இரா.ம.சௌந்தர்/சருகுகள் உதிர்கின்றன…

‘அம்மாசி பட்டி’ கிராமத்தில் அன்று அமைதியாய் பொழுது விடிந்தது.
“ஏன்டி, எங்கப்பன் ஆத்தாளுக்கு சோறு தண்ணி கொடுத்து விட்டியா?”
“இன்னக்கி தேதி என்னாகுது?”
“இன்னக்கி தேதி 17டி. 1ம் தேதியிலிருந்து 15ம் தேதி வரை என் தம்பி வீட்லருந்து அவங்களுக்கு சாப்பாடு போயிடும். 16 தேதியிலிருந்து 30 வரைக்கும் நாம தான கொடுக்கணும்.”
“இந்தாங்க, இந்த மாசம் 31நாள். அதனால் ஒரு நாள் சாப்பாடு உங்க தம்பி பொண்டாட்டி தான் கூடுதலா கொக்கணும்.”
“இந்த கணக்கை அவளும் போட்டிருந்தா நேத்து கிழவனும் கிழவியும் பட்டினியாவே படுத்திருப்பாங்களேடி?”
“தெனமும் சாப்பிட்டு பெருசுக ரெண்டும் பாக்கிஸ்தான் பார்டருக்கு போய் குண்டு போடப் போறாங்களா?”
மனைவி சொன்ன குத்தல் பேச்சை கண்டு கொள்ளாமல், “டே.. சின்னவனே.. இங்க வாப்பா… போய் அப்பத்தாவுக்கும் ஐயாவுக்கும் சாப்பாடு கொடுத்துட்டு வந்துடுப்பா…”
“போப்பா உனக்கு 15 தேதிக்கு மேல இதே வேலையா போச்சு… சலித்துக் கொண்டு, அவன் அம்மாவிடம் சென்று தூக்குச் சட்டியை வாங்கிக் கொண்டு ஊரிலிருந்து சற்று தள்ளியிருக்கும்
சமத்துவபுர வீட்டிற்கு சைக்கிளில் சென்று சைக்கின் மணியை இரண்டு முறை அடித்துவிட்டு, “பெருசு. சாப்பாடு வந்துருச்சு. எடுத்துக்கோ” என்று சொல்லி, வாசலில் வைத்து வீட்டு விரைவாய்
திரும்பினான் அந்த சிறுசு,
அப்போது அங்கு பெரியவரை பார்க்க கந்தன் வந்தான், “வாப்பா, கந்தா.. இப்பதான் நான் உன்ன நெனச்சேன் நீ கரெக்டா வந்துட்ட உனக்கு நூறு ஆயுசுப்பா…”
“ஐயா, நீங்க நெனச்சு உடனே நான் வந்தது மாதிரி, நீங்க னெச்ச உடனேயே சாப்பாடு வர மாட்டுதே.. இல்ல சாப்பாட்டை பத்தி நீங்க நெனக்கிறதே இல்லையா?’
“இல்ல கந்தா, ஆரம்பத்தில் அந்த நெனப்பு அடிக்கடி வரும், இப்ப பசி பழகிடுச்சு. அதனால் அவங்க கொடுக்கும்போது சாப்பிட்டுக்குவோம்னு பேசாம பச்சத் தண்ணிய குடிச்சிட்டு நானும் என் பொஞ்சாதியும் தூங்கி தூங்கி பசியப் போக்கிடுவோம்.”
“ஆயா எப்படி இருக்காங்கய்யா?”
“ன்னத்த சொல்லச் சொல்ற கந்தா…”
“அவளுக்கு 75 வயசாகிடுச்சு… எனக்கு 82 வயசாகப்போகுது. சாப்பாடு எப்ப வரும்னு காத்திருக்கிற விட, சாவு எப்ப வரும்னு ரெண்டு பேரும் காத்துக்கெடக்கிறோம்.”
