
நீண்ட நாட்களாகவே அம்மாவிடம் ஒரு பொம்மை வாங்கித் தருமாறு அடம் பிடித்துக் கொண்டே இருந்தாள் அபி. அவள் அம்மா அதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. கையில் காசு இருந்தால்தானே வாங்கிக் கொடுப்பதற்கு. அது இந்த நான்கு வயது அபிக்கு புரிய வாய்ப்பில்லைதான்.
அன்றும் வழக்கம் போல பள்ளி முடிந்து வீடு திரும்பியவள் அம்மாவிடம் ஒரு படத்தைக் காண்பித்தாள். அது ஒரு சிறுமியின் படம். அந்தப் படத்தை ஒன்றும் பேசாமல் அபி அம்மா கையில் கொடுத்தாள்.
“நல்லா வரஞ்சிருக்க அபி” என்றாள்.
“நான் கோபமா இருக்கேன்”….
” ஏம்மா…?
” நீ பொம்ம வாங்கித் தரல.. அதான் என்னைய கோபமா வரஞ்சிருக்கேன்”…
” ஓ…. இது நம்ம அபி குட்டியா…. கோபத்திலும் இத்தனை அழகா இருக்கியே…. நீ சிரிச்ச மாதிரி வரஞ்சா எவ்வளவு அழகா இருப்ப” …
” நிஜமாவே இது அழகா இருக்காம்மா….”
” ஆமாண்டா செல்லம்…. பிரமாதமா இருக்கு…
” ஹை…. என் பட்டு அம்மா, செல்ல அம்மா, இத நான் தாம்மா வரஞ்சேன்,
என் மிஸ் இத போட்டிக்கு எடுத்துக்கறேன்னு சொன்னாங்க” என்றாள் அபி.
” உனக்குத்தான் செல்லம், முதல் பரிசு”
” ரொம்ப தேங்ஸ் மா”
அம்மாவைக் கட்டி அணைத்து முத்தமிட்டாள் அபி.
அடுத்த நாள் டிராயிங் மிஸ் போட்டி முடிவை வகுப்பில் அறிவித்து விட்டு அபியைக் கூப்பிட்டார்.
” அபி, உனக்குத்தான் முதல் பரிசு “
அவள் கையில் ஒரு கலர் பேப்பர் சுற்றிய சிறிய அட்டைப் பெட்டியைக் கொடுத்தார்.எல்லோரும் கை தட்டி
பாராட்டினர்.
வீட்டிற்கு வந்தவுடன் அம்மாவை கூப்பிட்டு அதை திறக்கச் சொன்னாள்.
அம்மா பெட்டியைத் திறந்து வெளியே எடுத்தாள். அபி வரைந்த அதே பொம்மை. அழகான பஞ்சு மிட்டாய் கலரில்.
சந்தோஷத்தில் அம்மாவைக் கட்டிக் கொண்டு ஆட ஆரம்பித்தாள் அபி.
அவள் வரைந்த படத்தில் இருப்பது போல் அல்லாமல் அந்த பொம்மை சிரித்த முகத்துடன் இருந்தது.
அபி அந்த பொம்மையை அணைத்து முத்தமிட்டாள்.
அவர்கள் இருவரின் மகிழ்ச்சியை ஆமோதிப்பது போல் அந்த பொம்மையும் அவர்களைப் பார்த்து சிரித்தது.
25/02/2025
8 30 am
