இரா.ம.சௌந்தர்/எப்பதான்டா கல்யாணம்..?

“ஹலோ, பவளமணி இருக்காரா?” ‘ஆமா… நான்தான் பேசுறேன்..”
“நீங்க கல்யாணத்துக்கு பொண்ணு தேவைனு மேட்ரிமோனில் பதிஞ்சு வச்சிகளே..”
“ஆமா நீங்க எந்த மேட்ரிமோனி?”
“நாகர்கோயில் மேட்ரிமோனிலருந்து பேசுதம்..”
“ஏங்க, நான் இருக்கிறது கடலூர் மாவட்டம், முஷ்ணம். நீங்க நாகர்கோயில் ..இது எப்படி! நாங்க அங்க வந்து பதிவு எதுவும் செய்யலேயே..”
“மாப்ள தம்பி, அவசரப்படாதீங்க. எங்களுக்கு தமிழ்நாடு பூரா கிளைகள் இருக்கு. நம்ம குரூப் ல உங்க ஜாதகத்துக்கு பொருந்துற மாதிரி ஒரு வரன் இருக்கு. இந்த நம்பருக்கு 1000 ரூபா G Pay-ல அனுப்பி வைங்க.
உங்களுக்கு பொண்ணோட ஃபோட்டோ, ஜாதகம், மற்ற விவரம் எல்லாம் அனுப்பி வைக்கிறோம். உங்களுக்கு பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசுவோம்..”
” ஹலோ, இந்த மாதிரி நிறைய பேர்,அந்த மேட்ரிமோனி,இந்த மேட்ரிமோனி, ப்ரோக்கர், மீடியேட்டர் அப்படினு சொல்லி 1000, 2000ன்னு ஏமாத்தி இருக்காங்க..இனியும் ஏமாற தயாரா இல்ல பேசாம போன வையுங்க.”
“மாப்ள தம்பி, நீங்க நினைக்கிறது மாதிரி நாங்க பிராடு இல்ல.
நீங்க பணம் அனுப்ப வேண்டாம். நான் உங்க நம்பருக்கு பொண்ணோட விவரம், ஃபோட்டோ, ஜாதகம் எல்லாம் அனுப்பி வைக்கிறேன்.பாருங்க.. உங்களுக்கு பிடிச்சிருந்தா மேற்கொண்டு
பேசுவோம்.
அடுத்த வாரம் ஒரு வேலையா கும்பகோணம் வருவேன். அப்ப உங்கள் நேர்ல பார்த்து பேசுகிறேன்.அப்ப நீங்க பணம் கொடுத்தா போதும்.”
எதுவும் பேசாமல் அமைதியாக நின்றவன் சற்று யோசித்துவிட்டு, “சரி நீங்க விவரம் அனுப்புங்க.பிடிச்சிருந்தா நீங்க சொல்றத செஞ் சிடுவோம்..”
“சூப்பர் மாப்ள..”
அடுத்த 20 நொடிகளில் அவனது வாட்ஸப்பில் பொண்ணுடைய ஜாதகமும் ஃபோட்டோவும் வந்து விழுந்ததை ஆர்வத்துடன் பார்த்தான்.
நிறைய பெண் ஜாதகங்களை வைத்து ஜோசியரிடம் பொருத்தம் பார்த்து பார்த்து, இவனும் ஓரளவு ஜோசியம் கற்றுக்கொண்டான். பொண்ணோட ராசி கடகம், நீர் ராசி.
அவனோட ராசி ரிஷபம், நிலம் ராசி. நிலம் நீரை ஈர்த்துக்கொள்ளும்.. சரியான பொருத்தம். சூப்பர் மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.
ஃபோட்டோ பார்த்தான். ஏதோ ஒரு நடிகையின் சாயல் தெரிந்ததில் அவனுக்கு பெரு மகிழ்ச்சி.
அவளுக்கு வயது 33. “வயசு கொஞ்சம் அதிகமா இருக்கே.” வாய திறந்து முனகிக்கொண்டே பலமாக யோசித்தான்.
“அடே பவளம், உனக்கு மட்டும் என்ன வயசாகுதாம்..வர்ற ஆடி வந்தா 40.”அவனது அம்மா சொன்னாள்
‘அட போமா எனக்கு வயசு 39 தான்.”
“சரி விடு, ஒரு வயசு குறச்சு என்ன வந்திடப் போகுது.? வயசு வித்தியாசம் சரியாத்தான் இருக்கு. பொண்ணும் லட்சணமா இருக்குல.
