எல். ரகோத்தமன்/மரணித்த கைபேசி

இதே நாளில்தான் மூன்று வருடங்களுக்கு முன் ஜிலுவை சந்தித்தேன். அது ஒரு வெற்றிக் களிப்பில் மலர்ந்த நட்பின் தொடக்கம். அந்நட்பின் அடை யாளமாக ஒரு பரிசுப்பொருளை வாங்கியிருக்கிறேன். எப்படியோ என் மூளைக்குள் நுழைந்துவிட்ட ஜிலுவை இன்று சந்தித்தே ஆகவேண்டும். ரகசியமாக வாங்கிய பரிசுப் பொருள் (அதுவும் ரகசியம்) ஜிலுவின் கைக்குப் போகவேண்டும். ஜிலு அதைப்பார்த்து கண்ணகல வியக்க வேண்டும். அவ்விதமே ஒவ்வொரு வினாடியும் என்னுள் வியந்து கொண்டிருந்தாள் ஜிலு. மானசிகமாகக் குளிர்ந்தது மனம். அக்குளிர்ச்சியின் ஊடேயும் ஒரு பரபரப்பு. காரணம் இந்த கைபேசி. ‘எக்ஸ் ஒன்’ அதுதான் அதன் பெயர். சீனாக்காரன் தயாரிப்பை நம்பாதே என்று என் நண்பன் நிமல் பலமுறை சொன்னான். என் மூளை அதற்கு இணங்கி வேலை செய்யவில்லை. வெறும் இரண்டாயிரம் ரூபாய்க்கு இருபதாயிரம் ரூபாய்க்கான எல்லா சங்கதிகளும் இருப்பதாகச் சொன்ன புளுகில் சிறிதே மனம் மயங்கியதால் வந்த வினை! எந்த ஒரு எக்ஸ்ரேக்கும் பிடி கொடுக்காமல்
மௌனம் காத்தது ‘எக்ஸ் ஒன்’. என்ன ஆயிற்று இந்தச் சனியனுக்கு… காலையிலிருந்து யாருடனும் தொடர்புகொள்ள முடியவில்லை. எந்த அழைப்பும் வரவில்லை. ஏதோ அவஸ்தை. கை துருதுருக்க ஒரு பரபரப்பு.
ஜிலுவை எப்படித் தொடர்பு கொள்வது… ஜிலுவின் அழைப்பு எத்தனை வந்திருக்கும் இதுவரை… மனம் தவித்தது. என்ன பிரயோஜனம். பாழாய்ப்போன மூளை வெள்ளைக் காகிதமாய் இருக்கிறதே. எல்லாவற்றையும் விழுங்கிவிட்டு கப்சிப் கந்தசாமியாக இருக்கிறதே இந்த ‘எக்ஸ் ஒன்’. சனியனை என்ன செய்யலாம்? தலைசுற்றி எறிய வேண்டியதுதான். ஆனால் அதுவல்ல இப்பொழுது முக்கியம். ஜிலுவைத் தொடர்புகொள்ள வேண்டும். அதற்குக் கைபேசி எண் வேண்டும். மனம் கடைசி மூன்று எண்களை மட்டும் மீண்டும் மீண்டும் எழுதிப் பார்த்து சோர்ந்து போனது. கைபேசியின் உள்ளே உள்ள காலேயரைக்கால் அளவுள்ள வஸ்துவைக் கழற்றி வேறு ஒரு கைபேசியில் போட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும். சுலபமான வேலைதான். ஆனால் அதற்கும் நூறுவகை முட்டுக்கட்டைகள். என் தங்கையை அணுகலாம் என்றால் அது எங்கோ ஏதோ ஓர் சுற்றுலா மையத்தில் இன்று நண்பர்களோடு சுற்றிக் கொண்டிருக்கும். அவள்வர இரவு எட்டுமணி ஆகும். அப்பா தன் கைபேசியைத் தொலைத்துவிட்டு இரண்டு வாரமாக ஏதோ ஓட்டிக் கொண்டிருக்கிறார். பஸ்ஸில் எவனோ நவுட்டிவிட்டான். அம்மாவுக்கு இந்த கைபேசி-உலகம் இன்னும் பிடிபடவில்லை. அவளுக்காகவே தரைவழித் தொடர்பு இப்போதும் நீடித்துக் கொண்டிருக்கிறது. இன்று அலுவலக நாளாக இருந்திருந்தால் ‘எகஸ் ஒன்’ பிரச்சனைக்கு வழி பிறந்திருக்கும். ஆனால் இன்று ஞாயிற்றுக்கிழமை. வார விடுமுறை.
