சாவி/”வேத வித்து”

3.

பெரும் பாவ காரியத்தில் சிக்கிக் கொள்வோமோ, குருத் துரோகியாகி விடுவோமோ என்ற அச்சத்தில் மூர்த்தியின் உடம்பெல்லாம் விதிர்த்து வியர்த்துக் கொட்ட, மார்பு படபட வென்று அடித்துக்கொள்ள,
“ஸ்மிதமாதாயாக்னே ஸர்வவ்ரதோ பூயாஸுஸ்வாஹா!”
“அக்கினி பகவானே! தினம் தினம் நான் செய்து வரும் சமிதாதானத்தால் எல்லா விரதங்களையும் நன்கு அனுஷ்டித்தவனாக ஆகும்படி அருள்வாயாக” என்ற மந்திரத்தை மனதுக்குள்ளாகவே சொல்லி வேண்டிக் கொண்டான்.
“ஏண்டா, உன் உடம்பெல்லாம் இப்படி ஜூரம் வந்த மாதிரி நடுங்கறது? கண்ணெல்லாம் சிவந்திருக்கே தலை வலிக்கிறதா? சூடா காப்பி போட்டுக்கொண்டு வரட்டுமா? இப்பத்தான் பசும்பால் கறந்து வந்திருக்குடா! குடிச்சுட்டு நாடாக் கட்டிலை இழுத்துப் போட்டுண்டு ஒரு “ஆவர்த்தம்” தூக்கம் போடு. சரியாப் போயிடும், காலையிலே ரெண்டு தரம் பச்சைத் தண்ணில ஸ்நானம் பண்ணயோல்லியோ, அதான் இப்படி” என்றாள் பாகீரதி.
“இல்லை; நான் காப்பி சாப்பிடற வழக்கமில்லேன்னு உனக்கே தெரியுமே. தெருக் கோடி அரசமரம் வரைக்கும் போயிட்டு வந்துடறேன். சமித்தெல்லாம் தீர்ந்து போச்சு. இப்படி கொஞ்ச தூரம் காத்தாட நடந்துட்டு வந்தாலே எல்லாம் சரியாப் போயிடும்” என்று வெளியே கிளம்ப அவசரப்பட்டான்.
“எதுக்கு இப்படித் துடிக்கிறே? இங்கே இருக்கப் பிடிக்கலையா? என்னோடு பேசப் பிடிக்கலையா? உனக்கு இஷ்டமில்லேன்னா நீ பல்லாங்குழி ஆட வேணாம். தோட்டப் பக்கம் வாயேன். வேப்ப மரத்தடியில் உட்கார்ந்து சந்தோஷமாப் பேசிண்டிருக்கலாம்.”
“இல்லை பாகீ ! நீ கொஞ்ச நேரம் தூங்கு, பாவம்! உனக்குத்தான் நாளெல்லாம் வேலை. நான் போயிட்டு இதோ வந்துடுறேன்” என்று புறப்பட்டு விட்டான்.
போகிற வழியில்தான் சரபோஜி சத்திரம் இருந்தது.
‘கழைக்கூத்தாடிப் பெண் மஞ்சு, அங்கதானே தங்கி யிருப்பதாகச் சொன்னாள்? அவளைப் பார்க்க வேண்டும்போல் உள்ளுக்குள் ஒரு ஆசை பொங்கியது. தன்னைக் காப்பாற்றியவளுக்கு நன்றிகூடச் சரியாகச் சொல்லவில்லையே’ என்று எண்ணியபடியே சத்திரத்தை நோக்கி நடந்தான். அங்கே வாசலில் உட்கார்ந்திருந்த சத்திரத்துக் காவலாளியிடம் “அந்த கழைக் கூத்தாடிங்க இங்கதானே தங்கியிருக்காங்க?” என்று கேட்டான்.
“அவங்களா! இப்பத்தானே புறப்பட்டுப் போனாங்க!” என்றான் காவல்காரன்.
“எங்க போனாங்கன்னு தெரியுமா?”
”திருவையாறு போறதாச் சொன்னாங்க.”
“அடாடா, கொஞ்சம் முன்னாடி வராமல் போனோமே!” என்ற ஏமாற்றத்தோடு திரும்பினான்.

