
தென்காசி வீட்டை திரும்பி ஒருதரம் பார்த்தே ஆகவேண்டும்; என்ற நினைப்புடன் தான் சென்னையிலிருந்து வந்திருக்கிறோம்; நானும் நாணாவும். அந்த வீட்டை விற்க அண்ணா முடிவெடுத்தது தவறில்லை. விற்பதற்கு முன்னால் நாங்கள் அதை ஒருதரம் பார்க்க வேண்டும்; என்று சொன்னதை தான் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.அவன் மட்டிலும் அல்ல; என் கணவர் மதுசூதனும்” இப்போ அங்கே போகணும்? வீடு முற்றிலும் காலி பண்ணியாச்சு. அப்படி என்ன அந்த வீட்டில் உனக்கு பார்க்கணும்? என்னால் லீவு போட முடியாது”என்று சொல்ல;” நான் மனதில் சிரித்துக் கொண்டேன். ” நீங்கள் வரவேண்டும் என்று நான் சொல்லவில்லையே! நாணா என்னுடன் வருவான். இங்கிருந்து என்னைக் கூட்டிப் போகச் சொல்லுங்கள். நானும் அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளேன். எங்களுக்குள் தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்று இருக்கு.” என்றேன்.
ஏற்கனவே உன் பெரியப்பாவுக்கும், உன் அப்பாவுக்கும் மனக்கசப்பு. அவன் வருவானா? அதுவும் அந்த வீட்டுக்கு.” என்று கேட்டான்; மதுசூதனன்.
“அதெல்லாம் வருவான். எனக்காக அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். எங்களுக்குள் உள்ள பாசம் அப்படி. நினைவு தெரிந்த நாளிலிருந்து நாங்கள் சேர்ந்தே வளர்ந்தோம். வளர்ந்து அவரவர் பெரியவர்கள் ஆகி கல்யாணம், குடும்பம், ஆனதும் தான் பிரிய வேண்டிய கட்டாயம். எங்கள் பந்தம், என்னவென்று தனியொரு மகனாய் வளர்ந்த உங்களுக்குப் புரியாது.அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் இடையேதான் கருத்து வேற்றுமை. எங்களுக்குள் எந்த பகைமையும் இல்லை. அவன் வருவான். நீங்கள் அவனுக்கு ஃபோன் பண்ணிச் சொன்னால் போதும்; அவன் கண்டிப்பாக வருவான்’ என்றதும் அவரால் ஒன்றும் பேச இயலவில்லை.’ சரி! நான் அவனிடம் பேசுகிறேன். அவன் வராவிட்டால் என்ன செய்வது,’ என்று கேட்டார்.’ அவன் வருவான். நாணா நிச்சயமாக வருவான். அவனிடம் சொல்லுங்கள்; பழைய கணக்கு ஒன்று தீர்க்க வேண்டியது, இருக்கிறது; என்று மட்டும். அவனுக்கு வேண்டியதெல்லாம், உங்களிடமிருந்து ஒரு ஃபோன் அழைப்பு மட்டும்.’ என்றேன்
நாணா நேற்று வீட்டிற்கு வந்து என்னை தென்காசிக்கே கூட்டி வந்து விட்டான். பிரயாணம் முற்றும் அமைதியாக இருந்தது. அதிகாலை தென் காசி சந்நதி தெருவில் இருந்த எங்கள் பரம்பரை வீட்டை நோக்கி நடந்தோம். எங்கள் இருவர் மனத்திலும் நினைவலைகள். அடிக்கடி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த வண்ணம் இருந்தாலும், பேச நா எழும்பவில்லை. வீட்டு வாசற்படி வந்ததும், என் கைப்பையில் இருந்து வீட்டு சாவியை அவனிடம் கொடுக்க; ‘ இன்னும் உனக்கு சாவி துளை எட்டாதா’ என்று குறுஞ்சிரிப்புடன் அவன் என்னிடம் கேட்க; நானும் பதிலுக்கு முறுவலித்தேன்.
