
ரகுபதிக்கு ஆயாசமாக இருந்தது. ‘என்ன உலகம் இது? என்ன மனிதர்கள்? என்ன அரசாங்கம்?’ என்றெல்லாம் விரக்தியான கேள்விகள் மனத்தில் முளைத்தன.
கல்லூரிப் படிப்பை முடித்துப் பட்டம் பெற்று ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. வேலைவாய்ப்பு நிலையத்தில் பதிவு செய்தும் ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அவனுக்குப் பிறகு பதிவு செய்தவர்களில் சிலருக்கு வேலை கிடைத்து விட்டது. அதிலும், மிக அண்மையில் – தனிப்பட்ட தகுதி ஏதும் அவனுக்கு இல்லையாம் – மூன்றே மாதங்களுக்குள் வேலை கிடைத்துவிட்ட சேதி ஒரு நண்பனின் வாயிலாகத் தெரியவந்தபோது அவனது சோர்வு அதிகரித்தது. நேர்முகத் தேர்வுக்குரிய அழைப்புகள் அனுப்புவதில் அப்பழுக்கற்ற நேர்மை கடைபிடிக்கப்படுவதில்லை என்று தோன்றியது. முன்பிருந்த கையூட்டுப் பெற்றுக் கொண்டு அந்த அலுவலகச் சிப்பந்திகள் காரியம் செய்கிறார்கள் என்கிற கசப்பிலும் ஆத்திரத்திலும் அவனுக்கு அழுகையே வரும் போலாயிற்று.
‘…நுங்கம்பாக்கம் ரயிலடியில் பிக்பாக்கெட் அடித்த இளைஞர்கள் மூவர் போலீசாரால் தலத்திலேயே பிடிக்கப்பட்டுக் காவல் நிலையத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் மூவரும் முறையே எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி., பி.எஸ்ஸி., படித்த – வேலை கிடைக்காத – இளைஞர்கள்…’
அவன் தினமணியைச் சுருட்டி எறிந்தான்.
‘பின்னே என்ன? எத்தனை நாளுக்கு மனுஷன் பட்டினி கிடப்பான்?’
“என்ன, அண்ணா? பேப்பரை வீசி எறியறே?” என்று கேட்டவாறு எதிரில் வந்து நின்ற தங்கை பாலாவைப் பார்த்து அவன் வெட்கப்பட்டான்.
அவன் பதில் சொல்லாமல் இருந்தான்.
“என்ன, அண்ணா, பேசாம இருக்கே? வேலை கிடைக் கல்லைன்னு ஒரே வெறுப்பாய் இருக்கா?’
“பின்னே, என்ன? எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சுல பேரைப் பதிவு பண்ணி அஞ்சு வருஷம் ஆயிடுத்து. நேத்துப் பதிவு பண்ணின சிலருக்கெல்லாம் வேலை கிடைச்சாச்சு… நான் எம்.ஜி.ஆருக்குக் கம்ப்ளெய்ன்ட் எழுதப் போறேன்!”
“அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையைத் தீர்க்காது. இங்கே வேலை இல்லாத் திண்டாட்டம் தலைவிரிச்சு ஆடுது. லஞ்சம் குடுக்கிறதுக்கு எவன் மேல வந்து விழறானோ அவனுக்குத்தான் வேலை கிடைக்கும்!… எப்படியும் ஒருநாள் கிடைக்கும் கிடைக்காமலேயா போயிடும்?…” என்று முன்னுக்குப் பின் முரணாகப் பேசி அவனுக்கு ஆறுதல் அளிக்க முற்பட்ட பாலா, .அவன் ஆறுதலடைந்தானா இல்லையா என்பதையெல்லாம் நின்று பார்த்துக் கொண்டிராமல் நடந்தாள். அவளுக்குக் கல்லூரிக்கு நேரமாகி விட்டது.
“என்னடா ரகு? இன்னிக்கு எங்கேயானும் வெளியில போகப் போறியா?” என்று கேட்டவாறு அவன் அம்மா சற்றுப் பொறுத்து அவனிடம் வந்தாள்.
“ஏம்மா?”