ப்ரோக்கர்ட்ட பேசுடா..மேற்கொண்டு பொண்ண பத்தி விவரம் கேளு சாமி.”
“சரிம்மா” என்றவன் அப்போதே செல்போனில் தொடர்புகொண்டான். “ஹலோ..”
“ஹலோ ..நீங்க யாரு..”
“நான் யாரா? இப்ப தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால பொண்ணு விசயமா என்கிட்ட பேசினீங்க.”
“சாரி, நிறைய பேர் லைன்ல வர்றாங்க.. அதான் கொஞ்சம் குழப்பம் ஆகிடுச்சு.
“சொல்லுங்க பவள மணி சார்.”
“எங்களுக்கு பொண்ணு ரொம்ப பிடிச்சிருக்கு. ஜாதகமும் நல்லாயிருக்கு. அதனால் பொண்ணோட அட்ரஸ் கொடுத்தீங்கனா தாங்க பொண்ணு பாக்க வருவோம். உங்களுக்கு என்ன கமிசனோ அத நீங்க வாங்கிக்கோங்க..
இப்பவே 1000 ரூபா G Pay பண்ணிடுறேன்..”
“மாப்ள தம்பி, ரொம்ப சந்தோசம். ஆனா..” இழுத்தான்.. “எதுவா இருந்தாலும் வெளிப்படையா பேசுங்க.”
“பொண்ணுக்கு சொந்த ஊர் கன்யாகுமரி. 2004ல வந்த சுனாமி அவங்க மொத்த குடும்பத்தையும் கடலுக்குள்ள கொண்டு போயிடுச்சு: திருச்சில இருக்கிற அவ பெரியம்மா தான் அவள வளத்து ஆளாக்கினது.
இப்ப அந்த பெரியம்மாவுக்கு யாரும் இல்ல. ‘இவள யாருக்காவது கட்டிக்கொடுத்திட்டா,
நான் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவேண்ணு..’எதிர் கேள்வி கேட்டு வர்ற வரன்களை எல்லாம் தட்டி கழிச்சி அனுப்பிடுறா அதனால்…..” புரோக்கர் இழுக்க,
“என்னங்க நீங்க, அந்த பெரியம்மா சொல்றது நியாயம் தான். அவங்கள பொண்ணுக்கு துணையா இங்க அனுப்பி வையுங்க. காலம் பூரா நாங்க அந்த பெரியம்மாவுக்கு சோறு போடுறோம்.’
சற்று அதிர்ந்து போன புரோக்கர், “மாப்ள தம்பி உங்களுக்கு பெரிய மனசு, இதுவரை பொண்ணு கேட்டு வந்த யாரும் இப்படி சொன்னதில்லை. உங்க நல்ல மனசுக்கு இந்த பொண்ணே அமையனும்னு சாமிகிட்ட வேண்டிக்கிறேன். ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கு. அந்த அம்மா கல்யாணம் பண்ணி போன ஊர் மதுரை. அந்த ஊர்ல சம்பந்தி வீட்ல நாள் கணக்கா உட்கார்ந்து சாப்பிடரத சங்கோஜமா நினைப்பாங்க.
அதனால் வேற ஒரு வழி செய்யலாம்.
அந்த அம்மாவுக்கும் வீடு, வாசல், புருசன், குழந்தை குட்டினு யாரும் இல்ல. அந்தம்மா பேருல ஒரு 2 லட்சத்தை FDல போட்டுடுங்க. அதுல வர்ற வட்டிகாசை வாங்கி சாப்பிட சொல்லிடுவோம். அந்தம்மா ஆயுசுக்கு பிறகு அந்த பணத்தை நீங்களே எடுத்துக்கலாம்.”
“2 லட்சமா..”
“என்ன தம்பி..2 லட்சம் ரூபாய்க்கு இவ்வளவு யோசிக்கிறிங்க? அவனவன் கல்யாணத்துக்கு பட்டு சேலையே 2 லட்சத்துக்கு எடுக்கிறான்.. நீங்க. .ரொம்பதான்..”
இடைமறித்து, “சரி சரி 2 லட்சம் அந்த அம்மா பேருல போஸ்ட் ஆபீஸ்ல போட்ருவோம்.. நாங்க எப்ப பொண்ணு பாக்க வர்றது.?”
“திருச்சில அந்த அம்மா வீட்ல வச்சு பொண்ணு பாக்கிறது அவ்வளவு சரிபட்டு வராது. அடுத்த வாரம் புதன் கிழமை நாங்க பொண்ண கூட்டிட்டு கும்பகோணம் வந்திடுறோம். நீங்க குடும்பத்தோட கும்பேஸ்வரர் கோயிலுக்கு வந்துடுங்க.
