
நானக் சிங்/ சீட்டாட்டப் பழக்கம்
“ரஹீம்”
ஸப்இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் ஹமீத் வீட்டில் நுழைந் ததுமே வேலைக்காரனுக்குக் குரல் கொடுத்தார். “பஷீரைச் சற்று என் அறைக்கு அனுப்பி வை!”
சட்டென்று தம் அறைக்குள் நுழைந்து கோட்டையும் இடுப்புப் பட்டையையும் கழற்றி அவர் கொடியில் மாட்டினார். அப்புறம் மேஜைக்கெதிரே போய் அமர்ந்து கொண்டார். மேஜையின் மீது என்ன என்னவோ பொருள்கள் அலங்கோலமாகச் சிதறிக் கிடந்தன. ஒரு மூலையில் பெரிதும் சிறிதுமாகச் சட்டப் புத்தகங்கள், சட்டமில்லாத புத்தகங்கள், காகிதங்கள் பிதுங்கிய பைல்கள் ஆகியவை கிடந்தன. நட்ட நடுவில் மசிக் கூடு, பேனா; அவற்றை ஒட்டினாற்போல் அன்றைக்கு வந்த தபால்கள் கிடந் தன. ஐந்து ஆறு கவர்கள், இரண்டு மூன்று கார்டுகள், ஒன்றி ரண்டு பத்திரிகைகள்! பின் குஷன், மையொற்றி, பேப்பர் வெயிட், நூல்கண்டு என்று இவை போன்ற சிறிய பெரிய பொருள்களும் அங்கங்கே கிடந்தன.
ஷேக் ஸாஹப் உட்கார்ந்ததும் தொலைநோக்கி மூக்குக் கண்ணாடி யைக் கழற்றிமேஜையின் மீது இருந்த சிறு காலி இடத்தில் வைத் தார். பிறகு கிட்டப் பார்வைக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு வந்த தபால்களைப் பார்க்கலானார்.
அவர் இரண்டொரு உறைகளைத்தான் பிரித்திருப்பார்; அதற்குள் ஐந்து வயதுப் பையன் ஒருவன் உள்ளே நுழைந்தான்.
பையன் பார்ப்பதற்குச் சுருசுருப்பானவனாகவும் கெட்டிக் காரனாகவும் குறும்புக்காரனாகவும் தோன்றினான். ஆனால் தந்தையின் அறைக்குள் நுழைந்ததும் அவன் சுபாவம் அடியோடு மாறி விட்டது. சஞ்சலமும் துறுதுறுப்பும் வாய்ந்த கண்கள் குனிந் தன. உடலில் தெம்பே இல்லைபோலத் தோன்றியது.
“எதிரே உள்ள நாற்காலியில் உட்காரு!” நீண்டதொரு கடிதத்தைப் படித்தவாறே ஷேக் ஸாஹப் சிங்கமென உறுமி உத்தர விட்டார்.
பையன் பயந்தவாறே எதிரே உட்கார்ந்தான்.
“என்னைப் பார்!” கடிதத்திலிருந்து கவனத்தை அகற்றி ஷேக் ஸாஹப் இடித்துரைத்தார். “இன்று நீ சீட்டு விளையாடினா யாமே!”
“இல்லை, அப்பா!” பையன் அச்சத்தோடு கூறினான்.
ஷேக் ஸாஹப் தமது பழக்கத்துக்கு விரோதமாகத் தொடர்ந் தார்: “பயப்படாதே. உண்மையை ஒளிக்காமல் சொல்லு. நான் உன்னை ஒன்றும் சொல்ல மாட்டேன். நானே என் கண்ணால் பார்த்தேன். அப்துல்லாவின் மகனோடு நீ அவர்கள் வீட்டு முற்றத்தில் சீட்டு ஆடிக்கொண்டிருந்தாய். இப்பொழுது சொல்லு, நீ சீட்டு விளையாடிக் கொண்டிருந்தாயா, இல்லையா?”
பையன் வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை. ஆனால் தலை அசைத்து ‘ஆம்’ என்று ஒப்புக் கொண்டான்.
