மஞ்சேரி ஈஸ்வரன்/நியாயம்

ரிப்பன் சிலையின் பீடத்தில் அவன் படுத்துத் தூங்கினான். அந்தப் பையனுக்குப் பதினாறு வயதுதான் இருக்கும். குப்பையில் எறிந்த ஒரு கந்தல் சாக்குத்தான் அவனுடைய அரை வேட்டி, அது நழுவிக் கீழே விழுந்துகிடந்தது. அந்த அழகான சிலையோடு சிலையாய் அவன் ஒட்டிக்கிடந் தான். வானத்திலே சூரியன் இவனைப் பார்த்துச் சிரிப் பது போல் காய்ந்து கொண்டிருந்தான். பொழுது விடிந்த பிரக்ஞைகூட இல்லாதவனாய், பிறந்த மேனிக்கு அவன் தூங்கிக்கொண்டிருந்தான். இவனைப் போல் இன்னும் எத்தனையோ பேர், வேறு வேறு கண்டங்களிலும்தான் இருக்கிறார்கள் ; அவர்களை யெல்லாம் பார்த்துப் பார்த்துச் சிரித்துத்தான் இருப்பான் சூரியன். சிரிப்பிலே சூரியனுக்குச் சலிப்பேது? அவன் சிரிப்பதற் கென்றே பிறந்தவன்.
அவனைச் சுற்றிலும், உயிர்களின் நடமாட்டம் வலுத் தது; ஒளி பரவியது. அவனோ அசையவில்லை. அவனுக்கு இன்னும் பொழுது விடியவில்லை; அவன் இன்னும் இரவின் மாய அமைதியிலே கட்டுண்டிருந்தான்.
சிலையைச் சூழ்ந்துள்ள பசும்புல் பாத்திக்குத் தண் ணீர் தெளிப்பதற்காக, கார்ப்பொரேஷன் சிப்பந்தி, ஒரு வாளியோடு வந்து சேர்ந்தான். அங்கே உறங்கிக் கொண் டிருக்கும் இந்த அனாதையைக் கண்டதும், அவன் ஆபாச மாய்த் திட்டினான் ; அந்தப் பாட்டுக்குத் தாளம் போடு வது போல, பையனின் முதுகில் மொத்து மொத்தென்று உதைத்தான். இதற்கெல்லாம் பையன் மசியாததைக் கண்ட சிப்பந்தி, பையனின் முகத்தை முரட்டுத்தனமாய்த் திருப்பி, அதற்கு நேரே வாளியின் மூக்கைப் பிடித்து, தண் ணீரைக் கொட்டினான். பையன் எழுந்து உட்கார்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டு மிரளமிரள விழித்தான். தண்ணீர் இன்னும் அவன் முகத்திலே, சிலீர் என்று ஊசி சரம்போல் சொரிந்து கொண்டிருந்தது. பையன் கைக ளால் முகத்தை மூடிக்கொண்டு, தன் கந்தல் சாக்கையும் சுருட்டிக்கொண்டு, சங்கிலி வேலியைத் தாண்டிக் குதித்து, ரஸ்தாவின் இடது பக்கத்துக்கு ஓட்டம் பிடித் தான். தன் உடம்பிலே இருந்த தண்ணீரைத் துடைத்துக் கொண்டு, இரைக்க இரைக்க அங்கே நின்றான்.
தோகைபோன்ற மேலங்கியின் மடிப்புகள் பிரிந்து கிடந்த ரிப்பன் பிரபுவின் அழகான கல் தொந்தியின் மீது, சூரியன் தன் கிரணங்களால் கொஞ்சித் தடவினான். அதன் பின்னே, அவன் சுட்டுப் பொசுக்கும் தன் கோடைச் சிரிப்பைச் சிரித்தான் ; அந்தச் சிரிப்பு, சிறுவ னின் வயிற்றுக்குள்ளே புகுந்து, மின்சாரம் போல் தாக்கியது.