அங்க வச்சு பொண்ண பாத்துட்டு மத்த விசயம் பேசிக்குவோம். நீங்க 2 லட்சத்தை ரெடி பண்ணிடுங்க.”
“அப்பவே கொடுக்கணுமா,அதெப்படிங்க? மந்திரத்துல மாங்கா காய்க்குமா?”
‘ஐயோ, மாப்ள நான் அப்பவே கொடுங்கனு சொல்ல வரல. கல்யாணத்துக்கு முன்னாடி ரெடி பண்ணிடுங்கனு தான் சொல்ல வந்தேன்.”
“சரிங்க, நான் ரெடி பண்ணிடுறேன்.”
புதன் கிழமை எப்படா வரும் என்று அவள் போட்டோவையும் காலண்டரையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தான் பவள மணி.
அவனுக்கு புதன் கிழமை மிக தாமதமாக வந்தது போல இருந்தது.
ஸ்ரீமுஷ்ணத்திலிருந்து கும்பகோணத்திற்கு பஸ் ஏறினார்கள். 2 மணி நேர பயணம் முடித்து கும்பேஸ்வரர் கோயிலில் காத்திருந்தார்கள்
அம்மாவும், அவனும் கூடவே அவனது சித்தப்பாவும், சித்தியும்,5 பேர் கணக்குக்காக பக்கத்து வீட்டு பத்துவயது குழந்தையும்.
அரை மணி நேர காத்திருப்புக்குப் பின் மூவரும் வந்தனர். முதலில் அவன் கண்ணுக்கு பெண் தான் தெரிந்தாள். ஒரு தேவதை தேரிலிருந்து இறங்கி வருவது போல் அசைந்தாடி வந்தாள்.
மஞ்சள் வண்ண ரோஜா போல இருந்தவளை பார்த்து மெய் மறந்து போனான் பவளமணி.
அருகில் வந்து, விரித்து வைத்திருந்த சோலாப்பூர் போர்வையில் அமர்ந்தார்கள்.பரஸ்பரம் வணக்கம் வைத்துகொண்டனர்.
பவளமணிக்கு எதுவும் பேசத்தோன்றாமல் பொண்ணையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான். அவள் மெல்ல சிரித்தாள்.அவனை அவள் பார்த்த பின்பு சூரியகாந்தி பூ போல சற்றே தலை குனிந்து கொண்டாள்.
இந்த அழகுக்கு 2 லட்சம் என்ன.. என்கிட்ட இருக்கிற 2 ஏக்கர் நிலத்தையே இவ பேருக்கு எழுதி வச்சிடலாம். முணுமுணுத்தான். “சரிங்க மாப்ள.. உங்களுக்கு பொண்ண புடிச்சிருக்கா..” வெட்கத்தில் நெளிந்தான்.
சந்தோசம்..நாங்க புறப்படுறம். மற்றத போன்ல விவரமா பேசிக்குவோம்.”
“என்னங்க நீங்க..இவ்வளவு தூரம் வந்துட்டு சாப்பிடாம போனா என்ன அர்த்தம்.?’
“உங்களுக்கு எதுக்கு தம்பி வீண் செலவு?”
“இல்ல இல்ல சாப்பிட்டு தான் போகணும்.”
அடம் பிடித்து அருகில் இருந்த ‘பாலாஜி பவன்’ ஓட்டலுக்கு அழைத்து சென்று அனைவருக்கும் சாப்பாடு வாங்கி கொடுத்தான். அவளை இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாம் என்ற நட்பாசையில் தான்.
ஒரு வாரம் ‘ வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ” போல விருட்டென்று போனது..
புரோக்கரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.
அவனே போன் செய்தான்.
“ஹலோ.. பவளமணி பேசறன்..”
“ஹலோ ..சொல்லுங்க..”
“என்னங்க உங்கட்ட இருந்து போனே வரல.”
“அதுல ஒரு சிக்கல் பாருங்க..”
“இனி என்னங்க சிக்கல் இருக்கு..”
“அதுவா, வேறொரு இடத்தில் இருந்து அந்த பொண்ணுக்கு நல்ல வரன் வந்தது.உங்கள விட பெரிய இடம்.பொண்ணுக்கு அவங்க நிறைய நகை போடுறம்னு சொல்லிட்டாங்க.
மாப்புளையும் நல்ல கலரா இருக்கார்.”
