இரா.ம.சௌந்தர்/சண்டிக் குதிரைகள்

“ஹலோ சொல்லுங்கம்மா…”
“நல்லாயிருக்கியா மோகன்?”
“நல்லா இருக்கேன்மா..”
“பேரன் சாரங்கன் நல்லாயிருக்கானா?”
“நல்லா இருக்கான்மா…”
“சண்டிக்குதிரை என்ன பண்றா?”
“ம் இருக்காம்மா…”
“நான் காதில வாங்கினத உன் காதில போட்டுட்டேன். விசாரிச்சு பார்த்தியா?”
“இதெப்படிம்மா விசாரிக்கிறது. அப்புறம் நீங்க நெனக்கிறது போல அவ இல்லம்மா… என் மேலயும் பையன் மேலயும் பாசமாத்தான் இருக்கிறாம்மா.. எந்தவித மாற்றமும் தெரியலம்மா…”
“என்னமோப்பா… காலம் கலிகாலம். ரொம்ப கெட்டுப்போயி கிடக்கு… மனசை மார்வாடிக் கடையில அடகுவச்சிட்டுதான் இந்த மனுஷப் பயலுக அலைஞ்சுகிட்டு திரியிராங்க.. பாத்து சூதானமா இருந்துக்கோப்பா…”
“சரிம்மா… நீங்க கவலைப்படாதீங்க.. வேளாவேளைக்கு சுகர்,BP மாத்திரை மருந்து சாப்பிடுங்க. மற்றத நான் பார்த்துக்கிறேன்.”
செல் போனை அனைத்து விட்டு தன் அருகே படுத்திருக்கும் இரண்டரை வயது சாரங்களை தடவிக் கொடுத்தாள். மணி பார்த்தான். இரவு 10.30. மனைவி ரேஷ்மா
பையன் தூங்கிய பிறகு பாத்திரங்களை துலக்கி வைத்து விட்டு, அவனுக்கு பால் காய்ச்சி கண்ணாடி டம்ளரில் எடுத்துக் கொண்டு படுக்கைக்கு வருவது வழக்கம். அன்று வீடே அமைதியாய் இருந்தது. அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்க சமையலறை சென்றாள். அங்கே கண்ணாடி டம்ளரில் சூடான பாலை ஊற்றி அதில் 2 ஸ்பூன் விஷம் ஊற்றி ஸ்பூனால் கலக்கிக் கொண்டிருந்தாள்.
அவளின் தோளின் மீது கை வைத்தான்.
சட்டென்று திரும்பியவள் அதிர்ச்சியானாள்..
“என்ன மிக்ஸ் பண்ற…”
“அது…. தே… தேன்..”
“எது… இது… தேனா… ஏன்டி பாட்டில்ல அனுக்ரோன் (Anucron) னு கொட்ட எழுத்தில போட்டிருக்கு. எந்த ஊர்லடி இதுக்கு பேர் தேன்?”
அவனுக்கு முகம் வியர்த்ததைப் போல அவளுக்கும் இருமடங்கு வேர்த்தது. தலை குனிந்து நின்றிருந்தாள்.
எதுவும் பேசாமல் எச்சில் விழுங்கினாள்.
“ரேஷ்மா… என்ன கொல்ற அளவுக்கு வந்திட்டல்ல.. அப்படி நான் என்னடி உனக்கு துரோகம் பண்ணினேன்? இல்ல எதுலயாவது குறை வச்சேனா? நாலு வருஷமா உருகி உருகி காதலிச்சுதான நாம கல்யாணம் பண்ணிகிட்டோம்? எப்படி என்ன கொல்ல உனக்கு மனசு வந்தது?”
“எங்க அம்மா சொன்னாங்க… இந்த தெருவே சொல்லிச்சு… ஆனா நான் நம்பள.. என் ரேஷ்மா அப்படிப்பட்டவ இல்லனு நான் முழுசா நம்புனேன். ஆனா நீ அதை பொய்யாக்கிட்ட இல்ல.
யாரோ ஒருத்தன் கூட எச்சில் சோறு சாப்பிடனும்னு இந்த பிரசாதத்தை தூக்கிப் போட்டுட்ட இல்ல..
என்னக் கொன்னுட்டு அப்படி என்னடி சந்தோஷமா வாழப் போறீங்க? உன்ன மாதிரி மேய்ச்சல் மாடுகளுக்கு எல்லாம் மேலே இருக்கிற செடியும், பூவும் தான் தெரியும். கீழே இருக்கிற நெருச்சி
முள்ளு கண்ணுக்கு தெரியது.
