
- வீணாகானம்
சாவித்திரி -ரகுபதி விவாகம் ‘ஜாம், ஜாம்’ என்று நடந்தேறியது. பணத்தைப் ‘பணம்’ என்று பாராமல் செலவழித்தார் ராஜமையர். சந்துருவுக்கும். சீதாவுக்கும் இருந்த உற்சாகத்தில் ஊரையே அழைத்துவிட்டார்கள். வந்தவா, போனவர்களுக்கு ஒரு குறைவும் இல்லாமல், ஓடி ஆடி எல்லாவற்றையும் கவனித்து வந்தாள் மங்களம். சம்பந்தி வர்க்கத்திலும், ‘நொட்டைச் சொல்’ சொல்ல யாரும் இல்லை. ஸ்வர்ணமும், ஸரஸ்வதியும் இன்ப வெள்ளத்தில் மிதந்து திளைத்தனர். அவ்வளவு தடபுடலாகக் கல்யாணம் நடைபெறுவதில் அவர்களுக்குப் பரமதிருப்தி.
அன்று சித்திரை மாதத்துப் பௌர்ணமி. பால் போன்ற நிலவொளியில் அந்த ஊரும் அதன் சுற்றுப்புறங்களும் மூழ்கிக் கிடந்தது. அந்த ஊரில் பல இடங்களில் கல்யாணம். நாதஸ்வரத்தின் இன்னிசையும் நிலவின் குளுமையும், ‘கம்’மென்று காதவழிக்கு வாசனை வீசும் மல்லிகை மலர்களுமாகச் சேர்ந்து ஸ்வர்க்கத்தில் இவ்வளவு இன்பம் உண்டா என்கிற சந்தேகத்தை எழுப்பின. ராஜமையர் பூந்தோட்டத்திலிருந்து குண்டு மல்லிகையாகவே கல்யாணத்திற்கு வரவழைத்திருந்தார். கரு நாகம்போல் வளைந்து துவளும் பெண்களின் ஜடைகளின் மீது வெள்ளை வெளேர் என்று மணம் வீசும் மல்லிகையின் அகு பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது. முகூர்த்தத்தன்று இரவு விருந்துக்கு அப்புறம், கொட்டாரப் பந்தலில் ஊஞ்சலில் பெண்ணையும், பிள்ளையையும் உட்கார வைத்தார்கள். ஊஞ்சல் வேடிக்கையை ரசிப்பதற்கு ஆண்களை விடப் பெண்களின் கூட்டமே வழக்கம்போல் அதிகமாக இருந்தது.
” என்னடி இது? ஊஞ்சலில் அவர்களை உட்கார்த்திவைத்து விட்டு எல்லோரும் பேசாமல் இருக்கிறீர்கள்? நறுக்கென்று நாலு பாட்டுகள் பாடமாட்டீர்களோ” என்று கூறிவிட்டு ‘கன்னூஞ்சல் ஆடினாரே, மீனாட்சி சுந்தரேஸ்வரர்’ என்று இரண்டு கட்டை ஸ்ருதியில் பாட ஆரம்பித்தாள் பெரிய சுமங்கலியாகிய ஒரு அம்மாள்.
யுவதிகள் கூட்டத்திலிருந்து கலீர் என்று சிரிப்பொலி எழுந்தது. பொங்கிவந்த சிரிப்பை வெகு சிரமப்பட்டுச் சீதா அடக்கிக்கொண்டு. “ஸரஸு! பாட்டுத் தெரிந்தும் பாடாமல் இருப்பவர்களுக்கு இதுதான் சரியான தண்டனை! புரிந்ததா உனக்கு?” என்று கேட்டாள். ஊஞ்சல் பாட்டை அரைகுறை பாக நிறுத்திவிட்டு மறுபடியும் அந்த அம்மாள், ‘லாலி –லாலய்ய லாலி’ என்று ஆரம்பிக்கவே, கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருந்த ராஜமையர் சுவாதீனமாக அவளைப் பார்த்து, “அம்மாமி! வருகிற மாசந்தானே மாமாவுக்குச் சஷ்டியப்த பூர்த்தி? ஜமாய்த்துத் தள்ளிவிடுவாய்போல் இருக்கிறதே!” என்று கேலி செய்தார்.
“போடா அப்பா! சிறுசுகள் எல்லாம் பாடாமல் உட்கார்ந்திருந்தால் கிழவிதானே பாடவேண்டும்?” என்று கூறி அந்தப் பாட்டையும் அரைகுறையாகவே நிறுத்தி விட்டாள், அந்த அம்மாள்.
