
ஞானசேகரனுக்கு அன்று முழுவதும் மனசு சரியாக இல்லை. தமயந்தியைப் பெண் பார்த்துவிட்டுப் போனவர்கள் என்ன எழுதப் போகிறார்களோ என்கிற கவலைதான். தங்கையைப் பற்றி ஓர் அண்ணனுக்கு இருக்கக்கூடிய இயற்கையான அக்கறையால் மட்டுமல்லாமல் தங்கையினுடையதை முடித்த பின்னர்தான் தன்னுடைய திருமணத்தைப் பற்றி வீட்டில் பேச்செடுக்க முடியும் என்பதால் அவனது கவலையின் தீவிரம் அதிகமாக இருந்தது.
தமயந்தியை இதற்கு முன்னால் யாரும் பெண் பார்த்து வந்து போனதில்லை. இன்று வந்து பார்த்துவிட்டுப் போனவன்தான் முதல் பையன். சில பெண்களுக்கு முதலில் பார்க்கிற பையனே அமைந்து விடுவது போல் தன் தங்கைக்கும் அமைய வேண்டும் என்று அவள் விரும்பினான். இந்தப் பெண் பார்க்கிற சடங்கெல்லாம் அவனுக்குத் துளியும் பிடிப்பதில்லை. நியாயவானான அவன் பெண் பார்த்தலின் போது பெண்ணை மட்டுமே பலவகைச் சோதிப்புக்கும் கேள்விகளுக்கும் பிள்ளையைச் சார்ந்தவர்கள் ஆளாக்குவதையும், பிள்ளை ஓர் இளவரசன் போலவும், எந்தச் சோதனைக்கும் தான் அப்பாற்பட்டவன் என்பது போலவும், கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்நதிருப்பதையும் அறவே வெறுப்பவன் தன்னைப் பொறுத்தவரையில் பெண் பார்த்தல் என்கிற சடங்குக்குத் தன்னை உட்படுத்திக் கொள்ளக்கூடாது என்றும், தானாகவே ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் காதல் மணமே செய்துகொள்ள வேண்டும் என்றும் பல ஆண்டுகளுக்கு முன்னரே தீர்மானித்து விட்டவன். அந்தத் தீர்மானத்துக்கிணங்க அவன் தான் மணந்துகொள்ள ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தும் விட்டிருந்தான். எனவேதான்
வீட்டில் அவளைப் பற்றிச் சொல்லத் தன் தங்கையின் திருமணம் முதலில் திகைந்துவிடுவது வசதியாக இருக்கும் என்று நினைத்தான்.
பையன் உள்ளூர்தான். சிந்தாதிரிப்பேட்டையில் ஓர் அங்காடிக்குச் சொந்தக்காரன். படித்தவனும் கூட. அங்காடி மிக நன்றாக நடந்து கொண்டிருந்ததாகக் கேள்விப்பட்டதில், அரசாங்க வேலை பார்ப்பவனாக இருக்க வேண்டும் என்கிற நிபந்தனையைத் தளர்த்த அவன் பெற்றோர் முன்வந்தனர். ஞானசேகரனும் மறுப்புச் சொல்லவில்லை. பையனுக்குப் பரம்பரைச் சொத்துகள் வேறு கொஞ்சம் இருந்தன. பார்க்க அழகானவனாகவும் இருந்தான். தமயந்திக்கு ஏற்ற உயரம், பருமனுடன் அவனைவிடச் சற்று மேலான நிறமுள்ளவனாகவும் இருந்தான். எனவே நிலையான வேலை என்கிற ஒன்றுக்காக வேறு பையனைத் தேடுவது அவன் வீட்டில் யாருக்குமே சம்மதமாக இல்லை. இரண்டொரு நாட்களில் முடிவு தெரிவிப்பதாகப் பையனுடன் வந்திருந்த அவன் தகப்பனார் சொல்லியிருந்தார். நேரில் போய்ப் பார்த்து முடிவைத் தெரிந்துகொண்டு வந்துவிட அவன் மனம் பரபரத்தது.
மாலையில், வழக்கம் போல், அவன் நிருபமாவைத் தொலைபேசியில் அழைத்தான்.
