
கலைநயம் மிக்க வேலைப்பாடுகளுடன் கூடிய அந்தப் பெட்டி சற்றே கலையிழந்து தான் காணப் பட்டது. நீள் அரைகோள வடிவ மூடியுடன் கூடிய அந்தப் பெட்டிக்கு வினோதமான வடிவத்தில் ஒரு பூட்டு போடப்பட்டிருந்தது. பூட்டை உடைத்துப் பார்க்க பேரவா மனதின் விளிம்பில் ஊசலாடி நின்றது. என்ன இருக்கும் இந்தப் பெட்டியில்? ஊகிக்க முடிய வில்லை. தங்க வைடுரியமாக இருக்குமோ! பழைய ஓலைச் சுவடிகள் ஏதேனும் இருக்குமோ! என்ன இருக்கும்? உடைத்துப் பார்த்தால் என்ன….. நமக்குத் தேவையில்லாத பொருட்கள் ஏதேனும் இருந்தால்! போருளாக இருந்தால் சரி! “ஜீ பூம்பா” போல் ஏதேனும் விஸ்வரூபம் கொண்டால்…! என்ன இருக்கும்? பூட்டை உடைத்து திறந்துதான் பார்ப்போமே !
பூட்டு உடைக்கப்பட்டது! பெட்டி திறக்கப்பட்டது! என்ன அதிசயம், அதில் மிகச் சிரமத்துடன் அடைத்து இலக்கப்பட்டிருந்த ஒரு முட்டையைக் காண நேர்ந்தது ! கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை! இவ்வளவு பெரிய முட்டையை யார் இதில் வைத்துப் பூட்டியது? யார் என்பதை அறியத் தோன்றாமல் பிரமிப்பூட்டியது முட்டை. அது எதனுடையது. அடைகாக்கும் இனம் விலங்கா? பறவையா? வெள்ளைக் காகிதம் பழுப்பாகிப் போன நிறத்தில் இருந்த அந்த முட்டை எதனுடையது என்றறியும் ரசாயனம் புத்திக்குக் கைகூடவில்லை. எதையோ தேடிச்சென்று எதையோ கண்ட மிரட்சி. வெளிர் மஞ்சள் ஓட்டுடன் அடக்கமாய் உட்கார்ந்து பயமுறுத்திக் கொண்டிருந்தது. பெரிய பெட்டி, பெரிய முட்டை. சிறுவயதில் டாக்டரின் ஆலோசனையின் பேரில் அம்மா தினம் ஒரு முட்டை வேகவைத்துக் கொடுத்தாளே அதைவிடப் பன்மடங்கு பெரிது. தன் மஞ்சள் ஓட்டுக்குள் ஏதோ ஒரு அதிசய உயிரை விழுங்கி வைத்து கொண்டு மாயாஜாலம் காட்டியது. மூளையெங்கும் கருஞ்சீலையின் நிழலாட்டம்.
“நெல் மணிகள் விழுங்கி உயிரை விட்ட பெண் குழவிகள் மறுபிறவியில் ராட்சசியாய்ப் பிறந்து பூமியை துவம்சம் செய்ய பிரம்மனிடம் வரம் வேண்டி நின்றன.”
இப்பெரு முட்டை உடைபட்டால் ராட்சஸக் குழவிகள் அணி அணியாய் வரக்கூடும். இல்லையெனில் எரிந்துபோன மருமகள்கள் சாரைசாரையாக ஓடிவரலாம். அமிலத்திற்கு பலியான கனவுக் காதலிகள் கெக்கலித்து வந்து நம் கழுத்தை நெரிக்கலாம்.
ஏராளமான ஆண்களும் பெண்களும் சாரைசாரையாக எங்கோ நடந்து சென்று கொண்டிருந்தார்கள். எல்லோர் கையிலும் ஒரு பெட்டி, அதிலும் இதைப்போல் ஒரு முட்டை இருக்குமா தெரியவில்லை. ஆனால் அவர்களைப் பின் தொடர்ந்த போது நடுவே கடற்கரை வந்துவிட்டது. அங்கே, சுண்டல் பொடியன்களை நிராகரித்துவிட்டு, இடையணைத்து, கைகோர்த்து விவாகரத்தின் நினைப்பின்றி அமர்ந்திருந்தனர் யுவன்களும் யுவதிகளும். அவர்களிடையே ஒரு ஆழமற்ற கடல் விரிந்திருந்தது. எதிரே தெரிந்த கடல் போல் அது சீறவில்லை. ஒருவேளை அந்தக் கடல் தான் இந்த முட்டையைக் கரை சேர்த்திருக்குமோ!
