
அன்று அதிகாலை ஐந்து மணி தள்ளாடியபடி வந்த மாரியப்பன் தன் வீட்டு வாசல் கதவைத் தட்டினான். “கீதா… கீதா… தொறடி…கீதா…” கத்திப் பார்த்தான்..
ஒரு வழியாய் அவன் கத்தி ஓய்ந்த பிறகு பத்து நிமிடம் கழித்து கதவைத் திறந்தாள் கீதா. அவனை அழுத்தமாய் முறைத்தாள் “உனக்கு தினமும் இதே பொழப்பா போச்சு…”
காலையில வேலைக்குப் போறேனு 10 மணிக்கு வீட் டை விட்டு கிளம்பி கிண்டி எஸ்டேட்க்கு போறே. ஆனாவேலைக்கு போறதில்ல… நேரா டாஸ்மாக் பாருக்கு போயி குடிச்சு பார் கதவை சாத்தினதுக்கு அப்புறம் தள்ளாடி தள்ளாடி வந்து உன் பிரண்டோட மெக்கானிக் சாப் வாசல்ல கழுதமதிர் உருண்டு பிரண்டு போதை தெளிஞ்சதுக்கு அப்புறம் நினைப்பு வந்து அதிகாலை 4 மணி, 5 மணிக்கு கதவைத் தட்டி என் உயிர வாங்குற. இதெல்லாம் ஒரு பொழப்பா… நீ மனுஷனா… என்ன ஜென்மமோ… என்ன இழவோ……..”
“கீதா… அப்படி கத்தாத கீதா… நான் ஏன் குடிக்கிறேன். உன்னால் தான்,… நான் செத்து போயிருப்பேன்… ஆனா நம்ப இரண்டு குழந்தைக்காகத் தான் என் சாவ நான் தள்ளிப் போட்டி இருக்கேன். உனக்கென்ன நீ சந்தோஷமா இருக்க… நான் தினம் தினம் வெந்து நொந்து செத்திகிட்டு இருக்கேன்; விடு..” உள்ளே நுழைந்தவன் தன் அழுக்கு உடைகளை கரைத்தி விட்டு லுங்கி, பனியனுக்கு மாறினான்.
உள்ளே இருக்கும் அறையில் இரண்டு குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்தனர், அவளைத் தேடினான்.
அவள் சமையற்கட்டிலிருந்து மண்ணெண்ணெய் கேனோடு ஹாலுக்கு வந்தாள்.
மாரியப்பன் அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தான். கீதா என்ன பண்றே….”
“இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும்…”
“என்ன முடிவு தெரியனும்..”
“நீ பன்ற அட்டூழியம் தினம் தினம் அதிகமாயிட்டே போகுது…”
“அப்படி என்னடி பெரிசா பண்ணிட்டேன். எல்லாம் உன்னாலதான்”
*இங்க பாரு… தினம் தினம் அதையே சொல்லிட்டு என்னைய டார்ச்சர் பண்ணக்கூடாது.”
” நீ மட்டும் என்னவாம்… பழிவாங்குறேன்ற என் வாழ்க்கைய நாசமாக்கிட்டு.”
“உன்னைப் பழிவாங்கல… உனக்கு ஒரு நல்ல புருஷனாகத்தான் சம்பவம் நடக்குற வரைக்கும் நான் வாழ்ந்துகிட்டிருந்தேன். ஆனா நீ எனக்கு பண்ணினது பெரிய துரோகம். உன்னைக் கொல்லவும் முடியாம
நானும் சாகவும் முடியாம என் குழந்தைகளுக்காக மனசுல போட்டு புதைச்சிகிட்டு தினம் தினம் குமுறிக்கிட்டிருக்கேன். “
“நான் பண்ணினது துரோகம்னா, பொய் சொல்லி நீ என் வாழ்க்கையை சீரழிசி ட்டேயே… அது எந்த வகையில நியாயம். “
“நீ செஞ்சது துரோகம் இல்லனா நான் உனக்கு பண்ணினது துரோகம் இல்ல. ஒழுங்கா வேலைக்குப் போறதில்ல… சம்பளத்தையும் தறதில்ல… எத்தனை நாளைக்கு தான் என் பிள்ளைகளை கூப்பிட்டு 5 கி.மீக்கு அப்பால உள்ள எங்க அம்மா வீட்டுக்குப் போயி சோத்துக்கு நீக்கிறது… என்னால முடியல… அதனால் முடிவுக்கு வந்துட்டேன்… இப்ப நான் சாகப் போறேன்..
