
லலிதா தூங்க முடியாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். நினைக்க நினைக்க மனம் ஆறவே இல்லை. சந்துரு வீட்டை விட்டு ஓடிப்போய்க் கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன. காவல் துறைக்குத் தெரிவிக்காமல் இரண்டு நாட்கள் தாக்குப் பிடித்தார்கள். அதற்குப் பிறகும் அவன் வராமல் போகவே, சதாசிவம் புகார் கொடுத்தார். அவருக்கு ஏதேதோ விபரீதமான கற்பனைகள். தம் மனைவிக்கு உண்மை தெரியும் என்பது தெரியாத நிலையில் அவர் ரொம்பவும் கவலை கொண்டு அரற்றியதைப் பார்த்து லலிதாவின் வருத்தம் மிகுதியாகியது. ‘காரணத்தைச் சொல்லி விடலாமா, சொல்லிவிடலாமா’ என்று மனசு அடித்துக்கொண்டது. ஆனால், என்ன முயன்றும் முடியவில்லை. அது அவளுடைய தன்மானப் பிரச்சினையாகவும், அவளுடைய ஒரே மகனின் மதிப்பைக் குறைத்துவிடக்கூடிய ஒன்றாகவும் இருந்ததால் அவளால் அதைப்பற்றிக் கணவரிடம் வாயே திறக்க முடியாமல் போயிற்று.
விளக்குப் பொத்தான் அழுத்தப்பட்ட ஓசை கேட்டது. அதைத் தொடர்ந்து அந்த அறை முழுவதும் பரவிய வெளிச்சத்தில் அறையின் வாயிலில் சதாசிவம் நின்றதும் தெரிந்தது. வெறுமே மூடிக் கண்களை அரையாகத் திறந்து அவள் தலையைச் சற்றே தூக்கி அவரைப் பார்த்தாள்
‘என்னது? இன்னும் நீ தூங்கல்லியா?” என்று கேட்டவாறு அவர் அறைக்குள் நுழைந்து அவள் படுத்துக் கொண்டிருந்த கட்டிலில் உட்கார்ந்தார். அவள் எழுந்து தானும் உட்கார்ந்துகொண்டு கண்களைக் கசக்கத் தொடங்கினாள்.
“வீடே விறிச்சுனு போயிடுத்து. ஒண்ணுமே பிடிக்கல்லே. யோசிச்சு யோசிச்சு மண்டையே வெடிச்சுப் போயிடும் போல இருக்கு” என்று முணகிவிட்டு அவள் ரொம்பவும் இரைச்சலாகப் பெருமூச்சு ஒன்றை உதிர்த்தாள். சில வினாடி இடைவெளிக்குப் பிறகு அவரும் பெருமூச்சு விட்டார். ஆனால் ஒன்றும் பேசாமல் இருந்தார்.
சிறிது நேரம் ஆழமான பேசாமையில் கழிந்ததற்குப் பின்னர், “அவன் ஏன் இப்படி ஓடிப்போகணும்னு எனக்குப் புரியல்லயே, லலிதா? பரிட்சை ரிசல்ட் ஒண்ணும் வரல்லே. காலேஜ் திறந்தே மூணு மாசந்தானே ஆறது?… வீட்டிலேயும் சாமான்கள்ளாம் வெச்சது வெச்ச மேனிக்கு அப்படி அப்படியே இருக்கு. நமக்குத் தெரிஞ்ச அளவுக்குத் திருடற பழக்கம் கிடையாது. இல்லியா?… (மனைவியின் மென்மையான தலையசைப்புக்குப் பிறகு) ஒருவேளை ஏதாவது கடத்தல் விவகாரமாய் இருக்குமோ?” என்றார்.
‘அப்படின்னா?”