‘அனார்கலி ஷாஜகான், லைலா, மஜ்னு, தேவதாஸ்” போன்ற பெயர்களின் கருத்தரிப்பாக இருக்குமோ இம்முட்டை! அப்படி ஒருவர் கூடவா இல்லாமல் போவார்கள். மானசிக உறவு என்றால் என்ன? ஆழ்ந்த நட்பு
உடலுறவின்றி சாத்தியமில்லை! உடலுறவு மட்டுமே ஆழ்ந்த நட்பைத் தருவிப்பதில்லை.
காதலன்… காதலி.
இடையணைத்து அமர்ந்திருக்கிற ஆண், பெண்!
மின்சார ரயில்களை வேண்டுமென்றே தவற விட்டுவிட்டு மணிக்கணக்கில் பேசித் தீர்க்கிற யுவன், யுவதி!
பேருந்தில் சேகருக்காக இடம்பிடித்து வைத்திருக்கிற மீனா.
நின்றது, உட்கார்ந்தது, எழுந்தது என்று எதையும் விட்டு வைக்காமல் தொடர்ந்து கதைத்துத் தள்ளுகிற அவள். அதையும் கேட்டுக் கொண்டிருக்கிற அவன்.
கேண்டீனில் சந்தித்து சுடிதாரின் அழகை பளிச்சென்று உதிர்த்து “தேங்ஸ்” பெறுகிற அவள். தன் உணவைப் பகிர்ந்து கொள்கிற அவன்.
செல்போன் சூடேறி, மின்கலம் உலர்ந்து போகும் அளவிற்கு என்னதான் பேசித் தீர்ப்பார்கள்.
முட்டைக்குள்ளிருந்து வெளிவந்த எல்லா காதலன் காதலிகளும் ஒரு சாட்டைச் சொடுக்கில் வரிசை கொண்டனர். கீறல் விழுந்த இசைத்தட்டு போல் தங்கள் அந்தரங்கத்தைப் புலம்பித் தீர்த்தனர். அப்போது தான் தெரிந்தது கையில் சாட்டையே இல்லை என்று. முட்டை உடையவில்லை. எல்லாம் கனவு. கனவுகள் பாறையாய் இறுகும் போது காதலின் புகலிடம் எது? எங்கே இருக்கிறது காதல்? காதல் எங்கே போயிற்று? “where the love has gone?” ஏதோ ஒரு புத்தகத்தின் பெயர். காதலோ, கத்தரிக்காயோ எல்லாம் இந்த முட்டைக்குள் தான் ஐக்கியம். முட்டையை உடைக்காமல் விடுவதில்லை.
தொலைக்காட்சியில் வன உயிர்கள் பற்றிய படம் ஓடிக் கொண்டிருந்தது. தீக்கோழி ஒரு பாதுகாப்பும் இல்லாத இடத்தில் தன் முட்டையை இட்டுச் சென்றது. பின்னோடே புலி ஒன்று இரைதேடி வந்தது. அம்முட்டையைக் காலால் உருட்டி, புரட்டி வதைத்தது. முட்டை உடையவில்லை. கல்பந்து போல உருண்டு, புரண்டு வெறுப்பேற்றியது புலியை. புலி என்ன முயன்றும் முட்டை உடைபடவில்லை. புலி சோர்வுடன் திரும்பிச் சென்றுவிட்டது. இயற்கை வென்றுவிட்டது. உடலில் பூரிப்பு ஊர்ந்தது. தொடர்ந்து ஒரு மேஜிக் ஷோ தொடங்கியது. ஒரு பெட்டியில் ஒரு பெண்ணை அடைத்துவைத்து மாயமாக மறையச் செய்தான். அதே பெண்ணை வேறு ஒரு பெட்டியிலிருந்து எழச் செய்தான். அந்த மந்திரவாதி ட்ரிம்மாக, அழகாக இருந்தான். அவன் காட்டிய வித்தையில் கண்கள் அகல விரிந்தன. ஒரு பொறி தட்டியது. இந்த மாயக்காரன் சரியான ஆளாக இருப்பானோ? முட்டையின் மாயத்தை உடைப்பானோ இவன்?
