பிரமிள்/ரசனையும் விமர்சனமும் செல்லப்பாவும்

விமர்சனம் என்பதே நமக்கு ஒரு புதிய விஷயம். நாம் அறிந்து இருந்தது ரசனைதான். ரசனை என்பது, வாழ்வின் சௌகர்யங்களை அமிதமாகப் பெற்றுள்ள ஒரு வர்க்கம் குருட்டுத்தனமாகப் பொழுது போக்கும் ஒரு மனநிலை என்றுதான், இன்றைய நமது பிரக்ஞைக் குப்படுகிறது. இன்று ‘ரசனை’ என்ற பதம் எங்காவது பிரயோகிக்கப்பட்டால், அது விமர்சனம் என்ற பிரயோகத்தின் வசப்பட்டு, ஒரு ஆழ்ந்த அர்த்தத்தை ஏற்றுக்கொண்ட வகையாகத்தான் உபயோகிக் கப்படுகிறதா என அவதானிக்க வேண்டும். அப்படி ஒரு ஆழ்ந்த அர்த்தம் அதற்கு இல்லையென்றால், ‘ரசிப்பது’ என்பது ‘பேஷ்’ போட்டுத்தலையாட்டும் ஒரு கோணங்கி மரபுதான். இது, விஷேச மாக, சௌகர்யமான வாழ்க்கை நிலையில் கிடந்து மந்தமான உணர்வுகளுடன் வாழும் வர்க்கத்தினரின் மரபு. இவ்வர்க்கம், தமிழர் களிடையே, ‘பொழுதுபோக்கு’ என்ற அடிப்படையில்தான் பேரி லக்கியங் களைக் கூடச் சந்தித்து வந்துள்ளது. மிகவும் ‘ஹைகிளாஸ்’ பொழுதுபோக்கு, அவ்வளவுதான். இன்றுகூட இந்த மனப்பான் மையிலிருந்து நாம் வெகுதூரம் வந்திருக்கிறோமா என்று பார்த்தால், வெகுசமீபத்தில், ஜான் ஜெனே (JEAN GENET) என்ற பிரெஞ்சு எழுத்தாள னின் பெயரைத் தமது கட்டுரையில் குறிப்பிட்ட ஒரு தமிழ் இலக்கிய விமர்சக ஜாம்பவானிடம்கூட, இந்த மனப்பான் மையைக் கண்டு அதிசயித்தேன். ஜெனே குற்றவாளியாக வாழ நேர்ந்துவிட்ட மேதை. அவனுடைய ‘ரகத்தில்’ எழுதுவதைப் பற்றிக் குறிப்பிடுகையில், பொழுதுபோக்கப் புறப்பட்டவராக, இவர், ‘கொலை, கொள்ளை, கற்பழிப்பு’ (அவரது வார்த்தைகள் ஜெனே செய்யாத குற்றங்கள் இவை. இவற்றை ஏன் இந்த அன்பர் குறிப்பிட்டாரோ தெரியவில்லை. ஜெனேயைப் பற்றி அறியாததன் விளைவுதான், அவர் செய்யாத குற்றங்களைக் குறிப்பிட்டதன்
காரணம் எனத் தோன்றுகிறது. ஜெனே, ஒரு சாமானியத் திருட னாகவும் சமப்பாலுறவுத் தாசியாகவும் பிச்சைக்காரனாகவும் வாழ்ந்தவன். இந்நிலையிலிருந்து மீண்டு, இன்று ஒரு கலாச்சார சக்தியாக இவன் மாறி விட்டான். தன் சூழலின் சிறையை, ஒருவன் இலக்கிய சாதனையின் மூலம் மீறிய அற்புதம் இது.) முதலியவற்றைப் பற்றித் தமிழிலும் எழுதி, ‘மனதைக் கவரும் காரியம்’ என்று குறிப்பிடு கிறார். குற்றவாளியாக வாழ்ந்தவன், தனது வாழ்க்கையைப் பற்றி எழுதுவது தான் ஹ்ருதய பூர்வமானது நேர்மை. ஆனால், அவன் வாழ்வு இலக்கியமாகும் போது, நமது தமிழ் மூளைக்கு அது ‘மனதைக் கவரும்’ காரியமாகிறது. கொலையா? கற்பழிப்பா? “பேஷ்!”