ஒரு உயிருள்ள கைபேசியை எங்கே போய்ப் பிடிப்பது. நண்பன் நிமலை அணுகலாம். மனதில் தயக்கம். அது அவ்வளவு எளிதல்ல. அவன் ஒரு ஊர்சுற்றி. நம்பிப் போக முடியாது. ஒரு ஷேர் ஆட்டோ, ரயில், பஸ் என்று ஏறி இறங்கியபின் உள்ளே ஒரு பத்துநிமிடம் நடந்து சென்று பிரம்மப் பிரயத்தனம் கொள்ள வேண்டும். மேலும் போய்ச்சேர இரண்டரை மணிநேரம் ஆகும். அவ்வளவு தூரம் கடக்க பைக்கைப் பயன்படுத்தலாம். ஆனால் அதற்கு என் பைக் தாங்காது. முன்னறிவிப்பின்றிச் செல்வது
மகா ரிஸ்க். அதை எடுக்க மனம் ஒப்பவில்லை. வேறு என்னதான் செய்வது. ஜிலுவைப் பார்க்க வேண்டும். எங்கே சந்திப்பது என்று உறுதி செய்துகொண்டு செல்லவேண்டும். பரிசுப் பொருளைக் கொடுக்க வேண்டும்…
இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே சட்டென்று அந்த சேட்டு இளைஞன் மனதில் வந்து போனான். அவன் அடுத்த தெருவில் ரீசார்ஜ் கடை வைத்திருக்கிறான். தொடர்ந்து அவனிடத்தில் தான் என் கைபேசிக்குத் தீனி போட்டுக் கொண்டிருக்கிறேன். என்னிடத்தில் அவன் எப்பொழுதும் முகமலர்ந்து பேசுவான். சமயங்களில் குசலம் விசாரிப்பான். அவனது அரைகுறை தமிழ் உச்சரிப்பு கேட்க நன்றாகவே இருக்கும். அவனை அணுகினால் தன் கைபேசியை இரவல் கொடுப்பான். ஐந்து நிமிடத்தில் பிரச்சனை தீர அமோக வாய்ப்பு எதிரில் மின்னியது. சிறிதும் தாமதியாமல் சரசரவென்று ஒரு சட்டையை மாட்டிக்கொண்டு தங்கையின் மிதிவண்டியில் விரைந்தேன் கடையை நோக்கி… கடை பூட்டியிருந்தது. அதைக் கண்டவுடன் மனம் வெறுத்துவிட்டது. இன்று ஏன் இப்படி எல்லாக் கதவுகளும் சதிசெய்து மூடிக் கொள்கின்றன. நான் ஜிலுவை சந்திப்பது இந்த இயற்கைக்குப் பிடிக்கவில்லையா?
உள்ளேயிருந்து அம்மாவின் குரல். என்னைத்தான் அழைக்கிறாள். அழைத்துக்கொண்டே இருந்தாள். கவனம் செலுத்த விருப்பமின்றி வாளாவிருந்தேன். நொடிகளைக் கடத்தினேன். அம்மா விடுவதாக இல்லை. நானும் கண்டு கொள்வதாக இல்லை. கூவிக்கொண்டே என் அருகில் வந்து விட்டாள். வேறு வழியின்றி ‘ஏம்மா இப்படிக் கத்தறே` என்று பொங்கினேன்.