“என்னங்க சொல்றீங்க”
“நான் என்ன சொல்றது தம்பி, எல்லாம் அந்த பெரியம்மா முடிவுதான்.”
“எல்லாமே நல்லபடியா பேசி முடிவு பண்ணிட்டு இப்ப வேற மாதிரி பேசினா என்ன அர்த்தம்? ” குரல் உயர்த்தினான்.
“சரிப்பா, உன்னால பொண்ணுக்கு 15 பவுன் நகை போட முடியுமா.?”
“15 பவுன் என்னங்க, எங்க அம்மாவோட 10 பவுனையும் சேர்த்து 25 ஆ போடுறேன். என்னால எதுவும் முடியும்ங்க..”
“சரி.. நான் உடைச்சு பேசிடுறேன். அடுத்த வாரம் ஆடி பிறக்குது. அதுக்கு முன்னாடி உங்களால கல்யாணத்தை பண்ணிட முடியுமா.?
எதைப்பற்றியும் யோசிக்காமல் “முடியும்” என்றான் பவளமணி.
“அப்ப சரி, கல்யாணத்தில நீங்க சொன்ன 25 பவுனும், நாங்க கேட்ட 2 லட்சமும் கொடுத்திடனும். எனக்கு புரோக்கர் காசு ஒரு பவுனுக்கு 2000 ரூபாய் கணக்கு போட்டு 50000 கொடுத்திடனும். கல்யாணம் ஆடம்பரமா வேண்டாம்..எதுக்கு மாப்ள உங்களுக்கு வீண் செலவு? அதனால் கும்பகோணத்திலேயே கோவில்ல கல்யாணத்தை முடிச்சிடுவோம். எங்க சைடுல 5 பேர், உங்க சைடுல ஒரு 10 பேர். போதும் மாப்ள.. தாலி கட்டிட்டு மத்தியான சாப்பாட அங்கேயே முடிச்சிட்டு உங்க ஊருக்கு போய்டுவோம். ஏன் உங்களுக்கு வீண் செலவு? சரியா..”
“சரி தாங்க ஆனா.. ஒன்னு சொல்லலாமா?”
“என்ன மாப்ள,”
“கல்யாணத்தை விருத்தாசலம் விருதகிரீஸ்வரர் கோயில் வச்சுக்கலாம்.. ஏன்னா அது எங்க ஊருக்கு ரொம்ப பக்கம். 20 கிலோ மீட்டர் தான். பக்கம்னா சொந்தக்காரங்க நிறைய பேர் வருவதற்கு வசதியா இருக்கும். கும்பகோணம் ரொம்ப தூரம் 55 கிலோ மீட்டர்.அதான் யோசிக்கிறேன்.”
“மாப்ள,பக்கத்துல கல்யாணத்தை வச்சுகிட்டு ஊருக்குள்ள யாரையும் கூப்பிடலெனா தப்பா நினைச்சுடு வாங்க.அதனால் தள்ளி இருக்கிற கும்பகோணத்தில் வைக்கிறோம்.எதுக்கு மாப்ள எல்லோரையும் கூப்பிட்டு சோத்தை போட்டுகிட்டு…. உங்களுக்கு எதுக்கு மாப்ள வீண் செலவு..சரிதான?..”
“சரிதான்.” என்று மெதுவாக தலை ஆட்டினான்.
திருமணம் கும்பகோணத்தில் இனிதே நடைபெற்றது.அனைவரும் ஸ்ரீமுஷ்ணம் திரும்பினர்.
இரவு மெல்ல மெல்ல எட்டிப்பார்த்தது. பவளமணிக்கு இருப்பு கொள்ளவில்லை.
“அப்புறம் மாப்ள.. சொன்னது போலவே பொண்ணுக்கு நகை போட்டுட்டிங்க.. பெரியம்மாவுக்கும் 2 லட்சம் கொடுத்தாச்சு. எனக்கு தான் இன்னும் புரோக்கர் பணம் 50000 வ.ர.ல…” மெதுவாக புரோக்கர் இழுக்க,
அதற்குள் அந்த மணப் பெண், “ஏங்க அவசரப்படறீங்க. நீங்க சொன்னதெல்லாம் செஞ்ச என் வீட்டுக்காரர், இத செய்ய மாட்டாரா? எங்களுக்கு செலவு நெறய ஆகிடுச்சு. அதனால் உங்சு புரோக்கர் பணத்தை கொஞ்சம் கம்மி பண்ணிக்கோங்களே.”
