ஜோதிர்லதா கிரிஜா/பாகீரதியின் ‘பல்டி’

சாம்பு தற்செயலாக வாசற்பக்கம் எட்டிப் பார்த்தான். கையில் ஒரு சிறு மூட்டையுடன் தன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்த மாமனார் சுப்பிரமணியத்தைப் பார்த்ததும் அவன் உள்ளத்தில் மகிழ்ச்சியும் வியப்பும் மாறி மாறி ஏற்பட்டன.
“வாங்கோ, மாமா!” என்று அவன் அவரை ஆவலுடன் வரவேற்றான்.
சமையலறையிலிருந்து வெளிவந்த பாகீரதி, “யாருடா அது?” என்றாள்.
சாம்பு, குரலில் சிறிது அசடு வழிய, “சமயநல்லூரிலிருந்து மாமா வந்திருக்கார்!” என்றான்.
சம்பந்தியைப் பார்த்தபடி, “சம்பந்திப் பிராமணரா? யாரோ பிட்சைக்குத்தான் வந்திருக்காளாக்கும்னு பார்த்தேன்!” என்று அவள் சொன்னதும் தமது ஏழைமைக் கோலம் குறித்த அவமானம் அவருக்கு ஏற்பட்டது.
இருப்பினும், சமாளித்துக்கொண்டு, “பிட்சைக்குத்தாம்மா வந்திருக்கேன்! (வருத்தமாக) நீங்க எழுதின கடுதாசி கிடைச்சது. நீங்க கேட்டதிலே பாதிகூடச் செய்ய முடியாத நிலையிலே இருக்கேன் நான். கல்யாணத்தும் போதே என் சக்திக்கு மீறி வாரி இறைச்சுட்டேன்!” என்றார். அவரைப் பார்த்தால் அழுது விடுவார் போல் இருந்தது.
பாகீரதி, “சரியாச் சொன்னேள், சம்பந்தி! நீங்க கல்யாணத்தப்ப அமர்த்தியிருந்த பரிசாரகாள்ளாம் எங்க இலைகள்ளே சோத்தையும்
குழம்பையும் வாரி வாரித்தான் இறைச்சா. ஏதுடா, சம்பந்திகளாச்சேங்கிற மரியாதையோடவும் பயபக்தியோடவுமா பரிமாறினா அவா? நீங்க சொல்றாப்ல வாரித்தான் இறைச்சா…” என்றாள்.
சுப்பிரமணியம், “அம்மா, நீங்கள்ளாம் பெரிய மனுஷா. கல்யாணத்திலே உபசாரம் ஏதோ அரைகுறையா நடந்திருந்தாலும், நீங்க அதை அதிகமாப் பாராட்டக் கூடாது. எனக்கு இருக்கிறது ஒரே பொண்ணு…” என்றார் பணிவாக.
அப்போது அங்கே வந்த சாம்புவின் தங்கை வத்சலா,“ரெண்டு பொண்ணு இருக்கிறதாய் யாரும் சொல்லல்லையே?” என்றாள்.
சாம்பு, ‘பெரிய ஜோக் சொல்லிட்டியாக்கும்!’ என்பது போல் அவளைக் கோபமாக ஒரு பார்வை பார்த்தான்.
பாகீரதி, “போட்டும். என்னவோ பிட்சைக்காக வந்திருக்கேன்னு சொன்னேளே? என்ன பிட்சை?” என்றாள்.
“வேற என்ன? என் பொண்ணுக்கு வாழ்வுப் பிச்சைதான்! சாந்தி முகூர்த்தத்தப்ப நீங்க கேக்கற அளவுக்குச் செய்யறதுக்கு எனக்குச் சக்தி இல்லே. கல்யாணத்துக்கு வாங்கின கடன்லே பாதி கூட அடையல்லே இன்னும்” என்று சுப்பிரமணியம் சொல்லிவிட்டுக் கைகூப்பினார்.
“இப்ப நீங்க என்னதான் சொல்றேள்? உங்க கடனை நாங்க அடைக்கணும்கறேளா என்ன?” என்று பாகீரதி கேலி செய்தாள்.