உன் ரெண்டு குழந்தைகளையும் வளர்த்து விடுவியோ இல்ல சாக அடிப்பியோ.. எனக்கு அதப்பத்தி கவலையில்ல… நான் இப்ப சாகப் போறேன் … என்றவள் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் திறந்து தன் தோளிலிருந்து கொட்ட ஆரம்பித்தாள்.
சிதறிய துளிகள் மாரியப்பன் பனியனிலும், லுங்கியிலும் படர்ந்தது. நீப்பெட்டியிலிருந்து தீக்குச்சியை உறுவினாள்…
“ஐயோ கீதா… வேணாண்டி…’
“டே…. என்னை இன்னொரு தடவை டி போட்டு கூப்பிட்ட உன் மேலயும் ஊத்தி உன்னைக் கொளுத்திடுவேன்… போ.” கத்தினாள்…
சிலையாய் நின்றான். சில வினாடிகளில் தீக்குச்சியை உரசினாள்.. அவள் கண்களுக்குள் அவ்வளவு வெறி…. ஆத்திரம்… உக்கிரமாய் நின்றாள்… தீ பற்றிக் கொண்டது…
அலறிய மாரியப்பன் கீதாவைக் காப்பாற்ற அவளைக் கட்டிப் பிடித்தான்.
“சீ… நாயே…” அவனைத் தள்ளி விட்டாள்… கீழே விழுந்தவனின் லுங்கியிலும் தீப்பற்ற தொடங்கி விட்டது.
அவள் மீது எரியும் தீயை அணைப்பானா…. அல்லது அவன் லுங்கியில் பற்றி எரியும் நெருப்பை அணைப்பானா?
லுங்கியை மடித்து கட்டிக் கொண்டு அவள் மேல் தண்ணீர் ஊற்றிவிடலாம் என நினைத்து சமையல் அறைக்குள் செல்ல சமையல் அறை முற்பட்ட போது சமையல் அறை வாசலை அடைத்துக் கொண்டு எரிந்து கொண்டிருந்தாள். அவன் திரும்ப பெட்ரூமிற்குள் ஓடி போர்வையை எடுத்து வந்து அவள் மேல் போர்த்தி விட்டான். பொத்தென்று கீழே விழுந்தாள்.
அப்போது தான் அவனது மர்மப்பிரதேசங்களில் தீ படர்வதை உணர்ந்தான். லுங்கியை கழட்டி தூர எறிந்தான். தன்மேல் தண்ணீர் ஊற்றிக் கொண்டான். வேறு லுங்கி கட்டிக் கொண்டான்.
கண்களில் நீர் வழிய அய்யோ… அம்மா என்று கதற… பக்கத்து வீடுகளிலிருந்து ஆட்கள் வர ஆரம்பித்து விட்டார்கள்… குழந்தைகள் இருவரும் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
ஒருவன் 108க்கு போன் செய்து விலாசம் சொல்ல… அடுத்த 15வது நிமிடத்தில் வெள்ளை நிற வேன் வந்தது. இன்னொருவன் அவளது அம்மா வீட்டிற்கு தகவல் சொல்ல, உறவினர்களோடு வந்தவர்கள் அவளது நிலையைப் பார்த்து, மாரியப்பனை சரமாரியாக அடி வெளுத்து விட்டார்கள். ஆம்புலன்ஸ் அவளை மட்டும் ஏற்றிக் கொண்டு கீழ்ப்பாக்கம் நோக்கி விரைந்தது.
மாரியப்பனை கைத்தாங்கலாக இருவர் ஆட்டோ பிடித்து அதே KMC-க்கு அனுப்பி வைத்தனர்.
‘தீக்காயங்கள் பிரிவு’ மகளிர் வார்டில் கீதாவும், ஆண்கள் பிரிவில் மாரியப்பனும் சேர்க்கப்பட்டனர். இருவருக்கும் தீவிர சிகிக்சை மேற்கொள்ளப்பட்டது.
நீதித்தரப்பும், போலீஸ் தரப்பும் மருத்துவர் ஒருவருடன் விசாரணையைத் தொடங்கியது. மாரியப்பன் வாக்குமூலம் கொடுத்தான்.
“ஐயா… என் பேரு மாரியப்பன்.. கள்ளக்குறிச்சி மாவட்டத்துல ஒரு குக்கிராமம். நான் +2 வரை படிச்சிருக்கேன். மேற்கொண்டு காலேஜ் போயி படிக்க வசதி இல்லாததனால் வேலை தேடி மெட்ராஸுக்கு போகலாம்னு நான் மெட்ராஸ் வந்தேன். 15 வருஷத்துக் முன்னால.
