
1986 ம் வருடம்,
பெரியபட்டி கிராமத்து பொதுக்கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டு, இடுப்பில் ஒன்றும், தலையில் ஒன்றுமாக இரு பானைகளை சுமந்தபடி வந்து கொண்டிருந்தாள் ராசாத்தி.
வெய்யில் சற்றேறக்குறைய உச்சியை நெருங்கிக் கொண்டிருந்தது. சற்று தள்ளி, கிராமத்து வாசக சாலை படிக்கட்டில் அமர்ந்தபடி ராசாத்தியையே வெறித்துப்பார்த்தான் கோபால்சாமி.
இவன் திருமணமானவன். அவளும் திருமணமானவள்.
கிராமத்தில் வெவ்வேறு சாதியாயினும் உறவுமுறை வைத்து இயல்பாய் பழகுவார்கள்.
அப்படிப்பட்ட உறவுமுறையில் கோபாலுக்கு ராசாத்தி, மாமன் மகள் உறவு. கேலிப் பேச்சு என்பது வெகு இயல்பு. யாரும் யாரையும் தவறாக நினைக்க மாட்டார்கள்.
எப்போதும் போல ராசாத்தியிடம் அவள் தண்ணீர் எடுக்க வரும்போது கேலி கிண்டல் செய்வான்.
அவளும் பதிலுக்கு நக்கலாக சிரித்துகொண்டே பதில் சொல்வாள். அன்று ஏனோ கோபால் சாமிக்கு சற்று முறுக்கேற,
“என்ன ராசாத்தி, மாமன கவனிக்கிறது இல்லையா?” என்று கேட்டுவிட்டான்..
“அதுக்கென்ன, மாமனை கவனிக்காம .. வேற யாரை கவனிக்க போறேன்.. சொல்லு மாமு” என்று தலைக்குடத்திலிருந்து நெற்றிக்கு வழிந்த தண்ணீரை வலக்கையில் துடைத்தெடுத்து அவன் மேல் சுண்டினாள் ராசாத்தி.
தன் மேல் சிதறிய தண்ணீர்த்துளிகள் பட்டு சிலிர்த்துகொண்டான்.
“என்ன ராசாத்தி, அண்ணன் எங்க இருக்காரு? உள்ளூரா ..வெளியூறா..” என்றான்.
“ஆங், வெளியூர் தான்..” நடந்து கொண்டே நளினமாய் சொன்னாள். “..ம், இப்ப வரலாமா.. கவனிப்பு உண்டா..” என பாதிக்குரலில் அவன் கேட்க,
“கவனிச்சுட்டா போச்சு.” என்ற அவள் பதிலில் மதி கிறங்கி போனான் கோபாலு.
சுற்றும் முற்றும் பார்த்தான். தெருவில் அவ்வளவாக ஆள் நடமாட்டம் இல்லை.
10 நிமிடம் தாமதித்து, அவளது வீட்டை நோக்கி ஆவலுடன் புறப்பட்டான்.
கோபாலு கண்ணில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் அங்குமிங்கும் பறந்து திரிந்தன.
வீட்டிற்குள் நுழைந்தவுடன் கோபாலுக்கு பேரதிர்ச்சி..
ராசாத்தியின் கணவன் அங்கே கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து காலாட்டிக் கொண்டிருந்தான்..
“என்னடா கோபாலு.. இந்தப்பக்கம்..?”
“அது வந்து..வந்து..”
வார்த்தைகள் வரவில்லை. நாக்கு தரையில் விழுந்த மீனாய் இங்கும் அங்கும் தத்தளித்தது . எச்சில் விழுங்கினான்.
“உச்சி வெய்யில்ல என்னடா உளறுர..
உள்ள வாடா கோபாலு..
வா வந்து உக்காரு..”
அவனை கயித்து கட்டிலில் வந்து அமருமாரு சைகையில் அழைத்தான் ராசாத்தியின் கணவன்.
நடக்க இயலாமல் வேர்த்து விருவிருத்து அவன் அருகில் அமராமல் ஓர் ஓரமாய் கட்டிலை கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்தான் கோபால்.