“ஹலோ, நிருப்! நான்தான் பேசறேன். இன்னிக்கு சாயந்தரம் நான் அந்தப் பையனைப் பார்த்துக் கேட்டுட்டு வரலாம்னு இருக்கேன். அதனால இன்னிக்கு ஒரு நாளுக்கு நம்ம ஸ்கூட்டர் சவாரியும் பீச் விஜயமும் வேண்டாம்னு பார்க்கறேன். என்ன சொல்றே?… டிசப்பாய்ன்ட்டிங்கா?… என்ன பண்றது? இதுவும் முக்கியமாச்சே – நம்ம விஷயத்துக்கு? இல்லியா?… சரி. அப்ப நாளைக்கு நான் உனக்குப்பத்து மணிக்கே போன் பண்ணி என்ன சொன்னான்கிறதைத் தெரிவிக்கிறேன்…”
நிருபமா ‘சரி’ என்று சொன்னாலும் குரலில் ஏமாற்றம் தெரிந்தது அவனுக்குப் புரிந்தது. அவனுக்கு மட்டும் ஏமாற்றமாக இல்லையா என்ன! ஞானசேகரன் தொலைபேசித் தொடர்பைத் துண்டித்துவிட்டுத் தன்னிருக்கைக்குச் சென்று உட்கார்ந்தான்.
முதலில் பையனுக்குத் தொலைபேசியின் வாயிலாகத் தெரிவித்துவிட்டுப் போகலாமா என்று யோசித்தான். பின்னர் திடீரென்று போய்ப் பார்ப்பது நன்றாக இருக்கும் என்று நினைத்து அந்த யோசனையைக் கைவிட்டான்.
அவன் அங்காடியை அடைந்த போது மாலை மணி ஐந்தரை ஆகியது. கடைவாசலில் அவன் கால் வைத்தபோது பையன் துரைசாமி.
அவனைக் கவனித்து விட்டான். வருங்கால மனைவியின் அண்ணனைப் பார்க்கிற மலர்ந்த பார்வையாக அவனது பார்வை இல்லாததை ஞானசேகரன் மனத்தில் வாங்கிக் கொண்டான். பார்த்த வுடனேயே கணம் போல் கண்களைத் தாழ்த்திவிட்டே அவற்றை நிமிர்த்தியதையும் மனம் ஈடுபடப் புன்னகை செய்யாததையும் கூடக் கவனித்தான். தமயந்தியைப் பிடிக்கவில்லை என்று சொல்லுவதற்கு ஒப்புக்கொள்ளக் கூடிய காரணம் எதையும் யாராலும் சொல்ல முடியாது என்று ஓர் அண்ணனுக்குரிய செருக்குடன் நினைத்ததில் அவனுக்கு வியப்பு ஏற்பட்டது. தமயந்தியைப் பார்த்துவிட்டுப் போனபோது இருந்த முகத்துக்கும் இப்போது தெரிகிற முகத்துக்குமிடையே கணிசமாய்ப் புலப்பட்ட வேறுபாடு அவனுள் திகைப்பைத் தோற்றுவித்தது. இருந்த போதிலும், தன் எண்ண அலைகளை முகத்தில் காட்டாமல் கெட்டிக் காரத்தனமாகத் தவிர்த்துக் கைகூப்பி வணக்கம் சொன்னான்.
துரைசாமி தானும் பதிலுக்கு வணங்கி அரையாகப் புன்சிரிப்புக் காட்டினான். இதற்குள் ஞானசேகரன் கல்லாவை நெருங்கி விட்டான். துரைசாமி அவசரமாக எழுந்து, “வாங்க, வெளியே போய் பேசலாம். இங்க வாணாம்!” என்று தாண்டிக்கொண்டு நடக்க முற்பட்டான். இறுகியிருந்த முகத்தின் உட்கிடை விளங்காமல் ஞானசேகரன் குழப்பம் நிறைந்த ஆவலுடன் அவனுக்குப் பின்னால் நடந்து போனான்.
அங்காடியை விட்டு வெளியே வந்ததும், “வாங்க, நடந்துக்கிட்டே பேசுவம்… இல்லைன்னா அதோ அந்த ஓட்டலுக்குப் போய் உக்காந்துக்கிட்டுப் பேசுவோம்” என்று துரைசாமி சொன்னான். குரலில் உக்காந்துக்கிட்டுப் பேசுவோம் என்று இல் ஓர் உற்சாகமோ ஆர்வமோ துளியும் இல்லை என்பதை அவன் தெரிந்துகொண்டு மேலும் குழப்பமுற்றான்.
அவனது பதில் ‘இல்லை’ என்பதாகத்தான் இருக்கும் என்பதை மட்டும் ஊசித்துவிட்ட அவன் துரைசாமியுடன் ஓட்டலுக்குப் போய் உட்கார்ந்துகொண்டு காப்பி குடிப்பதைத் தவிர்க்க விரும்பினாள்
எனவே, “இங்கேதான் வெளியே யாரும் இல்லியே. இங்கிட்டே பேசுவோம்” என்றான்.