“நம்ம கிட்டருந்து பணம் பிடுங்கறதுக்காக யாராவது சந்துருவைக் கடத்திண்டு போயிருப்பாங்களோன்னு கேக்கறேன்…”
“சேச்சே, அப்படியெல்லாம் ஒண்ணும் இருக்காது. அப்படி என்ன, நம்மகிட்டருந்து ஆயிரக்கணக்குலே பிடுங்கற அளவுக்கு நம்மகிட்ட பணம் கொட்டி வெச்சுக் கிடக்கா என்ன? வேற ஏதாவது காரணம் இருக்கும்…”
சதாசிவம் சட்டென்று தலையை உயர்த்தி லலிதாவை ஆழமாகப் பார்த்தார். லலிதா தன் கண்களை உடனே தாழ்த்திக் கொண்டது பொருள்பொதிந்த செய்கையாக அவருக்குப் பட்டது. அவரது குழப்பம் அதிகமாகியது. அவரும் சந்துரு காணாமல் போனதிலிருந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். மகன் ஓடிப்போனதில் – அல்லது காணாமற் போனதில் – தமக்கு ஏற்பட்டிருந்த வருத்தத்தை விடவும் லலிதாவுக்கு ஏற்பட்ட வருத்தமே ஆழமானது, அதிகமானது என்பதெல்லாம் நன்றாகப் புரிந்த நேரத்தில், அவனது மறைவுக்குரிய காரணத்தைப் பற்றித் தாம் மண்டையை உடைத்துக்கொண்ட அளவுக்கு அவள் உடைத்துக் கொள்ளவில்லை என்று அவர் நினைத்தார் . ‘இதனால் இருக்கலாம். அதனால் இருக்கலாம்’ என்று தானாக ஓர் ஊகமும் செய்யாமல், அவர் கூறிய ஊகங்களைகூடப்பெரும்பாலும் அப்படியெல்லாம் அநேகமாக இருக்காது என்றே அவள் தள்ளி வந்திருப்பதையும் நினைவு கூர்ந்த அவர் கொஞ்சம் வியப்படைந்தார். ‘இவளுக்கு ஏதோ தோன்றுகிறது. அல்லது அரைகுறையாகவேனும் காரணம் தெரிந்திருக்கிறது. சொல்லத் தயங்குகிறாள். அல்லது அது சரிதானா என்பதைக் கண்டுபிடித்து நிச்சயப்படுத்திக் கொண்டதற்குப் பிறகு சொல்லலாம் என்று நினைப்பது மாதிரித் தெரிகிறது….’ என்று தமக்குள் வரிசையாக எண்ணிய அவர், “லலிதா! உனக்கு ஏதோ தோன்றதுன்னு எனக்குத் தோன்றது. நீ சொல்லத் தயங்கறே. எதுவாய் இருந்தாலும் எங்கிட்டருந்து மறைக்காதே…” என்றார். அவரது பார்வை அவள் மீது நெடுமையாகவும் துருவுவது போலவும் படிந்திருந்தது.
லலிதாவுக்கு உள்ளூற வியப்பு ஏற்பட்டாலும், அதை அவர் தெரிந்துகொண்டு விடக்கூடாது என்பதால் தாழ்த்திய கண்களைத் தாழ்த்தியவாறே சில வினாடிகள் இருந்துவிட்டு, முகத்தை உணர்ச்சியற்று வைத்துக்கொண்டு, “எனக்கும்தான் எதுவுமே தோணல்லே. தோணினா நான் ஏன் அதை உங்ககிட்டருந்து மறைக்கணும்? புருஷன் பெண்டாட்டிக்குள்ளே இல்லாத அந்தரங்கமா? அதுலெயும் தங்கள் சொந்தப் பிள்ளையைப் பத்தின கவலையிலே எதுவானாலும் பரஸ்பரம் சொல்லிண்டு ஆறுதல் அடையத்தானே ரெண்டு பேருமே பார்க்கணும்? நீங்க ஒண்ணும் கற்பனை பண்ணிக்க வேண்டாம். காரணம் எனக்குத் தெரிஞ்சா அதை நான் ஏன் உங்ககிட்டேருந்து மறைச்சு வைக்கணும்? அதனாலே எனக்கென்ன லாபம்?” என்று அழுத்தமாகவும் அவர் கண்களை நேரடியாகப் பார்த்தும் சொன்னாள். குரலில் தென்பட்ட அழுத்தமும் அவளது நேரடிப் பார்வையும். ‘ஒருவேளை நாம் நினைத்ததெல்லாம் தப்போ?’ என்று அவரை நினைக்க வைத்தன. ‘உண்மைதானே? இவ எதுக்கு எங்கிட்டேருந்து விஷயத்தை மறைக்கணும்?…’ என்றும் அவரை எண்ண வைத்துக் குழப்பியது அவளது பேச்சு.