அந்த மாயக்காரனை அணுகினேன். அவன் மிகவும் தயங்கினான் முட்டையைக் காண. தன் கண்கட்டு வித்தை அம்பலம் ஏறிவிடும் என்ற அச்சமோ! மாயக்காரன் தன் வேடத்தைக் கலைக்கும் துணிவின்றி முட்டையின் ரகசியம் காண உடன் வந்தான். முட்டையைப் பார்வையிட்டான். அவனுடன் ஒளிந்து மறைந்து வெளிவந்த அந்தப் பெண்ணும் நின்றிருந்தாள். மாயக்காரனின் மந்திரக்கோல் முட்டையைத் தடவியது. மாயக் காரனின் மந்திரக்கோலின் லென்ஸில் எதுவும் பிடிபடவில்லை. மாயக்காரன் முட்டை அடைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டியைப் பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ ஆரம்பித்தான். தான் ஜெய்ப்பூர் மியூசியத்தில் கண்ட ஒரு வண்ணமிகு பெட்டிக்கு நிகரான கலை நயம் கொண்டதென விளாசித் தள்ளினான். வந்த வேலையை மறந்துவிட்டு, “இவ்வளவு அழகான பெட்டியை ஏன் இப்படி பாழடைய விட்டிருக்கிறீர்கள்?” என்று நீட்டி முழக்கினான். நீள் அரைகோள வடிவ மூடியின் மேல் அலங்கரிக்கப்பட்ட யானையின் உருவம் செதுக்கப்பட்டிருந்தது. யானையின் இரு பக்கத்திலும் சிறகு விரித்து தவமிருந்தன கூர்மூக்குக் கழுகுகள். மாயக்காரனை ஈர்த்த கலைநயம் இதுவே. பெட்டிப் பிரதாபத்தின் முடிவில் மாயக்காரன் அப்பெட்டியை விலைக்குக் கேட்டான். பெட்டியின் விலை என்ன? பெட்டியின் உரிமையாளர் யார்? விற்பதற்கு ஆளில்லாத பெட்டியை மாயக்காரன் எப்படி வாங்குவான்?
மாயக்காரன் பெட்டியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அதை இன்னும் மெருகேற்றி எவ்விதத் தந்திரக் காட்சிகளில் காட்டி பணம் பண்ண முடியும் என்கிற யோசனை. திடீரென்று செல்போன் அலறியது. மாயக்காரனுக்குத் தான் அழைப்பு. அவன் இடையணைத்து நின்றிருந்த, தன்னுடன் வந்த நங்கையை விலக்கிவிட்டு தனியே சிறிது நேரம் தனிமை கொண்டு பேசினான்.
அவனுடைய செக்ரட்ரி நான் போனில் பேசினாள். மாயக்காரனின் முகம் பரபரப்பைக் காட்டியது. நெற்றியைச் சுருக்கிக்கொண்டு, மறுமுனைச் செய்தியை வாங்கிக் கொண்டிருந்தான். மறுநாள் நடக்கவிருந்த மாயாஜாலக் காட்சி ரத்தாகி விட்டதாகச் செய்தி. கோடுகள் அவன் முகத்தில் நிழலாடியது. உடனே புறப்பட்டு விட்டான். அவன் பின்னோடே பெட்டியில் மறைந்தெழுந்த அந்த நங்கையும் ஓடிப்போய் அவனுடன் காரில் ஏறிக்கொண்டாள். போகிற போக்கில் மாயக்காரன் கையெழுத்திடப்பட்ட வெற்றுக் காசோலையை விசிறி யடித்துவிட்டுச் சென்றான். அப்பெட்டியின் விலை:
பெட்டி முட்டை, மாயக்காரன். காசோலை. முட்டையையும், பெட்டியையும் எப்படிப் பிரிப்பது. முட்டையின் பாதுகாப்பு என்ன கும்: முட்டைக்கு யார் பாதுகாப்பு? முட்டையை ஏன் பாதுகாக்க வேண்டும்; மாயக்காரன் விசிறியடித்த காசோலை பாறாங்கல்லாய் கனத்தது. உடன் ஒரு சின்ன சபலம். சின்ன ரொடேஷன். ஆட்டைத் தூக்கி மாட்ல போட்டு, மாட்டைத் தூக்கி மடுவுல போட்டும் மாமனாரின் தொல்லை, மனைவியின் நச்சரிப்பு, எதிர்கால பூதம் – எல்லாமாகச் சேர்ந்து செங்கல் செங்கல்லாக உயர்ந்து கொண்டிருக்கிறது. ஊருக்கு வெளியே… ஆனால் தற்போது அதன் வேகம் தடைபட்டு நிற்கிறது. ஒரு ஐந்து லட்சம் போதும் இறுதிக் கட்டத்தை