ஹரணி/ஞானக்கூத்தன் நினைவாக பரிசு பெற்ற கவிதைகள்

விருட்சம் வெளியீடு – ஞானக்கூத்தன் நினைவாக பரிசு பெற்ற கவிதைகள் – தொகுப்பு நூல் – தொகுப்பாசிரியர் கவிஞர் எழுத்தாளர் அழகிய சிங்கர்

கவிஞர் ஞானக்கூத்தன் தமிழப் பரப்பில் தவிர்க்கமுடியாத கவிதை ஆளுமை. சிந்தனை, தெளிவு, சிக்கனம், ஆனந்தம் என்கிற கூறுகளில் கவிதையைச் சொன்னவர் என்று அழகிய சிங்கர் அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இதைத்தாண்டி ஞானக்கூத்தன் கவிதைகளில் முரணகளைப் பற்றிய  ஓர் எள்ளல்சுவை எப்போதும் வாசிப்போரைச் சுவைக்கவைத்து சிந்திக்கவைக்கும் வல்லமை மிக்கது. எதையும் நேர்ப்பட, எதார்த்தமாய் கூறுவதில் துளியும் தயக்கமற்றவர் ஞானக்கூத்தன் அவர்கள். சிக்கனமான சொற்களில் பெரிதான ஒன்றைச் சுருக்கென்று தைக்கச் சொல்லும் திறனும் ஞானக்கூத்தனுக்கு உண்டு. சிக்கல் இல்லாமல் கவிதையை வாசிக்க வைப்பார். அவரின் பெயரால் நடத்தப்பெற்ற கவிதைப்போட்டியில் தெரிவான கவிதைகளைத் தொகுத்து நூலாக்கம் செய்து ஞானக்கூத்தனுக்கு உண்மையான கவிதாஞ்சலி செலுத்தியுள்ளார் அழகிய சிங்கர் அவர்கள்.
62 கவிதைகள் இதில் ஞானக்கூத்தன் கவிதைகள் 3 இல்லாமல் 62 கவிஞர்களின் 62 கவிதைகள். 62 பொருண்மைத் தளங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் பயணிக்கிறது. எதார்த்தம், வலி, ஆற்றாமை, ஆதங்கம், கோபம், அவலம், இயலாமை, நம்பிக்கை, முரண், நாகரிகத்தின் அழிப்பு, காட்சி, குறியீடு, உவமைகள், மொழிநடை, எனக் கவிதைகள் துள்ளிக் குதிக்கின்றன. ஞானக்கூத்தன் இருந்திருந்தால் நிரம்பவும் ரசித்திருப்பார்.
அழகிய சிங்கர் அவர்கள் எதையும் ஆவணப்படுத்துவதில் தயங்காதவர். திறமையாளர்களைக் கொண்டாடுபவர். இன்னார், இனியார் என்கிற பேதமற்றவர். தொடர்ந்து தன்னுடைய தொண்டில் முன்னோக்கிப் போய்க் கொண்டேயிருக்கிறார். புதுமையான முயற்சிகளை முன்மொழிந்து உற்சாகப்படுத்துபவர். எளிமையானவர். அன்பானவர். ஆர்ப்பாட்டமற்றவர். செய்துகொண்டேயிருக்கிறார் படைப்புலகில். எந்தவொன்றையும் அது சமூகத்திற்குப் பயனாக நிற்பனவற்றைத் தேடிக் கண்டடைந்து புதுப்பிக்கும் பெருந்தன்மையும் அழகிய சிங்கருக்கே உண்டு. காலம் அவரை உரிய இடத்தில் வைத்துக் கொண்டாடவேண்டும் என்பதுதான்.
இத்தொகுப்பின் 62 கவிதைகளையும் நான் மூன்று முறை வாசித்தேன். எல்லாக் கவிதைகளும் எனக்குப் பிடித்திருந்தன என்றாலும் சில கவிதைகள் உச்சமானவை. அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். ஒவ்வொரு நிலையில் இக்கவிதைகள் உச்சத்தில் இருக்கின்றன. இது என்னுடைய வாசிப்பின் விளைவால் நேர்ந்தவை. இது மாறுபடலாம். என்னுடைய அனுபவத்தில் நான் இதைப் பகிர்கிறேன் அவ்வளவே.
ஆர்.கே.இராமநாதனின் உம்மாச்சிக் கவிதை முழுக்க வினைச்சொற்களால் பின்னப்பட்டது. சமூகத்தின் கேட்டிற்கான வினைகளை வினைச்சொற்களால் விதந்து கூறியிருப்பது நன்றாகயிருக்கிறது.