பவளமணிக்கு வாயெல்லாம் பல்.சிக்கென்று இருக்கும் இவள் சிக்கனமாகவும் இருக்கிறாளே. உள்ளுக்குள் சந்தோசம் கரைபுரண்டு ஓடியது:
“சரிங்க மாப்ள, வெள்ளிக்கிழமை அதுவுமா உங்க வீட்டுக்கு வந்த மகாலட்சுமியே சொல்லிட்டாங்க.. 10000த்தை கொறைச்சுட்டு 40000 கொடுங்க. அது போதும். சந்தோசமா வாங்கிட்டு நானும் பெரியம்மாவும் கிளம்புறம், வர்ற ஞாயிறு நாங்க திரும்ப வாறோம். வந்து உங்களை திருச்சிக்கு விருந்துக்கு கூட்டிட்டு போறோம் “
கைகூப்பினார்கள்..
சரி போயிட்டு வாங்க..”அவர்களை வழியனுப்பி வைத்தனர். அவன் எதிர்பார்த்ததைவிட அந்த இரவும், அடுத்தடுத்த பகலும் இரவும் அவனுக்கு இனிதாய் அமைந்தது.
மூன்றாம் நாள். அன்று ஞாயிறு.
“உங்க வீட்ல இருந்து வருவாங்கள்ள..நான் போய் மட்டன் வாங்கி வர்றேன்.”
“சரி போயிட்டு வாங்க.. சாரி, சாரி,. கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் பெரியம்மா பேசினாங்க.அவங்க திருச்சியில் இருந்து நேரா கும்பகோணம் வந்துடுவாங்களாம்.
நாம ரெண்டு பேரும் சேர்ந்து கல்யாண மாலையை எடுத்துட்டு கும்பேஸ்வரர் கோயிலுக்கு போய் அங்க இருக்கிற ஸ்தல மரத்தில் போட்டுட்டு, குளத்துல குளிச்சிட்டு வந்துடனுமாம். இது எங்க பெரியம்மா, நமக்கு நல்லபடியா கல்யாணம் நடக்கனும்னு வேண்டிக்கிட்டாங்களாம்.”
“ஓ அப்படியா.”
“நேர்த்தி கடன் முடிச்சிட்டு நாம எல்லாரும் சேர்ந்து திருச்சி போயிடுறோம்.
“ஒரு வாரம் இந்த புது மாப்பிளைக்கு தினம் தினம் கறி விருந்து தான்.”
“வெறும் கறி விருந்து மட்டும் தானா?” கண்ணடித்து இதழ் நனைத்தான்.
“ம்.. ம்…எல்லாம் தான்..ஜமாய்ச்சுடலாம்..”
அனைத்து நகைகளையும் மனைவிக்கு அணிவித்து அழகு பார்த்தான். மனைவியுடன் மாமியார் வீட்டு விருந்துக்கு போக மகிழ்ச்சி பொங்க பஸ் ஏறினான்.
கும்பேஸ்வரர் கோயிலுக்குள் நுழைந்த போது அங்கே தயாராய் புரோக்கரும், அவளது பெரியம்மாவும் நின்றுகொண்டு இருந்தனர்.
சாமி கும்பிட்டுவிட்டு மங்களாம்பிகை சன்னதி முன் அனைவரும் அமர.. புரோக்கர் பெரியம்மாவை மட்டும் அழைத்து, அவர்களிடம் மாலையை வாங்கிகொண்டு எதிரே இருக்கும் பொற்றாமரை குளத்தில் போட்டு விட்டு வருவதாக சொல்லி புறப்பட்டு போனார்.
“சரி” என்று
புது தம்பதிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து ரசித்துக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர்.
5 நிமிடங்கள் ஆனது. 10 நிமிடங்கள் ஆனது.. ஆனால் அவர்கள் வரவில்லை..
பவள மணி தன் மனைவியை அழைத்துகொண்டு குளம் எங்கே இருக்கிறது என்று தேடிப் போனான். அன்று மகம் நட்சத்திரம். ஆதிகும்பேஸ்வரருக்கு அன்று விசேஷம் என்பதால் கோவிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. குளத்திற்கு சென்று பார்த்த போது அங்கே அவர்கள் இல்லை. உடனே அவனது மனைவி சொன்னாள், ‘ஒருவேளை நாம் உட்கார்ந்திருந்த அம்பாள் சன்னதிக்கு வேறு வழியில் திரும்பி போயிட்டாங்களோ.”