வீட்டினுள்ளே பார்த்து, “ஏ..ராசாத்தி, உன் கொழுந்தனுக்கு கொஞ்சம் குடிக்க தண்ணி கொண்டு வா..”
ராசாத்திக்கு ஆணையிட்டான்.
“அப்புறம் கோபாலு, என்னடா திடீர்னு இந்தப்பக்கம்.. வீட்ல எதும் விசேஷமா ?” என்றான்.
“இல்லண்னே..நான்…நான்..”
அதற்குள் அங்கு ராசாத்தி வந்து கோபாலுக்கு தண்ணீர் கொடுத்தாள், நமட்டுச்சிரிப்புடன் நாக்கை உள்ளுக்குள் வைத்து சுழட்றியபடி கண்ணடித்தாள்.
தண்ணீரை வாங்கி மடக் மடக் என்று குடித்துவிட்டு,
“அது வந்து நான் டிராக்டர் காண்ட்ராக்ட் எடுத்து வயல்ல உழுது கொடுத்துகிட்டு இருக்கேன். அதான் உங்களுக்கு தேவைப்படுமானு சுேட்டுட்டு போகலாம்னு வந்தேண்ணன்..’
“அட கிறுக்கு பயலே,
நம்ம கிட்ட இரண்டு ஜோடி உழவு மாடு இருக்குல்ல..நமக்கு எதுக்குடா டிராக்டர்..
சரிதானா கோபாலு..”
“சரி தாண்ணே..
அப்ப நான் கிளம்புறேன்..”
“டே, மதினிய பார்த்து சொல்லிட்டு போடா…”
“..”
ராசாத்தியை பார்த்து “மதினி போயிட்டு வர்றேன்..” என்றான். “சரிங்க கொழுந்தனாரே.. பார்த்து போங்க..
நேரத்துக்கு வீடு போய் சேருங்க..அங்க என் தங்கச்சி ஒத்தையில இருப்பா..”
“சே.. ஏமாந்துட்டோமே..
கேலி வேற..கிண்டல் வேற..இது வேற.. அது இந்த மர மண்டைக்கு புரியாமப் போச்சே ..
சே..”
அவன் தானாக புலம்பிகொண்டு புரண்டு புரண்டு படுத்தான்.. மறுநாள் சாயங்காலம் ராசாத்தி தண்ணீர் எடுக்க வந்ததாள். வழக்கம் போல கோபாலு வாசகசாலை படிக்கட்டில் அமர்ந்தவாறே ராசாத்தியைப் பார்த்தான்..
“என்ன மாமா சவுக்யமா..”
“ம்ம்.. சௌக்கியந்தான்..” என்றான்.
“நேத்து கவனிப்பு எப்படி?”
“அடேங்கப்பா பிரமாதம்ல..”
“என்ன மாமு இதுக்கே சலிச்சுக்குற…’
‘அதெல்லாம் ஒன்னுமில்ல..”
“மாமு, நீ எப்ப உன் டிராக்டர் ரிப்பேர் பாக்க வெளியூர் போவ..?” “எதுக்கு கேட்கிற?”
“வேற ஒன்னுமில்ல..”
“உன் டிராக்டர் தான் ரிப்பேர் ஆயி சர்வீஸ்க்கு விட்டுறுவீளே.. அப்ப என் புருஷனை உன் வீட்டுக்கு அனுப்பி கொழுந்தியாகிட்ட உழவு மாடு உழவு தேவைப்படுமானு கேட்டுட்டு வரத்தான்..” தலை நிமிர்ந்து அவளைப்பார்த்தான்..
அப்போது ராசாத்தி விளையாட்டாய் சொன்னது, அவனை செருப்பால் அடித்த மாதிரி இருந்தது..
“பேச்சு பேச்சாதான்டா இருக்கணும் பேப் பயலே..”
அங்கிருந்த பெருசு, வேறு ஒருவனிடம் சத்தமாக சொன்னது இவனுக்கு என்னமோ போல இருந்தது..
வெளிறிய முகத்துடன் வாசகசாலையை விட்டு வெளியேறினான் கோபாலு..

One Comment on “இரா.ம.செளந்தர்/பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்..”
Comments are closed.