இது, ‘இலக்கியம் என்றால் என்ன?’ என்றே கேட்க வைத்து விடுகிறது. இலக்கியம் மனித அநுபவத்திற்கு நியாயம் செய்தாக வேண்டும். கொலைக்கு ‘பேஷ்’ போடவைக்கும் படியாக எழுதுவது இலக்கிய சிருஷ்டி அல்ல. மிகக் கேவலமான வியாபார முறை அது. இன்று இந்திய சினிமாவில், கொலையும் கற்பழிப்பும் ‘பேஷ்’ வாங்கப்படவென்றே, அவற்றின் குரூரமான மிருகத்தன்மைகளை நீக்கி ருசிகரப்படுத்தப்படும் ஆபாஸத்தைக் காணலாம். இது கண்டிக் கப்பட வேண்டியது. கலையல்ல. காரணம் கொலை, கற்பழிப்பு என்ற செய்கைகளை (சினிமாவில் கண்துடைப்புக்கு இவை குற்றங் கள் என்று சமிக்ஞை யாக மட்டும் காட்டிவிட்டு), ‘மனதைக் கவரும் அம்சங்களாகவே தயாரிப்பாளர்கள் சேர்க் கிறார்கள். இக்கட்டங்களில் மனித இயல்பு எத்தகையதாக செயல்படும் என்ற உண்மை மழுப்பப்படுகிறது. இது விஷயத்தில், இந்தியத் தணிக்கை நிபுணர்கள் காட்டும் வினோத மதிப்பீடுகள் இருக்கட்டும். எங்கள் க.நா.சு. சொல்வதுபோல் பார்த்தால் இதுதான் கலை; ஏனெனில், இவ்விஷயம் லட்சக்கணக்கான மனங்களைக் ‘கவர்’கிறது. இதன் காரணம் என்னவோ, இந்த மனங்களின் சீரழிவுதான். இக்காட்களின் நிதர்சனத்தன்மையை அவற்றின் முழு குரூரத்தோடு படமாக்கி னால், அவை நிச்சயம் மனதைக் கவராது; உலுக்கிவிடும்.
கலைத்துறை எதுவாயினும், இலக்கியம் உட்பட, உண்மைக்கு வசப்பட்டது. நிதர்சன இயல்புகளையே அடிப்படையாகக் கொண் டது. வாழ்வின் கதியும்இல்லையென்றால் மனித இயல்பும், மனிதன் இவற்றை எதிர்த்து, இவற்றுக்கு அடிமைப்பட்டு, ஈடுகட்டி, வென்று,
தோற்று, வாழ்ந்து சமைக்கும் நிதர்சனமும் கலையுருப்பெறும் போது அது மனதைக் கவராது; படிப்புவனின் மனதைத் தாக்கும், விழிப்பூட்டும், அவனைத் தன்னுள் ஆழ்த்தி எடுத்து உலுக்கிவிடும். இந்த இயல்பு இலக்கியத்தில் இல்லையென்றால், ‘பாதிப்பு’ என்ற ஒரு அதிர்ச்சியே நேர்ந்திராது. இந்தப் பாதிப்பின் விளைவுதான் பாரம்பரியம். இந்த இயல்பு இலக்கியத்தில் இல்லையென்றால், மனித அறிவின் வரலாறே இன்று நாம் அறிந்துள்ள வகைக்கு வந் திராது. ஹோமரிலிருந்து ஓவிட், இப்ஸனிலிருந்து ஷா, ஹென்றி ஜேம்ஸி லிருந்த ஜாய்ஸ், காப்காவிலிருந்து ராபர்ட் ம்யூஸில், லூயி பெர்டினான்ட் செலினிலிருந்து ஹென்றி மில்லர், டாஸ்டாயவ்ஸ்கி யிலிருந்து கெமு என்ற பாரம்பரிய வரிசை இந்த தாக்கு தலின், விழிப் பூட்டலின், உலுக்குதலின் விளைவு; மனம் கவரப்பட்டதன் விளைவல்ல.
ஆனால் ஒன்று; மேற்படி எழுத்தாளர்களின் படைப்புகளில் பெரும்பாலானவற்றைக் கூடக் ‘கதை’களாகப் படிக்க ஒரு ‘சான்ஸ்’ உண்டு. டாஸ்டாயவ்ஸ்கியின் கரமஸாவ் சகோதரர்களையும் குற்றமும் தண்டனையுமையும், கதைக்காகப் படித்து ‘ரசிப்பவர்’களை எனக்குத் தெரியும். டாஸ்டாயவ்ஸ்கி எழுப்பும் நிதர்சனம் இவர்கள் மீது இறங்கும்போது, எருமைமாட்டின் முதுகில் பெய்த மழையாகத்தான் முடியும். எந்த டாஸ்டாயவ்ஸ்கி நாவலையும் படிப்பது, ஒரு பயங்கரமான பிரயாணத்தை மேற்கொள்ளும் காரியம் என்றே நினைக்கிறேன். பேரிலக்கியங்கள் இந்த அநுபவத்தையே நமக்குத் தருகின்றன. சிலப்பதிகாரம் பேரிலக்கியமாவது இந்த அம்சத்துக்காகவே. ஆனால் க.நா.சு தமது ஞானரதம் மணிவிழா மலரில், சிலப்பதிகாரம் தொட்ட இடமெல்லாம் இனிக்கிறது,” என்கிறார். இக்கூற்றின் அடியில் கலையுணர்வு முதிர்ச்சி (aesthetic maturity) அற்ற நமது தமிழ் ‘மரபு ரசனை’ தான் குரல் காட்டுகிறது. இதெல்லாம் க.நா.சு.விடம் நாம் காணும் அதிசயங்கள்.