‘செவிடன் மாதிரிப் பராக்கு பார்த்துட்டு இருந்தா கத்தாம என்ன செய்ய முடியும்.’
‘சரி! என்ன வேணும் உனக்கு?’
‘நீ ஏன் காலைலயிருந்து ஏதோ பறிகொடுத்த மாதிரித் தவிச்சிக்கிட்டு இருக்கே?’
‘என் ஃபோன் வேலை செய்யல, முக்கியமான ஃபோன் ஒண்ணு பண்ணணும்.’
‘லேண்ட்லைன்ல பண்ணேன்?’
‘நம்பர் தெரியல. எல்லாம் இந்த ஃபோனுக்குள்ளே இருக்கு. சனியன் கப்சிப்னு சாதனை பண்றது.’
‘ஏன் நம்பர எழுதிவச்சிக்கலையா?’
‘அம்மா கொஞ்சம் சும்மா இருக்கியா. அந்த எழவெல்லாம் செஞ்சிருந்தா இப்ப இந்தப் பிரச்சனையே இல்லையே…’
‘நீயாச்சி உன் ஃபோன் ஆச்சி… நான் சொல்லவந்த விஷயம் வேற…’
‘என்ன சொல்லு.’
‘நம்ம ஜோஸியர் வந்துருந்தார். உன் ஜாதகத்ல தோஷம் இருக்காம். அதனாலதான் உன் கல்யாணம் தள்ளிப் போறதாச் சொன்னார். அதுக்குப் பரிகாரமா மேற்கு பார்த்த பிள்ளையாருக்கு பன்னன்டு வாரம் பிரதி செவ்வாய்க்கிழமை ஒரு சிதறு தேங்கா உடச்சி அர்ச்சனை பண்ணச் சொல்லிருக்கார்…’
‘இந்தக் கடமைய எல்லாம் நீயே பாத்துக்கோ. என்ன விட்ரு…’ என்று சொல்லிவிட்டு என் அறைக்குச் சென்று விட்டேன்.
எனக்குத் தெரியும் அம்மா என்ன பேசுவாள் என்று. அம்மாவுக்கு இப்போதைய என் மனச்சூழல் தெரியாது. அதைப் புரிந்து கொள்ளாமல் ஜோஸ்யம் அது இது என்று பேசியது எரிச்சலாக இருந்தது. என் ஜாதகம் தோஷ ஜாதகம் என்று அநேகமாக எல்லா ஜோஸியனும் சொல்லிவிட்டான். அன்றிலிருந்து ஒரே அளப்பரி வீட்டில். போதாக்குறைக்கு ஜோஸ்யன் எனக்குக் கல்யாணம் ஆனால்தான் என் தங்கைக்குக் கல்யாணம் ஆகும் என்று சொல்லி விட்டதால் அம்மாவிற்கு ஒரே கவலை. தோஷ ஜாதகத்திற்கு எப்போது கல்யாணம் ஆவது எப்போது பெண்ணைக் கரையேற்றுவது, கவலையே வாழ்க்கை. இதில் அப்பா தனி ரகம். எல்லாம் அவங்க அவங்க தலையெழுத்துப் படிதான் நடக்கும் என்ற புள்ளியோடு நின்று விடுவார். நான் நினைத்தது போலவே அம்மா கொஞ்ச நேரம் பேசிவிட்டு மௌனமாகிவிட்டாள். என் மனம் மீண்டும் ஜிலுவைத் தீண்டியது. பாக்கட்டில் இருந்த கைபேசியைப் பார்த்துக் குமுறியது மனம். தப்பித்தவறி கூட ஒளிர மறுத்தது. கைக்கெட்டாத அந்த ‘திறந்திடு
சீஸே’ மந்திரம் எங்கே ஒளிந்திருக்கிறது. திடீரென்று மூளையில் ஒரு விஷயம் உதித்தது. அது தான் கடன் அட்டை.
