ஜி.பி.சதுர்புஜன்-/பரிசு

எப்போதுமே டி.டி.கே ரோடு அவசரகதியில்தான் இயங்கிக் கொண்டிருக்கும் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதானே ! ஆனால் இன்று அந்த நீண்டு விரிந்த சாலையில் நடுநாயகமாக உள்ள டேக் சென்டர் வாயிலில் கார்களின் முண்டியடிப்பு சற்று அளவுக்கு அதிகமாகவே தெரிந்தது. வாகன நெரிசலை ஒழுங்குபடுத்தும் காவலர்கள் துரித கதியில் இயங்கிக் கொண்டிருந்தார்கள். வந்திருந்த சிலர் அக்கம்பக்கத்துத் தெருக்களில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு டேக் சென்டருக்கு விரைந்தார்கள்.

இரண்டாவது மாடியில் அனைவருக்கும் சுடச் சுடச் சுவையான சிற்றுண்டி வழங்கப்பட்டது. ஆவி பறக்கும் காஃபி வேறு. முதல் மாடியில் மிகச் சரியாக ஆறரை மணிக்குக் கூட்டம் தொடங்குமென்பதால் அனைவரும் இருக்கைகளுக்கு விரைந்தனர்.

ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தின் முதல் புதன் கிழமை மாலை அந்த அரங்கத்தில் தமிழ் நாடு – தமிழர் – தமிழ் முன்னேற்றச் சங்கத்தின் கூட்டம் தவறாமல் கூடுமென்பது சென்னையிலுள்ள தீவிர தமிழ் வாசகர்கள் அனைவரும் அறிந்த ஒன்றே. அந்த இலக்கிய சந்திப்பில் தேர்ந்தெடுத்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை விமர்சனம் செய்து, தமிழ் வளர்க்கும் சான்றோர்களுக்குப் பரிசு வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சிகள் விடாது நடைபெறும். இதே இடத்தில் 25 வருடங்களாகத் தொடர்ந்து தமிழையும், தமிழ் எழுத்தாளர்களையும் கொண்டாடும் இந்த நிகழ்ச்சி இடைவிடாது நடந்துகொண்டு இருக்கிறது. சாலையில் அடிபட்டு குற்றுயிரும், குலையுயிருமாக கிடப்பவனைப் பார்த்துக்கொண்டே ஒன்றும் செய்யாமல் விரைந்து கொண்டிருக்கும் வாகனங்களைப் போல, தமிழ் அழிகின்றது என்று சொல்லிக்கொண்டே அந்த அவலத்தை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தில், இப்படி ஒரு வேள்வியைத் தொடர்ந்து நடத்துவது என்பது அதிசயம்தானே !

ஆனால், இன்றைய நிகழ்ச்சி சற்று கூடுதல் விசேஷமான ஒன்று என்பது விழா மேடையைப் பார்த்தாலே புலப்பட்டது. மேடையில் ஆறு பேர் வரிசையாக அலங்கார நாற்காலிகளில் அமர்ந்து இருந்தனர். நடுவிலே 80 வயது மதிக்கத்தக்க முதியவர் – அந்த வயதிற்கேற்ற கோணல்களும், குறுக்கல்களும் எதுவுமில்லாது நிமிர்ந்து அமர்ந்திருந்தார். அவர் கண்களில் பாரதியின் தீட்சண்யமும், மிடுக்கும் தெரிந்தது.

ஆம்.. எம்.பி.ராகவன் என்ற அவருக்கு அவர் செய்த தமிழ்த் தொண்டுக்காக வாழ்நாள் சாதனையாளர்

விருது வழங்கி இந்த புகழ்பெற்ற சங்கம் கௌரவிக்க இருக்கிறது.

மேடையிலே இருந்த பிரபலங்கள் ஒவ்வொருவராக வந்து தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டினைப் பற்றிப் புகழ்ந்தனர். இதனை அழகாக விளக்கியது இறுதியில் பேசிய பத்திரிகை ஆசிரியர் திருக்காட்டுப்பள்ளியாரின் உரை.

