நன்றி: ஒன்இந்தியா தமிழ்

முகநூலில் : ஆர்.கந்தசாமி

72 கோடி சொத்துக்களை நடிகருக்கு எழுதி வைத்துவிட்டு உயிரிழந்த ரசிகை.. ஆனால் அந்த நடிகர் ரியாக்ஷன்?

சென்னை: தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் சிலருக்கும் கோவில்கள் கட்டுவது கேள்விப்பட்டிருப்போம். அதுபோல நடிகர்களின் படம் வெளியாகும் போது ரசிகர்கள் தங்களுடைய அன்பின் மிகுதியாக செய்யும் செயல்களை பார்த்து வியந்திருப்போம். சில நேரங்களில் முகம் சுளிக்கவும் வைத்திருக்கும். ஆனால் நடிகர் ஒருவருக்காக ஒரு ரசிகை 72 கோடி மதிப்புள்ள சொத்துக்களை எழுதி வைத்துவிட்டு உயிர்விட்ட செய்தி தான் இணையத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சினிமாவில் ஹீரோவாக நடிப்பவர்களை நிஜ ஹீரோவாகவே நம்புபவர்கள் அந்த காலத்தில் மட்டுமல்ல இந்த காலத்திலும் இருக்க தான் செய்கிறார்கள். எம்ஜிஆர் காலத்தில் எம்ஜிஆர் ஒரு திரைப்படத்தில் நம்பியாருடன் ஃபைட் பண்ணும் போது அவருடைய கத்தி கீழே விழுந்த போது பக்கத்தில் இருந்த கம்புகளை தூக்கி திரையில் வீசி சண்டை போட சொன்ன ரசிகர்கள் பற்றிய செய்திகளை அந்த காலத்தில் கதையாக கேட்டிருப்போம்.

ஆனால் இப்போதும் நடிகர்களுக்காக சில ரசிகர்கள் செய்யும் செயல் இப்படியும் யோசிப்பாங்களா? என்று வியக்க வைக்கிறது. ஆமாங்க பாலிவுட்டில் மட்டுமல்ல கோலிவுட்லும் பிரபலமாக இருக்கும் நடிகர் சஞ்சய் தத்துக்கு அவருடைய ரசிகை செய்த செயல் பலரையும் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது.

சஞ்சய் தத் பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர்தான். இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளமானோர் இருக்கிறார்கள். 135க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சஞ்சய் தத்தின் மீது தீராத அன்பு கொண்ட பெண் ரசிகை ஒருவரின் சோகக்கதை வெளிவந்துள்ளது.

அந்தப் பெண் சஞ்சய் தத் தான் தன்னுடைய உயிர் என்று நம்பி அவரையே திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதமாக இருந்தாராம். ஆனால் அந்த விஷயம் சஞ்சய் தத்துக்கு தெரியவே இல்லையாம். இறுதியில் அந்தப் பெண் ரசிகை தன்னுடைய மனதிற்கு பிடித்த சஞ்சய் தத்துக்காக தன்னுடைய 72 கோடி மதிப்புள்ள சொத்தை எழுதி வைத்துவிட்டு உயிரிழந்த சம்பவம் வெளியாகி இருக்கிறது.

அந்தப் பெண் ரசிகையின் பெயர் நிஷா படேல் என்று கூறப்படுகிறது. அந்தப் பெண் சஞ்சய் தத் மீது அதிகமான காதல் வைத்திருந்ததால் அவர் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லையாம். 2018 ஆம் ஆண்டில் மும்பை போலீசார் சஞ்சய் தத்துக்கு போன் செய்திருக்கின்றார்கள். அவர்கள் சொன்னதை கேட்டு சஞ்சய் தத் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

காரணம், நிஷா படேல் உங்கள் ரசிகை. அவருடைய சொத்துக்கள் அனைத்தையும் உங்கள் பெயருக்கு எழுதி வைத்துள்ளார். உடல்நிலை குறைவால் அவர் இறந்து விட்டார். அவர் தனியாக வசித்து வந்த நிலையில் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது வீட்டில் சோதனை இடும் போது அங்கிருந்த உயில் மற்றும் ஆவணங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

இந்த ஆவணங்களில் தனது சொத்துக்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் அனைத்தையும் சஞ்சய் தத்திற்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக சஞ்சய் தத்துக்கு போன் செய்து போலீஸ் கூறியதாக கூறப்படுகிறது. தன்மீது அதிகமான அன்பை வைத்து விட்டு இறந்து போன ரசிகை பற்றிய செய்தி சஞ்சய் தத்தை அதிக அளவில் பாதித்திருக்கிறது.

அப்போது சஞ்சய் தத் முக்கியமான முடிவை எடுத்திருக்கிறார். தனது வழக்கறிஞர் மூலம் ஒரு அறிக்கை வெளியிட்டார். நிஷா படேல் தனது ரசிகை என்பது அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் அவர் இறந்து போனது எனக்கு வருத்தம் அளிப்பதாக அளிக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு நிஷா படேலுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் அவரை சந்தித்ததில்லை, அவரை எனக்கு யாரென்று தெரியாது என்றும் அவருடைய சொத்துக்களை நான் ஏற்க மாட்டேன் என்று அந்த அறிக்கையில் சஞ்சய் தத் தெரிவித்து இருந்தாராம். இந்த செய்திகள் இதுவரைக்கும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது இணையத்தில் வெளியாகி பலரையும் வியக்க வைத்திருக்கிறது.