துரைசாமி சில நொடிகளுக்கு மவுனமாக நின்று கொண்டிருந்து விட்டு, ‘ஐ’ம் ஸாரி, மிஸ்டர்… ஞானசேகரன். உங்க தங்கச்சி வேணாம்னு எங்கப்பா சொல்றாரு…என்னய மன்னிச்சுறுங்க!” என்று எடுத்த எடுப்பிலேயே ஆணித்தரமாகத் தெரிவித்து விட்டான். அங்காடிக்குள் நுழைந்தபோதே அவனது முடிவு அதுவாகத்தான் இருக்கும் என்பதை அவன் முகத்தைப் பார்த்தே தெரிந்து கொண்டு விட்ட போதிலும், ஞானசேகரனுக்குக் காரணத்தைத் தெரிந்துகொள்ள மனம் அவாவியது.
“ஐஸி… ஆனா காரணம் இன்னதுன்னு சொல்லுவீங்களா? சொன்னா எங்களுக்கு ஒரு அபிப்பிராயம் உருவாக ஏதுவாயிருக்கும். இல்லியா?”
‘உங்க தங்கச்சியை வேறு ஒருத்தனோட எங்கப்பா பீச்சுல அடிக்கடி பார்த்திருக்காராம். ரொம்ப நெருக்கமா உக்காந்து பேசிக் கிட்டிருப்பாங்களாம். சொன்னாரு.. இதைச் சொல்ல வேண்டாம்னுதான் முதல்ல நினைச்சேன். ஆனா, உங்களுக்குத் தெரியணும்னு தோணிச்சு. சொல்றேன். அந்தப் பையனுக்கு இன்னும் கல்யாணம் ஆகல்லைன்னா அவனுக்கே கட்டி வையுங்க…!
ஞானசேகரனுக்கு வியப்பாக இருந்தது. ‘அது தமயந்தியாய் இருக்காது’ என்று உடனே நினைத்தான். ஆனால், இவர்கள் எதற்காகப் பொய் சொல்ல வேண்டும் என்கிற கேள்வியும் தோன்ற, அவன் சில சோல வேண்டுமஎன்ற விநாடிகளுக்கு வாயடைத்துப் போய் நின்றான்.
“ரொம்ப தேங்க்ஸ். அப்ப நான் என் தங்கச்சியை விசாரிக்கிறேன்,” என்று பதிலிறுத்துவிட்டு உடனே விடைபெற்றுக் கொண்டு ஸ்கூட்டரில் வீட்டுக்குப் பறந்தான். அவன் வீட்டையடைந்த போது தமயந்தி வந்து சேர்ந்திருக்கவில்லை. பெற்றோரிடம் எப்படிச் சொல்லுவது என்று தயங்கினான். எனவே தங்கையோடு முதலில் பேசிவிட்டுத்தான் எதையும் செய்வது என்று முடிவு செய்தான். பெண் பார்த்தலுக்குத் தமயந்தி இலேசில் சம்மதிக்காதது நெஞ்சில் நினைவாய் நெருடிற்று. ‘மனசு விட்டுச் சொல்லியிருக்கலாமே. ஏன் பேசாம இருந்துடிச்சு இந்த தமயந்தி?’ என்று மனசுக்குள் பொருமிக் கொண்டான்.
ஆறரை மணிக்குத் தமயந்தி வந்தாள். முகம் வாடினாற் போல் இருந்தது வழக்கமான களைப்பினாலா அல்லது தனது பிரமையா என்று நினைத்தவாறு கணம்போல் அவளை உற்றுப் பார்த்தான்.
“என்ன அண்ணே பார்க்குறே?”
“டிபன் கிபன் சாப்பிட்டுட்டு வா. உன்னோட கொஞ்சம் பேசணும்’
தமயந்தி பதில் ஒன்றும் சொல்லாமல் சிறிதே திகைத்து அவனைப் பார்த்துவிட்டுக் கைகால் கழுவப் பின்கட்டுக்குப் போனாள்…
அம்மாவும் அப்பாவும் கோயிலுக்குப் புறப்பட்டுப் போனதும் ஞானசேகரன் அவளைப் பார்த்துப் பேசினான்.
“நேத்து உன்னப் பார்த்துட்டுப் போன பையனை இன்னிக்கு சாயந்தரம் போய்ச் சந்திச்சேன், தமயந்தி… அவன் என்னமோ சொன்னான்…”
“என்ன சொன்னாரு, அண்ணே? பிடிக்கல்லைன்னா? ரொம்ப நல்லதாப் போச்சு…”
“சிரிக்காதே, தமயந்தி. அவன் இன்னொண்ணு கூடச் சொன்னான்.’
அவனோட அப்பா உன்னய பீச்ல யார்கூடவோ அடிக்கடி பார்த்திருக்குறாராம்…
தமயந்தி எதிர்பார்க்காதது உடனே தாழ்ந்துவிட்ட அவள் தலையிலிருந்தும், இருண்டு போன முகத்திலிருந்தும் தெளிவாய்த் தெரிய, ஞானசேகரனுக்கு மனம் இளகிப் போயிற்று.