எட்டிவிடும். மாயக்காரனின் காசோலையில் எழுதிக் கொண்டால் என்ன? அவன் வங்கியில் அவ்வளவு பணம் இருக்குமா? ஒருவேளை இருந்து விட்டால்… பேட்டி கை மாறியாக வேண்டிய நிர்ப்பந்தம் முளைத்தால்…! முட்டை தனிமையாகி விடுமே! அதற்கு ஒரு தச்சனைக் கூப்பிட்டு இதேமாதிரி ஒரு பெட்டியை செய்யச்சொல்ல வேண்டும். உயர்ந்து கொண்டிருக்கிற இந்த வீட்டிற்கு வேலை செய்த தச்சன் நினைவுக்கு வந்தான். ஆனால் அவனைக் கூப்பிட மனமில்லை. சுத்த ஏமாற்றுப் பேர்வழி. ஃப்ராட். பொய்பில்கள் காட்டியே கணக்கில் கறந்திருக்கிறான். அவன் விழுங்கிய விழுங்கலுக்கு அளவே இல்லை. அந்தத் தச்சனை அறிமுகப் படுத்திய வீட்டு ஓனரை அணுகி வேறு சிறந்த தச்சனைச் சொல்லச் சொன்னபோது, அவர் கொடுத்த நான்குவரி விலாசத்தில் ஒரு தமிழ் மருத்துவர் இருந்தார். கண்ணை இடுக்கிக்கொண்டு அவர் பார்த்த பார்வை அவருக்கும் தச்சு வேலைக்கும் ஸ்நானப்
பிராப்தி கூட இல்லை எனக் காட்டியது. ஆனால் அவர் தனக்கொரு தச்சனைத் தெரியும் என்றார். மரக் கடைசல் வேலைகளில் வல்லவனான அவன் விலாசத்தைத் தேடி திருவல்லிக்கேணி சந்து பொந்துகளில் எல்லாம் அலைந்தது தான் மிச்சம். தச்சன் கிட்டவில்லை. கால்கள் வலி கண்டன. சிறிதுநேரம் கடற்கரையில் உட்கார்ந்து செல்லும் பிரயாசையோடு கடற்கரை மணலில் கால் பதித்தேன். கடற்கரையில் நிறையப் பேர் எதையோ தேடிக் கொண்டிருந்தனர். எல்லோரும் ஒருசேர எதைத் தவற விட்டிருப்பார்கள். தெரியவில்லை. ஆனால் தேடும் பணியில் இருப்பது சுவாரஸ்யமாக இருந்தது அவர்களிடம், “நீங்கள் எதைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்கத் தோன்றவில்லை. தேடும் மனிதர்களில் ஒருவன் தீவிரமாகத் தேடிக்கொண்டு நீரின் மிக அருகே சென்றுவிட்டான். பெரிய அலை அவனைக் குளிப்பாட்டிச் சென்றது. கீழே தடுமாறி விழவிருந்த அவனைத் தாங்கிப் பிடித்துக்கொள்ள வேண்டியதாயிற்று. அவன் தன்னைத் தச்சன் என்று சொல்லிக் கொண்டான். முட்டை, பெட்டி பற்றி அவனிடம் விளக்கினேன். கணம் கூடத் தாமதிக்காமல் தேடுவதை நிறுத்திவிட்டு வந்து பெட்டியைப் பார்வையிட்டான். முட்டை அவனை மிகவும் ஈர்த்தது. அதன் வழுவழுப்பைத் தொட்டுப் பார்த்தான். மிகவும் மிருதுவாக இருப்பதாகச் சொன்னான். கூடவே அவ்வித வண்ணமிகு வேலைப்பாடுமிக்க பெட்டியைச் செய்ய முப்பதாயிரம் ரூபாய் ஆகும், ஆனால் அவ்வித பெட்டியைச் செய்ய தனக்குத் தெரியாது என்று சொல்லிக்கொண்டே மீண்டும் முட்டையைத் தடவிக் கொடுத்தான். திடீரென்று அத்தச்சன் அந்த முட்டையை விலைக்குக் கேட்டான். நான் தருவதாக இல்லை என்று சொன்னவுடன் தன்னை மீண்டும் கடற்கரையிலேயே விட்டுவிடச் சொன்னான். கூடவே தன் கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டான். மீண்டும் கடற்கரைக்கு வந்தடைந்தோம். இன்னும் நிறையப் பேர் எதையோ தேடிக் கொண்டிருந்தனர். தேடுபவர்களிடையே உற்றுநோக்கிக் கொண் டிருந்தேன். அவர்கள் தேடுகிற பொருள் இந்த முட்டைக்குள் ஒளிந்திருக்குமோ! முட்டை பெட்டிக்குள் இருக்கும் வரை எல்லோரும் தேடிக் கொண்டுதான் இருப்பார்களோ…! கூடச் சேர்ந்து தேட மனமின்றி கால்புதைய மணலில் நடக்க ஆரம்பித்த பொழுது ஓடிவந்து “அப்பா!” என்றுக் கட்டிக் கொண்டது ஒரு குழந்தை.