“காப்பிப்பொடி திரிக்கணும்!”
‘திரிச்சுண்டு வந்தாப் போச்சு. அதான் தண்டத்துக்கு வேற வேலைவெட்டி இல்லாம உக்காந்துண்டிருக்கேனே?”
“அப்படியெல்லாம் அலுப்பாப் பேசாதே, ரகு. நமக்கு வேளை வரல்லே. அவ்வளவுதான்.’
”நூறு, இருநூறு லஞ்சம் குடுத்தா வேளை வரும்மா.”
“அதுக்கெல்லாம் நம்மகிட்ட ஏதுடா பணம்?”
“நான் குடுக்கணும்னு சொல்லல்லேம்மா. ஒரு பேச்சுக்குச் சொல்றேன்.’
‘ஒண்ணுவேணா பண்ணட்டுமா? நிச்சயமாய்க் கிடைக்கும்னா என் தாலிப்பொட்டை அழிச்சுடறேனே? தங்கம் எதுக்குடா? மஞ்சளைக் கோத்துக் கண்டிண்டாப் போச்சு!”
‘அய்யய்யோ, அப்படியெல்லாம் பேசாதம்மா. இன்னும் கொஞ்ச நாள் பார்க்கலாம். அவசியம்னா லஞ்சம் குடுத்துத் தொலைக்கலாம். வேலையில அமர்ந்துடணும்னு அதைக் குடுக்காம எப்படியாவது ஒரு பார்க்கறேன். வேற ஒண்ணுமில்லே.’
“அச்சு உங்கப்பா மாதிரியே இருக்கே. நல்லவங்களுக்குக் கடவுள் நல்லது பண்ண மாட்டேங்கறாரே.”
‘அது சரி, அப்பா எங்கேம்மா காணோம்? காலங்கார்த்தால எங்கே போயிட்டார்?”
“திருவல்லிக்கேணி போறேன்னார். அவர் செர்வீஸ்ல இருந்தா உனக்கு வேலை கிடைக்காததைப் பத்தி ரொம்ப அலட்டிக்க மாட்டார். ரிடையர் ஆயிட்டதுனாலதானே இவ்வளவு சங்டமும்?”
“யாரைப் பார்க்கப் போறதாச் சொன்னார்?”
‘அதெல்லாம் ஒண்ணும் சொல்லல்லே. யாராவது ப்ரண்ட்ஸ்கிட்ட உன் வேலை விஷயமாய்க் கேக்கப் போயிருப்பார்னு நினைக் கிறேன்…”
“சரி, அப்ப காப்பிக்கொட்டையைக் குடு. நான் போய் அரைச்சுட்டு அப்படியே ரெண்டு மூணு கம்பெனிகளுக்குப் போய் ஏறி எறங்கிட்டு வறேன். ஒரு ஆபிஸ்ல வேலைன்னு பார்க்காட்டாலும், படி ஏறி இறங்கறேன்” என்று கூறிச் சிரித்துவிட்டு ரகுபதி எழுந்தான்.
வழியெல்லாம், ‘நீ இதுக்கு முன்னாடி எங்கேயாவது வேலை செய்திருக்கியா? முன் அனுபவம் உண்டா உனக்கு? எக்ஸ்பீரியன்ஸ் இல்லாதவங்களை நாங்க எடுத்துக்குறதில்லை, சாரி…’ போன்ற குத்தல் மொழிகளைப் பற்றி நினைத்தான். அடுத்து யாராவது ‘எக்ஸ்பீரியன்ஸ்’ பற்றிக் கேள்வி கேட்டால், ‘இப்ப நீ வேலை குடு எனக்கு. இங்கே
பார்த்த எக்ஸ்பீரியன்ஸை வெச்சு வேற நல்ல ஆபீஸ்ல வேலை தேடிக்கிறேன்’ என்று துடுக்காகப் பதில் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு சிரித்தான்.