ஒருவேளை ஏதாவது பெண் விவகாரமாய் இருக்குமா?…” என்று அவர் இதுநாள் வரையில் மனத்துக்குள்ளேயே அழுத்தி வைத்துக் கொண்டிருந்த கேள்வியைக் கேட்டுவிட்டு மனைவியைக் கவலையுடன் பார்த்தார். லலிதாவின் முகம் சிறிது சிவந்தது. அது அவருக்கு வியப்பை அளித்தது. பெண் விவகாரம் என்கிற
அடிப்படையில் ஒரு பெண் பெண் என்கிற காரணத்தால் முகம் சிவந்திருக்கலாம் என்று தம்மைத் தாமே சமாதானப்படுத்திக் கொண்ட அவர், “என்ன லலிதா பேசாம இருக்கே?” என்றார்.
‘அதுக்கெல்லாம் அவனுக்கு வயசாயிடுத்தா என்ன?” என்ற லலிதா சுவரை வெறித்தாள்.
“இருபது ஆயிடுத்தே?.. ஆனா, அப்படி ஏதானும் இருந்தா, நம்மகிட்ட சொல்ல வேண்டியதுதானே? உரிய காலத்திலே நடத்தி வெச்சுட்டுப் போறோம். அதுக்கு அந்தப் பெண்ணையும் இழுத்துண்டு ஓடுவானேன்? என்று அவர் தொடர்ந்து பேசியபோது, “நீங்க அப்படின்னே முடிவு பண்ணிட்டேளா என்ன?… அப்படியெல்லாம் ஒண்ணும் இருக்காது…” என்ற லலிதா கட்டிலிலிருந்து இறங்கித் தண்ணீர் குடித்துவிட்டு வந்து உட்கார்ந்தாள்.
‘அவனுடைய ஃப்ரண்ட்ஸ் சிலரைப் பார்த்து அதுபத்தி நான் மறைமுகமாக் கேட்டும் ஆச்சு. அவன் சில பெண்களோட பழகறதுண்டுன்னும் ஆனா ஓடிப்போற அளவுக்கு இருக்காதுன்னும் பளிச்னு சொல்லிவிட்டான் ஒரு பையன். தவிர, எந்த ஒரு பெண்ணும், காணாம போகாத நிலைமையிலே அவன் எவளையோ இழுத்துண்டு ஓடினதாய் எப்படிச் சொல்ல முடியும் அப்படின்னும் அவன் வாய்விட்டே கேட்டுட்டான். சந்துருவை ரொம்பப் பிடிக்கும் போலிருக்கு அவனுக்கு. கொஞ்சம் கோபமாகவே கேட்டான்…”
‘ஓ. அப்படியே கூட விசாரிச்சுட்டேளா?”
“அதுமாதிரி நேரடியாய்க் கேட்கல்லே, லலிதா. நாசூக்காய்த்தான் விசாரிச்சேன். ஆனா இந்தக் காலத்துப் பசங்க இதுலேயெல்லாம் ரொம்பவும் புத்திசாலிகளாச்சே?” என்று அவர் பெருமூச்சு விட்டார். அதற்குப் பிறகு அவர்கள் ஏதும் பேசிக் கொள்ளவில்லை.