“சபாஷ்!” ஷேக் ஸாஹப் மென்மையோடு கூறினார்: “நீ உண்மையைக் கூறியதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். பஷீர் உண்மையில், நீ விளையாடும் பொழுது நான் என் கண்களாலே பார்க்கவில்லை. இன்னொருவர் சொல்லக் கேட்டதுதான். உன்னை ஒப்ப வைப்பதற்கு இது ஒரு முறை. நாங்கள் பல குற்றவாளி களிடமிருந்தும் இப்படித்தான் உண்மையைக் கக்க வைக்கிறோம். அது போகட்டும். இன்று உனக்குச் சில முக்கியமான விஷயங் களைக் கூறப்போகிறேன். அதற்காகக்தான் உன்னைக் கூப்பிட் டேன். கவனமாகக் கேளு!”
“கவனமாகக் கேளு!” என்று கூறியவர் பஷீரை நோக்கினார். அவன் தந்தையின் மூக்குக் கண்ணாடியை எடுத்து, அதன் ஃபிரே’மோடு விளையாடிக் கொண்டிருந்தான்.
அவன் கையிலிருந்த கண்ணாடியைப் பிடுங்கி வைத்து விட்டுப் பக்கத்தில் இருந்த ஃபைல்களில் இருந்த வாரண்டுகளின் வாசகங்களை மனத்துள் படித்தவாறே ஷேக் தொடர்ந்தார்:
“இதுபோன்ற குற்றங்கள் தான், மற்றைய குற்றங்களுக்கு முன்னோடி என்பதை நீ நினைவு வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பொய் சொன்னால் தொடர்ந்து பல பொய்கள் சொல்லும் படியாகிறது. அதற்கு இப்பொழுது நீயே நேரிடை உதாரணம். சீட்டு ஆடிய குற்றத்தை மறைக்க நீ பொய் சொல்லும்படி ஆயிற்று. அதாவது ஒரு குற்றத்துக்குப் பதில் நீ இரண்டு குற்றங்கள் புரிந்து விட்டாய்!”
வாரண்டுகளைப் பழையபடியே ஃபைல்களில் வைத்தவாறே ஷேக் ஸாஹப் பையனைப் பார்த்தார். பஷீர் பின் குஷனிலிருந்து குண்டூசிகளை எடுத்து மேஜை விரிப்பின் மீது குத்திக் கொண் டிருந்தான்.
“நான் சொல்வதைக் கவனமாகக் கேளு!” ஷேக் ஸாஹப் அவன் கையிலிருந்து குண்டூசிகளைப் பிடுங்கிவைத்து விட்டு, ஒரு செய்தித் தாளின் பக்கங்களைப் புரட்டியவாறே தொடர்ந்தார். “சீட்டும் ஒருவகைச் சூதாட்டம் தான். இதில் தொடங்கித்தான் மனிதனுக்குச் சூதாட்டப் பழக்கமே படிகிறது. நன்றாகக் கேட்டுக் கொண்டாயா? இந்தப் பழக்கம் தன் ஒருவனோடு நிற்பதில்லை. ஒருவனிலிருந்து இரண்டாமவனுக்கு. இரண்டா மவனிலிருந்து மூன்றாமவனுக்கு என்று நீண்டு கொண்டே போகிறது: பூசணியைப் பார்த்துப் பூசணி சாம்பல் பிடித்த தாம் என்கிற கதைதான்.”
மசிப்புட்டியில் ஒரு விரலைத் தோய்த்து, அந்த மசியைக் கொண்டு ஒரு வெற்றுக் காகிதத்தில் கழுகு – குதிரை போன்ற படங்கள் வரைவதில் பஷீர் அப்பொழுது முனைந்திருந்தான். சாம்பல் பூசணியைப் பற்றிக் கேட்டதுமே, அவன் மசி தோய்ந்த தன் விரலை, மேஜைக்கு அடியில் தொங்கிக் கொண்டிருந்த விரிப்பில் துடைத்துக் கொண்டான். சாம்பல் பூசணியே தன் கையில் இருப்பது போன்ற உணர்வோடு தந்தையை நோக் கினான்.