சுப்பிரமணியம் பதவிசாக, “சேச்சே! அப்படியெல்லாம் சொல்லு வேணாம்மா? அந்த அளவுக்கு எனக்குக் கிறுக்குப் பிடிக்கல்லே…’ என்றார்.
வத்சலா, கேலியாக, “பின்னே எந்த அளவுக்குப் பிடிச்சிருக்கு?” என்றாள். சாம்பு மறுபடியும் அவளை முறைத்தான்.
சுப்பிரமணியம், முகம் சிவக்க, ஆனால் எரிச்சலை விழுங்கிக் கொண்டு, “ரெண்டாயிரத்துக்குச் செய்யணும்னு எழுதியிருந்தேள். அடிச்சுப் போட்டாக்கூட எங்கிட்ட ஐநூறு கூட இல்லே… கொஞ்சம் கிருபை செய்யணும்!” என்றார்.
பாகீரதி, “அப்படியானா உங்க பொண்ணு இந்தாத்து வாசல் படியிலே கால் வைக்க முடியாது” என்றாள் கண்டிப்பாக.
‘அம்மா, நீங்க இவ்வளவு நிர்த்தாட்சண்ணியமாய்ப் பேசக்கூடாது. நாங்க பரம ஏழை…’
‘அப்ப நீங்க உங்க நிலைமைக்கு ஏத்த ஏழை இடமாப் பார்த்திருக்கணும். நீங்க ஏழைங்கிறதுக்காக நாங்க நாமம் சாத்திக்க முடியுமா என்ன? எப்ப ஏழையாய் இருக்கீரோ அப்ப பணக்கார இடத்துச் சம்பந்தத்துக்கு ஆசைப்படக் கூடாது!”
‘பணம் படைச்சவா மேலும் பணத்துக்கு ஆசைப்பட மாட்டான்னு நான் நினைச்சுட்டேம்மா!”
“நினைச்சுட்டேளோல்லியோ, இப்ப உலர்த்திடுங்கோ!” என்று குறுக்கிட்ட வத்சலாவை மூன்றாம் தடவையாக முறைத்தான் சாம்பு.
பாகீரதி, “உங்க பொண்ணுக்குத்தானே சாமி செய்யப் போறேள்?” என்றாள்.
“இருந்தாத்தானேம்மா செய்யலாம்?”
“அதைப்பத்தி எங்களுக்கு என்ன மாமா கவலை? கடிதத்திலே கேட்ட சீர்களுக்கு ஒரு தம்பிடி கூடக் குறையக்கூடாது!” என்ற வத்சலா மறுபடியும் குறுக்கிட்டாள்.
“அம்மா, நாளைக்கு உனக்கும் கல்யாணம் ஆகணும்கிறது ஞாபகமிருக்கட்டும்.”
“என்ன ஓய், அத்து மீறிப் பேசறீர்?” என்று பாகீரதி சண்டைக்கு வந்தாள்.
‘அந்தக் கேள்வியை உங்க பொண்ணுகிட்ட கேளுங்கோ. என் பொண்ணை வாழாவெட்டியாய் அடிச்சேள்னா நாளைக்கு உங்க பொண்ணுக்கே அந்தக் கதி வந்துட்டுப் போறது. அவ்வளவுதானே? இட்டார்க்கு இட்ட பலன்!”
தம் வயமிழந்துவிட்ட சுப்பிரமணியம் இவர்களுடன் பேசிப் பயன் இல்லை என்பதைக் கண்டுகொண்டவராய் மேலே பேசாமலும், அவர்கள் பேச்சைக் கேட்க நிற்காமலும் அங்கிருந்து போய்விட்டார். சாம்பு செய்வதறியாது நின்றான்.
வத்சலாவைப் பெண் பார்க்க வந்திருந்தவர்கள் வத்சலா பாடிவிட்டு உள்ளே போனதும் கசமுசவென்று காதைக் கடித்துக் கொண்டார்கள்.