மனதைக் கவரவோ இனிப்பூட்டவோ இலக்கியங்கள் பிறப்பதில்லை. (இவ்விடத்தில் எழுத்து மூலம் அறிமுகமான ஒரு கவிஞர், இலக்கியம் ‘குதூகல’ப்படுத்துகிறது என்று கூறியதையும் சேர்த்துக் கொள்ளலாம்). நமது இந்திய மரபில் பழைய இலக்கியவாதிகள், தார்மிக அடிப்படைக்கு முக்கியத்வம் தந்து எழுதுவதைக் கலை யாகக் கண்டார்கள். ஆனால், அவர்கள் யுத்தம் முதலிய முரட்டுக்
காரியங்களை, அவற்றின் முரட்டுத்தனம் புலப்படவே சித்தரித்தனர். ராவணன் சீதையைத் தூக்கிச் சென்றதை மூலகாவியமான வால்மீகி ராமாயணம், அந்தச் செய்கையின் குரூரம் ஒரு மனிதத் தளத்திலேயே தெரியும்படிக்குத் தான் விவரித்துள்ளது. இந்த நிதர் சனத்துவம் சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கும் நேர்கிறது. ஆனால், நிதர்சனத்தைச் சந்திக்கக் கூசி, நாயக நாயகிகளைப் படிப்பவர்களின் மன உளைச்சல்களின் பிரத்தியட்சப் படுத்தலாகக் காட்டும் மனப் பான்மை வளர்ந்து விட்ட தாலோ ஏதோ, இடையில் இந்திய ரசனையைக் குன்ற வைக்கும்படிக்கு, ‘சந்தோஷ முடி’வாக அவதாரத் தன்மைகளும் நன்மை வென்று தீமை ஒழிவதுமாக இலக்கியம் எழுந்ததுதான், தார்மிக அடிப்படையை விகசித்துக் காட்டும் முயற்சி யாயிற்று எனலாம். இந்த ‘சந்தோஷ முடி’வையே, இன்றும் சினிமா வின் கற்பழிப்பில்கூடப் பார்த்துக் குதூகலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இது, இலக்கியத்தில்கூடத்தான் என்றிருப்பது தான் பரிதாபமானது. இது, இந்தியக் கலையுணர்வின் முதிர்ச்சி, இடையில் தேய்ந்து அப்படியே நின்றுவிட்டதைக் காட்டுகிறது.
மேனாட்டில் இம்மரபு, மார்க்குவிஸ் து சாட் என்ற பிரெஞ்சு எழுத்தாளனால், பிரெஞ்சுப் புரட்சியின்போதே சித்தரிக்கப்பட்டது. சம்பிரதாய தார்மிகச் சுரணை காட்டாமல், இதயபூர்வமாக எதையும் எழுதும்போது இலக்கியத்தைப் பிறப்பிக்க முடியும் என்ற மர்மம் வெளிப்பட்டது இவன் மூலம்தான். இவனது ‘ஜஸ்தின்’, இவ்விதத்தில் மிகக் குரூரமான ஒரு நூல். ஆனால் து சாட், அடிப்படையில் தார்மிகச் சுரணை மிகுந்தவன். அவனது நோக்கு, பிரெஞ்சு அதிகார வர்க்கத்தை அவர்கள் கண்ணூடாகவே காட்டித் தாக்குவதாகத் தான் இருந்தது.இருந்தும், சம்பிரதாய தார்மிகச் சுரணைக்கு முரண் பட்டுக்கூட இலக்கியத்தின் தொனி இருக்க முடியும் என, தன் வாழ்வையே (இவனும் பிரெஞ்சு அதிகார வர்க்கத்தைச் சார்ந்தவன். தான் அநுபவித்த வாழ்க்கையைத்தான் இவன் இலக்கிய மாக்கி னான்) எழுதிக் காட்டி நிரூபித்தவன் இவன். இந்த நேர்மை தார்மிக சக்திக்கு எதிரானதல்ல; அதை விழிப்பூட்டுவதாகும். இது சமூகத் தைக் கெடுக்குமா கெடுக்காதா என்ற விசாரணைக்கே, ஒரு உயர்ந்த அறிவுவாதத் தளத்தில் இடமில்லை. குரூரத்தன்மை யின் முழு உள்ளோட்டங்களையும் காட்டுவது எச்சரிக்கையாகவே முடியும்; குரூரத்தன்மையின் மானுட மனஉள்ளோட்டங்களற்று, செய்திப் பத்திரிகை தரும் கொலை, கொள்ளை, கற்பழிப்புப் பக்கங்கள்தான் இச்செய்கைகளின் மன விபரங்களைக் காட்டாத அளவில், இலக்கியங்களைவிட ஆபத்தானவையாகின்றன. தமது கீழ்மையையே இலக்கியமாக்குவதற்கு விஷயம் கையிலேயே உள்ள நபர்கள் இன்றைய தமிழிலக்கியத் துறையிலேயே இருந்தும், அவர்கள் ஹ்ருதயபூர்வமான நேர்மையோடு எழுதாததற்கு, இவர்களும் க.நா.சு.