அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்

நெகிழிப்பை கிழிந்து வீதியில் உருளுகிறது கொய்யா
தாத்தாவின் விரல் பிடித்து வீதி உலா வந்த சிறுமி
உருளும் கொய்யாவைப் பார்த்து உற்சாகமாகிறாள்
சிறுமியின் சிரிப்பைக் கண்ட சிறுவன்னி மரத்தடி பூக்காரம்மா
பொக்கைவாய் சிரிப்போடு இரத்த சிவப்பு ரோஜா ஒன்றைச்
சிறுமியிடம்? தருகிறாள் அவள் கன்னம் வருடி
சிறுமியின்? கைகளில் கொய்யாவும் ரோஜாவும்
அவைகள் சிரிக்க முயன்று முகம் சுருக்க
ஆதுரமாய் அரவணைக்கிறாள் அச்சிறுமி
ஆதுலன் ஒருவன் துணி விலக்கி கையேந்தப்
பச்சை வண்ண காந்தியொன்று கரம் மாறுகிறது
வன்னிமரத்தில் வந்தமர்கிறது சிறு பறவையொன்று
பழுத்த இலையொன்று இட வலம் ஆடி ஆடி
வண்ணப் பூக்குவியலில் தஞ்சமடைகிறது
சைரன் ஒலியோடு புழுதி பறக்கும் ஆம்புலன்ஸை
குரைத்தபடி துரத்துகிறது வெள்ளை நாயொன்று
நொடியில் பயந்து தாத்தாவைப் பற்றுகிறாள் சிறுமி
கரம் நழுவி நிலம் தொட்டு நிவேதனமாகிறது பூவும் பழமும்
அங்கணன் கோயில் வாயிலில் செஞ்சுடர் நின்றெரிய
அண்டம் மெதுவாய்ச் சுழல்கிறது அதே அழகுடன்