இரா, காசிநாதனின் தாத்தா பற்றிய கவிதை இன்னும் நம்மின் தாத்தா குறித்த வாழ்வின் முரணைச் சுட்டி மாறவேண்டும் என்கிறது.
கருமலைப் பழம் நீ யின் கவிதை மாடு மேய்யக்கத் தெரியும் ஐயா. நன்றாகத் தெரிந்தவற்றுக்குப் பலனில்லை. பலருக்கும் தெரியாதவற்றுக்குப் பலன் இருக்கிறது. இப்படித்தான் இந்த சமூகம் இன்றைக்கு இருக்கிறது என்பதை எளிய சொற்களால் சொல்லுகிறார்.
ராஜ.கிருஷ்ணனின் வெட்டப்பட்ட ஆட்டுக்குச் சந்ததி இல்லாமல் போனது குறித்துக் கவலைகொள்ளும் உயிரிரக்கம் என்றைக்கும் கவனத்திற்குரியது அது நிகழாது நிறுத்தப்படும்வரைக்கும்.
எதார்த்த வாழ்வின் வலியைக் காட்சிப்படுத்துவது ஏ.எப்.எம். றியாட்டின் கவிதை.
அன்புச்செல்வி சுப்புராஜு வின் உயிர்த்தலின் சப்தம் கவிதை என்னவோ செய்கிறது மனத்தை. காட்சிப்படிமாக விரியும் இக்கவிதையுள் இறங்கினால் புரியும்.
வாழ்வின் அவலத்தை வேறுவிதமாகப் பசியிலிருந்து எடுத்துப்போட்டுக் காட்சிப்படுத்துவது தானப்பன் கதிரின் தீராப்பசி கவிதை.
பார்த்துக் கேட்டு அனுபவித்த அவலத்தினை அவலமாகவே சித்திரிப்பது இந்திரநீலன் சுரேஷ் ன் கவிதை பூஜைக்கு வராத மலர். கவிஞர் நா.காமராசன் கவிதையின் வேறு பக்கத்தை நினைவூட்டியது பரத்தை குறித்த இக்கவிதை. பரத்தை குறித்து நிறைய கவிதைகள் வரவேண்டும்.
மொழிநடையில் அசத்துகிற கவிதை ஷா அ வின் சம வெளியில் கெட்ட கனவு கவிதை.  வாழ்வின் சூட்சுமத்தைப் பேசும் கவிதை.
எளிமை, எதார்த்தம், குறியீடு என அருமையான கவிதையாக அமைந்தது கீர்த்தியின் விட்டுச்சென்றவை என்னும் கவிதை. இயற்கையின் மேன்மையை இயல்பாய்ப் பேசும் கவிதை. 
நச்சென்றும் வலியின் மிகையைக் காட்சிப்படுத்தும் அருமையான கவிதை க.செல்லப்பாண்டியின் உயிர்த்தெழுதல். ஒவ்வொரு மனித வாழ்வும் இப்படித்தான் பெண்களை வைத்திருக்கிறது. வலியாணிகளால் அறையப்பட்ட வாழ்வில்தான் பல பெண்களின் வாழ்வு வரையப்பட்டுள்ளது என்பதும் இக்கவிதை உணர்த்துகிறது.
ஞானக்கூத்தன் கூறுவதுபோல சிந்தனை, தெளிவு, சிக்கனம் மற்றும் மொழிநடை, சொல்லாட்சி, உவமை என மின்னும் கவிதை செந்தமிழ்பாரதியின் தெரிந்தால் கூறுங்கள் கவிதை. பாலைவனம் பூப்பதற்குக் கண்ணீர் விடும் மேகங்கள், ஓடைகளை அறுத்து அருவியாக்கி ஆறுகள் முளைத்தனவோ, மாதவிடாய் இல்லாமல் வயசுக்கு வந்த பூக்கள்  என அற்புதமான சொல்லாட்சிகளில் மின்னும் கவிதை.
மனத்தில் வாசித்ததும் ஓர் இறுக்கத்தையும் வலியையும் அடைக்க வைத்துக் கலங்க வைக்கும் கவிதை நா.கிருஷ்ணமூர்த்தியின் காணாமல் போகிறவர்களும் மறக்கப்படுபிவர்களும் கவிதை.
சின்னப் புள்ளியில் அவலத்தினைச் சுவையாக்கி அழவும் கோபப்படவும் வைக்கும் கவிதை தோசை கவிதை. கிரிஜா ராகவனுடையது.
மேற்சுட்டிய இக்கவிதைகள் என் மன வாசிப்பில் என்னைச் சிந்தை கொள்ள வைத்தவை.
இதுதவிர சில கவிதைகளின் சொல்லாடல்கள் என்னை நிரம்ப ஈர்த்தன. அவற்றைப் பின்வருமாறு குறிப்பிடுகிறேன்.