இதற்குள்ளாகச் சந்துருவின் கண்கள் ஆயிரம் முறை ஸரஸ்வதியின் பக்கம் பார்த்து, ‘உன் கானத்தைக் கேட்பதற்காகவே தவம் கிடக்கிறேனே’ என்று சொல்லாமல் சொல்லின. புன்னகை ததும்ப நிலத்தைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந் திருந்த ஸரஸ்வதி திடீரென்று நிமிர்ந்து பார்த்து, “சாவித்திரி! பெண் பார்க்க வந்த அன்றே எங்களை எல்லாம் நீ ஏமாற்றி விட்டாய். அத்தானுடைய விருப்பப்படி என்னிடந்தான் நீ பாட்டுக் கற்றுக்கொள்ள வேண்டும். ஏதோ ஒரு பாட்டு உனக்குத் தெரிந்தவரையில் பாடு பார்க்கலாம்” என்று கொஞ்சுதலாகக் கூறினாள்.
எதிலும் கலந்து கொள்ளாமல் எங்கோ பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த சாவித்திரி, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்: பிறகு கடுகடுவென்றிருந்த முசுபாவத்தைச் சட்டென்று மாற்றிக் கொண்டு புன்சிரிப்புடன், “எனக்குத் தெரியாது என்று அன்றே சொல்லி இருக்கிறேனே” என்றாள்.
“பேஷ், பேஷ்… பாட்டு பாட்டு என்று மாய்ந்துபோனவனுக்கு இந்த மாதிரி மனைவியா வந்து வாய்க்க வேண்டும்? ரொம்ப அழகுதான் போ” என்று ரகுபதியின் அத்தை பரிகாசம் செய்யவே, சாவித்திரிக்கு ரோஷம் பொத்துக்கொண்டது. சிறிது அதட்டலாக, “எனக்குப் பாடத் தெரியாது என்றால் பேசாமல் விட்டுவிட வேண்டும். இது என்ன தொந்தரவு?” என்று கூறி முகத்தை ‘உர்’ ரென்று வைத்துக்கொண்டாள்.
இதுவரையில் பேசாதிருந்த ரகுபதி ஸரஸ்வதியின் பக்கம் திரும்பி, “ஸரஸு! நீதான் பாடேன். இதில் நான், நீ என்று போட்டிக்கு என்ன இருக்கிறது?” என்று கூறினான்.
ஸரஸ்வதி சிரித்துக்கொண்டே உள்ளே போய்த் தன் வீணையை எடுத்து வைத்துக்கொண்டு ஸ்ருதி சேர்க்க ஆரம்பித்தாள். தூரத்தில் நின்று இதுகாறும் ஸரஸ்வதியின் பரிகாசங்களைக் கவனித்துவந்த சந்துரு பந்தலுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டான்.
ஸ்ருதி சேர்த்து முடிந்ததும் ஸரஸ்வதி ரகுபதியைப் பார்த்து, “அத்தான்! எந்தப் பாட்டை வாசிக்கட்டும்?” என்று கேட்டாள். அதற்குள் ராஜமையர், ”குழந்தை! ‘ஷண்முகப்-பிரியா’ ராகத்தை நீ அற்புதமாக வாசிப்பாயாமே. எல்லோரும் சொல்லுகிறார்கள்: அதையே வாசி, அம்மா கேட்கலாம்” என்றார்.
வீணையின் மதுர ஒலி, அந்த மோகன நிலவிலே தேவலோகத்துக் கின்னரர்கள் எழுப்பும் யாழின் ஒலிபோல் இருந்தது. குழந்தைகள் கொஞ்சும் மழலையைப்போல் மனதுக்கு இன்பமளித்தது. மகான்களின் உபதேச மொழிகளைக் கேட்டு ஆறுதல் கொள்ளும் மன நிலையை அங்குள்ளவர்கள் அடைந்தார்கள். தெய்வ சந்நிதானத்தில் நிற்கும் பரவச நிலையைச் சிலர் அடைந்தார்கள். சந்துருவின் உள்ளம் கிளுகிளுத்தது. நொடிக்கொரு முறை அன்புடன் ஸரஸ்வதியை அவன் பார்த்த போது அவன் பார்வையின் தாக்குதலைச் சகிக்க முடியாமல் ஸரஸ்வதி தலையைக் குனிந்து கொண்டே பாடினாள்.
வெளியே பாலைப் பொழிவதுபோல் நிலவு வீசிக்கொண்டிருந்தது. களி நடனம் புரியும் மோகன சந்திரிகையிலே, ஸரஸ்வதியின் குரல் இனிமையோடு, இழைந்து வரும் வீணா கானம் ஒவ்வொருவர் உள்ளத்தில் ஒவ்வொருவிதமான உணர்ச்சியை ஊறச் செய்தது.
‘ஷண்முகப்பிரியா’ ராகத்தில், ‘வள்ளி நாயகனே’ என்கிற கீர்த்தனத்தை முடித்த ஸரஸ்வதி ‘சங்கராபரண’ த்தில் ஒரு ஜாவளியையும் வாசித்தாள். மதுர கீதத்தைப் பருகியவாறு அங்கிருந்தவர்கள் மெய்ம் மறந்து உட்கார்ந்திருந்தனர்.

One Comment on “ஸரோஜா ராமமூர்த்தி/இருளும் ஒளியும்”
Comments are closed.