அப்போது அங்கே வந்த பாகீரதி, “என்னமோ நீங்கள்ளாம் நல்ல மனுஷாளாத் தெரியறேள். பார்த்த உடனேயே மனசுக்குப் பிடிச்சுப் போச்சு” என்று வாயெல்லாம் பல்லாகப் பிள்ளையின் பெற்றோரை மாறிமாறிப் பார்த்தாள்.
பிள்ளையின் அப்பா கல்யாணராமன், “பிடிச்சுப் போச்சா? பிடிச்சு இருக்குன்னு சொல்லுங்கோ!” என்று குறுக்கிட்டுச் சொன்ன ஜோக் ரசிக்கும்படியாய்த் தோன்றாவிட்டாலும், பாகீரதி நிர்ப்பந்தம் காரணமாகச் சிரித்தாள். அதுமட்டுமல்லாமல், “ஹி… ஹி… ரொம்ப தமாஷ் பேர்வழிகளாய் இருப்பேள் போலிருக்கே. மனுஷா அப்படித்தான் சிரிக்கச் சிரிக்கப் பேசணும்… அப்ப பொண்ணு பிடிச்சு இருக்குன்னு நாங்களும் வெச்சுக்கலாமா?” என்று இளித்தாள்.
கல்யாணராமன், “ஊருக்குப் போய் எழுதறோம்…” என்று சொல்லவே பாகீரதி, “அப்படின்னா பெண்ணைப் பிடிக்கல்லையா?’ என்றாள் சிறிது பதற்றமாக.
பிள்ளையின் அம்மா விசாலம், “சேச்சே, அப்படி எதுக்கு எடுத்துக்கறேள்? நாங்க எல்லாருமாச் சேர்ந்து கலந்து பேசி முடிவு செய்ய வேண்டிய விஷயமில்லையா? அதுதான். வரதட்சிணை, சீர், செனத்தி இதுகளைப் பத்தியும் கடுதாசியிலே எழுதறோம்” என்றாள்.
பாகீரதி, “நாங்கள்ளாம் நடுத்தரக் குடும்பம். ஓகோன்னு செய்யப் பட்டவா இல்லே. ஏதோ பார்த்துக் கேளுங்கோ!” என்று பணிவே உருக்கொண்டு பகர்ந்தாள்.
பையன் ராஜாமணி, கல்யாணராமன், விசாலம் ஆகிய மூவரும் விடைபெற்றுச் சென்றார்கள். அவர்கள் போனதற்குப் பிறகு, ‘கடவுளே, எம் பொண்ணுக்கு இந்தப் பணக்கார இடத்தையே முடிச்சுடு’ என்று முனகியவாறே அன்று நிறைய வேலைகள் செய்த அலுப்புடன் பாகீரதி ஊஞ்சலில் படுத்துக் கண் மூடித் தூங்கத் தொடங்கினாள்.
‘சார், போஸ்ட்!” என்ற குரலைக் கேட்டு வத்சலா விழுந்தடித்துக் கொண்டு வாசலுக்குச் சென்றாள். ‘அவர்க’ளிடமிருந்து வந்திருந்த
கடிதத்தைப் பாகீரதியிடம் காட்டினாள். பாகீரதி கடிதத்தை மகன் சாம்புவிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னாள்.
அவன் படித்து முடித்ததும், “பேராசையைப் பார்த்தியோன்னோ? ஆறாயிரம் வேணுமாமே வரதட்சிணை? பொண்ணுக்குப் பாட்டு நன்னா வரல்லைங்கிறதுக்காக இன்னொரு ஆயிரம் சேத்துத் தரணுமாம். ஏன்னா அவா குடும்பமே பாடுமாம்! கூட ஆயிரம் குடுத்தா மட்டும் எம் பொண்ணுக்கு நன்னாப் பாட வந்துடும்னு அர்த்தமா என்ன?” என்று பாகீரதி ஆவேசமாய்க் கத்தினாள்.