வீட்டை ஏறக்குறைய காலி செய்து விட்டார்கள். தாத்தா- பாட்டி ஃபோட்டோவும். ஸ்வாமி மாட பிரையில் காந்திமதி வெகு மோகனமாக முறுவலித்துக் கொண்டிருந்தாள்.’ இப்போது, எதற்காக இங்கு வந்திருக்கிறோம்’ என்று நாணா கேட்க’ நான் தோற்று விட்டேன்,நாணா! நான் குனிய நீ பத்து குட்டு குட்டலாம். என் முதுகில் பச்சை குதிரை தாண்டலாம். என்னால் நீ ஒளித்து வைத்த என்பொம்மையை கண்டுபிடிக்க முடியவில்லை. நீதான் என்னை ஜெயிச்சுருக்கே. என் பொம்மையை முதலில் எடுத்துக் கொடு. அதற்க்காகத்தானே நாம் இங்கு வந்திருக்கிறோம்;அது எனக்கே எனக்காக, பெரியப்பா வாங்கிக் கொடுத்த பொம்மை” என்று நான் சொல்லி முடிக்கும் முன், நாணா புழக்கடையிலிருந்த மர ஏணியை எடுத்து வந்து பின்கட்டு ரேழி முடுக்கில் இருக்கும் படிகளில் ஏற; நான் அவன் பின்னே சென்றேன். இந்தப் படிக்கட்டுகளில் எத்தனை கதைகள் பொதிந்திருக்கின்றன!
முதல் வளைவில் ஆடு புலி ஆட்டம் கட்டம் செதுக்கிக் கொடுத்து, விளையாட கற்றுக் கொடுத்ததே என் பெரியப்பா தான். அடுத்த படிக்கட்டு ஏற்றத்தில் இருந்த மாடத்தில் , என்னையும் அறியாமல் கைவிட அங்கு எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. பதினெட்டு அரும்பு சோழிகளும் மூன்று கரு நிற. சோழிகளும்; பெரியப்பாவின் சோப்பு டப்பியில். பெரியப்பாவின் குட்டிக்குரா பௌடர் வாசனை இன்னும் அதில் இருப்பது போல் இருந்தது.
அடுத்த வளைவில் சுவற்றில் புதைந்த மர அலமாரி. ஒரு கையில் ஏணியுடன், நாணா இடது கையால் அதைத் திறக்க, அதிலிருந்து பெரியப்பாவின் சிகரெட் லைட்டர்.’ இதெப்படி, இங்கே ; என்பது போல், என் புருவம் உயர; ‘அப்பாவிடமிருந்து நான் சுட்டது,’ என்று பல்லைக் காட்டியபடியே, அதைத் தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.’அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே,’என்ற
பாட்டை விசில் அடித்தபடியே மேலே ஏறினான். வீட்டுக்குத் தெரியாமல் பெரியப்பா புகை பிடித்தது எனக்கு மட்டும்தான் தெரியும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ‘நாணா ஒரு படி மேலேயே போய் விட்டான்.அடப் பாவி! அடிக்கடி மொட்டை மாடிக்கு போன ரகசியம் இதுதானா!’ இப்போது நான் என்னையும் அறியாமல் ‘களுக்’ என்று சிரித்து விட்டேன்.’ உனக்கு இன்னிக்கு தான் தெரியுமா’ என்பது போல் ஆச்சரியமாக என்னைப் பார்த்தான்.
‘ஏணி கனக்கிறதே! ஒரு கை பிடிக்கக் கூடாதா’ என்று கேட்க நானும் ஒரு கை பிடித்தேன். ஒருவழியாக மொட்டை மாடி வந்து சேர்ந்தோம்.
‘என் பொம்மையை எங்கேதான் ஒளிச்சு வைச்சுருக்கே?’ நான் பொறுமை இழந்து கேட்க; ‘இத்தனை வருடம் பொறுத்து இருந்தே; இன்னும் அரைமணி பொறுத்திருக்க மாட்டாயா?’என்று சொன்னவன், ஏணியை சமையலறை புகைக் கூண்டில் சார்த்தினான்.ஏணியைப் பிடிச்சுக்கோ. நான் கீழே விழுந்துவிடப் போகிறேன். ஏணி ஏறி வெகு வருடங்கள் ஆச்சு. அப்போது இருந்த தைரியம் எனக்கு இப்போது இல்லை.; என்று ஏணியில் ஏற ஆரம்பித்தான். வேகமாக ஏறியவன் புகைக் கூண்டின் செவ்வக வடிவ புகை போக்கி இடைவெளியில் இருந்து பழைய ஆங்கில பேப்பரில் சுற்றி சணல் கயிறால் கட்டப்பட்ட ஒரு பொதியை எடுத்து கீழே போட்டு,’ பிடிச்சுக்கோ’ என்றபடி என் பக்கமாக கீழே போட்டான். அதைப் பிடிக்க ஏ ணியிலிருந்து கை எடுத்தவுடன்,ஏணி ‘கிடு கிடு’ என ஆடி கீழே சரிய, நாணா “சட்” என புகைக் கூண்டில் தாவி ஏறி விட்டான்.’ ஏய்! உன்னை நம்பினவன் கதி எல்லாம் அதோ கதி தானா” என்று சிரிக்க, எனக்கு தர்மசங்கடமாய் போயிற்று. ‘ ரொம்ப சாரி; நாணா! நீதானே ‘பிடிச்சுக்கோ, என்று எதையோ கீழே போட்டாய்; அதான் நான் அந்தப் பொதியை பிடிக்க கை எடுத்துவிட்டேன். மன்னிச்சுக்கோ , நாணா! என்றேன் அசட்டு சிரிப்புடன். நான்
இறங்க வேண்டி, திரும்பி நிற்கவேண்டும் , இல்லையா? ஏணியை பிடிச்சுக் கோ என்று சொன்னால்… நீ இப்படி பழி வாங்கி விட்டாய் தானே. இதற்காகத்தான் நான் உன்னை தென்காசி வரை கூட்டி வந்தேனா?” என்று சிரித்தான்.