சில நொடிகள் வரையில் அவரவர் எண்ணங்களில் மூழ்கி உட்கார்ந்து கொண்டிருந்துவிட்டு, இருவரும் தத்தம் படுக்கையில் படுத்து உறங்க முயன்றனர்…
… மறுநாள் காலையில், சதாசிவத்துக்குக் காபியை ஆற்றிக் கொடுத்த வண்ணம், “…சந்துரு தவறாம படிக்கிற அமுதம், கலைஞன்
“இந்த ரெண்டு பத்திரிகையிலேயும் சூசகமாய் விளம்பரம் கொடுத்தா என்ன?” என்று லலிதா கேட்டாள்.
“நானே சொல்லணும்னு நெனச்சேன்.”
“உன்னைப் பிரிஞ்சு அப்பாவும் நானும் ரொம்ப வாடியிருக்கோம். நீ வரலைன்னா நாங்க இடிஞ்சு போயிடுவோம்’ அப்படிங்கிற மாதிரி ஒரு விளம்பரம் குடுக்கலாம்னு நினைக்கிறேன்.”
“இன்னிக்கே போய்க் குடுத்துடறேன்..’
“சரி… நான் எழுதி எடுத்துண்டு பேனாவும் தாளும் எடுக்க விரைந்தாள். சற்று நேரம் கழித்து அவள் தான் எழுதியதை அவரிடம் காட்டினாள்.
‘சந்துரு, எதையும் நாங்கள் பொருட்படுத்த மாட்டோம் – உன் மறைவைத் தவிர. அதனால், உடனே வந்துவிடு. கவலையால் துரும்பாகிவரும் நாங்கள் உன்னிடம் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டோம். நீ திரும்ப வந்தால் போதும். எங்களுக்கு வேண்டிய தெல்லாம் அது ஒன்றுதான் – லலிதா, சதாசிவம்.’
படித்துவிட்டுச் சதாசிவம் லலிதாவைக் கூர்ந்து பார்த்தார். அறிக்கையின் அந்தச் சொல்லமைப்பில் தமக்குப் புரியாத அந்தரங்கம் ஒன்று புதைந்து கிடந்தாற்போல் அவருக்கு மயக்கம் விளைந்தது. ஆனால் லலிதா முகத்தைக் கோடுகள் இன்றி வைத்துக் கொண் டிருந்தாள். அவர் அந்தச் சொல்லமைப்பை ஒரு தலையசைப்பின் வாயிலாக ஏற்றுக்கொண்டு தமது கைப்பையில் உடனே வைத்துக் கொண்டார்.
“இன்னிக்கே விளம்பரம் குடுத்துடுங்கோ. அப்பதான் அடுத்த வாரமாவது அது வெளியாகும்…”
“ஆகட்டும். இன்னிக்கு அரை நாள் லீவு போட்டுடறேன்” என்று பதில் சொல்லிவிட்டு அவர் தம் அறைக்குள் நுழைந்து நாளிதழைப் பிரித்துப் படிக்க முயன்றார்.