“ரெண்டு மக, 2 மகன்னு நாலு பிள்ளைகளை பெத்துட்டு, சொத்துக்கள பூராம் ரெண்டு மகன்களுக்கு எழுதி வச்சுட்டேன். அதுல மகளுக் கோபிச்சிட்டு எங்க கூட எந்தப் போக்குவரத்தும் வச்சிக்கிறது இல்ல..”
“இப்ப கஞ்சிக்கு 15 நாளு ஒரு மகன், 15 நாளு இன்னொரு மகன்னு அவங்க கையை எதிர்பார்த்துட்டு இருக்கோம். இந்த மாசம் 31 நாளு பேல.. ரெண்டு பேரும் 15 நாள் கணக்கு போட்டுகிட்டு, நேத்து ஒரு நாள் எங்கள பட்டினி போட்டுட்டாங்க.”

  • அவர் கண்கள் கலங்கியது.. கந்தனும் கலங்கினான்.
    “ரெண்டு மகன்களுக்கும் தனித்தனியா வீடு வேணுமேனு ரெண்டு வீடு கட்டிக் கொடுத்தேன். சின்னவன் எப்பவும் கைவிளங்கி எதுவும் செய்யமாட்டான். சரி நம்மள பெரியவன் தான் வச்சு காப்பத்துவானு நெனச்சேன். ஆனா வந்த மருமகளுக ரெண்டு பேரும் சரியில்ல. நாங்க வீட்டை விட்டு வெளிய வந்தப்போ எங்க சாதி சனம் யாரும் எங்கள கண்டுக்கல. அப்ப நீ தான கந்தா, ‘உனக்கு அரசாங்கம் கட்டிக்கொடுத்த இந்த சமத்துவபுர வீட்டை நாங்க தங்குறதுக்கு நீ எங்களுக்கு கொடுத்த.”
    “ரெம்ப நன்றிப்பா..
    கையெடுத்துக் கும்பிட்டார்.
    “சிலநேரங்கள் மூச்சு விட முடியாம அவஸ்தப்படுறா.. பாவமா என் வீட்டுக்காரிக்கு ஆஸ்துமா நோய் அதிகமாயிடுச்சு, இருக்கு கந்தா. அந்தக் கடவுள் இன்னமும் கண்ணத் தொறக்கல. தினம் தினம் அந்த சாமிகிட்ட கேட்டுக்கிட்டே இருக்கோம். எமன், எங்க சீட்டைக் கிழிச்ச உசுற எப்ப எடுக்கப்போறான்னு எங்க கூப்பாடு அவனுக்கு எப்ப கேட்கப் போகுதோ… தெரியல..
    பெரியவர் அழுததில் கந்தன் கலங்கிப் போனான்.
    “ஐயா வாராவாரம் திங்கட்கிழமை கலெக்டர் ஆபீஸில் ‘குறை தீர்ப்பு முகாம்’னு நடத்துறாங்கய்யா… அங்க போயி ஒரு மனு எழுதி கொடுத்திட்டு வந்தீட்டிங்கனா, உங்க மகன்களுக்கு நீங்க எழுதிக் கொடுத்த சொத்துப் பத்திரத்தை ரத்து செஞ்சுடுவாங்க. அப்புறம் மாச மாசம் சாப்பாட்டு செலவுக்கு அவங்க ஆளுக்கு 5000 தரனும்னு கலெக்டர் உத்தரவு போட்டுடுவாரு. ஆயுசு வரைக்கும் ரெண்டு பேரும் சந்தோஷமா, நீங்க கட்டின வீட்ல இருந்துட்டுப் போயிடலாம்யா…”
    “இல்ல கந்தா… நாம பெத்த பிள்ளைகளை நாமளே அசிங்கப்படுத்திடக் கூடாதுப்பா.. பரவாயில்ல… போறானுங்க… இது விதி… நான் முன்ஜென்மத்துல என்ன பாவம் செஞ்சேனோ தெரியல… நடக்குறது நடக்கட்டும் கந்தா. இப்ப எனக்கு கண்ணும் சரியா தெரியல” சிறிது மெளனத்திற்கு பிறகு… பெரியவர் தொடர்ந்தார்…
