அழகியசிங்கர்/வகுப்பில் வரைந்த ஓவியம்

அவர்கள் இருவரையும் வரச் சொன்னார் வகுப்பு ஆசிரியர்.
அவர்களுக்குப் புரியவில்லை. ஏன் வரச் சொன்னார் என்று.
ஓய்வறையில் அவர்களைச் சந்தித்தார் வகுப்பாசிரியர்.
“உங்களுக்கு ஒரு குழந்தைதானா?”
“ஆமாம்.”
“வீட்டில் எப்படி இருப்பாள்”
“மற்றக் குழந்தைகள் மாதிரி இருப்பாள்”
“அவள் வகுப்பில் பாடங்களைக் கவனிப்பதற்குப் பதில் ஓவியங்களாக வரைந்து தள்ளுகிறாள். “
அவர்களுக்குத் திகைப்பாக இருந்தது வகுப்பாசிரியர் சொன்னதைக் கேட்டு.
“நான் தடுக்கவில்லை. அவள் ஆர்வத்தைத் தடுத்தா.. வேற மாதிரி போய்விடும்..”
“நாங்கள் கவனிக்கிறோம். வகுப்பில் ஓவியம் வரையக்கூடாது என்று சொல்கிறோம். “
“புரியும்படி சொல்லுங்கள். ஆனால் கண்டிக்காதீர்கள்”
“நிச்சயமாக.”
“முந்தாநாள் ஒரு ஓவியம் வரைஞ்சா..யாரை வரையறே? என்று கேட்டேன்.
‘உங்களைத்தான் டீச்சர்.’
அவள் வரைந்த என் ஓவியம் இதுதான்.”
நாங்கள் அந்த ஓவியத்தைப் பார்த்தோம். அந்த ஓவியம் டீச்சர் மாதிரி இல்லை.
“உங்களை மாதிரி இல்லையே..”
“நானும் அப்படித்தான் சொன்னேன். அதற்கு அவள் சொன்ன பதில் என்ன தெரியுமா?
சின்ன வயதில் நீங்க இப்படித்தான் இருந்தீங்க என்கிறாள் அவள்”
நாங்கள் சிரித்து விட்டோம்.

One Comment on “அழகியசிங்கர்/வகுப்பில் வரைந்த ஓவியம்”

  1. நச்சுனு இருக்கு. நடையும் எளிமை. இடையில் நிற்காமல் இழுத்துக் கொண்டு போகிறது..முடிவும் யதார்த்தம்.குறும்பு செய்யும் குழந்தைகளின் பிரதிபலிப்பு.

    WELL DONE.

Comments are closed.