அவர்கள் கொடுத்த அறிவிப்பு மறு வாரமே இரண்டு வார இதழ்களிலும் வெளியாயிற்று. சதாசிவம் அலுவலகத்துக்குக் கிளம்பிப் போனதற்குப் பிறகு லலிதா இரண்டு வார ஏடுகளிலும் தங்கள்
அறிவிப்பு வெளியாகியிருந்த பக்கங்களைப் பிரித்து மடியில் வைத்து வெறுத்துப் பார்த்துக்கொண்டு வெகு நேரம் உட்கார்ந்து கிடந்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி வழிந்தது. ‘ஒருவேளை அசிங்கமும் அவமானமும் பட்டுக்கொண்டு திரும்பி வராமலே இருந்து விடுவானோ?’ என்கிற கேள்வி அவள் மனத்தில் தோன்றியபோது அவள் இதயம் படபடத்தது. காலிலிருந்து தலை வரையில் ஓர் அதிர்ச்சி அவளை ஆட்கொண்டது. சட்டென்று தன் வலுவையெல்லாம் இழந்து விட்டாற்போன்ற நிலையில் அவள் துவண்டு போனாள். உடம்பினுடையவும், இதயத்தினுடையவும் படபடப்பைப் பெரிதும் முயன்று சமாளித்துக்கொண்டு அவள் மெதுவாக எழுந்து நடந்து சுவரில் தொங்கிக் கொண்டிருந்த சந்துருவின் புகைப்படத்தை அதன் ஆணியிலிருந்து அகற்றி எடுத்துக்கொண்டு திரும்பவும் தன் இருக்கைக்கு வந்தமர்ந்து அதை மடியில் கிடத்திக்கொண்டு நெடுங்காலப் பிரிவாற்றாமைக்கு ஆட்பட்டவளுக்குரிய பாசத்துடன் அதைத் தடவித் தடவி உற்றுப் பார்த்தாள். அந்தப் படம் எடுத்துச் சரியாக ஒரு மாதமே ஆகியிருந்தது.
‘இருபது வயதுக்குள் இவன்தான் என்னமாய் வளர்ந்திருக்கிறான்! ஒரு முப்பது வயசு இளைஞனுக்குரிய வளர்ச்சியல்லவா இது? புசுபுசுவென்று மீசையும் கிருதாவுமாய் ஒரு சினிமாக் கதாநாயகன் மாதிரி என்ன களை!…’ என்று தனக்குள் வியந்துகொண்ட லலிதா அந்தப் படத்தை மார்போடு அணைத்துக்கொண்டு அங்கே தன்னைக் கவனிக்க யாரும் பக்கத்தில் இல்லாத நிலையில் மனத்தை அழுத்திக் கொண்டிருந்த சுமையை முடிந்த வரையில் இறக்கி வைக்கும் முயற்சியில் குமுறிக் குமுறி அழலானாள். சில நிமிடங்களுக்கு அவ்வாறு அழுது தீர்த்ததற்குப் பிறகு. அவள் கண்களையும் முகத்தையும் புடைவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டு மறுபடியும் எழுந்து சென்று அந்தப் படத்தை அதற்குரிய ஆணியில் மாட்டிவிட்டு அதன் எதிரே சில வினாடி நேரம் நின்றாள். அவனே எதிரில் இருந்ததாகப் பாவித்து, ‘டே, சந்துரு, நமக்குள்ள நடந்த அந்த ரகசியத்தை நாம யாருக்கும் சொல்லவே வேண்டாம். வெளியிலே சொல்லக்கூடிய விஷயமா அது?… சந்துரு! யாருக்கும் நான் அதைப்பத்திச் சொல்லவே மாட்டேண்டா. சொன்னா நம்ம ரெண்டு பேருக்குந்தானே அசிங்கம்? அதனாலே தயவு பண்ணி நீ திரும்பி வந்துடு… முக்கியமாய் உங்கப்பாவுக்கு அது தெரியவே வேண்டாம்…. இதுமாதிரியெல்லாம் நீ வீட்டை விட்டுப் போனதிலேயிருந்து நான் நினைக்கிற நினைப்புகள் ‘டெலிபதி, டெலிபதி’ங்கிறாளே, அதுமாதிரி வேலை செஞ்சு உன் மனசிலே தாக்கத்தை ஏற்படுத்தி உன்னைப் பத்திரமாய் எங்கக்கிட்டக் கொண்டு சேர்க்கணும்னு நான் வேண்டாத நிமிஷமே இல்லைடா!..’ என்று வாய்விட்டே புலம்பினாள். மறுபடியும் அவள் கண்கள் கண்ணீரால் நிறைந்து போயின.
