அதிரன்/பராக்கிரமம்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்

எல்லோரும் பார்த்துவிட்டார்களாம்.
அவளும் பார்க்க வேண்டுமாம்
அடம் பிடித்தாள் மகள்…

கூட்டிக்கொண்டு போனான்
ஒரு அந்தி பொழுதில்
அந்த நூறு அடி உயர மன்னன்
சிலையை காண…

நெருங்க நெருங்க
கைகளை இருகப்பற்றி கொண்டவள்
கேட்கிறாள்
நிஜமாகவே மன்னன் இவ்வளவு
உயரமா ? என்று

இல்லை இல்லை அது அவன்
பராக்கிரமத்தின் குறியீடு என்கிறான்.
மலங்க மலங்க விழித்தவள்
திரும்பி நடக்கையில்
அவள் காலடியில் சாய்ந்து கிடந்தது
ஒரு மாபெரும் நிழல்