
என் மனைவி, சந்திரபிரபா. என்னையும் எழுத்தையும் நேசிக்கிறவள். கட்டடக்கலை பயின்றவள். ஐந்து ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அவள், என் தங்கையோடு படித்தவள். அவளுடைய அண்ணன் என்னுடைய கல்லூரித் தோழன். சொந்த ஊர் ராஜபாளையம் அருகில் உள்ள சம்சிகாபுரம். அவளுடைய அப்பா வங்கியில் வேலை பார்த்தார். அதனால் விருதுநகரில் குடியிருந்தார்கள்.
எங்கள் காதலுக்குக் காரணமாக இருந்தது, புத்தகங்கள்தான். காதலித்த நாட்களில் நிறைய பேசினோம். சேர்ந்து பய ணம் செய்தோம். பரஸ்பரம் ஒருவரை மற்றவர் தெளிவாகப் புரிந்து கொண்டோம். ரசனைதான் எங்கள் காதலின் அடிப்படையாக இருந்தது. இரண்டு வீட்டிலும் எங்கள் அன்பை பூரண மனதுடன் ஆசீர்வதித்தார்கள்.
காதலின் தீவிரம் நிறைந்த அந்த நாட்களில், இந்த உலகில் நாங்கள் இருவர் மட்டுமே இருப்பதுபோல நடந்து கொண்டோம். அவளுடைய வீடு இருந்த தெருவில் அவள் மட்டுமே குடியிருக்கிறாள் என்றுதான் அந்த நாட்களில் நம்பினேன். முடிவற்ற, இலக்கில்லாத எனது கனவுகளை ஒருமுகப்படுத்தியது அந்தக் காதல்தான். எந்த வேலைக்கும் போகக்கூடாது, முழுநேர எழுத்தாளனாக மட்டுமே வாழ வேண்டும் என்ற பிடிவாதம் காரணமாக, நான் வெறுமனே அலைந்த நாட்களில் எனது தேவைக்கான பணத்தை சம்பாதித்து தந்தவள் அவள். எனக்காகவே வேலைக்குச் சென்றாள். காதலின் பெயரால் அவள் தந்த பணத்தைக் கொண்டு, வட இந்தியாவெங்கும் சுற்றியலைந்தேன். அந்த நாட்களில் எழுத்தாளன் ஆவது என்பதைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருந்ததைவிட, பல மடங்கு அதிக நம்பிக்கையை கொண்டிருந் தாள். உண்மையில் அவளுடைய ஆசைகளை, கனவுகளை கொஞ்சம் கொஞ்சமாக நான் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன் என்றுதான் தோன்றுகிறது.
நன்றி: அவள் விகடன்