“பஷீர்!” பையனுக்கு எதிர்த்தாற் போலிருந்த மசிப் புட்டியை எடுத்து அப்பால் வைத்தவாறே ஷேக் ஸாஹப், “நான் சொல் வதைக் கவனமாகக் கேளு!” என்றார். அதற்குள் தொலை பேசியின் மணி அடிக்கவே, ஷேக் ஸாஹப் எழுந்து ரிசீவரை எடுத்தார்; “ஹலோ! எங்கிருந்து பேசுகிறீர்கள்?… பாபு புருஷோத்தம் தாஸா? ஆதாப் அர்ஜ்! வணக்கம்! சொல்லுங்கள், என்ன உத்தரவு?… லாட்டரி டிக்கட்டுகளா…? இன்று மாலை நான் ஃபாரம் பூர்த்தி செய்து அனுப்புகிறேன். எத்தனை ரூபாய் ஐந்து டிக்கட்டுகளுக்கு?… ஐம்பதா?… சரி! ஆனால் இது வரை நீங்கள் ஏதாவது பரிசு தந்திருக்கிறீர்களா?… நமக்கு அதிர்ஷ்டம் எப் பொழுதோ, அப்பொழுது தானே கிடைக்கும்?… உங்களால் என்ன செய்து விடமுடியும்?… சரி, வணக்கம்!”
ரிசீவரை வைத்து விட்டு அவர் மீண்டும் தம் ஆசனத்தில் அமர்ந்தார். “இதோ பார்! இனிமேல் குறும்புகள் செய்யாதே. பேப்பர் வெயிட் தரையில் விழுந்தால் உடைந்துவிடும். அதை வைத்துவிட்டு நான் சொல்வதைக் கேளு!” என்றார்.
“ஆமாம், நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்?” மற்றொரு ஃபைலின் நாடாவை அவிழ்த்தவாறே ஷேக் ஸாஹப் தொடர்ந்தார்:” சீட்டாட்டத்தின் கெடுதிகளைத் தானே சொல்லிக் கொண்டிருந்தேன்? சீட்டிலிருந்து சூதாட்டம், சூதாட்டத்திலி ருந்து திருட்டு. திருட்டிலிருந்து எதில் எல்லாம் கொண்டுபோய் விடுகிறது தெரியுமா? பஷீரைப் பார்த்துப் பேச்சை முடித்தார்: “ஜெயில், அதாவது சிறைத் தண்டனை!”
ஃபைலிலிருந்து வெளியே துருத்திக்கொண்டிருந்த ஒரு மஞ்சள் காகிதத்தில் பேனா முனையினால் ஓட்டை செய்து கொண்டிருந் தான் பஷீர்.
“உதவாக்கரை! மட்டம்!” என்று கூறி அவன் கையிலிருந்து ஷேக் ஸாஹப் பேனாவைப் பிடுங்கிவைத்தார். “இந்தத் தீய காரியங்களை விட்டுவிட்டு நான் சொல்கிறதைக் கேளு! ஒவ்வொரு நாளும் நாங்கள் எத்தனை திருடர்களைப் பிடித்துச் சிறைக்கு அனுப்பவேண்டி யிருக்கிறது, தெரியுமா? இவர்கள் எல்லோரும் சீட்டு விளையாடி விளையாடித்தான் திருடக் கற்றுக் கொண்டிருக் கிறார்கள். அவர்கள் தலையில் இந்தச் சட்டத்தின் கோல் சுழலாமல் இருந்தால், இன்னும் என்ன என்ன அநியாயம் செய்வார் களோ, தெரியாது!” ஷேக் ஸாஹப் மேஜையின் ஒரு மூலையில் இருந்த ‘இந்தியன் கிரிமினல்’ கோட் நூலைச் சுட்டிக் காட்டினார். ஆனால் பஷீரின் கவனம் வேறு ஒரு நூல் மீது பதிந்திருந்தது. அதன் கட்டடத்தில் ஒரு மூலை சற்றுக் கிழிந்திருந்தது. பஷீரின் கை விஷமம் செய்து அதன் ‘காலிகோ’வைப் பாதிக்குமேல் உரித்து விட்டது.