சீடர்களாக, இலக்கியம் குதூகலப்படுத்த, கவர, இனிக்க என்றிருப்பதுதானோ தெரியவில்லை. நண்பர்களின் முதுகிலேயே கத்திக்குத்துக் கைங்கர்யம் செய்யும் இவர்களது மனப்பான்மையுடன் வாழ்ந்தவன்தான் லூயி பெர்டினாண்டு செலின் என்ற பிரெஞ்சு எழுத்தாளனும்; ஆனால், தனது இயல்புக்கு முரணாக, மேற்படி தமிழ் எழுத்தாளரகளைப் போன்று, பிறர் க்ஷ்டம் கண்டு உருகி, முதலைக் கண்ணீர் வடிக்கும் ‘இலக்கியத்தைப்’ படைக்கவில்லை. அப்படி அவன் செய்திருந்தால், நம் ஆசாமிகளின் எழுத்துக்கள் எப்படி ஸ்பஷ்டமாக அவர்களது போலித் தனத்தைக் காட்டி விடுகின்றனவோஅப்படியே, அவன் எழுத்திலும் போலித் தனம்தான் இருந்திருக்கும். செலினின் நேர்மையோ, அவனது கீழ்மையான மனப்பாங்கையே இலக்கியமாக்கிற்று. இவ்வகையான இலக்கியம் நம்மைச் சங்கடப்படுத்தும்; வருத்தும். கீழ்மையின் முழுத்தன்மையையும் காட்டி எச்சரிக்கும்; ‘இனிக்’காது.
இந்த இனிப்பு, சுவைப்பு, ரசனையிலேயே நமது இலக்கிய சமூகம் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில்தான், விமர்சனம் என்ற ஒரு விழிப்பைத் தமிழ் ரசனை பெற்றது. இந்த விமர்சன விழிப்பு, ஒரு இயக்கமாக, ஒரு தீவிரமான தபஸாக, தமிழிலக்கியக்களத்தில் எழுத்து என்ற பத்திரிகையின் பக்கங்களில் நிகழ்ந்தது. இவ்விழிப் பின் விளைவுகள் பரவலாக இன்று செயல்படுவதை, எவராலும் உணர முடியும். சிறுசிறு இலக்கியப் பத்திரிகைகள், விமர்சனங்களை அரங்கேற்றும் வாசகரவைகள் முதற்கொண்டு, ஜனரஞ்சகப். பத்திரிகைகளின் புதுவிதமான புத்தக மதிப்புரைகள் வரை, எழுத்துவின் பாதிப்பு, எதிர்விளைவுகளைத் தந்துள்ளது. , .இவ்வளவுக்கும் எழுத்து ஐந்நூறுக்கும் உட்பட்ட தொகை வாசகர்களால்தான் படிக்கப் பட்டது. சுத்தமாகப் படித்திருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது. அந்த எண் ணிக்கையும் அதிக பட்சம்தான். எழுத்து போன்ற ஒரு உக்கிரத்
தன்மையுள்ள பத்திரிகை, அங்கங்கே உக்கிரமான மனங்களிலேயே எதிரொலித்து, இந்த எதிர் விளைவுகளைக் காட்டியுள்ளது என்பது தான் அவதானிக்கத் தக்கது. இத்தகைய உக்கிரமான மனங்களுடன் உறவு கொண்டு, அவர்கள் மூலம் சமூகத்தின் மீது இறங்கும் காரி யத்தை எழுத்து செய்த பிறகு, இன்று ஜனரஞ்சக எழுத்தாளர்கள் பின்வாங்கிவிட, புதுவகைப் போலிகள் இலக்கியக் களத்தில் இறங்கி, ஜனரஞ்சகத் தன்மையை நோக்கி விரிய முயன்றபடியே, இலக்கிய கௌரவத்தையும் பெறமுயல்கிறார்கள். அகிலன், ஆர்வி வகையறாக்கள், அன்று தாங்களே இலக்கியாசிரியர்கள் என்பதற்குத் தாங்கள்தான் பெருவாரியான வாசகர்களால் படிக்கப்படுகிறோம் என்ற காரணத்தைத் தந்ததுபோல், இன்று இந்தப் புதுவகைப் போலிகள் தர முயற்சிக்காததும் தங்களது ‘இலக்கிய கௌரவம்’ தாக்கப் பட்டால், ‘விமர்சன’க் கட்டுரைகள் மூலமே தங்கள் கௌரவம் சரிந்துவிடாமல் காப்பாற்ற முயல்வதும் எழுத்துவின் எதிர்விளைவுகள். இந்த விமர்சனக் கட்டுரைகள், உண்மையில் விமர்சனங்கள் தனானா என்பது வேறு விஷயம். ஞானரதம் ஜனவரி 1973 இதழி லேயே வெளிவந்த இத்தகைய கட்டுரை ஒன்றில், ஒரு கதாபாத்திரத்துக்குச் சமாதானமாக, “அப்பாத்திரத்துக்கு என்னென்ன கவலைகளோ?” என்று (அப்பாத்திரத்தைச் சிருஷ்டித்தவர், ‘குடும்பம் நடத்துபவர்கள், பிள்ளைகுட்டிக்காரர்களை’யெல்லாம் இலக்கிய மதிப்பீட்டின்) கதாபாத்திர சிருஷ்டிக்குப் புறம்பான அநுமானங்களைக் கொண்டு வருவது போன்ற, பேத்தல் நியாயங்கள் இருந்தன என்பதை அவதானிக்க வேண்டும்.
