
பூக்கள் பூத்த வனத்தில்
உன் முகம் பூக்க
யுகங்களாய் நொடிகள் மாறிட
நெருப்பைச் சுமந்தபடி நான்.
பகலின் கொண்டாட்டம் முடிகிறது..
இரவின் கொடூர வாதை தொடங்க.
கானல் வரியை இசைத்தவாறு
காற்று வருகிறது
அதன் இசைச் சுரங்கள்
இருதயத்தை வருடிப் பிசைகின்றன.
நீ வரமாட்டாய் என
சொல்லிப் போனது
மேற்கு மலை காட்டுப் புறா.
என் வலியை அதிகப்படுத்துகிறது
இச்சி மரங்களில் அடையும்
கொக்கு ஜோடிகளின்
கொஞ்சல் ஒலிகள்.
என் வேதனையை கேலி செய்கின்றன
ஆற்றோர
தென்னை மரங்கள்.
வீணாக
தவமிருக்காதேயென
நீரோடையும்
புத்திமதி சொல்லியபடி போகிறது.
மழை வரும்
நாட்களின் கனவில்
மண்ணுக்குள் த்யானித்திருக்கும்
தவளையாய்
நானும்.
🦀