தெருவிளக்குகள் ஏற்றப்பட்ட பிறகே மூர்த்தி பாட சாலைக்குத் திரும்பினான். வித்தியார்த்திகள் இனிய சங்கீதமாய்ப் புருஷ ஸூக்தம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மூர்த்தி நேராக கிணற்றடிக்குப் போய் கைகால், முகம் கழுவி, விபூதி பூசி, சந்தியாவந்தனம் முடித்து புருஷ ஸூக்தத்தில் கலந்துகொண்டான்.
சத்திரத்து மணி ஒன்பது அடித்து ஓய்ந்தது.
“மூர்த்தி! அப்பா கூட ஊரில் இல்லை. பின் கட்டில் நான் மட்டும் தனியாகப் படுத்துத் தூங்க பயமாயிருக்குடா. முனியம்மா வர முடியாதுன்னுட்டா! நீதான் எனக்குத் துணையா பின் கட்டிலே வந்து படுத்துக்கணும். தலைவலி இப்ப எப்படி இருக்கு? சுடச்சுட மிளகு ரசம் வெச்சிருக்கேன். உனக்குப் பிடிக்குமேன்னு தோட்டத்திலிருந்து பிஞ்சு அவரைக்காயாகப் பறிச்சிண்டு வந்து கறி பண்ணியிருக்கேன், இலை போடறேன். சாப்பிடறயா?” என்று கேட்டாள் பாகீரதி.
“இப்ப பசி இல்லை. பசங்களோட பந்தியிலயே சேர்ந்து சாப்பிடறேன்” என்றான்.
பந்தி முடிய மணி பத்தாகிவிட்டது. பாகீரதி அடுப்படியில் பால் காய்ச்சிக் கொண்டிருந்தாள். மூர்த்தி இஷ்டமில்லாமல் பாயைக் கொண்டு போய் பின்கட்டுத் தாழ்வாரத்தில் போட்டுக் கொண்டான். கார்த்திகை மாதத்துக் குளிர் நிலவு முற்றமெங்கும் வெள்ளி முலாம் பூசியிருந்தது. தோட்டத்துக் கொட்டிலில் மாட்டுச் சலங்கைகளின் கிண்கிணி ஓசை காதுக்கு இனிமையாக ஒலித்தது. தூரத்தில், எங்கோ கோயில் உற்சவம் நடப்பதை அறிவிக்கும் அதிர்வேட்டுச் சத்தங்கள்!

மூர்த்தி பத்மாசனமாக உட்கார்ந்து தியானம் செய்து முடித்து ஒருக்களித்துப் படுத்துக்கொண்டபோது பல்லி ஒன்று அவன் இடது புஜத்தின் மீது விழுந்து ஓடியது. “ஐயோ! பல்லி தோள் மீது விழுத்தால் நல்லதா, கெட்டதா, தெரியலயே” என்று கவலைப் பட்டான்.
பாகீரதி பாத்திரங்களை அலம்பி, பாலுக்கு உறை ஊற்றி, கதவுகளைத் தாளிட்டுவிட்டு மூர்த்தி அருகில் வந்து நின்று, தூங்கி விட்டானா என்று பார்த்தாள். போர்வையால் குளிருக்கு அடக்கமாகத் தன்னைப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தான் அவன். பாகீரதி அமிர்தாஞ்சனக் குப்பியை எடுத்துவந்து சற்றும் கூச்சமின்றி அவன் அருகில் சுவாதீனமாக நெருங்கி உட்கார்ந்து ”தூங்கிட்டயா மூர்த்தி?” என்று கொஞ்சலாகக் கேட்டுக் கொண்டே அவன் நெற்றியில் தேய்த்து விட்டாள்.
பாகீரதி உடம்பில் சூடு தெரிந்தது. மல்லிகைப்பூ வாசனை வீசியது. அவன் நெளிந்து விலகினான்.
“மல்லிப்பூ வாசனை அடிக்கிறதே!”
“ஆமாம்; என் தலையைப் பாரு” என்றாள்.
“நீ பூ வச்சுக்கலாமா, பாகீ!”
“ஏன்? நான் என்ன பாவம் செய்தேன்? எனக்கு மட்டும் ஆசை இருக்காதா?
“நீ. நீ …வந்து.” அவனால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