“இருக்கலாம், நீ இங்கேயே இரு. நான் அம்பாள் சன்னதிக்கு போய் பாத்துட்டு வறேன்.”
“பத்திரமா இருப்பா.. நகையை முந்தானைய வச்சு மறைச்சுக்கோ..” கூட்டத்திற்குள் புகுந்து அம்பாள் சன்னதிக்கு வந்தான். அங்கேயும் அவர்கள் இல்லை.மீண்டும் குளத்தின் படிக்கட்டுக்கு வந்தான். அங்கே அவனது மனைவியும் இல்லை.
வியர்வை ஆறு பெருக்கெடுத்து அவன் தேகம் முழுவதும் பாய்ந்தோடியது. பயத்தில் கை கால்கள் நடுங்கின. பதறிப்போனான்.கோவிலுக்குள் உள்ளேயும் வெளியேயும் தேடிப்பார்த்தான்.அவர்களை காணாமல் கண் கலங்கினான்.
கோவில் நடை சாத்தினார்கள்… அனைவரும் வெளியேறினர் அவனும் வெளியேறி, ஒருவேளை மகாமக குளத்திற்கு போய் இருப்பார்களோ என்று நினைத்து 1.5 கிலோ மீட்டர் உச்சி வெயிலில் நடந்தே சென்றான். குளத்தை ஒரு வட்டம் அடித்தான். அங்கேயும் அவர்கள் இல்லை.
சரி போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் கொடுக்கலாம் என நினைத்து ஆட்டோ காரரிடம் பேரம் பேசாமல் 200 ரூபா கொடுத்து 2 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்றான்.
இன்ஸ்பெக்டர் அம்மா சாப்பிட போய் இருக்காங்க. கொஞ்சம் காத்திருக்க சொல்லி மரத்தடி மேடையை காட்டினார்கள். பசி மயக்கத்தில் பல்வேறு நினைவுகளோடு பரிதவிப்பில் காத்திருந்தான்
3.30 மணிக்கு, டே, தம்பி, இன்ஸ்பெக்டர் அம்மா வந்துட்டாங்க. வாப்பா என்று அழைத்தார் ஒரு கான்ஸ்டபிள்.
அதே நேரம் மயிலாடுதுறையிலிருந்து வரும் ஜன சதாப்தி எக்பிரஸ் ரயிலில் கும்பகோணத்தில் இருந்து கோயம்புத்தூர் செல்ல, புரோக்கர், பெரியம்மா, புதுமணப்பெண் மூவரும் ஏறினர்.
மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து ஒரு மாதம் கழிந்த பின், இன்ஸ்பெக்டரிடம் இருந்து பவள மணிக்கு அழைப்பு வந்தது. கும்பகோணம் விரைந்தான்.அங்கே காவல் நிலையம் முன்பு பெரும் கூட்டம் ஆவேசத்துடன் சலசலத்துக்கொண்டு இருந்தது. “பவளமணி யாருப்பா”
“அம்மா நான்தான்..”
“உள்ள வா.. வந்து அவ தான் உன் பொண்டாட்டியானு பாரு” உள்ளே சென்றவன் ஒரு நிமிடம் உறைந்து போனான்.
“எதுக்குமா இவள் இவ்வளவு அடி அடிச்சிருக்கீங்க..”
“கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு..நீ எதிர் கேள்வி கேட்காதே..புரியுதா..” இன்ஸ்பெக்டர் எகிறினார்.
“ஆமாம்மா, இவதான் என் மனைவி மகிளம்பூ.”
“எது ‘மகிளம்பூ’வா..
“ஏன்டி, உன் பேர் ‘தாழம்பூ’னு சொல்லிட்டு தாழையூத்துல ‘சுடலமுத்து’ ன்ற ஒருத்தன கல்யாணம் பண்ணியிருக்க. கோயம்புத்தூர் போய் ‘தாமரை’னு பேர் மாத்திட்டு ‘குமரேசனை’கல்யாணம் பண்ணி ‘மரகத பாண்டி’ னு ஒருத்தன ஏமாத்திருக்க..அடுத்து மதுரை ல ‘மரிகொழுந்து’ன்ற பேர்ல கல்யாணம் பண்ணி அவன்ட்டயும் நகை, பணம் பறிச்சிட்டு தலைமறைவாயிட்ட. அப்புறமா முஷ்ணத்துல ‘மகிளம்பூனு பேர் மாத்திட்டு இதோ நிக்கிறானே, இந்த பவள மணிய கல்யாணம் பண்ணி இந்த புரோக்கர் கூட சேர்ந்து நகை பணம்னு ஏமாத்திட்டு எஸ்கேப் ஆயிட்ட..
