ரமண விருந்து/சிவ.தீனநாதன்

முந்திரிப்பருப்புதான் வேண்டும்

(ஆசிரமத்திற்குச் சாப்பிட வர்றவா பாயசத்தில முந்திரிப்பருப்பு இல்லைதான்னு அழறாளோ!)

பகவானது அன்பைப் பெற்ற பிராணிகளில் அணில்கள் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றன. இவை தவறாமல் தினந்தோறும் பகவானது சோபாவை ஒட்டி உள்ள ஜன்னல் வழியே பகவானிடம் வந்து உறவு கொண்டாடும்.
தினம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இவைகள் வரும்போது பகவான் ஜன்னலில் வைத்திருக்கும் முந்திரிப்பருப்பைத் தமது உள்ளங்கையில் வைத்துக் காண்டு கையை ஜன்னல் பக்கம் நீட்டுவார். அணில்களும் பகவானது உள்ளங்கையிலிருந்து
அவற்றை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியோடு தள்ளிக் குதித்து ஓடும். இதில் சிறப்பம்சம் என்னவென்றால், முந்திரிப்பருப்பை பகவான் ஜன்னலில் வைத்தால் அதை எடுத்துக் கொள்ள மறுத்து அவர் தமது திருக்கையால் கொடுக்காதவரை அவரை நச்சரித்து விடும். இந்தப் பழக்கம் நெடுநாள் வரை நீடித்தது.
ஒருநாள் முந்திரிப்பருப்பு கைவசம் இல்லாமல் போய்விட்டது. எனவே பகவான் டப்பாவில் வேர்க் கடலையை நிரப்பி வைத்திருந்தார்.
வழக்கம் போல் அணில்கள் அன்றும் பகவானிடம் முந்திரிப்பருப்பைப் பெற வந்தன. ஆனால், முந்திரிப் பருப்பு ருசிக்கு பழக்கப் பட்டுவிட்ட இந்தப் பொல்லாத அணில்கள் வேர்க் கடலையைத் தொட மறுத்துவிட்டன. அவை ‘கீச்சு கீச்சு’ என்று எதிர்ப்புக் குரலை எழுப்ப ஆரம்பித்தன. பகவான் ‘இன்னைக்கு ஒரு நாளைக்கு இதைச் சாப்பிட்டு விட்டுப் போங்கடா,’ என்று கூறியவாறு வேர்க்கடலையை அவைகளுக்கு முன் நீட்டி, எவ்வளவோ தாஜா செய்து பார்த்தார்.
ஆனால் இந்த அணில்கள் வேர்க்கடலையைத் தொட மறுத்ததல்லாமல் பகவானது சோபாவின்மீது ஏறி குடுகுடுவென்று அங்குமிங்கும் ஓடி பகவானது கால், கை திருமேனி முழுவதும் ஏறுவதும் இறங்குவ துமாக அவரைப் பாடாய்ப்படுத்த ஆரம்பித்தன. பக்கத்தில் நின்ற அணுக்கத் தொண்டர் கிருஷ்ண ஸ்வாமி என்பவரை மிகவும் பரிதாபமாகப் பார்த்து பகவான் ‘உக்கிராண அறைக்குப் போய் இதுகளுக்கு முந்திரிப்பருப்பை எடுத்துவா!’ என்று உத்தர விட்டார்.
உக்கிராண அறைக்குச் சென்று வந்த அடியார் ஒரு கைப்பிடி முந்திரிப்பருப்புடன் திரும்பினார். இதைப் பார்த்த பகவான், ‘இவ்வளவுதான் இருந்ததா?’ என்று கேட்டார்.
அதற்கு அந்த அடியார், ‘இரவு பாயசத்திற்கு முந்திரிப்பருப்பு வேணுமாம்; ஆகையால் இவ்வளவு தான் கொடுத்தார்கள்,’ என்றார்.
இதைக் கேட்ட பகவான் சற்று கோபத்துடன் கூறினார், ‘ஓகோ! பாயசத்தில் முந்திரிப்பருப்பு இல்லைன்னா, இவாளுக்கு அது இறங்காதாக்கும்!’
பிறகு பகவான் குரல் தழுதழுக்கக் கூறினார், ‘என்ன பண்றது?’ இந்தக் குழந்தைகளோ முந்திரிப் பருப்பைத் தவிர வேறு எதையும் தொடமாட்டேன் என்கிறதுகள்! இவை முந்திரிப்பருப்புக்கு தவிச்சு என்னை எப்படி தொந்தரவு செய்கின்றன பார்! (பிறகு சற்று ஏளனமாக) ‘ஆசிரமத்திற்குச் சாப்பிட வர்றவா பாயசத்தில் முந்திரிப்பருப்பு இல்லைன்னுதான் அழறாளோ!’
பகவான் இவ்வாறு உக்கிரமாகப் பேசவே உக்கிராண அறையில் இருந்த முந்திரிப்பருப்பு அனைத்தும் ஹாலுக்கு வந்து சேர்ந்தன. பகவான் கையால் இந்த முந்திரிப்பருப்புகளை வாங்கிக் கொண்டு அணில்கள் வெகு சந்தோஷமாக ஓட்டம் பிடித்தன.
இந்நிகழ்ச்சியை ஒட்டி ஓர் அதிசயம் நடை பெற்றது. அன்று மாலை சென்னையிலிருந்து டாக்டர் – அனந்த நாராயணராவ் வந்தார் – முழுசாக இரண்டு வீசை முந்திரிப்பருப்புடன்!
அதைவிட அதிசயம் என்னவென்றால், ‘இந்தப் முந்திரிப்பருப்பு அணிற்பிள்ளைகளுக்காகவே வாங்கி வந்திருக்கிறேன் ஆசிரம விருந்துக்காக அல்ல’ என்றார்.
பெருமகிழ்ச்சியுடன் பகவான் அணுக்கத் தொண்டர் கிருஷ்ணஸ்வாமியைப் பார்த்து பெருமிதத்தோடு கூறினார், ‘பார்த்தாயா! இந்த பசங்க தங்களுக்கு வேண்டியதை தாங்களே சம்பாதிச்சுக் கொண்டுட்டா. அவா உங்க கிட்டே பல்லைக் காட்ட வேண்டியதில்லே. இந்த முந்திரிப்பருப்பு அவாளு டைய சம்பாத்தியம்! இதைப் பத்திரமா டப்பாவில் போட்டு இங்கேயே வை. இது உக்கிராண அறைப் பக்கமே போகக்கூடாது! ஜாக்கிரதை’ என்று மிரட்டலாகக் கூறிச் சிரித்தார்.
சின்னஞ்சிறிய அணிற்பிள்ளைகளிடம் பகவா னுக்கு இருந்த தாயன்பு, வாஞ்சை இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாது.