புச் செய்ததற்கும் இதுதான் காரணம். என்னைக் கேட்டால் மணிமேகலையைத்தான் காவல்தெய்வம் என்று நாங்கள் வணங்கவேண்டும் என்று சொல்வேன். பெண்கள் என்றால் தாய்மை, பொறுமை, விட்டுக்கொடுப்பு, கருணை இவற்றின் வடிவமாக இருக்கவேண்டும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். பெண்களிடத்தில் வீரம், போராடும் குணம், பகுத்தறிவு இன்னோரன்ன குணாம்சங்கள் இருப்பதை இவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மணிமேகலை தனது மனவெளியில் காதல் தொடர்பான ஊடாட்டங்கள் இருந்தபோதிலும் அதையெல்லாம் துறந்து பௌத்தத்திலே இணைந்து மக்களுக்குச் சேவை செய்யவேண்டுமென்ற வழியைத் தானே தேர்ந்தெடுக்கிறாள். இவ்வாறு ஒரு பெண் தனக்குரிய பாதையைத் தேர்ந்தெடுப்பது இவர்களுக்கு உவப்பானதல்ல என்ற காரணத்தினால் மணிமேகலை இருட்டடிப்புச் செய்யப்படுகிறாள்.

இவ்வாறான மனோநிலை கொண்ட ஒரு சமுதாயத்திற்கு ‘முலைகள்’என்ற சொல் எவ்வாறான அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். அதனால் விளைந்த எதிர்வினைகளால் ஒரு ரெண்டு வருஷம் நான் மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன்.

நன்றி:tamilnathy.blogspot.com