வழியிலே போவோர் வருவோரை யெல்லாம், தெய்வத்தின் பெயரால், ஒரு சல்லி-ஒரே ஒரு சல்லி தான் – அவன் பிச்சை கேட்டான். ஆனால், கோயில் களிலே தெய்வமேது? பணப் பையிகளிலே தம்படிக்காசு களுக்கு இடமேது? காப்பி ஓட்டல் வாசல்களிலே போய் அவன் நின்று கொண்டான்; வயிறு நிரம்பி ஏப்பம் விட் டுக்கொண்டு வாயிலே புன்முறுவல் தவழ வெளியே வரு வோரை யெல்லாம், ஆவலோடு பார்த்தான். கையை எவ் வளவுதான் நீட்டினாலும், அவன் கைதான் வலித்தது; காசு போடுவோரைக் காணோம்.
பசியால் அப்படியே ஐந்தடியில் சுருண்டு விழுந்தான். அவன் தொண்டை வறண்டது. கண் பஞ்சடைந்தது. என்றாலும், சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்து கொண் டான்.
இந்தச் சமயத்தில் ஒரு கைவண்டி நிறையக் கனிந்த பழங்களை ஒருவன் வீதியிலே இழுத்துக் கொண்டு போனான். பையன் தள்ளாடித் தடுமாறி எழுந்து, மூச் சைப் பிடித்துக்கொண்டு, அந்த வண்டிக்குப் பின்னே ஓடினான். அதிலிருந்து ஐந்தாறு பழங்களைப் பிடுங்கினான். ஒரு பழத்தை, தோலைக்கூட உரிக்காமல் பர பர என் என்று வாயிலே திணித்துக் கொண்டான். ஆனால், அதை அவன் விழுங்க முடியவில்லை ; இடுக்கிபோல் எதோ ஒன்று அவன் மென்னியைப் பிடித்து இறுக்கியது. இரண்டொரு நிமி ஷங்கள் சென்றதும், அந்தப் பிடி தளர்ந்தது. உடனே அவன் தலையில் பலமான ஒரு குட்டு விழுந்தது. அந்தக் குட்டினால், அவன் முதுகெலும்பே கலகலத்து விட்டது; அவன் காது ஞொய் என்று அடைத்துக் கொண்டது. சிறிதுநேரம் வரையில் கற்சிலை போல் அவன் திகைத்து நின்றான். பின்பு, நிமிர்ந்து பார்த்தான். கண்களிலே தீ பறக்க, இவனை உறுத்து விழித்துக் கொண்டு, ஒரு தடியன் நிற்பதைக் கண்டான்.
“திருட்டுப் பயலே!” என்று கர்ஜித்த அந்த மனிதன், “வா தாணாவுக்கு. பளமா தின்னே, பளம்? அங்கே இன்னும் ருசியா வேறே பளம் தின்னலாம்; வா என்றான். பையன் துக்கம் தாளாமல் ஊமையானான். உலகத்திலேயே தான் ஒருவன்தான் அநாதை என்று அவனுக்குத் தோன்றியது. தன்னைக் காப்பாற்ற அங்கே யாரும் இல்லை. அவன் ஓட நினைத்தான். அப்படி அவன் நினைக்கு முன்னே, அவனுடைய அந்தச் சபல எண்ணத்தை, அவன் விழித்த விழியிலிருந்தே அந்தத் தடியன் தெரிந்து கொண்டு விட்டான்; அவனைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டான். பழமும் கையுமாய், அலனைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்றான்.
அந்த டிவிஷனின் சப் இன்ஸ் பெக்டர் ஒரு வாலிபர். இப்போதுதான் பயிற்சிக் காலம் முடிந்து, புதிதாய் உத்தி யோகம் வகிக்கத் தொடங்கி யிருந்தார். வேலை செய்வதில் மிகவும் ஆர்வம் படைத் திருந்தார். மகுடம் போட்ட தம் போலீஸ் பித்தான்களைப் பளபளப்பாய்த் துடைத்துக் கொண்டு, ஜரிகையிட்ட தம் சிவந்த தலைப்பாவைத் தூசி தட்டிச் சுத்தமாய் வைத்துக் கொள்வதிலே அவருக்கு மிகுந்த ஆசை.