“அப்பாவா…?” சிறிய அதிர்ச்சி. அப்பா ஆனது எப்போது? ஓடிவந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டேன். அக்குழந்தையைத் தேடிக் கொண்டு ஒரு பெண் வந்தாள். அவள் தான் குழந்தைக்கு உரியவள் என்று தெரிந்தது.
குழந்தை ஏதாவது தவறாகப் பேசியிருந்தால் “சாரி மன்னித்துவிடுங்கள்.”
‘அதெல்லாம் இருக்கட்டும். குழந்தை ஏன் இப்படி ஓடி வந்து அப்பா என்று அழைத்தது.’
அதற்கு விடை இங்கு சொல்ல முடியாது. தெரிந்து கொள்ள வேண்டுமானால் நீங்கள் என் வீட்டிற்கு வர வேண்டும். இல்லையெனில் நான் உங்கள் வீட்டிற்கு வர வேண்டும்”
முட்டையின் ரகசியம் போல் ஒரு ஆவல் தலை தூக்கியது. இது அப்பாவின் ரகசியம்.
‘உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் நானே உங்கள் வீட்டிற்கு வருகிறேன்.”
அப்பெண்மணி தன் வீட்டிற்குச் செல்வதற்கு முன்னால் பெட்டியில் அடைபட்டிருந்த முட்டையைக் காண விழைந்தாள். தேரில் வந்து கண்டாள். மெல்ல தடவிப் பார்த்தாள். குழந்தையும் தொட்டுப் பார்த்தது. பெட்டியின் இருபக்கமும் தொங்கிய பித்தளைக் கைப்பிடிகள் அவளை ஈர்த்தது. பூட்டு தொங்கவிடப் படுகிற பித்தளை நாக்கு குழந்தைக்குப் பிடித்திருந்தது. சுமக்கும் சக்தி பெண்ணுக்கு இருக்கிறது. முட்டை ஆணா? பெண்ணா? முட்டையைக் கண்டு கிறங்கிய மனதோடு வீட்டையும் சுற்றிப் பார்த்தாள். தனி கடவுள் அறை. பெரிய அளவில் வெங்கடாஜலபதி படம், அதன் தலையில் ஒரு முழ பூ. பெட்ரூமில் ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம். திருமணத்திற்கு முன்பு எடுத்ததா? பெண்ணிடம் இருந்து அந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. அவளும் என்னிடமிருந்து பதிலை எதிர்பார்க்காமல் பாத்ரூம் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள், உள்ளே ப்ரா தொங்கிக் கொண்டிருந்தது. ப்ராவையும் சுவரையும் இணைத்து சிலந்தி வலை பின்னிக் கொண்டிருந்தது.