ஒரு வங்கிக்காரன் விடாப்பிடியாகத் துரத்தி துரத்தி மூளையை சலவை செய்து தலையில் கட்டிய ‘கடன் அட்டை’ மூன்று மாதமாக உபயோகப் படுத்தாமல் பீரோவில் தூங்குகிறது. இந்தக் கடன் அட்டையைப் பயன்படுத்தி ஒரு புதிய கைபேசியை வாங்க எண்ணங்கள் ஆசையின் விளிம்பில் நின்று உபாயம் சொன்னது. வேறு வழியின்றி மனம் அதற்குப் பணிந்தது. உடனே மடிகணினியைத் திறந்து இணையதளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கைபேசி வகைகளை ஆராய்ந்தேன். ஏராளமான வண்ணங்களில் கைபேசியின் வரிசை நீண்டது. எதை விடுப்பது எதை வாங்குவது? முடிவுக்கு வர முடியவில்லை. ஒன்றைவிட ஒன்று சிறப்பாக இருந்தது. விலையும் அதைவிட சிறப்பாக இருந்தது. கைபேசியின் ரகங்களையும், நுணுக்கங்களையும் ஆராய்வதில் நேரம் கடந்து கொண்டிருந்தது. எதை வாங்குவது என்பதில் குழப்பம். மிதமான பட்ஜெட்டில் நான்கைந்து ரகங்களைக் காகிதத்தில் குறித்துக் கொண்டேன். கூடவே இரண்டு நாட்களுக்கு முந்தய நாளிதழில் இருபக்க, கைபேசி விற்பனை விளம்பரத்தை, ஒரு பிரபல நிறுவனம் ஏராளமான சலுகைகளுடன் வெளியிட்டிருந்தது நினைவுக்கு வந்தது. உள்ளேசென்று அந்த பத்திரிக்கையைத் தேடிப்பிடித்தேன். ஆனால் அந்த விளம்பரப் பக்கங்கள் காணாமல் போயிருந்தன. மீண்டும் எரிச்சல். மளமளவென்று உள்ளேசென்று அம்மாவை அழைத்தேன்.
’ஏன்டா கத்தறே’ என்று விருட்டென்று திரும்பிப் பார்த்தாள். நாளிதழில் இருந்த விளம்பரப் பக்கத்தைப் பற்றிக் கேட்டேன்.
‘வெறும் அட்வர்டைஸ்மென்ட் தானேன்னு நான் தான் மாவு சலிக்க எடுத்துக்கிட்டேன்.’
ஒன்றும் செய்ய முடியவில்லை. அம்மா ஆயிற்றே. இன்று எனக்கு நேரம் சரியில்லை. சுவர்க் கடிகாரத்தில் மணி பார்த்தேன். மாலை மணி ஐந்து என்று கண்டவுடன் மனம் வேகம் கொண்டது. நேரே ஜிலுவின் வீட்டிற்கே சென்று அந்தப் பரிசுப் பொருளைக் கொடுக்க உட்குரல் ஆணையிட்டது. அவசர அவசரமாக உடைமாற்றிக் கொண்டு எங்கே போகிறேன் என்று சொல்லிக் கொள்ளாமல் கிளம்பினேன். இரவு வர நேரமாகும் என்பதை மட்டும் அம்மாவிடம் சொன்னேன். ஜிலுவின் வீடு நகரின் வெளிப்பகுதியில் பன்னடுக்குக் குடியிருப்பில் இருக்கிறது. ஒருமுறை கூடப் போனதில்லை. இரண்டுமுறை அவளை வீட்டருகில் இறக்கி விட்டிருக்கிறேன். அவ்வளவுதான். அப்போது ‘எஸ் 10/6 ‘ என்று தன் வீட்டின் இலக்க எண்ணைச் சொல்லியது மனதில் பதிந்திருந்தது. நினைவில் விரிந்த வழித்தடத்துடன் ஜிலுவைக் காண இருசக்கர வாகனத்தில் பரிசுப் பொருளுடன் விரைந்தேன்.