….இரண்டு வார ஏடுகளிலும் அறிவிப்பு வெளிவந்ததற்குப் பிறகு ஒரு வாரம் ஓடிப்போய்விட்டது.
அன்று ஞாயிற்றுக்கிழமை. முற்பகல் பதினொரு மணி. லலிதாவும் சதாசிவமும் சாப்பிட்டு முடித்துவிட்டு ஆளுக்கு ஒரு பத்திரிகையைப் பிரித்து வைத்துக்கொண்டு படிப்பது போல் பாசாங்கு செய்தவாறு தத்தம் எண்ணங்களில் ஆழ்ந்திருந்தனர்.
“என்னங்க! நாம ஏற்கெனவே பேசி வெச்சிண்டிருக்கிறபடி. சந்துரு திரும்ப வந்ததும் என்ன காரணம் ஏதுன்னெல்லாம் அவன்கிட்ட நாம கேக்கக் கூடாது. ஏதாவது இருந்தா அவனே சொல்லுவான். அவனா ஒண்ணும் சொல்லல்லைன்னா நாம ஒண்ணும் கேட்டுத் தொந்தரவு பண்ணக்கூடாது. ஏதோ இந்தமட்டும் திரும்பி வந்தானே. அதுவே பெரிசுன்னு விட்டுடணும். என்ன நான் சொல்றது?” என்றாள் லலிதா.
“அதுதான் படிச்சுப் படிச்சுச் சொல்லி வெச்சிருக்கியே? கேப்பேனா?” என்று அவர் பதில் சொல்லி முடித்ததும் அழைப்பு மணி ஒலித்தது. அந்த ஓசையில் இழைந்தோடிய தயக்கம் அவர்களின் முதுகுத் தண்டுகளை நிமிரச் செய்தது. அந்த ஓசை வெறும் இயந்திரத்தனமாக அவர்களுக்குத் தெரியவில்லை. விசையை அழுத்தியது சந்துருதான் என்று இருவருக்குமே மிக உறுதியாய்ப் புலனாகியதில் இருவரும் பரபரப்புக் கொண்டு எழுந்தனர். சதாசிவம் முதலில் எழுந்து ஓடினார்.
பின்னாலேயே ஓட்டமும் நடையுமாகத் தொடர்ந்து கொண்டிருந்த லலிதாவைத் திரும்பிப் பார்த்து, “சந்துருதான் வந்திருக்கான்” என்று ஒரு சில சின்னப் பையனுக்குரிய உற்சாகக் குரலில் கத்தியவாறு அவர்,
உடனே அவனை உள்ளே இழுத்துக்கொள்ளா விட்டாலும் எங்கே மறுபடியும் ஓடிப்போய் விடுவானோ என்று அஞ்சியவர் போன்று, தமது ஓட்டத்தின் விரைவை அதிகப்படுத்தினார். லலிதாவுக்குப் படபடவென்று வந்தது. தாளிடப் பெற்றிருந்த கதவுக்குப் பின்னால் நின்றிருந்த சந்துரு – இளைத்தும் கறுத்தும் போயிருந்தவன் – ஒரு குற்றவாளிக்குரிய குறுகுறுப்பான பார்வையுடன் தயங்கி நின்றிருந்தான். அவனது சோர்ந்த பார்வை சதாசிவத்தைக் கணம்போல் சந்தித்துவிட்டுப் பின்புறமாகக் கடந்து சென்று லலிதாவின் கண்களில் நிலைத்தது. லலிதா தன்பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள். அவனும்தான்.