இந்த ப்ரா யாருடையது. ஆணிடமிருந்து பதில் இல்லை. அப்பெண்மணி மீண்டும் பெட்ரூமிற்கு வந்து பீரோவை
உரிமையுடன் திறந்து பார்த்தாள். ஏதோ ஒரு பொறுப்பான ஜீவன் பொருள்களையும் துணிமணிகளையும் நேர்த்தியுடன் அடுக்கி வைத்திருந்தது. கூடவே வாசனைக்காக காலி ஊதுவத்திப் பெட்டிகள் நிறைய வீசப்பட்டிருந்தது. குழந்தை அந்தப் பல வர்ண ஊதுவத்திப் பெட்டிகளை விளையாடக் கேட்டது. குழந்தை உரிமையுடன் அவற்றைப் பெற்றுக்கொண்டது. மீண்டும் அப்பெண் பெட்ரூமிற்குள் சென்று அந்த சொகுசு மெத்தையில் ஹாயாகப் படுத்துக்கொண்டாள். சிறிது நேரத்தில் உறங்கி விட்டாள். குழந்தை சோபாவில் உட்கார்ந்தபடியே முட்டையை உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. திடீரென்று குழந்தை ஐஸ் வாட்டர் கேட்டது. பிரிட்ஜிலிருந்து எடுத்துக் குடித்தது. “ரொம்ப ஜில்….!” – ஓடிவந்து மடியில் உட்கார்ந்து கொண்டது. அக்குழந்தையிடம், “நீ எந்த ஸ்கூல் படிக்கிற …. எத்தனாவது படிக்கற… எங்க ஒரு ரைம் சொல்லு….” என்றெல்லாம் பேசத் தோன்றவில்லை. மாறாக, ‘நீ ஏன் என்னை அப்பா என்று கூப்பிட்டாய்” என்ற கேள்விக்கு ‘நான் ஏன் அப்படிக் கூப்பிடக் கூடாது” என்று திரும்பியது. ஒரு நிமிடம் குழப்பம். பதில் சொல்ல வில்லை.
சரி! சரி! நீ எப்படி வேணுன்னாலும் கூப்பிடு. போய் மம்மி எந்திரிச்சாச்சா பாரு.”
“மம்மியா…! அவங்க என் ஆன்ட்டி” – மீண்டும் குழப்பம்.
ஆன்ட்டிக்கு விழிப்பு தட்டியதும், அவள் அல்ல, “அவள்கனவு’ பேச ஆரம்பித்தது… தான் இந்த முட்டைக்குள் ஒளிந்து கொண்டு இருப்பதாக கனவு சொன்னது. ஏராளமான ஆண்களுடன் கைகோர்த்துச் செல்லப் பிடிக்காமல் தான் முட்டைக்குள் தஞ்சம் புகுந்ததாகவும், தன் வட துருவத்தில் ஒரு ஆணும், தென் துரு வத்தில் ஒரு பெண்ணும் இணைந்து தனக்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாகவும் சொன்னது. ஆனால் அந்த ஆணும் பெண்ணும் தங்கள் விருப்பங்களின்படி, ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் வாழ கனவுகண்டு கொண்டிருந்தனர். இந்தக்கனவு தான் ஆன்ட்டியைக் கார் ஓட்ட வைத்தது, விதவிதமான உடைகள் அணியச் செய்தது. புஸ்தக மலைகளின் படிக்கட்டுக்களில் ஏற வைத்தது. குதிரையேற்றம் பயிலச் சொன்னது. கேள்விகளால் மனதில் ஆழம் காணும் உத்தியைக் கற்றுக் கொடுத்தது. எண்ணங்களின் விளிம்பில் எப்பொழுதும் ஒரு தென்பு நிழலாடியது. அந்தத் தென்பு ஆன்ட்டியை குதிரையேற்றம், ட்ரெக்கிங் அனைத்தையும் பழக வைத்தது. குதிரையேற்றம் சொல்லித் தந்த அந்த நிபுணனுக்கு வயது ஐம்பது இருக்கும். அவனுக்கு திடீரென ஆன்ட்டியை மணம் புரியும் அவா புகுந்து கொண்டது. அந்தக் கிழத்தின் விபரீத அவாவைக் கேள்வியுற்றதும், முதலில் உங்களோடு சிறிது காலம் வாழ்ந்து பார்க்கப் போவதாகவும் ஒத்துப்போனால் பிறகு மணம் பற்றி யோசிக்கலாம் என்றாள் ஆன்ட்டி. ஆன்ட்டி அந்தக் கிழத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். கிழம் கணவர் என்ற பட்டத்தை மிகவும் நேசித்தது. ஒருமுறை அது தன் நண்பர்களுக்கு ஆன்ட்டியை “ஷி இஸ் மை ஒய்ஃப்” என்று அறிமுகப்படுத்தி வைத்தது. அன்றோடு கிழத்துடன் வெளியில் செல்வதை நிறுத்திக் கொண்டாள் ஆன்ட்டி.