தானே பயணியாய்ச் செல்லும் படகுகள் (பக்.26 பானுமதியின் படகுகள் கவிதை)
தொட்டுத் தொட்டுப் போகிற அலைகளில் ஆழ்நது நின்றிருந்தேன் (பக்.27 மதுவந்தியின் கடலிடம் விடை பெறுதல்)
காக்கையின் கழுத்துச் சிலிர்ப்பில் தெறிக்கு  காக்கையின் கழுத்துச் சிலிர்ப்பில் தெறிக்குது ஒரு சிறுமழைச் சாரல்.. இரவு மழையில் குளித்து துவட்ட மறந்த உடலுடன் சிலிர்த்திருக்கும் புல்வெளி (பக்.28 ஜெ.பாஸ்கரனின் மழை விட்டது கவிதை)
கழுத்தும் நீண்டது காலமும் நீண்டது (பக்.30 நாகேந்திர பாரதியின் பருவ மாற்றம் கவிதை)
நினைவுகள் தொடும் தூரம் வரை வெறுமைதான் விரவிக் கிடக்கிறது விதம் விதமாக மினுக்கும் (பக்.31, தங்கேஸ்ஸின் கடைத்தேற்றும் வெறுமை கவிதை).
ஓயாமல் சுழலும் மின்விசிறியும் ஒளிரும் மின் விளக்கும் என் புலம்பலைக் கண்டு புன்சிரிப்பு பூத்தன – வித்தியாசமான பார்வை (பக்.33 வே.சரஸ்வதி உமேஷ்ன் சிக்கனம் கவிதை – சிக்கனத்தைப் பற்றி எழுதச் சிறிய அளவு போதாதா? என்று பெரிய சொற்றொடரில் கேட்பதும் சுவை.
ஆதரவின்றி வளர்ந்தாலும், ஆதாரமாகிப் போகின்றனர், அடுத்தவர் வாழ்க்கைக்கும் அவ்வப்போது பெய்து மனம்  நனைக்கும் மழைக்கும் (பக்.42 வைதேகியின் தெருவோர மரம் கவிதை)
இவளுக்கு வரப்போவது கடவுளா? காலனா? நிச்சயம் காதலன் இல்லை (பக். 43 இந்திரநீலன் சுரேஷ்ன் பூஜைக்கு வராத மலர் கவிதை)
தெரிந்தே ஏமாறுதலிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது (பக்.54 ஆர் வத்ஸலாவின் ஏமாறல் கவிதை.. இது சாதாரண சொற்றொடர் போலத் தோனும் ஆனால் மனித வாழ்வு இதுபோன்ற சிறுசிறு ஏமாறுதல் களினால்தான் சுவை மிக்கதாக இருக்கிறது. தெரிந்தே ஏமாறுதலில் காயம் இல்லை. கவலை இல்லை, நட்டம் இல்லை. 
ஒரு கவிதை முடிப்பிற்கு அபாரமான திறன் வேண்டும். அவ்வகையில் கவிதை கிடக்கிறது கழுதை என்கிற லாவண்யா சத்யநாதனின் என்ன செய்யலாம் ? என்கிற கவிதையின் முடிப்பு ஒட்டுமொத்தக் கவிதையையும் தாங்கிப்பிடித்து மறுபடியும் வாசிக்க வைக்கிறது. அருமை.
கவிதையில் குறியீடு சொல்லாத பல விஷயங்களைச் சொல்லும்ஆற்றல் மிக்கது. குறியீட்டில் உணர்த்த வருவது பலவற்றை விரிவாக்கி உணர வைக்கும். அந்த வகையில் நிஷாந்தனின் பரிமாறுதல் கவிதை. கரண்டிக்கும் உணவுக்கும் உள்ள வேறுபாட்டை உங்களுக்கு எப்படித்தான் நான் புரிய வைப்பேன் (பக். 67).
62 கவிதைகளும் என்னை சுவைக்க வைத்தன. நிறைவைத் தந்தன. வாழ்த்துகள் வென்ற அத்தனை பேருக்கும். 
என்றைக்கு நீங்கின மண்ணின் புழுக்கள்.. ஞானக்கூத்தன்.

2 Comments on “ஹரணி/ஞானக்கூத்தன் நினைவாக பரிசு பெற்ற கவிதைகள்”

  1. கவிதைகளைப் பற்றிய விமர்சனம் அருமை,
    புத்தகத்தை வாங்கிப் படிக்க ஆவல் . எப்படி order செய்வது?

  2. கவிதைகளைப் பற்றிய விமர்சனம் அருமை,
    புத்தகத்தை வாங்கிப் படிக்க ஆவல் . எப்படி order செய்வது?

Comments are closed.