“பூ வைத்துக்கொள்ளக் கூடாதுன்னு சொல்றயா? சின்ன வயசிலயே எங்கப்பர எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுட்டார். கல்யாணம் ஆன ஒரு வாரத்துக்குள்ளேயே எனக்குத் தாலி கட்டினவன் வைசூரி கண்டு செத்துப் போயிட்டான். அப்ப எனககு பத்து வயசுகூட ஆகல்லே. என் புருஷனை நான் சரியாக்கூடப் பார்த்ததில்லை. இப்ப நான் வயசுக்கு வந்து விவரம் தெரிந்தவளாகிவிட்டேன். எல்லாம் புரிய ஆரம்பிச்சிருக்கு. மத்த பெண்களைப் போல் பொட்டு வைத்துக் கொள்ளணும், பூ வைத்துக் கொள்ளணும். வாழ்க்கையின் சுகங்களையெல்லாம் அனுபவிக்கணும்னு எனக்கு ஆசை இருக்காதா!”
“தப்பு, பாகீரதி தப்பு! வைதிகக் குடும்பத்திலே பிறந்தவள் நீ. அதுவும் இரண்டு யாகம் பண்ணினவர் உங்கப்பா. வேணாம். இந்த விபரீத ஆசைகளுக்கெல்லாம் உன் மனசிலே இடம் தராதே. பாபம், பாபம்” என்றான்.
“என்னடா பாபத்தைக் கண்டுட்டே? என்னமோ சாஸ்திரம் பேசறயே! இதெல்லாம் நம்மைச் சுற்றி நாமாகப் போட்டுக் கொள்கிற கட்டுப்பாடுதானே? இப்படிப் பார்!” என்று அவன் முகத்தைத் தன் பக்கம் திருப்பி, சற்றும் எதிர்பாராத நிலையில் அவனைக் கட்டி அணைத்துக்கொண்டாள்.
அவன் விலக முயன்றான், “நெருங்கி வாடா! ஏண்டா, பயப்படறே? என்னைப் பாருடா நான் அழகாயில்லையா?” என்று அவனையே வெறிக்கப் பார்த்தாள்.
“வேண்டாம் பாகீ! எனக்கு பயமாயிருக்கு”

மறுநாள் காலை. மூர்த்தி படுக்கையைவிட்டு எழுந்தது தான் தாமதம். ஓடிப்போய் கூடத்து ஆணியில் மாட்டியிருந்த பாம்புப் பஞ்சாங்கத்தை எடுத்துப் புரட்டி பல்லி விழுந்த பலன் என்னவென்று பார்த்தான். இடது புஜம்-ஸ்த்ரீ சம்போகம் என்ற வரிகளைக் கண்டபோது அவனை வெட்கம் பிடுங்கித் தின்றது. உடனே கனபாடிகள் நினைவு வர உடம்பெல்லாம் பதறியது.
“ஏன் மூர்த்தி, ஏன் ஒரு மாதிரி இருக்கே? கழுத்துச் சங்கிலி காணாமப் போயிட்டு-தேன்னா? அதான் கிடைச்சுட்டுதே. அப்புறம் என்ன கவலை?” என்று கேட்டாள் பாகீரதி.

“கெட்டுப்போன கழுத்துச் சங்கிலி திரும்பக் கிடைச் சுட்டுது. உண்மைதான். ஆனா கெட்டுப்போன என் பிரம்மசரியம் இனி திரும்பாதே” என்றான் மூர்த்தி.

சாவி /”வேத வித்து” – விருட்சம் நாளிதழ்

One Comment on “சாவி/”வேத வித்து””

Comments are closed.