நான் மெட்ராஸுக்கு வந்தத எங்க வீட்ல யார்கிட்டயும் சொல்லாம சேலம் போயி டிரெயின் ஏறி வந்துட்டேன். அந்த சமயத்துல எங்க ஊர் பண்ணையார் (அவர் ஊர் தலைவரு வேற்) அவரோட மூத்த பொண்ணு எங்கூட ஸ்கூல்ல ஒண்ணா படிச்சது. அதிகாலைல எங்க போச்சுனு தெரியல… நான் யாருக்கும் தெரியாம சேலத்துக்கு பஸ் ஏறும் போது அதுவும் பஸ் ஸ்டாப்ல நின்னிட்டு இருந்ததை யாரோ பார்த்து அவங்கப்பாட்ட சொல்லியிருக்காங்க. அதைக் கேட்ட அவங்க அப்பா நான் கூட்டிட்டு ஓடிட்டேன்னு கோபப்பட்டு எங்க அப்பா வீரணனை ஊருக்கு மத்தியில இருக்கிற சாவடி லைட் கம்பத்துல கட்டி வச்சிட்டாரு. ஆனா அந்தப் பொண்ணு யார்கூட ஓடினானு அன்றைக்கு யாருக்கும் தெரியாது.
“உன் பையன் நாளை விடியுறதுக்குள்ள என் பொண்ண கூப்பிட்டு வந்து இங்க விட்றனும். இல்ல உன்னை நாளைக்கு மதியம் உச்சி வெயில்ல உயிரோடு கொளுத்திப்புடுவேன். மிச்சச் சோறயும் எச்சிச் சோறயும் வாங்கித் திண்ற நாயுக்கு பெரிய வீட்டு பண்ணையார் சம்பந்தம் கேட்குதாடா…?” னு பெரிய சாதி வாலிபப் பசங்க எல்லாம் எங்க அப்பாவை அடிச்சு துவைச்சிட்டாங்க.
முதல் நாள் காலையில கட்டி வைச்ச எங்க அப்பாவை மறுநாள் காலை வரை அவுத்து விடல..
பொழுது விடிந்ததும் பண்ணையார் மக மாலையும் கழுத்துமா புதுப் புருஷனோட போயி அவ வீட்ல நின்னுட்டா. அந்தப் பையனும் அவங்க ஜாதிதான். இருந்தாலும் அவனை அடிக்க
பாய்ந்தப்போ. கார்ல இருந்த பையனோட சொந்தக்காரங்க எல்லாம் இறங்கி சமரசம் பேசி ஒரு வழியா சமாதானம் ஆயிட்டாங்க.
அப்புறமா எங்கப்பா ஞாபகம் வரவே சாவடி வந்து கயித்தை அவுத்து விட்டுட்டு “வீரணா… எதுவும் மனசல வச்சிக்காதப்பா ஏதோ நடக்கக் கூடாதது நடந்து போச்சுனு” பண்ணையார் தன்மையா சொல்ல…
“எதுக்கு மாமா அவன் கிட்ட போயி பணிவா பேசிகிட்டு..
இது கீழத்தெரு காலணிப் பசங்களுக்கு ஒரு பாடமா இருக்கட்டும். அப்பதான் அவனுக பயந்து நடப்பானுக… இனி எவனுக்கும் அத்து மீறனும்னு ஆசை வரக்கூடாது.” ஒரு திமிரு பிடிச்ச பண்ணையாரோட உறவுக்கார பையன் சொல்லியிருகான்.
எங்கப்பாவுக்கு உடம்பில தெம்பில்ல… ஒரு நாள் முழுக்கப் பட்டினி. நைட்டு பேஞ்ச மழையில வாயத் தொறந்து மழத் தண்ணியை குடிச்சதனால கொஞ்சம் உசுரோட இருந்திருக்காரு.
எங்க அம்மா, எங்க அப்பாவை கள்ளக்குறிச்சி கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில சேர்த்துட்டு நான் எங்க போனேனோ என்ன ஆனேனோனு கவலைப்பட்டு மனசு உடைஞ்சு போயிருந்தாங்க.
அந்த நேரத்துல எங்க ஊர் கடையில உள்ள P.C.O.க்கு நம்பர் போட்டு நான் பேச, அந்த கடைக்காரர் அண்ணா எல்லா விசயத்தையும் எங்கிட்ட போட்டு உடைச்சுட்டாரு.