ஹாய்! என் பெயர் நிமல். நான் ‘ஜெயஸிம்மா’ என்கிற ‘ஜெய்‘ யின் நண்பன். ஜெய்யைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். நீங்களும் தெரிந்துகொள்ள வேண்டும். ஜெய் ஒரு கேரம் பித்து. டோர்னமென்ட் விளையாடுகிற தென்பு அவன் முகத்தில் தெரியும். கொஞ்சம் வெற்றியின் கொம்பும் முளைத் திருக்கும். கேரம் பற்றிப் பேச ஆரம்பித்தால் அக்கொம்புகள் தானாக வெளிப்படும். சில வருடங்களுக்கு முன் ஜெய்யுடன் ஒரு டோர்னமென்ட் செல்லும் வாய்ப்பு கிட்டியது. அப்போட்டியில் அவன் சென்ட்டம் அடித்த வீரத்தைக் காண நேர்ந்தது. அன்று அவன் அடைந்த பரவசத்திற்கு அளவேயில்லை. பரவசம் அடைந்தது அவன் மட்டுமல்ல. கூடியிருந்த மொத்த ரசிகக் கூட்டமும் தான். திரளுடன் கை குலுக்கி மாளவில்லை. உற் சாகத்தின் விளிம்பில் மனம் மிதப்பதை அவன் கண்களில் பார்த்தேன். கூடவே இன்னொரு பெருமிதமும் அங்கே அரங் கேறியது. அவன் சென்ட்டம் அடித்த அற்புதத்தை கவனித்துக் கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவி ‘ஸ்பெளின்டிட் கேம்’ என்று ஜெய்யுடன் கை குலுக்கி சுய அறிமுகம் செய்து கொண்டாள். நல்ல உயரம். மலர்ந்த முகம். தெளிந்த பார்வை. கழுத்தை அலங்கரித்த ஒற்றைச் சங்கிலி அவள் அழகை மேலும் பறை சாற்றியது. ஜெய் இப்படியொரு பெண்ணின் சந்திப்பை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அந்நேரத்தில் ஜெய்யிடம் ‘நீரின் மேல் நடக்க முடியுமா?’ என்று கேட்டிருந்தால் ‘முடியும்’ என்று சொல்லிருப்பான். நீண்ட நேரம் அம்மாணவியும் ஜெய்யும் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் அவன் நண்பர்கள் சிலரிடம் என்னென்னவோ பேசி நின்றேன். நேரம் கடந்து கொண்டிருக்கவே நண்பர்களை விடுத்து ஜெய்யின் அருகே சென்றேன். என்னை அவன் கவனிக்கவில்லை. அம்மாணவியும் அவனும் மும்முரமாகப் பேசிக்கொண்டிருந்தனர், அவர்களின் பேச்சை தடை செய்ய விருப்பம் இல்லை. சற்றே ஒதுங்கி நின்று கொண்டேன். பேச்சு காதில் விழுந்து கொண்டிருந்தது. முன்பு பார்த்த டோர்ன மென்ட்டுகளின் சுவைகள் அவர்களிடையே ஊடாடியிருந்தது. கேரம் விளையாட்டின் நுணுக்கங்களை அம்மாணவி கூர்மையுடன் அறிந்திருப்பது அவ்வப்போது தெறித்து விழுந்தது. அதைக்கண்டு என்னால் உள்ளூர வியக்காமல் இருக்க முடியவில்லை. ஒரு சிறந்த விளையாட்டுப் பிரியையுடன் பேசிக்கொண்டிருக்கிற சந்தோஷம் ஜெய்யின் நரம்பெங்கும் ஓடியது. அது ஒத்த மனதுடன் சங்கமித்திருக்கிற மகிழ்ச்சி. அம்மாணவிடம் தயக்கம் இல்லை. ஒரு புதிய இளைஞனுடன் பேசிக்கொண்டிருக்கிற நினைப்பில்லை. குரலிலும் பார்வையிலும் தெளிவான மனம். அறிவின் தளத்தில் நீயும் நானும் ஒன்று தான் என்ற சகஜம், ஜெய்யை நினைக்கும் போதெல்லாம் டோர்னமென்ட் ஞாபகம் வரும். டோர்னமென்ட் என்றால் அவன் சென்ட்டம் முன்னே ஓடிவரும். சென்ட்டத்தின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு அம்மாணவியும் உடன் வருவாள். அவள் பெயர் விஜயலஷ்மி. விஜயலஷ்மிக்கு ஜெய் சூட்டியிருக்கும் செல்லப் பெயர் ‘ஜிலு’. அது என்ன ஜிலுவோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!