இத்தகைய போலி இலக்கிய மனப்பான்மையின் கரு, ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பதுகளில் அகிலன், ஆர்வி போன்றாரின் ஜன ரஞ்சக ‘இலக்கிய சித்தாந்த’ங்களில் இருந்திருக்கிறது. எவன் அதிக வாசகங்களைக் கொண்டவனோ அவனே சிறந்த எழுத்தாளன்
என பது, இச்சித்தாந்தத்தின் மஹாமந்திரம். அச்சமயத்தில், ஸி.வேங் கடாச்சாரி சுதேசமித்திரனில் ஆசிரியராக இருந்தார். இவர் ஒரு இலக்கிய அபிமானி. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, க.நா.சுப்ர மண்யமும் சி.சு.செல்லப்பாவும், சுதேசமித்திரனில் இலக்கியம் தேங்கிவிட்டது என்ற விஷயத்தைச் சொன்னார்கள். ‘எங்கே தேங்கி விட்டது, நாங்கள் இலக்கியம் பண்ணுகிறோமா இல்லையா?’ என்று, தங்கள் மேற்படி மஹாமந்திர உச்சாடனத்துடன் பதில் அளித்தார்கள் அகிலனும் ஆர்வியும், அதே சமயத்தில், வ.விஜய பாஸ்கரனின் சரஸ்வதியும் இது சம்பந்தமான இலக்கியச் சர்ச்சைக்கு இடம் தந்தது. கநாகவும் செல்லப்பாவும் இச்சர்ச்சை தொடர்ந்து நடத்தும்போதே, எழுத்து பிறப்பதற்கான அத்தியாவசியங்களும் வளர்ந்துவிட்டன.
எழுத்து பிறக்கும் வரை, இலக்கியம் சம்பந்தமாக, விஷயம் தெரிந்தவர்களும் தெரிந்த மாதிரி வேஷம் போடுவதில் வெற்றி பெற்றவர்களுமே, விமர்சனம் என்ற பெயரில் கட்டுரைகளை எழுதி வந்தனர். இவர்களுள் ஒருவர் க.நா.சுப்ரமண்யம். பிறர், இவரைப் போன்ற அளவு தொடர்ந்து அச்சமயத்தில் குரல் காட்டவில்லை. வல்லிக்கண்ணன் போன்றோர், பலத்த குரல்களுக்குத் துணைக் குரல்களாகத் தான் ஒலித்தனர். அத்துடன் க.நா.சு., தமது சம்பாஷ ணைகளின் மூலம் ஒரு செல்வாக்கையும் பெற்றிருந்தார். இத்தகைய பலங்களின் அடிப்படையில், இவர் அபிப்ராயங்களையே விமர்சனங்கள் என்று எழுதி வந்தார். விஷயம் தெரிந்த பிறரின் ஒப்புமையும் இவரது பிற இலக்கியசாதனைகளும் பிரசுரிப்போர் இவர் மீது காட்டிய மதிப்பும்தான், அரைகுறை விமர்சனமாகவும் அவசர அபிப்ராயங்களுமாக உள்ள க.நா.சு. கட்டுரகளைத் தாங்கி நின் றன. இன்றைய இவரது கட்டுரைகளுக்கும் இதே கதிதான் என்பது ஒருதுரதிர்ஷ்டம். ஏனெனில், இந்தவிதமான அவசர அபிப்ராயங்களும் அரைகுறை விமர்சனங் களுமான கட்டுரை மரபை, சி.சு.செல்லப்பா என்ற புதிய இலக்கிய சக்தி தோன்றி வேரறுத்துவிட்டது. எந்த ஒரு இலக்கிய அபிப்ராயமும் ஆதாரபூர்வமாகப் பிறக்க வேண்டும் என்ற பிடிவாதத்தோடு, விமர்சனத்துறையில் காலடி வைத்தார் செல்லப்பா. இதன் விளை வாக, எத்தனையோ அபிப்ராய கர்த்தாக்கள், பிறர் அபிப்ராயத்தைத் திருப்பிச் சொல்லும் கட்டுரையாளர்கள் எல்லோரும் மங்கியிருக்கின்றனர். ஆதாரமற்று அபிப்ராயம் சொல்வது, உண்மையில் அறிவு வாதிகளின் களத்தில் நடைபாதைத்தனமானது. இத்தகைய அபிப் ராய விமர்சன மரபில், ‘பட்டியல் விமர்சனமும் அடங்கும். அன்று மட்டுமல்ல, இன்றும், க.