“என்னம்மா இது? நீ மட்டும் சொல்லல்லையா, ‘ரமா நல்ல சிவப்பு இல்லே, மாநிறந்தான், அதனாலே கூட ஐந்நூறு சேர்த்துக் குடுங் கோன்னு? ஐந்நூறு ரூபாய் அதிகப்படியா வாங்கிண்டதுனாலே ரமா சிவப்பாயிட்டாளா என்ன? அதுமாதிரிதான் இதுவும்! எல்லாருக்கும் பிறத்தியார் குத்தம்தான் கண்ணுக்குத் தெரியறது…”என்று சாம்பு தன் இயல்புக்கு எதிராய்ப் பட்டென்று பேசினான்.
“டேய்! எதிர்த்தா பேசறே?… வாயை மூடிக்கோ… அப்புறம் வெள்ளிப் பாத்திரம் ரெண்டாயிரமாம். நிறைய சரிகை போட்ட புடைவைகளா வாங்கணுமாம்… இன்னும் என்னென்னவோன்னா அடுக்கியிருக்கா அவா?” என்று பாகீரதி பெருமூச்சு விட்டாள்.
சாம்பு, “எப்படியாவது இந்த இடத்தையே முடிச்சுடும்மா. உன் இஷ்டப்படி ஆயிரக்கணக்கில் சொத்துள்ள இடம். கஷ்டமோ, நஷ்டமோ நம்மாத்துப் பொண்ணுக்குத் தானே செய்யப்போறோம்?” என்றான்.
“அதுவும் சரிதான். ஒரே பிள்ளை. பசையுள்ள இடம். எல்லாச் சொத்தும் நாளைக்கு வத்சலாவைத்தானே சேரும்? இன்னிக்கே எழுதுடா, சாம்பு. எல்லாம் அவா இஷ்டப்படியே பண்ணிடறோம்னு….” என்றாள் பாகீரதி.
அம்மாவின் சொற்படி சாம்பு உடனே கடிதம் எழுதிப் போட்டான்.
வத்சலாவுக்கும் ராஜாமணிக்கும் திருமணம் நடந்துவிட்டது. மணமேடையில் அமர்ந்திருந்தார்கள்.
சாப்பாட்டுக் கூடத்தில் இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்த சம்பந்தியம்மாள் விசாலத்துக்குத் திடீரென்று விக்கல் எடுத்துவிட்டது.
விசாலம், பாகீரதியை உடனே தலத்துக்கு வரவழைத்து, “சம்பந்தியம்மா! இட்லி என்ன இப்படிப் பண்ணியிருக்கேள்? உளுந்து கொஞ்சம் கூடப் போட்டால் உளுத்தா போயிடும்? தொட்டுப் பாருங்கோ. இது இட்லியா, இல்லே பொருவிளங்கா உருண்டையான்னு கேக்கறேன்!” என்று கூச்சலிட்டாள்.
பாகீரதி நடுங்கிய விரல்களால் இட்லியைத் தொட்டுப் பார்த்துவிட்டு, “இட்லி பூப்போலத்தானே இருக்கு?” என்றாள் மெதுவாக.
விசாலம், “அப்ப நான் பொய் சொல்றேன்னா சொல்றேன்? நாங்கள்ளாம் இட்லியே தின்னதில்லே. இன்னிக்குத்தான் முதமுதலாத் திங்கறோம் போலிருக்கு” என்று கூவினாள். அத்துடன் நில்லாமல், கையை வேறு உதறிவிட்டு எழுந்தாள்.
பாகீரதி, “மாமி, மாமி, நீங்க இப்படிக் கோவிச்சுண்டா எப்படி? ஏதோ தெரியாத்தனமா அப்படி நேர்ந்து போச்சு…” என்று கண்கலங்கிச் சொன்னாள்.
“முதல்லேயே இதுமாதிரிப் பணிவாய்ப் பேசி உண்மையை ஒத்துண்டிருக்கலாமோல்லியோ? தொட்டுப் பார்த்துட்டு, ‘பூப்போலத் தானே இருக்கு?’ ன்னு சொல்லியிருக்க வேண்டாமோல்லியோ?” என்று கேட்டுவிட்டு, பாகீரதி மேலும் மேலும் குழைந்து பேசியபிறகு மறுபடியும் இலை முன் ஆறு இட்லிகளை விழுங்கினாள் விசாலம்.