இப்ப கடலூர் திருவந்திபுரத்தில் நித்தியகல்யாணி என்ற பேர்ல மோகச்சந்திரனை ஏமாத்த பார்த்த. ஆனா அதுக்கு முன்னாடி தமிழ்நாடு பூரா உன்மேல நெறைய புகார் இருந்ததனால், எல்லா ஸ்டேஷன்களையும் அலர்ட் பண்ணி வச்சிருந்தோம். நல்லவேளை இன்ஸ்பெக்டர் வைத்தியனாதன் உங்களை கொத்தா அள்ளிட்டு வந்து எங்ககிட்ட ஒப்படச்சுட்டார்.”
‘ஆமா, உண்மையிலேயே உன் பேர் என்னதாண்டி? சொல்லுடி என்று ஒரு மிதி மிதித்தார் அந்த லேடி இன்ஸ்பெக்டர்
அவ்வளவு அடி உதை வாங்கியும் அவள் அழவில்லை.அவள் கண்களில் இருந்து கண்ணீரும் வரவில்லை.
“சொல்லுடி,”
மீண்டும் உதைத்தார். “மல்லிகா” என்று மெதுவாக வாய் திறந்தாள்.
“நீ ஏமாத்துன அத்தனை பேரும் station வாசல் ல வெறியோட காத்துகிட்டு இருக்காங்க. கொஞ்சம் விட்டா, உன்னையும் புரோக்கரயும் அடிச்சு கொண்ணுடுவாங்க. உண்மையை சொல்லு. அவ்வளவு நகைகளையும் பணத்தையும் எங்க வச்சிருக்க?”
“எல்லாத்தையும் செலவு பண்ணிட்டோம்.”
“என்டி, அவ்வளவுமா செலவு பண்ணிட்டீங்க.
“மொத்தம் எவ்வளவு தெரியுமா ? 60 சவரன் நகை, 4 லட்சம் ரொக்கம்.”
“இல்ல மேடம், அவ்வளவு நகை, பணம் நாங்க ஏமாத்தல்ல. complaint கொடுத்தவங்க அதிகமா சொல்றாங்க.”
“பொய் சொல்லாதேடி தே..யா..”
“சாமி சத்தியமா சொல்றேன்மா. இப்ப என்கிட்ட எதுவுமே இல்லை. என்ன இருந்ததோ அதை உங்ககிட்ட கொடுத்திட்டோம்.
“மறுபடியும் பொய் சொல்றியா..”
மீண்டும் ஷூ காலோடு மிதித்தார்.
‘நீங்க அடிச்சாலும் சரி, மிதிச்சாலும் சரி,இல்ல ஜெயில் ல போட்டு கொண்ணாலும் இது தான் நிஜம்.”
அவள் கதறி அழுதது எந்த காக்கி சட்டைக்கும் கேட்கவில்லை. வெளியே ஒரே சத்தம். இன்ஸ்பெக்டர் வெளியே வந்தார்.
“இங்க பாருங்கப்பா.. அவள நல்லா விசாரிச்சு பார்த்துட்டோம். இப்ப அவகிட்ட எதுவுமே இல்ல.
“அவள் நாங்க கோர்ட்ல ரிமாண்ட் பண்ண போறோம். கண் டிப்பா அவளுக்கு 7 வருசம் தண்டனை கிடைக்கும்.”
“அப்ப, எங்ககிட்ட இருந்து அவ ஏமாத்துன நகை, பணத்துக்கு பதில் என்னம்மா சொல்ல போறீங்க ?.”
“நீங்க ஏமாறமா அவளா எப்படி ஏமாத்துவா?
“உங்களுக்கு அறிவு வேண்டாமா?. ஒரு புரோக்கர் வந்து பொண்ண கூட்டிட்டு வற்ரானா …நீங்க உஷாரா இருக்க வேண்டாமா? அவங்க எங்க இருக்காங்க, வீடு எங்க ஆள் எப்படின்னு அக்கம் பக்கம் விசாரிக்க மாட்டிங்களா? வெள்ளத்தோலை பார்த்து எதுவும் விசாரிக்காம நீங்களா போய் விழுந்திட்டு, அவ ஏமாத்திட்டானு சொல்ல உங்களுக்கெல்லாம் வெட்கமா இல்ல!?