பதறிப் போயி சாயங்காலமே பஸ் புடிச்ச விடியற்காலையில வீடு வந்து சேர்ந்தா… ஒரே அழுகைச் சத்தம்..
என்னைத் தூக்கி வளர்த்த எங்க அப்பா செத்துப் போயிட்டாருங்க அய்யா…அழுதான் மாரியப்பன்.
நீதிபதியே ஒருநிமிடம் கண் கலங்கி விட்டார். ஆசுவாசப் படுத்த அவனுக்கு கொஞ்சம் நேரம் கொடுத்து விட்டு வாக்கு மூலத்தை தொடரச் சொன்னார்.
எல்லாக் காரியமும் முடிஞ்சு நான் மெட்ராசுக்கு புறப்பட தயாரானப்போ, எங்க அண்ணனுக இரண்டு பேரும் போக வேணாம்… இங்கேயே விவாசயம் பார்த்து புழைச்சுக்கோனு சொல்ல, என் அண்ணிகளும் அதையே தான் சொன்னாங்க. நான் கேட்கல… எனக்குள்ள புகைஞ்சிட்டிருந்த நெருப்பு, என்ன போ.. போ..னு சொல்ல யார் பேச்சையும் கேட்காம, மெட்ராஸுக்கு வந்துட்டேன்.
கிண்டி எஸ்டேட்ல ஒரு கம்பெனில வேலை கிடைச்சது. தொழிலாளியாத் தான் வேலைக்கு சேர்ந்தேன். என்னோட கையெழுத்து அழகா இருக்கும். கொஞ்சம் புத்திக்காரன். சீக்கிரமே அங்கே ஒரு வருஷத்தில சூப்பர்வைசரா ஆகிட்டேன். எங்க மொதலாளி எனக்கு டிப்ளமோ இன்ஜினியருக்கு இணையா சம்பளம் கொடுத்தாரு.
என் கூட வேலைபார்த்த ஒருத்தனோட, உறவுக்கார பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருந்த நிலையில கல்யாணம் தள்ளிப் போயிட்டே இருந்தது. ஒருநாள் என்கிட்ட என்னைப்பற்றி விசாரிச்சான். எனக்கு அவனைப் பத்தி நல்லா தெரியும். அவன் எங்க ஊர் பண்ணையாரோட ஜாதி தானு…
நான் என்னைப் பற்றி எந்த உண்மையையும் சொல்லல. எனக்கு அம்மா, அப்பா, கூட பிறந்தவங்க யாரும் இல்ல. அத்தை தான் கிராமத்துல வளர்த்தாங்க. அத்தையும் செத்து போயிடுச்சு… அதனால தான் நான் வேலைதேடி மெட்ராஸுக்கு வந்துட்டேன், நானும் உங்க ஜாதிதான் என்று அவன் நம்பும்படியாக அழுத்தமாக சொன்னேன்.
அவன் ஒருவாரம் கழித்து பெண்ணுடைய அம்மா, அப்பாவிடம் கலந்துபேசிவிட்டு முடிவு சொல்வதாக சொல்லி விட்டு போனான்.
அவர்கள் யோசித்திருக்கிறார்கள். ஊர், பேர் தெரியாதவனுக்கு எப்படிப்பா? என்று…
பையனுக்கு எந்த விதமான கெட்ட பழக்கமும் இல்லை. கைநிறைய சம்பளம் வாங்குறான் நாத்தனார், மாமியார்னு குடும்ப சிக்கல்கள் எதுவும் இல்ல. அதுவும் இல்லாம அவன் நம்ம ஜாதிக்காரப் பய. அதனால நம்ம பொண்ண மாரியப்பனுக்கு தாராளமா கட்டி வைக்கலாம். அவருக்கு நான் கியாரண்டினு நம்மாளு ஸ்ட்ராங்கா சொல்லிட்டான்.
ஒரு நல்ல நாள் பார்த்து எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க, நான் எங்க சைடுலயிருந்து யாரையும், கல்யாணத்துக்கு கூப்பிடல். கூப்பிட்டு, அவங்க வந்தா ஜாதிப்பிரச்சினையில கல்யாணம் நின்னுடுமே. வேலையும் போயிடும், அதனால நான் எல்லாரையும் மறைச்சிட்டேன் மறந்திட்டேன்…
எங்க வாழ்க்கை நல்லாதான் போயிட்டு இருந்துச்சு… இரண்டு குழந்தைகளும் பிறந்து ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சிட்டாங்க. அந்த தைரியத்தில எங்க அம்மாவ இங்க கூப்பிட்டு வந்துட்டேன்.
