வளவ. துரையன்/ நான் யார்

      இந்த ஆற்றங்கரையில் 
      இருள் வரப்போகும் இச்சூழலில் 
      என் சொற்களால் 
      ஒரு நிலவை வரைந்து கொண்டிருக்கிறேன் 
      அச்சந்திரனின் கதிர்கள் இதோ
      வெண்மை பொழியத் தொடங்கிவிட்டன.
      ஆனால்
      உறவுகளின் கைவிடுதல்களுக்குப்பின் 
      உள்ளம் எல்லாவற்றையும் 
      குருதி நிறத்திலேயே காண்கிறது.
      குளுமையான இந்தக் காற்று கூட
      உடலைச் சிற்றுளிகளால் 
      துளைப்பது போல எரித்துக் கொண்டிருக்கிறது. 
      அறியாச் சிறுவனின் 
      கை நூலைவிட்டு 
      அகன்றுஓடிவிட்ட பட்டமொன்று 
      தத்தித்தத்திப் போகிறது.
      அவன் அருகே வரும்போது அது 
      அவசரமாகப் பறப்பது போலவும் 
      அதன்பின் அமைதியாக 
      ஆழக் கிடப்பது போலவும் 
      ஆட்டம் காட்டுகிறது.
      அந்தக் காட்சி மூலம் 
      என்னுள்ளே 
      அந்தச் சிறுவன்தான் நானா 
      அல்லது நான் 
      அந்தப் பட்டமா எனும் 
      விடை தெரியா 
      வினாக்கள் கிளம்புகின்றன.