உங்களோட 5 பவுன், 6 பவுன், 5000, 10000 பணத்தை மீட்குறதுக்கு லாயர் வச்சு செலவு பண்ணி கோர்ட்டுக்கு போகப்போறீங்களா? தாராளமா போயிக்கலாம் போங்க. . அவன் அவன் ஏரியா போலீஸ் ஸ்டேசன் ல போய் புகார் கொடுங்க.எந்த ப்ரயோஜனமும் இல்ல.10 பைசா தேராது. போங்க.. இப்ப இடத்த காலி பண்ணுங்க.”
கூட்டம் முணுமுணுத்தபடி மெதுவாக களைந்து போனது. பவளமணி மட்டும் நின்று இருந்தான்.
புரோக்கரையும், அவளையும் ஜீப்பில் ஏற்றினர்.
சற்று தொலைவில் நின்று கொண்டு இருந்த பெரியம்மா ஜீப்பின் அருகில் வந்து ” மல்லிகா, இந்தா உன் கொழந்தை.. அதை என்னால பாத்துக்க முடியாது. நீயே ஜெயில்ல வச்சு வளத்திக்கோ..இந்தா பிடி” என்றாள்.
மல்லிகா மட்டும் அதிரவில்லை., அருகில் நின்ற பவள மணியும் அதிர்ந்து போனான்.
“எம்மா மல்லிகா, இந்த நன்றி கெட்ட கிழவிக்கா இன்ஸ்பெக்டர் அம்மாட்ட உன்கிட்ட இருந்த நகை பணத்தை கொடுத்து கேஸ்ல இருந்து உன் பெரியம்மா பேர வெளிய எடுத்துவிட்ட..”
‘நன்றி கெட்ட உலகமடா நாராயணா’ என்று ஜீப் டிரைவர் தலையில் அடித்து கொண்டார்.
அடி வாங்கி கன்னம் வீங்கியிருந்த மல்லிகா அழுதுகொண்டே தன் குழந்தையை வாங்கிகொண்டாள். குழந்தையும் அழுதது.பெரியம்மா திரும்பி பார்க்காமல் ஓட்டமும் நடையுமாக இடம் பெயர்ந்தாள்.
இன்ஸ்பெக்டர் கேட்டார். “ஏன்டி, ஒரு 4 வயசு பொண் குழந்தைய வச்சுகிட்டு நீ இத்தன கல்யாணம் பண்ணி ஏமாத்திட்டு இருக்கியே..
இந்த பிஞ்சு குழந்தை என்ன மன நிலையோட இந்த சமுதாயத்தில் வாழும்? இல்ல இந்த சமுதாயம் தான் அவளுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கைய கொடுத்திட முடியுமா?
தப்பு மேல தப்பு பண்ணீட்டீயே மல்லிகா..”
இதை கேட்ட பவளமணி, ஜீப் அருகில் வந்து அவளிடமிருந்து அவள் குழந்தையை வாங்கிக்கொண்டான்.
உதடு கிழிந்து எதிரில் அமர்ந்து இருந்த புரோக்கர் அவனை ஆச்சரியமாக பார்த்தான்.
இன்ஸ்பெக்டர் அம்மாவும் அவனை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு,
“பவள மணி, இந்த குழந்தையை உன் குழந்தை போல பத்திரமா பாத்துக்கணும். எனக்கு சொந்த ஊர் ஸ்ரீமுஷ்ணம் பக்கத்துல இருக்கிற விளைந்தை தான். எப்பெப்போ ஊருக்கு வர்றனோ, அப்பெல்லாம் இந்த குழந்தைய நான் வந்து பார்ப்பேன்.சரியா..”
தலையாட்டிக் கொண்டே சொன்னான்.
“இது அவ குழந்தையா இருக்கலாம். ஆனா இனிமே இவ என் குழந்தை,”
தோள்ல போட்டுகொண்டு ஒரு கையால் அனைத்து மறு கையால் தட்டி கொடுத்தான்.
மல்லிகா நன்றிப் பெருக்கோடு,
கஷ்டபட்டு தன் இரு கைகளையும் தூக்கி பவளமணியைப்பார்த்து கும்பிட்டாள்.
காலம் எல்லோருக்கும், எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும் என்பதை மல்லிகா காலம் கடந்து உணர்ந்து கொண்டாள்.
காவல் ஜீப் கும்பகோணம் கோர்ட்டை நோக்கி புறப்பட்டுப் போனது.

இரா.ம.செளந்தர்/பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்.. – விருட்சம் நாளிதழ்

One Comment on “இரா.ம.சௌந்தர்/எப்பதான்டா கல்யாணம்..?”

Comments are closed.