பாவம் கடைசி காலத்துல அவங்க பேரப் பசங்கள பாத்து சந்தோஷப்படட்டுமேனு ..
அவங்க தோற்றத்தைப் பார்த்ததுமே என் வீட்டுக்காரி கண்டு பிடிச்சிட்டா. என்னா வேலைக்கு போவீங்கனு என் மனைவி கேட்க, எங்க அம்மா நாத்து நடுவ போவோன்னு சொல்ல… நீங்க என்ன ஜாதின்னு கேட்டிருக்கா… எங்க அம்மா கிராமத்து ஆளு உண்மையை சொல்லிருச்சு…
அன்னைக்கி தான் அவளோட சுயரூபத்தை பார்த்தேன். என்னோட அம்மா என் வீட்ல அவளோட சாதி சங்க தலைவரோடு போட்டோ மாட்டியிருந்தத பார்த்துவிட்டு, “அடப்பாவி தப்பு பண்ணிட்டியே” மார்ல அடிச்சி அழுதுட்டு என் வீட்டை விட்டு ஆவேசமாக போயிட்டாங்க. நான்தான் அவங்களுக்கு சமாதானம் சொல்லி கூடவே போயி ஊருக்கு பஸ் ஏத்திவிட்டு வந்தேன்.
எங்க அம்மா வந்திட்டு போனதிலிருந்து அவ என் கூட முகம் கொடுத்து பேசறதில்ல… சாப்பாடு போடுவா… ஆனா தட்டை கழுவி தனியா வச்சுடுனு சொல்லிடுவா… அவ்வளவு ஏன் அதக்கப்புறம் இதுவரை ஒரு நாள் கூட அவளத் தொட என்னை அனுமதிச்சதில்லை.
எங்களுக்குள்ள எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லாமலேயே ஒரு வருஷம் ஓடிப் போயிடுச்சு.. நான் வாரவாரம் எங்க ஊருக்குப் போயி எங்க அம்மாவை பாத்துட்டு வந்தேன். விரக்தியில லேசா குடிக்க ஆரம்பிச்சேன். அக்கம் பக்கத்துல என் வீட்டுக்காரிய பத்தி தப்பா பேசுறாங்கனு ஒரு அக்கா என்கிட்ட சொல்லுச்சு..
எந்த ஒரு குடும்பத்துலயும் தப்பு தண்டா நடந்தா அது எல்லோருக்கும் தெரிஞ்சு நாறுனதுக்கு அப்புறமா கடைசியா தெரிஞ்சிக்கிறது அந்தப் பாவப்பட்ட குடும்பத் தலைவன் தான். என் பொண்டாட்டி எங்க ஏரியாப் பையனோட சுத்திக்கிட்டு திரியுறானு சொன்னப்ப நான் நம்பள. நான் ஒரு நாள் வேலையை கட் அடிச்சிட்டு காசி தியேட்டர்ல ‘அருள்’ படம் பார்க்கப் போயிருந்தேன். அப்ப எனக்கு முன் சீட்ல என் பொண்டாட்டியும் அவனும் உட்கார்ந்து இருந்ததைப் பாத்துட்டு எனக்கு படபடன்னு ஆயிடுச்சு… உடனே கிளம்பி தியேட்டர விட்டு வெளியே வந்து நேரா டாஸ்மாக் பாருக்குப் போனேன். அன்னெயிலிருது இன்ன வரைக்கும் அந்தக் குடி என்ன விடல.. ஒழுங்கா எந்த வேலையும் செய்யமுடியல. யாரபார்த்தாலும் எரிஞ்சு எரிஞ்சு விழுந்தேன்.பார் மூடுனதுக்கு அப்புறம் தான் வீட்டுக்குப் போக ஆரம்பிச்சேன். நிறைய குடிகார நண்பர்கள் கிடைச்சாங்க. கடன் வாங்கி அவங்களுக்கும் வாங்கிக் கொடுக்க ஆரம்பிச்சேன். கடன் அதிகமாயிடுச்சு. கஷ்டப்பட்டு சம்பாதிச்சு கட்டுன வீட்டை வித்துட்டேன். அதுக்கப்புறம் எனக்கும் என் வீட்டுக்காரிக்கும் தினம் தினம் சண்டை தான். பாவம் அவ… எவ்வளவு நாளக்கு தான் பொறுத்துப் போவா… அதான்… மண்ணெண்ணெய் ஊத்திக்கிட்டா…
ஐயா, அவ எப்படி இருக்கா?