அவள் இட்லிகளைத் தின்ற வேகத்தைப் பார்த்து, ‘கல் மாதிரி இருக்கிற இட்லிகளுக்கு இந்த ஸ்பீட்னா பூப்போல இருக்கிற…’ என்று
மனசுக்குள் சொல்லிக் கொண்டாள் பாகீரதி.
கல்யாணராமன் அப்போது அங்கே வந்தார். “என்னம்மா இது, சுத்த மோசடியாய் இருக்கே? மாப்பிள்ளைக்கு வாங்கியிருக்கிற வேஷ்டியிலே ரெண்டு அங்குலத்துக்குக் குறையாம ஜரிகை இருக்க ணும்னு சொல்லியிருந்தேனே? ஒண்ணே முக்கால் அங்குலம்தானே இருக்கு ஜரிகை? எங்களை அவமானப்படுத்தணும்னு ஏதாவது கங்கணம் கிங்கணம் கட்டிண்டிருந்தேளா?” என்றார் கொதிப்பாக.
திகிலுற்றுப் போன பாகீரதி, “மன்னிக்கணும். தலை தீபாவளிக்கு மூணு அங்குல ஜரிகையிலே வேஷ்டி வாங்கிட்டாப் போச்சு. ஏதோ தவறு நேர்ந்து போச்சு. வேணும்னு பண்ணல்லே…” என்று கெஞ்சினாள்,
கல்யாணராமன் அடுத்து இன்னோர் அம்பை வீசினார்: “காப்பியானா சாக்கடைத் தண்ணி மாதிரி இருக்கு? இதெல்லாம் என்ன?
பாகீரதி, மேலும் பணிவாக, “இதுலே எங்க தப்பு எதுவுமே இல்லை. பரிசாரகா பண்ணின தப்பு. நான் அவாளைப் பார்த்துக் கண்டிக்கிறேன். நீங்க மன்னிக்கணும். இனிமே இப்படி ஆகாது” என்றாள். கண்களில் நீர் நின்றது.
“இதுகளுக்கெல்லாம் நஷ்டஈடா தலைதீபாவளியப்ப நீங்க ஒரு ஆயிரம் ரூபா சேர்த்துக் குடுத்துடணும். ஆமா, இல்லைன்னா உங்க பொண்ணுதான் கண்ணைக் கசக்கிண்டு நிக்க வேண்டி வரும்”
“ஆகட்டும், ஆகட்டும். இனிமே நீங்க குத்தம் கண்டுபிடிக்கும் படியா எதுவும் நேராம பார்த்துக்கறோம்.’
விசாலம், பொங்கிய சீற்றத்துடன், “பார்த்தேளோல்லியோ? நாங்க என்ன வேலை மெனக்கெட்டுக் குத்தம் கண்டுபிடிக்கணும்னுட்டா பிடிக்கிறோம்?” என்றாள்.
பாகீரதி பிரமித்து நின்றாள். எல்லாமே சுழல்வது மாதிரி இருந்தது. அவள் மனம் தன் பெண்ணின் வாழ்க்கை எப்படி அமையுமோ என்கிற கவலையில் பதைபதைத்தது.
எப்படியோ கல்யாணமெல்லாம் நடந்து முடிந்து தலை தீபாவளியும் வந்தது. மாப்பிள்ளைப் பையன், அவன் அம்மா-அப்பா இவர்களுடன் வந்தான். வேறு பல உறவினர்களும் தீபாவளிக்கு முதல் நாளே வந்துவிட்டனர் – மாமியாரின் உடன்பிறந்தான் மனைவியின் அம்மங்காளுக்கு மைத்துனன் முதல், அவள் நாத்தனாருடைய ஓரகத்திக்குத் தம்பி பெண்டாட்டி வரையில்.