முட்டையைப் பிரிய மனமின்றி குழந்தை ஓடிப்போய்க் காரில் ஏறிக் கொண்டது. ஆன்ட்டி காரை இலகுவாகச் செலுத்த அது நகர்ந்து மறைந்தது. கார் புறப்படும் போது எந்த அழைப்பும் ஆன்ட்டியிடமிருந்து இல்லாததால் கையசைப்போடு நிறுத்திக் கொண்டேன். உள்ளே தொலைபேசி அலறியது. அவசர அவசர மாகச் சென்று காதில் வைத்தேன். அது ஒரு க்ராஸ்டாக்.
ஏதோ ஒரு முதலாளி தன் ஊழியரை வெளுத்துக் கொண்டிருந்தார், பாவம் அந்த ஊழியர். அவ்வளவு வசவையும் வாங்கிக்கொண்டு, தான் ஒரு மணி நேரம் முன்பாகப் புறப்பட அனுமதி கேட்டார். என் நண்பனுடன் போய் ஒரு அதிசய முட்டையையும், வசீகரமான பெட்டியையும் காணப் போவதாகவும் அதற்காக இரண்டு மணி நேரத்திற்கு மேல் பயணம் கொள்ள நேரிடும் என்றும் விளக்கிச் சொல்லி அனுமதி கேட்டுக் கொண்டிருந்தார் அந்த ஊழியர். யார் அந்த நண்பன்! அறியப் படாத, ஆனால் முட்டையை அறிந்த அந்த நண்பன் யார்? நிழலான அந்த நண்பனை அறியும் ஆவலோடு நண்பனுக்காக நான் காத்திருந்த வேளையில், அந்தக் குழந்தை முட்டையின் மேல் ஏதோ கிறுக்கி யிருப்பது தெரிந்தது. அது ஒரு முகவரி போல் இருந்தது. c/o கடவுள்? என்ன உளறல் இது? அந்த எழுத்தை அழிக்க முற்பட்ட போது அது அழியவில்லை. காத்திருப்பில் மெளனம் அமிழ்ந்தது.
யாராவது வந்து கதவைத் தட்ட மாட்டார்களா? கதவுகள் திறக்கத் திறக்க மூடிய கதவொன்று இருந்து கொண்டே இருந்தது. தட்டுங்கள் திறக்கப்படும். அசரீரி கேட்டுக் கொண்டிருந்தது. நிறையப் பேர் தட்டிக் கொண்டிருந்தார்கள். நண்பனே வா! வந்து கதவைத் தட்டு! முட்டையை அறிந்த உன்னைக் காண வேண்டும். நண்பன் வரவில்லை. ஆனால் அந்த டெலிபோன் நண்பன் முட்டையை தேடி நடந்து கொண்டிருந்தான்.
வழியில் தச்சன், மாயக்காரன், ஆன்ட்டி, குழந்தை, குதிரைக்காரன், காதலன், காதலி ஒருவரை விடாமல் எல்லோரையும் சந்தித்தான். ஆனால் முட்டையை அவன் காண முடியவில்லை. ஏழு கடல், ஏழு மலை தாண்டி ஒரு குகைக்குள் உள்ள கண்ணாடிக் குடுவைக்குள் அடைபட்டிருக்கும் வண்டிற்குள் ஒரு ராட்சஸனின் உயிர் இருக்க என்ன வாய்ப்பிருக்கிறது?
முட்டையை ராட்சஸனின் உயிராக உணர்ந்தான் நண்பன். மிக நீண்ட பயண அலைச்சலுக்குப் பின் அவன் முட்டையைக் காண நேர்ந்த போது, அது உடைப்பட்ட நிலையில் இருந்தது. முட்டை சிறுசிறு பெட்டிகளைக் குஞ்சு பொரித்திருந்தது. அச்சிறு பெட்டிகளுக்குள் என்ன இருக்கும்?
இருவாட்சி (டிசம்பர் – 2016)

One Comment on “எல். ரகோத்தமன் /கண்டடைதல்”
Comments are closed.