பின் விளைவு என்னன்னு தெரியுமா” கத்தினான். பின் சமாதானம் ஆனான்.
“Ok. Ok…என்னைக் கொன்னுட்டு ராத்திரியோட ராத்திரியா எங்கேயோ நீயும் அவனும் ஓடிப் போயிடுவீங்க..
நாளைக்கு காலைல எங்க அம்மா போலீஸ்ல கம்ப்ளெயின்ட் கொடுப்பா… போலீஸ் வரும். அக்கம் பக்கம் விசாரிப்பாங்க. தெருமுனையில் இருக்கிற கேமிரா அவனையும் உன்னையும் காட்டிக் கொடுத்திடும். உன் செல்போன் சிக்னல் டவரை வைச்ச எந்த ஊர்ல நீ இருக்கிறேன்னு கண்டுபுடிச்சி அந்த ஊர் போலீஸ் உ தவியோட உங்கள் மூனு நாளக்குள்ள தூக்கிட்டு வந்திடுவாங்க.
ரெண்டு பேரையும் உள்ள வைச்சு லாடம் கட்டிட்டு வாக்குமூலம் எழுதி வாங்கிட்டு, ஒரு ஜட்ஜ் முன்னாடி உங்கள ஆஜர் படுத்துவாங்க. உங்க ரெண்டு பேரையும் புழல் ஜெயில்ல 15 நாள் ரிமான்ட் பண்ணுவாங்க..
ஜெயில், நடைமுறை தெரியுமா?
உன்னை பெண்கள் பிரிவு ஜெயிலுக்கு கூட்டிட்டு போய் ஜெயிலர் முன்னால உன் துணிய எல்லாம் அவுத்துப் போட்டு பிறந்த மேனியா உன்ன குத்த வச்சு உட்காரக் சொல்லி ஒரு கான்ஸ்டபிள் லேடி அங்க டார்ச்சு அடிச்சு பார்க்கும். முழு உடம்பையும் ஒரு தடவைக்கு இரண்டு தடவ சுத்தி சுத்தி மச்சம் எங்க இருக்குனு பாப்பாங்க.. அங்கிருந்து ஜெயில் ரூமுக்கு போறதுக்கு முன்னாடி அட்மிஷன் அடினு, இரண்டு அடி லத்தியால பெட்டக்ஸ்ல அடிப்பாங்க. நீ ரெண்டு நாளைக்கு மோசன் போக முடியாது.
கொஞ்சம் அழாக இருந்தாலே அங்க இருக்கிற சக பெண் கைதீங்க சும்மா விடமாட்டாளுக.. நீ வேற ரொம்ப அழகா இருக்கிற… வாயையும் கையையும் வச்சுகிட்டு சம்மா இருக்க மாட்டாளுக. அதுமட்டுமில்ல அங்க இருக்கிற ஆபிஸர்களுக்கும் நீ தான் அப்பப்ப நொறுக்கு தீனியா ஆகிடுவ.
கொலை கேஸ்ல விஷம் கலந்து கொடுத்ததினால உனக்கு ஆயுள் தண்டனையும், கொலைக்கு ஐடியா கொடுத்து உடந்தையா இருந்ததனால அவனுக்கு 5வருஷமும் கெடச்சுடும். அவன் தலைவர் பொறந்தநாளு, நன்னடத்தைன்னு, 3 வருஷத்துல வெளிய வந்திடுவான். ஆனா நீ 12 வருஷம் கழிச்சு வெளிய வரும்போது உனக்கு வயசு 50 தாண்டிடும். நீ அவனைத் தேடி போவ. அவன் இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டு குழந்தை
குட்டிகளோடு சந்தோஷமா வாழ்ந்திட்டு இருப்பான். ஆனா நீ என்ன பண்ணுவ. சுத்தி இருக்கிற சொந்தக்காரன் ஒரு பய உன்னய மதிக்க மாட்டான். எங்கேயாவது கடல்லயோ இல்ல டிரெயின்லயோ விழுந்து சாகவேண்டியது தான்.