ஜெய்யின் கைபேசி அழைப்பிற்காக ஆவலுடன் காத்திருந் தேன். ‘ஏன் இந்த கிறுக்கனிடமிருந்து இன்று ஒரு கைபேசி அழைப்பு கூட வரவில்லை. தேவையில்லாமல் ஒரு நாளைக்குப் பத்துமுறை பேசிக் கலாய்க்கிற ஜாதி ஒருமுறை கூட அழைக்க வில்லையே இன்று. இந்தக் கிறுக்கனுக்கு என்ன ஆயிற்று. ஏன் இப்படி கைபேசியை அணைத்து வைத்துக் கழுத்தறுக்கிறான்…
இன்று அவனுக்கு ஒரு ஸர்ப்ரைஸ் கொடுக்க எண்ணி ஒரு திட்டம் வைத்திருந்தேன். இன்று என் அப்பாஅம்மாவின் மணநாள். முப்பது வருடம் வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்க்கை. ஒரு நீண்ட பயணம். இணைந்தே நடந்த அற்புதம். அதைக் கொண்டாடும் விதத்தில் அப்பா இன்று ஹோட்டல் மதுராவில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் அவ்விருந்தில் கலந்து கொள்ள இவனை அழைத்து அறிமுகப்படுத்தி இவனுடனான நட்பை நிரந்தர நட்பாக மாற்றிக்கொள்ளும் அவாவினை முன்மொழிய மனதின் விளிம்பில் காத்திருந்தது இனந்தெரியாத் ஒரு சந்தோஷக் கீற்று. இல்லை அது ஒரு இனந்தெரியாத துடிப்பு.
அதெல்லாம் சரி, இப்போது எப்படி இவனைத் தொடர்பு கொள்வது. இத்தனை நாள் பழக்கத்தில் எப்படி இக்கிறுக்கனின் தரைவழித் தொலைபேசி எண்ணை வாங்கிக்கொள்ளாமல் இருந்தேன்! ஸர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே முன்கூட்டி சொல்லாமல் விட்ட டது ஒரு தவறா? ஒருகாரியம் செய்ய எடுக்கும் முடிவு சரியா தவறா என்று அக்காரியம் செய்யும்போது தெரியாமல் போய்விடுகிறது. யாருக்குத் தெரியும் இப்படி இவன் கைபேசியை அணைத்து வைத்து என்னைத் தவிக்க விடுவான் என்று. நாம் ஒரு திட்டம் போட்டால் அதல்லாமல் எதிர்பாராத வேறேதோ ஒன்று நடக்கிறது. இக்கிறுக்கனின் நண்பன் நிமலின் எண்ணிற்குத் தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னேன். நெகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் சொன்னான். நன்றியுடன் பெற்றுக்கொண்டு ‘ப்ளீஸ் ட்ரை ஹிம்’ என்றேன். ஒரு பத்து நிமிடத்தில் மீண்டும் தொடர்பு கொண்டு அவனும் இக்கிறுக்கனின் கைபேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னான். தேங்ஸ் சொல்லி அவனையும் விருந்துக்கு அழைத்தேன். அப்படியே அவனிடம் இவன் வீட்டுத் தரைவழி எண்ணைக் கேட்டேன். தெரியாது என்றான். வேறு வழியில்லை, நேரே இவன் வீட்டிற்குச் சென்று அழைத்துவர வேண்டியதுதான். முகவரி? அதுவும் ஒரு இடஞ்சல் தான். மீண்டும் நிமலைத் தொடர்புகொண்டு இவன் முகவரியைக் கேட்டேன். ஏகதேசமாக முகவரி என்று ஒன்றைச் சொன்னான். கூடவே வழியும் சொன்னான். நேரில் போகாமல் இவனை எப்படிப் பிடிப்பது? யோசித்து யோசித்து மூளை அலுத்தது.