நா.சு. போகிற போக்கில் விரலுக்கு வந்த பேர்களைப் பட்டியலாகச் சேர்த்து எழுதிக் கொண்டுபோவதைக் பெறும் ஆசிரியர்களைக் கணித்து நிரூபித்த பிறகு, இப்பட்டியல் காணலாம். விமர்சன பூர்வமாக இவர், தமது பட்டியல்களில் இடம் பெறும் ஆசிரியர்களைக் கணித்து நிரூபித்த பிறகு, இப்பட்டியல்களைத் தருவது தான் நியாயம். எழுத்துவையும் சி.சு.செல்லப்பாவையும் தொடர்ந்து, சுத்தமான விமர்சனம் இன்று வெங்கட் சாமி நாதன் போன்றாரின் கைகளில் வளர்ந்துள்ளதைப் பார்த்துவிட்டு, க.நா.சு.வின் பட்டியலையும் பார்த்தால், தசை நீத்த எலும்புகளின் குவியலைப் போன்றுதான் அவரது பட்டியலிலுள்ள பெயர்கள் தோன்றுகின்றன.
இருந்தும், தமிழில் விமர்சனத்தின் அவசியத்தை வலியுறுத்தியவர்க.நா.சு.தான். செல்லப்பா 1959-ல் எழுத்துவை ஆரம்பித்தபோது, க.நா.சு. வின் நெருங்கிய தொடர்பு செல்லப்பாவுக்கு இருந்தது. அச் சமயத்தில், தமிழில் விமர்சனம் வேண்டும் என்று வலியுறுத்தியவர் க.நா.சு.வாகவும் விமர்சனத்தை ஒரு சாதனையாகக் காட்டியவர் செல்லப்பாவாகவும் ஆனது, இத்தொடர்பின் மலர்ச்சியாகப் பலனளித்தது. விமர்சனத்தை வலியுறுத்தியவரானாலும், செல்லப்பா ஆதர்சமாகக்கொண்ட ஆய்வுமுறையை க.நா.சு. அநுசரிக்க வில்லை. எழுத்துவில் எழுதிய ஒரு கட்டுரையில் அவர், விமர்சனம் என்பது கலைப்படைப்பைத் தொட்டும் தொடாமலும் (tentative), பூனைக் குட்டி ஒரு பொருளைத் தொடுவது போல தொட்டுப் பார்ப்பதுதான் என்று எழுதினார். ஆனால், இந்தத் தொட்டும் தொடாதநிலை என்பது, அபிப்ராயம் சொல்வதோ, பட்டியல் போடுவதோ அல்ல;” கலைப் படைப்பையே தீண்டி ஆராய்வதுதான். (பூனைகுட்டி ஒரு பொருளை ஆராயும்போது, அதனிடம் தோன்றும் உக்கிரத்தைக் கவனித்திருப்பீர்கள்.) எவ்வளவுதான் ஆழ்ந்து அலசி ஆராய்ந் தாலும், அது இந்தத் தொட்டும் தொடாமலும் சென்ற அளவுதான். ஏனெனில், எத்தகைய விமர்சனமும் கலைப்படைப்பை அப்பிப் பிடித்து ஒட்டி இழுத்துவிட முடியாது. தொட்டுக் காட்டி விட்டு, விலகி நிற்பது தான் விமர்சனம். ஆய்வு முறையின் மூலம் இந்த தொட்டுக்காட்டல், ஒரு கணிப்பாக, நிரூபணமாக செல்லப்பாவின் கையில் உருப்பெற்றது.
க.நா.சு.வின் அடிப்படையற்ற அபிப்ராயங்கள் அவரது செல்வாக்கின் தளத்தில் பிறந்தவையானாலும், இன்று, க.நா.சு.வை மறந்து விட்டு அவரது கட்டுரைகளை மட்டும் படிப்பவனுக்கு, ”நான் சொல்கிறேன் கேள், இவர்கள் தான் இலக்கியாசிரியர்கள்,” என்ற தொனியாகவே அவை சப்திக்கும். இந்தச் சாத்தியத்தையும் செல்லப்பா உணர்ந்திருக்கிறார். செல்லப்பாவின் விமர்சன இயக்கத்திலோ, இந்த தற்பாவத்தொனி அறுத்தெறியப்பட்டது சொல்லப்பட்ட அபிப்ராயத்துக்கு, காரணங்களே அடிப்படைகளாயின.