ஆனா நம்ம பையன் தான் அக்கம்பக்கம் சொல்லு தாங்காம அனாதயா எங்காவது சுத்திட்டு இருப்பான். அழுதான். “இந்தக் கொடுமைகள் அனுபவிக்கப் போறதுக்காடி என்ன நீ கொல்லப்போற? சாரி ரேஷ்மா… நீ அவனோட வாழனும்னு முடிவு பண்ணிடல்ல… போ… சந்தோஷமா போ… மிச்சமிருக்கிற வாழ்க்கைய உன் மனசுக்கு புடிச்ச மாதிரி வாழ்ந்துக்கோ நான் எந்த விதத்திலயும் உனக்கு தடையாய் இருக்கமாட்டேன். நானும் என் பையனும் எங்க வாழ்க்கையை நாங்க பார்த்துக்கிறோம். Good Night”
பெட்ருமிற்குள் நுழைந்து தாழ்போடுமுன் ரேஷ்மாவைப் பார்த்து சொன்னான்.
“உன்னை நான் இனி நம்ப மாட்டேன். பெட்ரூம் கதவை பூட்டிக்கிறேன். நீ ஹால்லயே படுத்துக்கோ. நிதானமா யோசி. என்ன முடிவெடுத்தாலும் சரி… எனக்கு Ok தான்.
இப்பவும் எனக்குள்ளேயும் ஒரு மிருகம் உன்னைக் கொன்னுபோட்டுருனு சொல்லுது.. ஆனா நீ அவளை உண்மையா காதலிச்சு தொலைச்சிட்டியே உன்னால எப்படிடா முடியும்னு எனக்குள்ள இருக்கிற காதல் தேவதை என்னப்பாத்து கேக்குது? அதான, என்னால எப்படி முடியும்? I am sorry… ரேஷ்மா… Get Last.”
கதவை மூடி தாள்போடு சத்தம் கேட்டபின் ஷோபாவில் அமைதியாய் படர்ந்து உறங்கிப்போக ஒத்திகை பார்த்தாள்.
அவள் எப்போது உறங்கினாள் என்று அவளுக்கு தெரியவில்லை. திடீரென வெளிக்கதவு தட்டப்படும் சப்தம்.
எழுந்து கதவைத் திறந்தாள். கையில் பெட்டியோடு அவளது கள்ளக் காதலன் கோதண்டன் நின்றிருந்தான்.
“என்ன… எல்லாம் முடிஞ்சதா? ரெடியா… போகலாமா எதுவும் பிரச்சினையில்லையே?..”
“நான் வரல… நீ போகலாம்… கதவை மூட முற்பட்டபோது
அவன் கதவைத் தள்ளினான்.”
“என்னடி வௌயாடுறீயா?”
“நான் வெளயாடல… நிஜமாத்தான் சொல்றேன். இதுவரைக்கும் நாள் எப்படி இருந்ததேனோ… பரவாயில்ல. ஆனா இனிமே என் புருஷனுக்கு உண்மையா இருக்கப் போறேன்.. என் குழந்தைக்கு ஒரு நல்ல அம்மாவா வாழப்போறேன். எல்லாத்தையும் மறந்துட்டு நீயும் உன் குடும்பத்துக்கு உண்மையா இரு… போ…” என்றவாறு கதவை மூட முயன்றாள்.
அவன் கதவைத் தள்ளினான், அவள் தன் பலம் கொண்ட மட்டும் தடுத்தாள். அவன் வெறிகொண்டு தள்ளினான்.
அவனது பலத்தை எதிர்க்கொள்ள முடியாமல் கீழே மல்லாக்க விழுந்தவள் மயக்கமானாள்.
பதறியவன் அவளை எழுப்பிப் பார்த்தான். அவள் அசையவில்லை. தண்ணீர் தேடினான். சமையலறை மேடையில் இரவு கணவனுக்கு கலந்து வைத்திருந்த கண்ணாடி டம்ளரில் இருந்த விஷப்பாலை எடுத்து வந்து அவளைத் தன் மடியில் ஏந்தி பாலைக் குடிக்க வைத்தான் அது விஷம் என்று அறியாமல்.
மடக்… மடக்கென்று குடித்தாள். கண்விழித்துப் பார்த்தாள். அவள் வாயிலிருந்து மோகன் என்னை மன்னிச்சிடு, என்ற வார்த்தைகள் மெதுவாய் வெளியேறிது.

இரா.ம.சௌந்தர்/சாதீ – விருட்சம் நாளிதழ்

One Comment on “இரா.ம.சௌந்தர்/சண்டிக் குதிரைகள்”

Comments are closed.