ஒரு வழியாக மனதை திடமாக்கிக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் இவன் வீட்டிற்குப் போக முற்பட்டேன். ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்ய எத்தனித்த போது ‘சொட்’ ஒரு துளி விண்ணி லிருந்து விரல்முட்டியின் மேல் விழுந்தது. அந்த ஜில்லிப்பு உடலில் பரவி வானத்தை அண்ணாந்து பார்க்க வைத்தது. ஏராளமான கற்பனை உருவங்களைத் தீட்டிக்கொண்டு ஒரு ராட்சஸ ஓவியன் நகர்ந்து கொண்டிருந்தான் விண்ணில். அடர்ந்த கருமையின் வியாபிப்பு அழகாகவும் இருந்தது, பயமாகவும் இருந்தது. மழை வருமோ? உள்ளே ஒரு உதறல். அதை உதாசினப் படுத்திவிட்டு ஸ்கூட்டரைக் கிளப்பினேன் ஸீட்டிற்கு அடியில் ரெய்ன் கோட் இருக்கிற தைரியத்தில். ஜிலு நிச்சயமாக வீட்டில் தான் இருப்பாள். நம்பிக்கைக் கீற்றுடன் விரைந்து கொண்டிருந்த போது, லீவுநாளில் ஏன் இப்படி எடக்கு மடக்கான ட்ராஃபிக் நெரிசல்… என்ற மனதின் புலம்பல் செவியில் இடித்துக் கொண்டிருக்க சிக்னலில் தேங்க வேண்டியதாயிற்று. இன்னும் ஐந்தாறு கி.மீ. போனால்தான் ஜிலுவின் இல்லம், ஜிலு.. ப்ளீஸ் வெய்ட்.. ஐ ஆம் அரைவிங் – உளத்தூது காற்றில் கலக்கும் முன் நெற்றிப்பொட்டில் ஒரு துளி விழுந்து தெரித்தது. அத்துளி விண்ணைக் காண வைத்தது. அழுதுவிடுவேன் என்று பயமுறுத்தியது மேகத்திரள். சிக்னலில் விடுபடும் முன் தெரித்துவிழுந்த துளி துளித்துளியாய் விரிய ஆரம்பித்தது. அடடே.. இது என்ன சோதனை. ரெய்ன் கோட் கூட எடுத்து வரவில்லையே! நல்ல வேளை பரிசுப்பெட்டகம் பைக்கின் சைட் பாக்ஸில் பத்திரம். நிம்மதியாயிற்று மனம். வேகம் எடுக்க முயலும் முன் சாலையை ஜோ என்று ஆக்ரமித்துக் கொண்டது மழை. வேறு வழியின்றி ஒரு பஸ்நிறுத்தக் குடையின் கீழ் ஓரங்கட்டி ஒதுங்க வேண்டியதாயிற்று. நேரம் சரியில்லை யென்றால் சகலமும் சதி செய்யும் என்பார்கள். அது இதுதானா? ஆனால் இது சதியல்ல. சதியோ சதி! ஜிலுவைக் காணும் பதைப்புடன் சாலையில் பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தை வெறித்துப் பார்த்தபடி வாளாவிருந்தேன். மழை விடுவதாக இல்லை. அடித்துச் சாடியது. சாரலின் வீரியத்தில் உடை முழுதும் ஏறக்குறைய நனைந்து விட்டது. நிறுத்தத்தில் ஒரு பேருந்து வந்து நின்று சென்றது. பொத பொதவென இறங்கிய பயணிகளும் இணைந்துகொள்ள