    “அவனுங்ககிட்ட வீட்டை வாங்கி, காச வாங்கி நாங்க என்ன பண்ணப்போறோம். நிம்மதியா முனுவேளை கஞ்சி. அவளுக்கு ஒரு வைத்யம்… ஆறுதலா நாலு வார்த்தை… இது தான கந்தா நான் கேட்கிறது. எதிர்பாக்குறது… நான் சின்னவன்ட்டயும் சொல்லிட்டேன். பெரியவன்ட்டயும் சொல்லிட்டேன். ‘உங்க அம்மா உங்கள வளத்து ஆளாக்கிறதுக்கு அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கா… அவ இருமி இருமியே வேதனைய அனுபவிச்சிட்டு இருக்கா. அவள ஒரு நல்ல ஆஸ்பத்திரியில சேத்து வைத்தியம் பாருங்கப்பா… தனியார் மதுரைல காச நோய் ஆஸ்பத்திரி, தோப்பூர் ஆஸ்டின்பட்டில ஆஸ்பத்திரியில ரொம்ப செலவாயிடும்னு யோசிச்சா, அம்மாவ இருக்காமே… அங்க சேத்து விட்டுறுப்பானு சொன்னதுக்கு
    ‘அவ்வளவு தூரம் போயி யாரு அலையுறதுனு’ சொல்லிட்டு அவன் பாட்டுக்கு போயிட்டான்.
    “சரி விடு கந்தா… அவ இருமி.. இருமி.. சாகனும்னு விதி” விரக்தியில் பேசினார்,
    உள்ளே மனைவி இருமும் சத்தம் கேட்டு தூக்கு சட்டியையும் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு உள்ளே போனார் பெரியவர். கந்தன் கனத்த இதயத்தோடு திண்ணையிலிருந்து வெளியேறினான்.
    அன்று திங்கட்கிழமை. நிறைய தடவை யோசித்து பின் ஒரு வழியாக பஸ் ஏறி… கலெக்டர் அலுவலகம் வந்து விட்டார் பெரியவர். கையில் ஊன்றுகோல் துணையுடன் மெல்ல நடந்து வந்து விசாரித்து அங்கிருந்த வரிசையில் போய் நின்று கொண்டார். வரிசையில் நின்ற பெரியவரைப் பார்த்த போலீஸ், “ஐயா உங்க கையில மனு எதுவும் இல்லையே… எதுவும் எழுதி எடுத்துட்டு வரலயா? “எனக் கேட்க…
    “இல்ல தம்பி, நான் கலெக்டர்கிட்ட நேரடியா ரெண்டு வார்த்தை பேசிட்டுப் போகலாம்னு வந்தேன்,”
    “என்ன பெரியவரே பேசப் போறீங்க?’
    “எத்தனையோ பேர் வாழ்ற, வாழப்போற இந்த பூமியில நாங்க வாழ்ந்தது போதும்னுன்ற முடிவுக்கு வந்துட்டோம். அதனால எங்க ரெண்டு பேரையும் கருணைக் கொலை பண்ணிடுங்கய்யானு சொல்லிட்டு போகலாம்னு வந்தேன் தம்பி.” சொல்லும் போதே பெரியவர் கண் கலங்கினார்.
    போலீஸ் ஒரு கணம் ஆடிப்போய்விட்டார். ‘ஐயா இப்படி வாங்க’ பெரியவரை வரிசையிலிருந்து அழைத்துச் சென்று ஒரு சேரில் அமர வைத்து தண்ணீர் குடிக்க வைத்தார்.
    ‘ஐயா, உங்க விபரம், உங்க பிள்ளைங்க விபரம் சொல்லுங்க. நாங்களே அங்க நேரடியா வந்து உங்க பிள்ளைங்களுக்கு புத்திமதி சொல்லி உங்கள நல்லபடியா பாத்துக்கச் சொல்லுறோம்.”