“முட்டாள்; கழுதை!” என்று திட்டியவண்ணம் பஷீரின் அருகி லிருந்து ஷேக் ஸாஹப் புத்தகத்தை எடுத்துத் தூர வைத்தார். “உன்னை இங்கே பைண்டுப் புத்தகத்தைக் கிழிக்கவா கூப்பிட் டேன்? நான் சொல்கிறதைக் கவனித்துக் கேளடா!” என்று கடிந்தார். பிறகு சில சம்மன்களில் கையெழுத்துப் போட்ட வண்ணம் தம் பேச்சை இணைத்தார்: ‘போலீஸ் அதிகாரிகளான எங்களுக்கு அரசாங்கம் கை நிறையச் சம்பளமும் பென்ஷனும் கொடுக்கிறதே, எதற்காகத் தெரியுமா? நாட்டில் நடக்கும் குற்றங் களைக் களைந்தெறியவேண்டும் என்பதற்காகத்தான். அப்படி யிருக்கும்பொழுது எங்கள் வீட்டுக் குழந்தைகளே சீட்டும் சூதாட்டமும் ஆடத் தொடங்கிவிட்டால், அப்புறம் உலகம் என்ன சொல்லும்? நாங்கள் தின்னும் உப்பு எப்படிச் சீரணிக்கும்….?”
பேச்சு இடையில் ‘திரிசங்கு’வாக நிற்கும்பொழுதே, பின்புறத் துக் கதவைத் திறந்து கொண்டு, வாட்ட சாட்டமாக உயர்ந்த ஒரு வேலையாள் உள்ளே நுழைந்தான். ஷேக் ஸாஹப் எப்பொழுதுமே தம் வீட்டில் இப்படி நம்பிக்கைக்குப் பாத்திரமான இரண் டொரு போலீஸ்காரர்களை வைத்திருப்பது வழக்கம். அவர்களில் ஒருவன் ஆடுமாடுகளுக்குத் தீவனம் போடுபவன்; எருமை-பசுக் களைக் கறப்பவன். இன்னொருவன் சமையல் வேலைக்குக் கை யாள். மூன்றாவதாக, இப்பொழுது உள்ளே நுழைந்தானே, இவன், ஆட்களிடம் பணம் கழற்றுவதற்காக வைக்கப்பட்டிருந் தான். அவன் குனிந்து சலாம் வைத்து, “சார்! அவர்கள் வந்து உட்கார்ந்திருக்கிறார்கள்!” என்றான்.
“எவர்கள்?”
“அந்தப் போக்கிரி புக்கியின் ஆட்கள்! தசராத் திருவிழாவின் பொழுது சூதாட்டக் கடை நடத்த விண்ணப்பம் செய்திருந்தார் களே, அவர்கள்….!”
“நீயே அவர்களிடம் பேசி முடிப்பதுதானே?”
“ஷேக் ஸாஹப் இருநூற்றைம்பதுக்குக் குறைந்து சம்மதிக்க மாட்டேன் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டேன். ஆனால்…”
“அவர்கள் என்ன சொல்லுகிறார்கள்?”
“ஒருமுறை தங்களை நேரில் கண்டு கும்பிட்டுப்போக விரும்புவ தாகக் கூறுகிறார்கள். உங்களுக்குத் தடையில்லை யென்றால் இரண்டு நிமிஷம் வாருங்கள். அவர்கள் வெகு நேரமாகக் காத் துக் கொண்டிருக்கிறார்கள்!”
“சரி, வா!” என்று கூறி எழுந்த ஷேக் ஸாஹப் ஒருமுறை பஷீரைப் பார்த்தார். அவன் தூங்கி வழிந்துகொண்டிருந்தான். ஓர் அதட்டல் போட்டு அவனை எழுப்பினால், அவன் மேஜையின் மீது மண்டையை மோதிக்கொள்ளுவான் போலிருந்தது.
“போ, போய்ச் சற்று இளைப்பாறு!” ஷேக் ஸாஹப் கோட்டை யும் இடுப்பு பட்டையும் மாட்டிக்கொண்டு, “மற்ற போதனைகளை மாலையிலே சொல்லுகிறேன். இனி ஒரு பொழுதும் சீட்டு விளையாடாதே!” என்று கூறிவிட்டு வெளியே சென்றார்.