“எம்.பி.ராகவன் அவர்கள் இதுவரை ஒரு தமிழ் நூல்கூட எழுதியதில்லை. சிறு கட்டுரையோ, கதையோ கூட எழுதி வெளியிட்டதில்லை. பின் எதற்காக அவருக்கு இந்த வாழ்நாள் சாதனையாளர் பரிசு ?” என்று கேட்டுவிட்டு, அவரே தொடர்ந்தார்; “ஏனென்றால் எழுதுவதை விட மிகப் பெரிய காரியத்தை அவர் செய்திருக்கிறார். போட்டிகள், பரிசுகள் என்று அறிவித்து, ஆதரவு நல்கி, பல பெண் எழுத்தாளர்களை அவர் உருவாக்கி உள்ளார். அவர்கள் நூல்களைப் பதிப்பிக்க நிதியுதவி வழங்கி உள்ளார். இப்படி இவருடைய உதவியால் வளர்ந்த தமிழில் எழுதும் பெண் எழுத்தாளர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இந்த மறுமலர்ச்சியைத் தமிழ் எழுத்துலகிலும் பெண் எழுத்தாளர்கள் வாழ்விலும் உருவாக்கியதற்காகவே இந்த

சங்கம் எம்.பி.ராகவனுக்கு ஒருமனதாக இந்த பெருமைமிகு விருதை வழங்கி பெருமை பெறுகிறது !”

எம்.பி.ராகவன் அய்யாவிற்குப் பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கினார்கள். புகைப்படக் கலைஞர்கள் க்ளிக்கினார்கள். கூட்டம் கரவொலி எழுப்பி புரவலர் எம்.பி.ராகவனைக் கொண்டாடியது. பிரபல பெண் எழுத்தாளர்கள் பலர் எழுந்து நின்று தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினார்கள்.

ஒரு எழுத்தாளராக இல்லாத இந்த எம்.பி.ராகவன் ஏன் மற்றவர்களை, குறிப்பாகப் பெண்களை, எழுத ஊக்குவிப்பதையே வாழ்நாள் தவமாகச் செய்து வருகிறார் ?

கரவொலி அடங்கும் நேரம், விழா நாயகன் எழுந்து ஏற்புரை வழங்கினார்.

“நான் எழுத்தாளன் இல்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். உங்களில் பலருக்கும் ஏன் நான் இந்தப் பணியை இப்படி வெறியுடன் செய்து வருகிறேன் என்று அறிந்துகொள்ள ஆவல் இருக்கலாம். இதற்குப் பின்னால் ஒரு சிறிய கதை இருக்கிறது. அதைச் சுருக்கமாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

“நான் சென்னையின் குறிப்பிடத் தகுந்த தொழிலதிபர் என்று உங்களுக்கெல்லாம் தெரியும். இந்தத் தொழிலை நானே தொடங்கி வளர்த்தெடுத்தேன் என்பதும் தெரிந்ததே. அதனால் நான் 24 மணி நேரமும் ஓடிக்கொண்டே இருந்தேன். அருமையான மனைவி, குடும்பம் என்று இருந்தாலும், எதையும் கவனிக்க

எனக்கு நேரமில்லை.

ஒரு நாள் ஒரு நீண்ட வெளிநாட்டுப் பயணத்திற்குப் பிறகு வீடு திரும்பினேன். நான் உள்ளே நுழைந்ததும், என் மனைவியைக் காணவில்லை. பதைபதைத்தேன். தேடினேன். அவள் விட்டுப்போன கடிதம் மட்டுமே கிடைத்தது. அந்தக் கடிதத்திலிருந்த வாசகம்தான் என் வாழ்க்கையையே மாற்றியது. “நீங்கள்

பெரிய பணக்காரர். வெற்றியாளர். தொழிலதிபர். ஆனால் பெண்ணை மதிக்கத் தெரிந்து கொள்ளவில்லை. அவள் திறமைகளை, அவள் வாழ்க்கையைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. இனியாவது செய்வீர்கள் என்று நம்புகிறேன்” என்று மட்டுமே எழுதியிருந்தது. “எவ்வளவு தேடியும் என் மனைவி எனக்கு மீண்டும் கிடைக்கவில்லை.

“ என் வாழ்வில் மிகப் பெரிய இடி அது. அதிலிருந்து மீள நான் கையிலெடுத்த ஆயுதம்தான் பெண்கள் முன்னேற்றம், பெண்களின் கலைத்திறன்களை ஊக்குவித்தல். அதைத்தான் இப்போது தொடர்ந்து செய்து வருகிறேன்.

“இந்த மகத்தான பரிசை என் விலைமதிப்பற்ற மனைவியின் நினைவுகளுக்குச் சமர்ப்பிக்கின்றேன். அவள் மனம் சாந்தி அடையும் என்று நம்புகிறேன் !”

எம்.பி.ராகவன் பேசி முடித்தபோது அந்த அரங்கத்தில் பல விசும்பும் குரல்கள் எழுந்தன.

2 Comments on “ஜி.பி.சதுர்புஜன்-/பரிசு”

Comments are closed.