அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்

விச்ராந்தியாய் நின்று கொண்டிருந்தேன்
செய்வதற்கு ஒன்றுமில்லை
பக்கத்தில் ‘ க்க்ரக்க்… க்ரக்க்…’ சத்தம்
திரும்பிப் பார்த்தேன்
ஒரு தவளை…. சத்தமிட்டபடியே தாவிக்குதித்தது.
உற்றுப் பார்த்தேன்
அதுவும் தலைதூக்கி என்னை பார்த்தது
பிறகு அதன் போக்கில்
‘க்க்ரக்க்… க்க்ரக்க்…’ சத்தமுடன் நகர்ந்தது.
நாலைந்து தாவல்களுக்கு ஒருமுறை நின்று
குறுகிய கழுத்தை உயர்த்தி எங்கோ பார்த்தது.
மீண்டும் ‘க்க்ரக்க்… க்க்ரக்க்…’ சத்தமுடன் தாவியது
தப்படி நகராமல் அங்கேயே நின்று கவனித்தேன்
தேங்கியிருந்த சேற்றுநீரில்
தாவிய தவளை வாசமானது
நாலைந்து தவளைகள்
சேற்றிலிருந்து எட்டிப் பார்த்தன
இப்போது நாலைந்து தவளைகளின்
‘க்க்ரக்க்… க்க்ரக்க்…’ சத்தம் உரத்து ஒலிக்கிறது.
வேரோடிய கால்களை அசைத்து
நகரத் தொடங்கினேன்
இதோ… உயிர்த்தலை நிலைநிறுத்தும்
‘க்க்ரக்க்… க்க்ரக்க்…’ சத்தம் தொடர்ந்து
