வளவ. துரையன்/தரையில் விழுந்த மீன்

வலையைக் கரையில்
உதறும்போது
விழுந்த மீன்களில்
ஒன்று மட்டும்
தரைக்கும் நீருமாய்த்
தத்தளிக்கிறது.

அலைவந்து அழைக்கவில்லை
அவனுமதை எடுக்கவில்லை
பெருநீர்ப்பரப்புக்க்குப்
போனால் பேரானந்தம்.

அவனிடம் சென்றால்
அரும்பசி தீர்க்கலாம்.

தப்பித்தலுக்கு இடம் தேடித்
துள்ளித் துள்ளிக் குதிக்கிறது
எட்டாப்பழத்துக்குக்
கொட்டாவி விடுவது போல்.
இருந்தாலும் இன்னுமது
தாவித் தாவி விழுகிறது.

உயிர் வாழ்வதே வேண்டாம்
என அது
உள்ளே நினைக்கையில்
பறந்து வந்த காகமதைப்
பாய்ந்து கொத்துகிறது