அவ பொழச்சுக்குவாளா? என் இரண்டு பிள்ளைகளுக்காக அவ பொழச்சு வரணும்யா. வீட்டை வித்த காசுல ஒரு அஞ்சுலட்சம் ரூபா பேங்குல இருக்குங்கய்யா… அவள எப்படியாவது காபாத்திடுங்கயா… கையெடுத்து கும்பிட்டான். ஆனால் கைகள் ஒன்று சேரவில்லை. இழுத்துப் பார்த்தான். கைகள் விடைத்துப் போயிருந்தது. அசைவில்லை.
காவல் அதிகாரி சொன்னார்.
நீ தான் உன் பொண்டாட்டி மேல மண்ணெண்ணை ஊத்தி வச்சுட்டதா பேசிக்கிறாங்க.
ஐயா அவங்க ஜாதிய பழிவாங்கனும்னு நெனச்சு தான்யா அந்தப் பொண்ண கல்யாணம் கட்டினேன். ஆனா அவள் மனசார ரசிச்சேன்யா.. அவ தப்பு பண்ணியிருந்தாலும் இன்னமும் நான் அவளை நெஞ்சுக்குள்ளேயே வச்சிருக்கேன்யா… யாருய்யா அப்படி னன் மேல பழிச்சொல் சொன்னாங்க.
“உன் பொண்டாட்டி தான்ப்பா உனக்கு எதிரா வாக்கு மூலம் கொடுத்து இருக்கா.”
“அவளா..இருக்காதுயா… என்னை அவ கிட்ட கூட்டிட்டு போங்க… நானே கேட்கிறேன். என் முன்னால அவளை சொல்லச் சொல்லுங்க. அப்படி சொல்லிட்டா நீங்க எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கிறேன்.”
“Sorry, மாரியப்பன் அவங்க நேத்தே செத்துட்டாங்க,. அதிர்ச்சியில் உறைந்து போனான் மாரியப்பன்.
வாக்குமூலம் வாங்கி முடித்து நகர்ந்து விட்டனர். கதறி அழுவதற்கு கூட திராணியில்லை. கண்களிலிருந்து காட்டாற்று வெள்ளம் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏதேதோ இடது கை பெருவிரல் ரேகைகளை உருட்டிக் கொண்டு சென்றனர். அவன் எதுவும் கேட்கவில்லை. பாதி மயக்கத்தில் இருந்து உடல் வற்றி விட்டது.
மருத்துவரிடம் கம்பௌண்டர் கேட்டான். “சார்.. மாரியப்பணு வெந்து போன பழைய தோலை வெட்டி எடுத்துட்டு புதுத் தோலை ஒட்டுற சிகிச்சை இதுவரையில் மூனு தடவை பண்ணியாச்சு எந்த விதமான முன்னேற்றமும் இல்ல.
அடியில நரம்பு வரைக்கும் பாதிச்சதுனால இரத்தம் வடிஞ்சுகிட்டே இருக்கு. அவனை யாரும் இதுவரைக்கும் வந்து பார்களை
என்ன சார் பண்ணலாம்?
ஒரு பேஷண்டுக்கு ஒருதடவை பழைய தோல் வெட்டி புதுத்தோல ஒட்டுற சிகிச்சைக்கு 50,000 முதல் ஒரு லட்சம் வரைக்கும் தமம கவர்மெண்ட் செலவு செய்யுது. இவருக்கு மூனுதடவை ஒட்டிம் பார்த்தாச்சு… பிரயோசனமில்லை… So…. stop the treatment.
அரைகுறை மயக்கத்தில் இருந்த மாரியப்பன் இதைக்கேட்டு அதிர்ச்சியில் இறந்தே போனான்.
மாரியப்பனின் அம்மா மருத்துவமனை வாசலில் மாரியப்பனைய பார்க்க வார்டுக்கு வழி கேட்டுக் கொண்டிருந்தாள்.
மருத்துவமனைக்கு எதிரே பள்ளிக் குழந்தைகள் பாரதியார் பிறந்த நாள் அன்று ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்று கோஷமிட்டபடி ஊர்வலமாய் போய்க் கொண்டிருந்தனர்.

One Comment on “இரா.ம.சௌந்தர்/சாதீ”
Comments are closed.