மௌனி, ராமாமிருதம் போன்றோரைச் செல்லப்பா விமர்சித்த முறை ஆய்வு ரீதியானது. இந்த முறையின் பின்விளைவுகள் ஆழமானவை. செல்லப்பா விமர்சனம் செய்ததன் விளைவாகத்தான் ஜனரஞ்சகவாதிகளே தங்கள் தளத்துக்கு ஒதுக்கப்பட்டனர். க.நா.சு.,’அபிப்ராயங்க’ளையும் மேனாட்டு ஆசிரியர்களின் பெயர் களையும் மட்டும் சொல்லி ஜனரஞ்சக எழுத்தாளர்களைத் தாக்கிய போது, இந்த வியாபார எழுத்தாளர்களே முனைந்து அவரை மிரட் டல்காரர் என்று சொல்லி உதறிப்பேசவும் பரிகரிக்கவும் செய்தார் கள். ஆனால் செல்லப்பா ஆய்வுபூர்வமாக, மௌனி, புதுமைப் பித்தன், ராமாமிருதம், பிச்சமூர்த்தி போன்றோரைப் பற்றிய கட்டுரைகளைத் தாமும் எழுதி, என் போன்றோர் எழுதியவற்றையும் பிரசுரித்ததன் மூலம், உண்மையான இலக்கியத்தின் ஆழம், விஸ்தாரம் முதலியவற்றை இனம் காட்டினார். இதன் விளைவு, ஜனரஞ்சக எழுத்தாளர்களிடம் இந்த ஆழமும் விஸ்தார மும் இல்லை என்ற உண்மையைப் புலனாக்கிற்று. இது ஒரு தர்க்கபூர்வமான விளைவு. மேற்படி இலக்கியாசிரியர்களின் இலக்கியத்தின் ஆழ்ந்த தன்மை களினுள், செல்லப்பாவின் எழுத்து கட்டுரைகள் ஆழ்ந்து காண்பித்த போதுதான், இந்த ஆழம் ஜனரஞ்சக எழுத்தில் இல்லை என்பது தானாகவே புலனாயிற்று. எந்த ஜனரஞ்சக எழுத்தாளரும் எழுத்து வின்பக்கங்களில் தனியாக விமர்சிக்கப்பட்டதில்லை என்பதையும் கொண்டு, இந்த விளைவை அவதானிக்க வேண்டும். மௌனி, பிச்சமூர்த்தி போன்றாரின் எழுத்துக்களில் இருக்கும் கலைத்தன்மை, எழுத்துவின் விமர்சன மதிப்பீடுகளின் மூலம் பிரத்தியட்சமாகி, ஜனரஞ்சக எழுத்தின் சிற்றுருவைக் காட்டும் விஸ்வரூபங்களாக எதிரே நிற்கையில், ஜனரஞ்சக ஆசிரியர்களைத் தனியாக விமர்சிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை.
மேனாட்டுக் கவிகளும் விமர்சகர்களுமான எஸ்ரா பவுண்டும் டி.எஸ்.இலியட்டும் எழுதிய விமர்சகக்கட்டுரைகள், எப். ஆர். லீவிஸ் நடத்திய Scrutiny என்ற விமர்சனப் பத்திரிகை, ஐ.ஏ. ரிச்சர்ட்ஸின் Principles of Literary Criticism ஆகிய ஊற்றுக்களி லிருந்து பிறந்து வளர்ந்த மேனாட்டு விமர்சன சித்தாந்தங்கள், செல்லப்பா மூலம் தமிழில் விமர்சன இயக்கமாயிற்று. தி.ஜானகிராமன் இது பற்றி, செல்லப்பா மேனாட்டு இலக்கிய அளவுகோல்களைக் கொண்டு தமிழ் இலக்கியத்தை அளக்க முயல்கிறார் என்று ‘கற்பு’ பேச ஆரம்பித்தார். இதுபோன்று நேரிடையாகவோ சுற்றி வளைத்தோ அச்சமயத்தில் சொல்லப்பட்ட இலக்கியக் கருத்துக்கள் யாவற்றுக்கும் செல்லப்பா பதில் சொன்னார்; தமது பத்திரிகையில் விளைந்த எல்லா வகையான கருத்துப் பரிமாறுதல்களிலும் பங்கு கொண்டு, பொறுப்புடன் நடந்துகொண்டார். ஒரு இலக்கியப் பத்திரிகாசிரியனின் கடமையையும் பொறுப்பையும் தீவிரமாகக் கடைப்பிடித்த ஒரே பத்திரிகாசிரியர், இதுவரையில் செல்லப்பா தான். இச்சமயத்தில், செல்லப்பா மேற்கொண்ட விமர்சன சுத்தமான பார்வை, முரண்பாடுகளேமயமான க.நா.சுப்ரமண்யத்தின்கட்டுரைகளையும் ‘தமிழ்வளருமா?’ என்ற தலைப்பின் கீழ் ஆராய்ந்தது.