    “சாகணும்னற எண்ணம் வரக்கூடாது. வாழணுங்கய்யா.. வெரமா சொல்லுங்க.. நான் விலாசம் எழுதிக்கிறேன்.”
    “தம்பி நீங்க ஈஸியா சொல்லிட்டீங்க.. வாழ்றது ஈஸி, சாகுறது கஷ்டம்னு.. எங்கள பொருத்தவரைக்கும் வாழ்றதுதான் தம்பி கஷ்டம்.
    “போலீஸ் எவ்வளவோ அழுத்திக் கேட்டும், விலாசம், விபரங்கள் சொல்ல பெரியவர் மறுத்துவிட்டார். தன் மகன்கள், மருமகள்கள் பற்றி எதுவும் சொல்லவில்லை. பின் ஒருவழியாக பெரியவரை சமாதானம் செய்து இரண்டு சாப்பாட்டு பொட்டலங்கள் வாங்கிக் கொடுத்து கைதட்டி ஆட்டோவை அழைத்து பெயரிவரை பஸ் ஏற்றிவிட சொல்லி அனுப்பினார், அந்த மனித நேயமிக்க போலீஸ்காரர்.
    பெரியவர் கலெக்டர் ஆபீஸ் போய் வந்தது எப்படியோ மருமகள்களுக்கு தெரிய வந்தது. இருவரும் சமத்துவபுரம் சென்று வீட்டு வாசலில் நின்று பெரியவரையும், கிழவியையும் வாய்க்கு வந்தபடி வசைபாடிவிட்டு வந்தனர்.
    “நாள் தவறாம மூனு வேளைக்கும், வாய்க்கு ருசியா சமைச்சு கொடுத்து விடுறோம்ல.. அதான், அந்த தெம்புல தான் கலெக்டர் ஆபீஸ் வரைக்கும் இந்தக் காலு போயிருக்கு.. இனி ஒரு தடவ ஊர் எல்லையத் தாண்டினா, காலை ஒடைச்சு கட்டுப்போட்டு பொண்டாட்டி பக்கத்துலயே பெரிச படுக்க வச்சுடவேண்டியது தான்.” வசை கேட்ட பெரியவர் (முகம்) வாடிப் போனார். அப்போது அந்தக் கிழவிக்கு மூச்சு இறைத்தது. கஷ்டப்பட்டும் மூச்சுவிடமுடியாமல் இடையிடையே இருமலும் சேர்ந்துகொண்டு அவர்களை இம்சைப் படுத்தியது.
    அப்போது இளைய மருமகள் சொன்னாள். “ஊர்ல யார் யாருக்கோ சாவு வருது.. இந்த கெழடுகளுக்கு ஒரு சாவு வரமாட்டுது….”
    “ஆமாடி… இளந்தாரிப் பயலுக கூட திடீர்னு போய்ச் சேர்ந்திடுறானுங்க… இந்தக் கிழவனும் கிழவியும் இன்னும் சாகமாட்டாம, நம்ம உயிர தெனம் தெனம் வாங்குதுங்க..”
    “ம்… நமக்கு எப்ப ஒரு நல்ல சேதி வருமோ..” அங்கலாய்த்தவாறு மருமகள் இருவரும் நடையக் கட்டினர். பெரியவர் வாயைப் பொத்திக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுதார்.
    பொழுது விடிந்தது. ஊரே பரபரப்பாய் இருந்தது. “பெரியவர் கிழவியக் கொண்ணுட்டாராம்…”
    மகன்களும், மருமகள்களும் அழுதவாறு சமத்துவபுர வீட்டிற்கு வந்தனர். மகள்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வருவதற்குள் போலீஸும் வந்துவிட்டது.