பிறகு கதவைத் திறந்து அவனை ஒரு குழந்தையை அழைத்து வருவது மாதிரி அவர் அவன் கையைப் பிடித்து உள்ளே கூட்டிக்கொண்டு வந்தார். அவன் தன்னைத் தாண்டிக்கொண்டு உள்ளே போக முற்பட்டபோது, லலிதா, “சந்துரு, வந்துட்டியாடாப்பா?” என்றவாறு கண்ணீர் பொங்கச் சட்டென்று பாய்ந்து வந்து ஓர் இரண்டு வயதுக் குழந்தையைக் கையாளுவது மாதிரிச் சந்துருவைத் தாவிப்பிடித்து அணைத்துக் கொண்டாள். அவள் தன் தாய் என்பதை மறந்து போனவன் போல் சந்துரு கூச்சத்துடன் நெளிவது போல் சதாசிவத்துக்குத் தோன்றியது. ‘என்ன இருந்தாலும் வயசுப்பிள்ளை இல்லையா?’ என்று அவர் தமக்குள் எண்ணிக்கொண்டு தாயும் மகனும் கட்டுண்டிருந்ததைக் கண்கள் பணிக்கப் பார்த்துப் பரவசப்பட்டபடி நின்றார். லலிதாவின் பிடி இறுகியது.
அவள் தோளில் சரிந்திருந்த மகனின் முகத்தை அவர் ஆழ்ந்து பார்த்தார். சந்துருவின் மூடிய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
அவனைப் பிடித்த பிடியைச் சிறிதும் தளர்த்தாமல், “போய் ஃப்ளாஸ்கிலேருந்து காப்பி எடுத்துண்டு வாங்கோ உடனே!” என்றாள் லலிதா. அவர் அவசரமாக நகர்ந்த அந்தச் சில கணங்களைப் பயன்படுத்திக்கொண்டு, “சந்துரு! நடந்தது எதுவும் அப்பாவுக்குத் தெரியாது. அதனாலே நீ தைரியமாய், கூச்சம் இல்லாம, அவமானப்படாம, எல்லாத்தையும் ஒரு கெட்ட சொப்பனத்தை மறக்கிறது மாதிரி மறந்துட்டுப் பழைய சந்துருவாய் இருக்கலாம். நானும்
எதையும் மனசிலே வெச்சுக்கல்லே. என்ன இருந்தாலும் நீ நான் பெத்த குழந்தைடா, சந்துரு…” என்று அவன் காதருகே கிசுகிசுத்தான். அவன் நெளிந்து கொண்டிருந்ததையும், தன் கைகள் மட்டுமே அவனைச் சுற்றிக் கொண்டிருக்க அவன் தன்னிரு கைகளையும் பக்கவாட்டில் தொங்கவிட்டுக் கொண்டு தானாக அவளைத் தொடாமல் இருப்பதையும் அவன் கவனித்து அவனது சங்கடத்தைப் புரிந்து கொண்டவளாய்த் தன் பிடியைத் தளர்த்தினாள். சந்துரு கண்களைத் துடைத்துக் கொண்டு, “அம்மா! என்னை மன்னிச்சுடும்மா!” என்று தொண்டையடைக்கக் கூறியபடி அவள் கால்களைப் பிடித்துக் கொண்டு தரையில் உட்கார்ந்தான்.