தன்னுடன் தானே முரண்படுவது இயல்பு. முன்னாடி ஒன்றைச் சொல்லி விட்டு, அதையே இப்போது மறுப்பது அறிவுத் துறைக்கு இணங்கும். ஆனால், தனது முந்திய முடிவை, பிந்திய முடிவால் ஒருவன்காரணங்கள் காட்டித் தகர்த்தால்தான் இந்த இயக்கம் நேரும். காரணங்கள்காட்டாமல், வெறுமனே முடிவுகளை மாற்றிக் கொண்டு போகிறவர் கள் சந்தர்ப்பவாதிகள் தான். இன்றைய சில இலக்கியப் பிரச்னைகளின்போது, முன்னுக்குப் பின் முரணாகச் சந்தர்ப்பவாதம் பண்ணும் இலக்கியப் போலிகள் இதைக் கவனிக்க வேண்டும். முடிவுமாற்றத்துக்குக் காரணங்கள் காட்டும்போதும், நேற்றைய முடிவுக்குக் காட்டப்பட்ட காரணம் இன்றையதைவிட தர்க்க பூர்வமானதாக இருக்குமானால், நேற்றைய முடிவே ஒப்புக் கொள்ளப்படும். அதன் வலுவில்தான் ஆசிரியனின் இன்றைய கௌரவம் தங்குமேயன்றி, இன்றைய அவனது காரணமற்ற முடி வில் அல்ல. தமது நண்பரான க.நா.சு. வையே இந்த வகையான தர்க்கத்தின் முன் நிறுத்தி விசாரித்த போது, செல்லப்பா தமது விமர்சன இயக்கத்தை ஒரு தார்மிகமானதபஸாக மாற்றினார்.
கருத்துலகில், சொந்த விருப்புவெறுப்புகளுக்கோ, செஞ்சோற் றுக்கடனுக்கோ இடமில்லை. அதெல்லாம், கருத்துலகிற்குப் புறம்பான பிதிர்வழிபாட்டு மனப்பான்மைகள். இந்த சொந்த விருப்பு வெறுப்பு, செஞ்சோற்றுக்கடன், குருதோஷம், பிதிர் தோஷம் யாவற்றையும் மீறிய தர்க்கபூர்வமான காரணார்த்த மான விமர்சனமாகச் செல்லப்பா நடத்திய இயக்கம், அந்த இயக்கத்தின் உக்கிரகதியைத் தணிக்க அவரே முயன்றால் கூட, பிறரின் கைகளை உபயோகித்து இதே கதி அவரையே ஒதுக்கிவிடும்; இது கருத்துலகின் தர்மம். இந்த தர்மத்தை உணராமல், செஞ்சோற்றுக் கடனை நினைத்து பஜனை பாடுவது ஒருவகைக் காட்டுமிராண்டித்தனமாகும். ஒரு ‘ஜனரஞ்சக இலக்கிய’ பத்திரிகையின் ‘கடைசிப் பக்கத்தை எழுதிவரும் அன்பர் ஒருவர், கடந்த ஆண்டில் செல்லப்பா தாக்கப்பட்டதை நினைத்து, ஏதோ ‘சோறு தண்ணி’ என்று எழுதியதை ஞாபகத்தில் வைத்து இதைச் சொல்கிறேன். க.நா.சு., செல்லப்பா ஆகியோரின் சாதனைகள், அவர்களை நமது விமர்சிப் புக்கு வசப்படாதவர்களாக ஆக்குபவை என நினைப்பது, உண்மையில் அவர்கள் எத்தகைய தார்மிக சக்தியாக உந்தப்பட்டார்களோ, அச்சக்தியையும் இதனால் அவர்களையும் அகௌரவிப்பதாகும். விமர்சனத் துறையில் மனிதர்களல்ல முக்யம் – மதிப்பீடுகள் தான். இந்த மதிப்பீடுகளின் ஆகுதியில், இன்று ஒரு நூறு ரிஷித்தன்மை வாய்ந்த வாசகர்கள் இலக்கிய குண்டத்தைச் சூழ்ந்து இருக்கிறார்கள் என்றால், அதற்கு அத்தாட்சிகள்கிடைக்குமானால், அதற்காக நாம் செல்லப்பாவுக்கு சரித்திரார்த்தமாக கடமைப் பட்டிருக்கிறோம்.