‘சரி! இப்போது எப்படி இறங்குவேன்’ என்று நாணா கேட்க ‘இரு! நான் ஏதும் வழி பண்ணுகிறேன் என்று , ‘ கீழே போய் காமிரா ரூமிலிருந்து ஒரு தூளி கட்டும் மணிக்கயிறை எடுத்து வந்தேன். இதை புகை போக்கி இடைவெளி சுவரில் கட்டி இறங்கி புகைக்கூண்டு இடைவெளியில் காலை வை . நான் கயிறு தொங்கும் இடத்தில் நிற்கிறேன். என் தோளில் காலை வைத்து பேலன்ஸ் பண்ணி குதித்து விடு. வீட்டில் இதற்கு மேல் பெரிய கயிறு ஒன்றும் இல்லை.’ என்றேன்.
‘ இப்போதாவது மோசம் பண்ண மாட்டாய் ,என்று நினைக்கிறேன்’ என்றபடியே கயிற்றைக் கட்டி விட்டு, திரும்பி நின்று கொண்டு கயிற்றைப் பிடித்துக் கொண்டு ‘சர சர’ வென கீழே இறங்க; நான் சரியான இடத்தில் நின்று கொண்டு, அவன் காலைப் பிடித்து என் தோளில் வைத்த அடுத்த நொடி அடுத்த காலையும் என் தோளில் வைத்து ‘தொம்’ என் கீழே குதித்தான்.
எனக்கு இப்போதுதான் என்னுடைய பொம்மையின் நினவு வந்தது ‘ ஆமாம்! நாணா! என் பொம்மை எங்கே?’ என்று கேட்கவும் , அதோ! என்று தன் சு ட்டு விரலை நீட்டிக் காட்ட; அங்கு கீழே சுருட்டிய ஆங்கில செய்தி தாளிலிருந்து எனது பொம்மை சிரித்துக் கொண்டே, என்னை ‘ வா’ என்று அழைத்தது. அதை எடுக்க வேகமாக ஓட எத்தனிக்க, நாணா, என் கையைப் பிடித்து நிறுத்தி ‘ணங் ணங்’ என் வரிசையாய் குட்ட ஆரம்பிக்க, எனக்குக் கொஞ்சமும் வலிக்க வில்லை. வாத்சல்யத்துடன் அவன் என்னை அணைக்க; அழுகையும் சிரிப்பு மாக நான் அவன் அரவணைப்பில். பொம்மையை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினோம்.
திரும்பவும் வீட்டைச் பூட்டினதும், சாவியை என்னிடம் கொடுக்காமல், ” வா; திருநெல்வேலி போய் சங்கர் அண்ணாவையும், சித்தப்பா- சித்தியை யும் பார்த்து விட்டு அப்புறம் சென்னை போகலாம். இன்னுமொரு நாள் ஆஃபிஸுக்கு லீவ் சொல்லிடு’ என்றான்
அஞ்சுலாம்பு பக்கத்தில் இருக்கும் சங்கரண்ணா வீட்டுக்குச் சென்றதும்’, சங்கரண்ணா’ வாடா! நாணா! என்றதும் மன்னியும் எங்களை வரவேற்க. சித்தப்பாவின் காலில் விழுந்து வணங்க; அங்கே ஒரு பழைய வீம்பு கணக்கு காணமல் போய், புதிதாக ஒரு பாசக் கணக்கு ஆரம்பம் ஆயிற்று.

நல்ல க(வி)தை