வந்திறங்கிய கும்பலைப் பார்த்துப் பாகீரதி மலைத்துப் போனாள். “டேய், சாம்பு! கல்யாணத்துக்கு வந்த கும்பல்லே முக்கால்வாசி கால்வ இருக்கும் போலிருக்கே? இவா சாப்பாட்டுச் செலவே அள்ளிடும்
போலிருக்கே? இப்படியும் பக்கி ஜென்மங்கள் இருப்பாளோ? சுத்தப் பண்ணாடைகளான்னா இருக்குகள்? ஏதோ இருக்குகள்? ஏதோ மரியாதைக்கு ‘எல்லாரையும் அழைச்சுண்டு தலைதீபாவளிக்கு வாங்கோ’ன்னு எழுதினா, அதுக்குன்னு இப்படியா படை திரட்டிண்டு வருவா? தூ!’ என்று பிள்ளையின் காதில் முனகித் தன் வயிற்றெரிச்சலை மட்டுப்படுத்திக் கொள்ள முயன்றாள்.
“பேசாம போலீசுக்கு எழுதிப் போட்டுப் பிடிச்சுக் குடுத்துட வேண்டியதுதான்!” என்றான் சாம்பு.
‘எறைஞ்சு பேசாதேடா. அவா யார் காதிலேயானும் விழுந்து வைக்கப் போறது!”
திடீரென்று கல்யாணராமன் அங்கே வந்து, “ஓகோ, வாய் ரொம்பத்தான் நீள்றது. நீங்க பேசினதெல்லாம் என் காதிலே விழுந்தாச்சு. போலீசிலே பிடிச்சுக் குடுப்பாளாமே? குடுக்கிறதும் குத்தம். தெரிஞ்சுக்குங்கோ! டேய், ராஜாமணி, கெளம்பு சொலறேன். இவாளுக்காச்சா, நமக்காச்சான்னு பார்த்துடலாம் ஒரு கை. ஏய். விசாலம், புறப்படு சொல்றேன். கமலா, விமலா, அமலா, கோகிலா, அம்புஜம், பங்கஜம், பத்மஜம், நீரஜா, சரோஜா, வனஜா, கிட்டு, பட்டு, ஜிட்டு, பூமா, தாமா, சோமா, மீனாட்சி, காமாட்சி, கமலாட்சி எல்லாரும் கௌம்புங்கோ சொல்றேன். பட்டாளத்தையே அழைச்சுண்டு வந்துட்டோமாமே? இன்னும் பாக்கிப் பேரையும் கூட்டிண்டு வந்திருந்தா என்ன சொல்லுவேளோ?” என்று கூப்பாடு போட்டார்.
ராஜாமணி பரிதாபமாக விழிக்க அவள் பெற்றோரும் மற்றோரும் அவளையும் இழுத்துக்கொண்டு போனார்கள். பாகீரதி அவர்களுக்குப் பின்னால் அழுதுகொண்டு ஓடினாள்.
“உங்க பொண்ணை நீங்களே வெச்சுக்குங்கோம்மா!” என்று விசாலம் திருவாய் மலர்ந்தாள்.
‘சம்பந்தியம்மா! அப்படியெல்லாம் பேசாதீங்கோ!” என்று அலறிய பாகீரதி மயக்கமடைந்து விழுந்து விட்டாள். ஓடி வந்த சாம்பு அவளைப் பிடித்து உலுக்கினான்.
“ஏம்மா, கனா கினா கண்டியா?” என்று ஊஞ்சலிலிருந்து உருண்டு விழுந்து விட்டிருந்த பாகீரதியைத் தாங்கலாகத் தூக்கி உட்கார வைத்தான் சாம்பு.
வத்சலாவைப் பெண் பார்த்துவிட்டுப் போனபிறகு அசதியுடன் ஊஞ்சலில் படுத்த தான் கண்டதெல்லாம் கனவு என்பது அப்போதுதான் பாகீரதிக்குப் புரிந்தது.
‘சாம்பு… ஒரு நல்ல நாள் பார்த்து ரமாவை அழைச்சுண்டு வந்துடு என்று சொன்னது தன் அம்மாதானா என்பதை நம்ப முடியாமல் சாம்பு விழித்தான்.

One Comment on “ஜோதிர்லதா கிரிஜா/பாகீரதியின் ‘பல்டி’”

Comments are closed.