வி.வி.கலைச்செல்வி/பேசாமல் ………தூரம்போய்விடு

நான் உன்னைப் பார்க்க வருவேன்
மிகச்சரியாக எண்பது கிலோமீட்டர் தாண்டி..
மூன்று பேருந்துகளில்
மாறி மாறிப் பயணித்து
மூன்று மணி நேரம் செலவழித்து…..
நீ சொன்னபடி
முப்பது குட்டி கிராமங்களையும்
ஆறு பெரிய ஊர்களையும்
தென்னைமரங்கள்அடர்ந்து
பிரியமாய் நிற்கும் தோப்புகளையும்கடப்பேன்
விளையவே விளையாது என்றுபோட்டதில்தரிசாய்க் கிடக்கும் காடுகளையும்
இடுப்பளவு வளர்ந்து நிற்கிற மஞ்சள்செடி தோட்டத்தையும் கடப்பேன்.
அழுக்கு மனிதர்கள்
அவசரக்காரர்கள்
அழகானவர்கள்
பேசாதவர்கள்
பேசிக்கொண்டேவருபவர்கள்
எல்லோரையும் கடப்பேன்
இத்தனைக்குப் பிறகு
கடைசியாய் நீ உன் பால்யத்தில் நீந்தி நீந்தி விளையாடியதாய்ச்
சொன்ன அந்த ஒரே ஒரு அமராவதி ஆற்றையும் கடந்துவிடுவேன்….
இப்போது எனக்கு
உன்னைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை
நீளமாகிக் கொண்டே போகிறது..
அது சரி நீ ஏன் இவ்வளவு தூரத்தில் இருக்கிறாய்??
இன்னும் கொஞ்சம் அதிக தூரமாய்ப் போய் இருந்துவிடு..
அப்போதுதான்
இந்த தூரம் இன்னும் இனிப்பாகும்….