    “பெரியவரே.. ஏன் உங்க சம்சாரத்த கொன்னீங்க?” போலீஸ் கேட்க, நிலப்படியில் கால்நீட்டி உட்கார்ந்து கதவில் சாய்ந்தவாறு உலர்ந்து போன கண்ணீர் கோடுகளோடு வெறித்துப் பார்த்துக்
    கொண்டிருந்தார்.
    சில நிமிட அமைதிக்குப் பிறகு பெரியவர் வாய்திறந்தார்.
    “அவ அவஸ்தப்படுறத என்னால பாக்க முடியல்லய்யா… நேத்து ராத்திரி ரொம்ப இருமிக்கிட்டு இருந்தா.. அதனால அவளுக்கு தண்ணி கொடுக்கப் போனேன். அப்ப, அவ என்ன பக்கத்துல கூப்பிட்டு உட்கார வச்சு, உங்க நெஞ்சுல கொஞ்சம் சாய்ஞ்சுக்கிறேனு சொல்லி, சாஞ்சுகிட்டு என் கைய எடுத்து அவ கழுத்துல வச்சு நெறிக்க சொன்னா…
    அவ அறுபது வருஷம் என் கூடவே இருந்த குலதெய்வம்யா… நல்லது கெட்டது, நாள் கிழமை பாக்காம, கஷ்டம், நஷ்டம் எல்லாத்துலயும் பங்கெடுத்தவய்யா… அவளே என்னக் கூப்பிட்டு, என்னக் கொண்ணுடு மாமான்னு என் கையப் புடிச்சி கழுத்தில வச்சுகிட்டா.. என்னால முடியாதுனு கோனு அழுதேன்யா..
    மருமகளுக அப்படி பேசினதுக்கப்புறம் நாம உசுறோட இருந்து எந்தக் கோட்டைய ஆளப்போறோம்னு இருமிக்கிட்டே கேட்டா..
    அவளுக்கு மூச்சிறைப்பு அதிகமாகி, இருமலும் அதிகமாயிடுச்சு.. என்னால அவ படுற அவஸ்தய பாக்க முடியலய்யா… அதான் தலகானிய எடுத்து அவ மொகத்துல வச்சு அழுத்தி அவள் கொன்னுட்டேன்யா… கொன்னுட்டேன்..” ஹக்.. ஹக்,, என்று வாய்விட்டுக் கதறி அழுதார்.
    துண்டை எடுத்து மூச்கைச் சிந்திவிட்டு,
    ‘அவ செத்த பிறகு நானும் சாகனும்னு முடிவு பண்ணி ஏதேதோ தேடுனேன். ஒன்னும் ஆப்புடல சரினு அப்புறமாகத்தான் யோசிச்சேன்.
    என் பொஞ்சாதி கூட வாழ்ந்த வாழ்க்கைக்கு அவளுக்கு நான் தான் கொள்ளி போடனும்னு நெனச்சு, நான் சாகிற முடிவ தள்ளிப்போட்டுட்டேன்.
    ஏன்னா.. வயசான காலத்துல பெத்து வளத்து ஆளாக்கின ஆத்தா அப்பனை பாத்துக்க துப்பில்லாத என் நாலு பசங்களும், அவளுக்கு எந்தவிதமான ஈமக்காரியமும் பண்ணக்கூடாது. அவங்க யாரும் என் பொண்டாட்டிகிட்டக்கூட வரப்படாது. மீறி
    செத்துப் போயிடுவேன்..” என்று சொல்லி நிலையில் தலையை வந்தா நான் இப்பவே, இங்கேயே… நிலைப்படியில முட்டிமுட்டி
    முட்ட ஆரம்பித்தார்.
    அதற்குள் போலீஸ்காரர் வந்து அவரைத் தடுத்து நிறுத்தி, ஆசுவாசப் படுத்தி தண்ணீர் குடிக்க வைத்தார்.
    பெரியவர் சொன்னது போலவே, அவரே அவரது மனைவிக்கு அனைத்து இறுதிச் சடங்குகளையும் செய்தார்.