திருட்டின் விவரங்களை, அவர் வெகு கம்பீரமாய் விசாரித்தார். அவரைச் சூழ்ந்துநின்ற ஜவான்க ளெல் லாம், பையனை வெறித்துப் பார்த்தார்கள். பையனோ சுவரிலே தொங்கிய லாத்திகளைக் கண்டு மெய் நடுங்கினான். சப் இன்ஸ்பெக்டர், வெகு கம்பீரமாகவே, குற்றவாளி மீது பிராது தயாரித்து விட்டார்.
கோர்ட்டிலே மாஜிஸ்திரேட், ஓயாமல் கொட்டாவி விட்டுக் கொண்டே, விசாரணை நடத்தினார். பிராஸிகியூ ஷன் தரப்பு சப் இன்ஸ்பெக்டர் அற்புதமாய் வாதம் செய் தார்; வழக்கின் சாராம்சத்தை அவர் எடுத்துக் காட்டியது, குற்றவாளிகளின் மனோதத்துவம் பற்றிய ஓர் அரிய ஆராய்ச்சி இலக்கியமாயிருந்தது. இந்த இளம் திருடனைச் சும்மா விட்டால், பின்னால் கொடுங் குற்றம் புரியத் தயங்க மாட்டான் என்று வாதித்து, இவனுக்குத் தக்க தண்டனை விதிக்க வேண்டுமென்று அவர் போராடினார். ஒரு வாரத் துக்கு முன்னே யாரோ ஒரு கிழக் கனவான் எஸ்பிளனேட்டுக் கடைகளில் சாமான் வாங்கிக் கொண்டிருந்த போது அவர் ஜேபியிலிருந்த பணப்பையைக் களவாடிச் சென்றவன் இவன்தான் என்று 3245 நி. ஜவான் அடை யாளம் சொன்னான். ஒரு சைக்கிள் விளக்கைத் திருடிக் கொண்டு இந்தச் சிறுவன் ஓடியபோது, தான் நேரே கண்டு இவனைத் துரத்தியதாகவும், பயல் தப்பிச் சென்று விட்டதாகவும் 3259 நி. ஜவான் சாட்சி சொன்னான். இவன் மகா அபாயமான ஆசாமி. பட்டணத்திலுள்ள முடிச்சுமாறிகளுக்கெல்லாம் தலைவன் இந்தப் பயல்தான்- இவ்வாறெல்லாம் சப் இன்ஸ்பெக்டர் வாதித்து முடித்தார்.
கைதிக் கூண்டில் நடு நடுங்கிக் கொண்டு நிற்கும் கைதியை மாஜிஸ்திரேட் பார்த்தார். தம் எதிரில் இருந்த காகிதங்களை ஒரு புரட்டுப் புரட்டினார். தமது விரல்களுக்கிடையே உருட்டினார். அதிகார தோரணை பேனாவையால் இருண்ட அவர் கண்களுக்கு, தம் முன்னே நிற்கும் பையனின் வாலிப வசீகரத்தின் அழகு எப்படிப் புலப் படும்? இவரையே பார்த்துப் பழிப்பது போல் பளபள என்று ஜொலிக்கும் அந்தச் சிறுவனின் கண்களை, மாஜிஸ் டிரேட் ஒருவித உணர்ச்சியும் இல்லாமல் வெருண்டு நோக் கினார். பஞ்சமா பாதகர்களின் கண்களையும், வேசிகளின் கண்களையும் தான் அவர் கண்டிருக்கிறார்; அவருக்குக் குழந்தைகள் கிடையாது.
“போர்ஸ்டல சிறையில் மூன்று வருஷம் போடு ” என்று ஆடம்பர கம்பீரத்தோடு அவர் தீர்ப்பளித்தார். உலகத்து நீதி மன்றங்களெல்லாம் ஜயபேரிகை முழங்கின.