ஆதரவாக அவளை நெருங்கி நின்று. “என்ன தமயந்தி பேசாம நிக்கிறே? அப்படி எதுனாச்சும்னா வீட்ல சொல்லிற வேண்டியது தானே? எங்கிட்டச் சொல்லலாமில்ல? இந்த அக்கப்போரை அவாய்ப் பண்ணியிருக்கலாமில்ல?” என்றான்.
“அவரு இருந்தாயில்ல சொல்றதுக்கு?” என்று கேட்ட தமயந்தி கண்ணீர் விடத் தொடங்கினாள்.
என்ன சொல்றே. தமயந்தி நீ? அப்படின்னா?” என்று பதறிப்போய் அவன் வினவினான்.
ஒரு வருஷம் ஆச்சுண்ணே. ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாரு. அப்ப நீ வேலூர்ல இருந்தே…
ஞானசேகரனுக்குத் திக்கென்று ஆயிற்று. ‘ஓ, அதுனாலதான் இவ கல்யாணப் பேச்சை எடுத்தப்பல்லாம் பிடி குடுக்காமயே இருந்தாளோ?’
“ஐம் ஸோ ஸாரி, தமயந்தி. ஆனா, அதுக்குன்னு நீ கல்யாணமே பண்ணிக்காம இருந்துட முடியுமா? அவரு பேரென்ன?”
“என்னோட வேலை பார்த்தவருண்ணே. எனக்குக் கல்யாணத்துல பிரியமே இல்லைன்னாலும், சாகற நேரத்துல எங்கிட்டக் கையடிச்சு சத்தியம் வாங்கிட்டாரு – நான் கல்யாணம் பண்ணிக்கிறதா சத்தியம் பண்ணிட்டேன். அதுனாலதான்..
‘அழாதே, தமயந்தி. எந்த துக்கத்தையும் காலம் ஆத்திடும். இவன் இல்லைன்னா இன்னொருத்தன் வந்துட்டுப் போறான்…’
“உண்மையைச் சொல்லிட்டே பெண் பார்க்க வரச்சொல்றது நல்லதுண்ணே, இல்லியா?”
“பயித்தியமே. அதெல்லாம் கதையிலதான். அசல் வாழ்க்கையில இல்ல.”
பெற்றோரின் காலடியோசையால் அவர்களது பேச்சு நின்று போனது.
வேலை மிகுதியால் மறுநாள் முழுவதும் நிருபமாவுடன் தொலைபேசியில் அவனால் பேச முடியவில்லை. மாலையில் நிருபமாவின் அலுவலகம் நோக்கி ஸ்கூட்டரை உதைத்த ஞானசேகரன் பாதி வழி கடந்த பிறகு திடீரென்று விளைந்த சிந்தனையின் போக்காமல் திரும்பிப் போய்விடலாமா என்று நினைத்தான். முன்னதாகத் தகவல் தெரிவிக்காமல் அப்படிச் செய்தால் நிருபமாவுக்குக் கவலை ஏற்படும் என்பதால் அன்று வழக்கம் போல் அவளைச் சந்தித்துவிடுவது என்று தீர்மானித்தான்.
…இருவரும் வழக்கம்போல் கடற்கரைக்குப் போகக்கூடாது என்று மட்டும் வழியிலேயே முடிவு செய்துவிட்டான்.
…அவளது அலுவலகத்தின் வாசலில் அவளைத் தனியாகப் பார்த்து நடந்ததையெல்லாம் சொல்லிவிட்டு, “நிருபமா, இனிமே நாம பீச்சுக்கு சினிமாவுக்கெல்லாம் சேர்ந்து போக வேண்டாம் நினைக்கிறேன். நாளைக்கு என்ன நடக்கும்னு இன்னிக்குச் சொல்லவே முடியாது. என்னமோ ஆச்சு – நாம பிரியும்படி ஆச்சுன்னு ஒரு பேச்சுக்கு வச்சுக்குவோம். அப்புறம் என் தங்கையை நிராகரிச்ச மாதிரி உன்னையும் யாராவது நிராகரிப்பாங்க. அது எனக்குச் சம்மதமில்லே… அதனால நம்ம பழக்கத்தை ஃபோன்ல பேசறது அவசியமானா லெட்டர் எழுதறது இதோட நிறுத்திக்கலாம். என்ன, இங்கே இருக்கிற ஜனங்க மோசமானவங்க. நாலு பேரு கண்ணுவ சேர்ந்து சேர்ந்து பட வேணாம்னு தோணுது…” என்று அறிவித்தான்.
நிருபமா மிகுந்த மரியாதையுடன் அவனைப் பார்த்தாள். ஞானசேகரன் ஸ்கூட்டரைத் தன் வீடு நோக்கி உதைத்தான்.
1981