குடை நிழல் போதவில்லை. ஒருவர் ஈரத்தை ஒருவர் முகர்ந்த வண்ணம் இருபது நிமிடங்களுக்கு மேல் நிற்க வேண்டியதாயிற்று. பின் மெல்ல மழையின் வீரியம் குறைந்தது. சனியன் மழை இல்லையென்றால் இந்நேரம் எங்கள் சந்திப்பு நடந்திருக்கும். பரிசுப் பொருள் கை மாறியிருக்கும். நனைந்தது நனைந்தாகி விட்டது. இனி ‘என்ன ஒதுங்கல் வேண்டியிருக்கிறது. சவாரியைத் தொடரத் திட்டமிட்டேன். மீண்டும் சதி! பைக் ஸ்டார்ட் ஆகவில்லை. அதற்குள் ஜுரம் வந்துவிட்டது இந்த சனியனுக்கு. உதைத்து உதைத்து கால் வலிதான் மிச்சம். அருகில் நின்றிருந்த ஒரு இளைஞன் ஸ்டார்ட் செய்ய சில யோசனைகள் சொன்னான். ஆனால் அவன் உபாயத்தை என் யந்திரம் செவி மடுக்கவில்லை. உறுமி உறுமி அடங்கியது. என் கஷ்டத்தைக் கண்ட இன்னொருவர் “சார் கொஞ்சம் நில்லுங்க” என்று என்னை விலக்கி பைக்கைத் தன் பொறுப்பில் எடுத்து சில சிகிச்சைகள் அளித்ததில் மழை வைத்த சூனியத்திலிருந்து மீண்டது வாகனம். உதவிய கரங்களுக்கு ஒரு நன்றியை உதிர்த்துவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தேன் அந்த மழைச் சாலையில். ஜிலுவைக் காணவியலா அயர்வு சூடாக ஒரு கப் காபி குடிக்கக் கட்டளை யிட்டது. அதை மீற முடியாமல் வழியில் ஒரு ஹோட்டலின் முன் நிறுத்தினேன். நிறுத்திய பின் தான் உதித்தது மீண்டும் பைக் மக்கர் செய்தால்?… ஆதங்கம் தீர ஒரு முறை ஸ்டார்ட் செய்து பார்த்தேன். அப்பாடா.. இஞ்சின் உயிர் கொள்கிறது. நிம்மதியாக ஹோட்டலில் நுழைந்தேன். அப்போது என்னை இடித்துக் கொண்டு ஒரு இளைஞன் வெளியே இறங்கிச் சென்றான். “இடியட்..” என்று அவனை உள்ளூரத் திட்டிவிட்டு கைகுட்டையால் ஈரம் துடைத்தபடி ஒரு இருக்கையில் அமர்ந்தேன். சாவகாசமாக ஒரு சர்வர் வந்து உபசரித்தான். காபி மட்டும் ஆர்டர் செய்தேன். காத்திருந்த நேரத்தில் மணி பார்த்துக் கொண்டேன். ஆவிபறக்க வந்தது காபி. ஜிலு ஐ ஆம் நியரிங்… என்ற தூது காபியின் மணத்தில் கரைய சுவை கூடியது நாவில். பில்லை செலுத்திவிட்டு வெளியே வந்து பைக்கை உதைக்க ஆரம்பிக்கும் போது தான் கவனித்தேன் அந்த விபரீதத்தை. சைட் பாக்ஸை காணோம்!


இருவாட்சி (ஜனவரி – 2020)

எல். ரகோத்தமன் /கண்டடைதல் – விருட்சம் நாளிதழ்

2 Comments on “எல். ரகோத்தமன்/மரணித்த கைபேசி”

Comments are closed.