“சந்துரு. எழுந்திரு. உங்கப்பா வர்றதுக்கு முந்தி எழுந்துரு” என்று அவள் அவனைத் தூக்க முயன்றாள். அவன் தலையைக் குனிந்துகொண்டு எழுந்தான். சதாசிவம் காபியுடன் வந்தார். அவன் அதை வாங்கி மெதுவாகப் பருகினான்…
“போய்க் குளிச்சுட்டுச் சாப்பிட வா, சந்துரு..” என்ற லலிதா அடுப்பைப் பற்ற வைத்தாள். சந்துரு பிறந்த அன்றுகூட அவள் இவ்வளவு மகிழ்ச்சியடைவில்லை…
குளியலறையிலிருந்து தண்ணீர் கொட்டுகிற ஓசை அவன் செவிகளில் ஓர் இனிய பாடலைப்போல் விழுந்து கொண்டிருந்தது. அவள் சிந்தனை சந்துரு ஓடிப்போகக் காரணமாக அமைந்த அந்நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்தது. நவராத்திரி கொலுவுக்கு அழைத்திருந்த சிலரின் வீடுகளுக்குப் போவதற்காக அவள் அந்த வெள்ளிக் கிழமையைத் தேர்ந்தெடுத்திருந்தாள். மயிலாப்பூருக்கும். மந்தைவெளிக்கும், அண்ணா நகருக்கும் போய்விட்டு அவள் அமைந்தகரையில் இருந்த தன் வீட்டுக்கு வருவதற்காக அண்ணா நகர்க் கிழக்கு முனை வட்டத்துப் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது அது நடந்தது. அப்போது இரவு எட்டு மணி இருக்கும். இரண்டு பேருந்துகள் நிற்காமலே போய்விட்டன. ஒன்றில் அதன் ஓட்ட நிலையிலேயே நான்கு ஆண்கள் தொற்றிக்கொண்டு எப்படியோ ஏறிப் போய்விட்டார்கள். இதனால் அந்த நிறுத்தத்தில் அவள் மட்டுமே தனித்து நிற்க வேண்டியதாயிற்று. அண்ணா நகர் திருட்டு நிகழ்ச்சிகள் பற்றி அடிக்கடி செய்திகள் வந்து
கொண்டிருந்ததை நினைவு கூர்ந்ததன் விளைவாக அவள் நெஞ்சு படபடத்தது. தனியாக நிற்க அச்சமாக இருந்தது. இங்கொன்றும் அங்கொன்றுமாக எரிந்த தெருவிளக்குகள் வெளிச்சத்தையே அளித்தன. ‘இனிமேல் மாலை ஆறுக்கு மேல் பஸ் ஸ்டாப்பில் நிற்கும்படியான பயித்தியக்காரச் செயலைச் செய்யவே கூடாது’ என்று அவள் தனக்குள் நினைத்தபடி படபடப்புடன் நின்று கொண்டிருந்த போது தெரு விளக்குகள் அணைந்து விட்டன. அவளது
பீதியும் மிகுதியாயின. தெருவில் அவ்வப்போது ஓடிய கார்களினுடையவும், அண்ணா நகர் மேற்கு நோக்கிச் சென்ற பேருந்துகளுடையவும் வெளிச்சத்தைத் தவிர வேறு வெளிச்சமே இல்லை.
அப்போது சற்றுத் தொலைவில் சீழ்க்கை ஒலி இலேசாய்க் கேட்டது. பின்புறம் கேட்ட அந்த ஒலி அவளைச் சில்லிப்பில் ஆழ்த்தியது. அவளுக்கு நாற்பது வயசு ஆகிவிட்டது. இருந்தாலும், ‘பெண் ஜென்மம்தானே?’ என்று நினைத்து அவள் திகில் அடைந்தாள். அவள் திரும்பிப் பார்ப்பதற்குள் இரண்டு வலுவான கைகள் அவளைச் சுற்ற, அந்தக் கைகளுக்குரியவனின் உதடுகள் அவள் கன்னங்களில் அழுந்த முனைந்தன. லலிதா பதறிப்போய், “ராஸ்கல்!” என்று சுத்தினாள். அதற்குள் தெரு விளக்குகள் அவளைக் காப்பாற்ற இந்தவைபோல் பளீரென்று எரிந்தன.
கையிலிருந்து ஆபாசப் படங்கள் நிறைந்த ஆங்கில ‘ப்ளேபாய்’ பத்திரிகையை நழுவ விட்டுவிட்டுச் சந்துரு ஓடிப்போனது அந்தக் சுணத்துக்குப் பிறகுதான்…
1980

One Comment on “ஜோதிர்லதா கிரிஜா/ அம்மாவுக்கும் பிள்ளைக்குமிடையேஓர் அந்தரங்கம்”
Comments are closed.