    குளித்து முடித்து ஈரத்துண்டோடு கைத்தாங்கலாக நடந்தவரை போலீஸ் கைது செய்யாமல் விட்டு விட்டுச் சென்றது. போலீஸை அழைத்த பெரியவர், ‘ஏன்யா என்னை கைது பண்ணல’ என்றார்.
    “பெரியவரே… நீங்க தப்பு ஏதும் செய்யல.. சந்தேக மரணம் தான்னு உங்க ஊர் VAO கம்ப்ளயின்ட் கொடுத்திருக்காரு. அந்த அம்மா ரொம்பநாளா உடம்பு சௌகர்யமில்லாம இருந்ததனால், நேத்து மூச்சிறைப்பு அதிகமாகி, மூச்சு திணறி இறந்துட்டாங்கனு நாங்க ஃபைல குளோஸ்பண்ணிடுறோம். அதுவும் இல்லாம நீங்க நம்மாளா வேற போயிட்டீங்க… போங்க..” என்றார் SI
    “இல்லய்யா… 60 வருஷம் என்கூட வாழ்ந்த மகராசிய காப்பாத்த துப்பில்லாம, மூனுவேள கஞ்சி வயிறார கொடுக்க வழியில்லாம, நானே அவளைக் கொண்ணுட்டேன். அந்தப் பாவத்துக்கு நான் தண்டனை அனுபவிச்சுதான் ஆகனும். என்ன கைது பண்ணி கூட்டிட்டு போயிடுங்கய்யா,”
    ‘இல்ல பெரியவரே! உங்க பிள்ளைங்க கிட்ட உங்கள இனிமே நல்லபடியா பாத்துக்க சொல்றோம். உங்களுக்கும் ரொம்ப வயசாகிடுச்சு. உங்கள அவங்ககிட்டேயே விட்டுட்டுப்போறோம். அதனால நீங்க இங்கேயே…
    ‘மன்னிக்கனும் தம்பி.. என்னைக் கைது பண்ணி கூட்டிட்டு போயிடுங்க..’
    “கிளிப்பிள்ளைக்கு சொல்றது மாதிரி உங்களுக்கு நாங்க எவ்வளவோ எடுத்துச் சொல்லிட்டோம். ஆனா நீங்க பாடின பாட்டையே திரும்ப திரும்ப பாடிட்டு இருக்கீங்க…”
    சலித்துக் கொண்டார்.SI

“எப்படா சாகப்போறனு கேட்ட மருமககிட்ட எப்படி தம்பி கஞ்சி வாங்கிக் குடிக்கிறது..
இந்த வீடு, இந்த ஊரு வேணாம் தம்பி… என்னைக் கண் கலங்காம பாத்துகிட்டவள என் கையாலயே கொண்ணுட்டேனே… அதுக்கு இந்த பாவி ஒரு ஆறு மாசமாவது தண்டனை அனுபவிக்க
வேண்டாமா?
“நீங்க கைது பண்ணலனா… இன்னிக்கி ராத்திரியே நான் அரளி விதய அரைச்சு குடிச்சிட்டு செத்துப் போயிடுவேன் தம்பி…” என்று வாயில் துண்டை வைத்துக் கொண்டு தேம்பி தேம்பி அழுதார்…
‘ஏன் பெரியவரே இவ்வளவு அடம் பிடிக்கிறீங்க?’ என்று SI கேட்க,
கண்களைத் துண்டால் துடைத்துக் கொண்டு அந்த SI யிடம் கேட்டார் பெரியவர்…
“தம்பி, ஜெயில்ல எனக்கு மூனுவேளையும் சாப்பாடு தருவீங்கள்ல…?”
கையெடுத்து கும்பிட்டுக் கேட்டார் பெரியவர்.
பேயறைந்தது போல நின்றார் அந்த காவல் அதிகாரி.

இரா.ம.சௌந்தர்/சண்டிக் குதிரைகள் – விருட்சம் நாளிதழ்