காப்பிப் பொடியைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு அவன் அன்றைய செய்தித்தாள் விளம்பரங்களைப் பார்த்துத் தான் எழுதி வைத்திருந்த வேலை மனுக்களை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
பெட்டி இலக்கம் கொடுக்கப்பட்டிருந்த விளம்பரக்காரர்களுக்குரிய கடிதங்களைத் தபால் பெட்டியில் போட்டான். பிறகு வழக்கம் போல் மனுக்களை எடுத்துக்கொண்டு அலுவலகங்களில் ஏறினான்.
வழக்கமான வினாக்கள், வழக்கமான விடைகளில் வழக்கத்தைச் சற்றே மீறிய கடுமை. புன்னகையற்ற தன் முகம் எதிராளியை எரிச்சல்படச் செய்து நாசத்தைத் தேடித்தருமே என்கிற பயங்கூட அற்றுப் போய்விட்ட விரக்தியில் இருந்ததால் விளைவைப் பற்றிய சிந்தனையே அல்லாமற் போய்விட்டவன் போலத் தெரிந்தான்.
முதல் அலுவலகத்தில், “அன்ஸ்மைலிங்காக இருக்கியேப்பா? ஸ்டெனோன்னா கொஞ்சம் சிரிக்கணும் – அட்லீஸ்ட் ஒரு புன்னகை” என்று அந்த அதிகாரி சொன்னபோது, அவன் தன் முகத்தில் தோற்றுவித்துக்கொண்ட உயிரில்லாத செயற்கைச் சிரிப்புடன், “வேலையைச் குடுங்க சார் முதல்ல! அப்புறம் பாருங்க. எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருப்பேன் – நீங்க திட்டினாலும்! பட்டினி கிடக்கிறவன்கிட்ட தெம்பு ஏது சார், சிரிக்கிறதுக்கு?” என்று துணிச்சலோடு பதில் சொல்லிவிட்டுக் கற்பனைக் கதைகளில் – சில நேரங்களில் உண்மையாகவேயும் வருவது மாதிரி தனது பதிலை மெச்சி உடனே தன்னை வேலைக்கு எடுத்துக்கொண்டு விடுவார்கள் என்றுகூடக் கொஞ்சம் நின்றான்.
ஆனால், அவனது புன்னகையற்ற முகத்துக்காக அவனை குறைகூறிய அலுவலரின் முகம் இப்போது புன்னகை செத்து இறுகிப் போயிற்று. ‘அதிகப்பிரசங்கி படவா’ என்கிற விமரிசனச் சொற்களை அவரது சுருங்கிய பார்வை சிந்திக் கொண்டிருந்ததாக உணர்ந்ததில் தற்காலிகப் புன்னகையும் செத்தொழிந்து ரகுபதி உணர்ச்சியற்றுப் போனான்.
இருவருக்குமிடையே மௌனம் விளைய ரகுபதி சங்கடத்துடன் ஒரு தாங்க்யூ சாரை உதிர்த்து வெளியேறினான்.
அடுத்த கம்பெனியில் கொஞ்சம் கட்டுப்பாடாக நடந்து கொண்டான். அங்கேயும் வேலை காலி இல்லை என்கிற பதிலும்
ஏமாற்றமும்தான். இரண்டு அலுவலகங்களிலிருந்தும் வெளிநடப்புச் செய்து வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தபோது, பேருந்து நிறுத்தம் வந்து சேர்வதற்கு முன்னதாக அவனது பார்வை ஒரு கம்பெனியின்
பெயர்ப்பலவை மீது விழுந்தது. சென்ற மாதம் அவன் தட்டெழுத்தன் வேலைக்கு மனு போட்டிருந்த கம்பெனி. ‘உள்ளே போய் விசாரித்தால் என்ன?’ என்று திடீரென்று ஓர் எண்ணம் வந்தது. ராமன் அண்ட் லட்சுமணன் எக்ஸ்போர்ட்டர்ஸ் என்கிற பெயரை அவன் கண்கள் வெறித்தன.
விசாரிப்பதன் விளைவு கட்டாயம் தோல்வியாகத்தான் இருக்கும் என்று அவனுக்குத் தோன்றியும் கேட்டுத்தான் பார்ப்பது என்கிற முடிவில் அவன் கால்கள் அவனது ஊகத்தைக் கடந்து அவனை இழுத்துக்கொண்டு சென்றன.
வரவேற்பாளரை முதலில் பார்த்த அவன் நிர்வாகியைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தான். கால் மணி நேரக் காத்தலுக்குப் பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டான்.
நிர்வாகி, சுழல் நாற்காலியில் சாய்வாகச் சுழன்றபடி, “யெஸ்?’ என்று ஆபீசர் தோரணையில் வினவினார். அவன் ‘குட்மார்னிங்’ சொன்னான்.
பிறகு, “போன மாசம் இங்கே டைப்பிஸ்ட் வேலைக்கு மனு போட்டிருந்தேன். சார். முடிவு தெரிந்துகொண்டு போக வந்தேன்” என்று ஆங்கிலத்தில் பணிவாகச் சொன்னான். ‘காலியிடம் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கும்பட்சத்தில், எனக்கே வேலையைக் கொடுத்துவிடுங்களேன், ப்ளீஸ்!’ என்கிற வேண்டுகோள் குரலில் தெறிக்கும்படி குழைந்தான்.
“மன்னியுங்கள் நண்பரே, அந்தக் காலியிடம் இன்று காலைதான் நிரப்பப்பட்டது. அதாவது வேலைக்கான உத்தரவு இன்று காலைதான் ஒருவருக்கு அனுப்பப்பட்டது. முன் அனுபவம் உள்ள ரிடையர்ட் ஹெட்கிளார்க் ஒருவருக்கு ஆர்டர் அனுப்பி விட்டோம். ஸோ ஸாரி” என்றார் அவர் ஆங்கிலத்தில்.
அவன் பதில் ஏதும் கூறாமல் வெறுப்புடன் வெளியே வந்தான் இயந்திர கதியில் பேருந்தில் ஏறி உட்கார்ந்து படித்து முடித்து வேலை தேடித் தோற்றுக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு எதிரிகளாய் ஏற்கெனவே வேலை பார்த்து ஓய்வு பெற்ற கிழவர்கள் இருப்பதை எண்ணிக் காய்ந்து எல்லாக் கிழவர்களையும் மனசுக்குள் கரித்தான். முன் அனுபவம் என்கிற தகுதியின் பெயரால் இளைஞர்களின் மனங்களை உடைக்கும் முதலாளிகளையும் வசை பாடினான்.
சோர்ந்து போய் வீடு திரும்பிய அவனிடம் காப்பியைக் குடிக்கக் கொடுத்தபடி, “இன்னிக்கும் காய்தானே?” என்றாள் அம்மா வழக்கமான கேள்விதானெனினும் அதில் வழக்கமாகத் தொனிக்கும் சோர்வு அவ்வளவாக இல்லை என்பதைக் கவனித்து தனது பிரமையோ என்று கணம்போல் சந்தேகப்பட்டு வியப்பாக அம்மாவைப் பார்த்துவிட்டுக் காப்பியைக் குடிக்கத் தொடங்கினான்.
“இன்னிக்கு நல்ல நாள்டா, ரகு! உங்கப்பாவுக்கு டைப்பிஸ்ட் வேலை கிடைச்சிருக்கு!”
“என்னது? அப்பாவுக்கா? வேலை கிடைச்சிருக்கா? அப்பா அப்ளிகேஷன் போட்டிருந்தாளா என்ன? சொல்லவே இல்லியே?” அவன் வியப்புடன் தம்ளரைத் திருப்பிக் கொடுத்தான்.
‘ஆமாண்டா, ராமன் அண்ட் லட்சுமணன் அப்படின்னு ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனி இருக்காமே, அதுல கிடைச்சிருக்கு இப்பத்தான் ஒரு ஆள் ஆர்டரை நேரில் கொண்டுவந்து குடுத்துட்டுப் போனான்…..
ஓய்வு பெற்றதற்குப் பிறகு வேலைக்கு மனு செய்து வெற்றியும் பெறும் கிழவர்களையெல்லாம் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் கரித்துக் கொட்டிய அவன் இப்போது திகைத்து நின்றான்.
● 1981

One Comment on “ஜோதிர்லதா கிரிஜா/கிழவர்கள் ஒழிக!”
Comments are closed.