சாவி /”வேத வித்து”

4.

துணி மணிகளை எடுத்து மான் தோல் பைக்குள் அடைத்துக்கொண்ட மூர்த்தி “நான் ஸ்நானத்துக்குப் போயிட்டு வந்துடறேன்” என்று பாகீரதியிடம் சொல்லிக் கொண்டான். குரலில் சுரத்து இல்லை.
”ஏண்டா, என்னை நேராப் பார்த்துபேசக் —- மூஞ்சியைத் திருப்பிண்டே பேசறயே, என்ன கோபம் உனக்கு?”
“என்னவோ?.”
“ஏதாவது சாப்பிட்டுட்டு போ.”
“ஹ்ம். இந்தத் தீட்டோடயா?.”
“தீட்டா!.. இதுக்கு பேர் தீட்டா? ஒரு தடவை ஸ்நானம் பண்ணினாப் போறது. நான் குளிச்சட்டேன்.”
“ஸ்நானம் பண்ணிக் கழுவிவிடுகிற பாபமா இது? மகாபாபம் ஆயுசு பூராவும் குளிச்சாலும் தீராத பாபம்! சித்திர குப்தன் கணக்கிலே ஏறிவிட்ட பாபம்! இதுக்கு பிராயச்சித்தமே கிடையாது. குருத் துரோகம், விரதபங்கம். இன்னும் என்னென்னவோ?. சொல்லவே நாக் கூசறது.”
“ஏண்டா மனசைப் போட்டு அலட்டிக்கிறே? நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்!”
“பலியானது நான்தானே! துக்கம் எனக்குத்தானே!”
“நீ ஆண்பிள்ளை. நானே கவலைப்படாதபோது இதில் உனக்கென்ன துக்கம்?”
“பரம வைதிகமான குடும்பத்தில் பிறந்தவள் நீ! தர்க்க சாஸ்திரம் படிச்சவர் உங்கப்பா, இரண்டு யாகம் பண்ணவர். டபிள் சிரோமணி! ஊருக்கு உபதேசம் பண்றவர். அந்த உத்தமருக்குப் பெண்ணாய்ப் பிறந்த நீ இப்படி நடந்துக்கலாமா? இந்த ரகசியம் கனபாடிகளுக்குத் தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா? அவமானம் தாங்காமல் தூக்குப் போட்டுண்டு பிராணனை விட்டுடுவார். அதை நினைக்கவே பயமாயிருக்கு. உடம்பெல்லாம் நடுங்கறது!”

“அசட்டுப்பிசட்டுன்னு பேசாதே! யாரிடமாவது போய் உளறி வச்சுடாதே! இந்த ரகசியம் நம்ம ரெண்டு பேரோடு செத்துப் போகட்டும். சத்தியம் பண்ணிக்கொடு.”
“சத்தியமும் வேணாம்; ஒண்ணும் வேணாம்.” விரக்தியோடு புறப்பட்டான் மூர்த்தி.
“சீக்கிரம் வந்துடு மூர்த்தி!” எதுக்கு இவ்வளவு பெரிய பையைத் தூக்கிண்டு போறே?”
“எல்லாம் துவைக்க வேண்டிய பாவ மூட்டை”
“ஜாக்கிரதை வழுக்கி விழுந்துடப் போறே!”
“அதான் ஏற்கனவே வழுக்கி விழுந்தாச்சே!”
“மூர்த்தி நீ குத்தலாப் பேசறே! ரெட்டை அர்த்தம் வெச்சுப் பேசறே! என்னை உனக்குப் பிடிக்கலேன்னா சொல்லிடு. நான் இந்த நிமிஷமே தீயிலே விழுந்து செத்துப்போறேன். எனக்கு நீ தான் சகலமும். என் கழுத்திலே யார் தாலி கட்டினா? எப்ப அதை எடுத்தான்னு எனக்கு எதுவுமே தெரியாதுடா! பிராம்மண குலத்தில் பிறந்தது தப்பா? அதுக்கு இப்படி ஒரு தண்டனையா? நீயே என்னை வெறுத்தால் அப்புறம் சாவைத் தவிர எனக்கு வேற வழியில்லே.”
“நீ ஏற்கனவே கல்யாணம் ஆன பெண். கணவனை இழந்தவள். என்னைவிட வயதில் பெரியவள். நம் உறவு பொருந்தாத உறவு. வயசாலும் பொருந்தாது. சாஸ்திரத்துக்கும் பொருந்தாது. என்னை மறந்துடு பாகீ! இந்தத் தகாத உறவு வேணவே வேணாம்!”
“அப்பாவிடம் சொல்லிடமாட்டயே. எனக்கு பயமா யிருக்குடா! சொல்லமாட்டேன்னு நீ சத்தியம் பண்ணிக் கொடுத்தாத்தான் நான் நிம்மதியாயிருப்பேன்.” துக்கம் தொண்டைக் குழியில் சிக்கி, வார்த்தைகள் தடுமாறி வெளிவந்தன. அழுகையை அடக்க முடியாமல் தவித்தாள்.
“அழாதே பாகீ! பசங்கள் யாராவது பார்க்கப் போறா! உள்ளே போய் சமையல் வேலையை கவனி. நேரமாச்சு.” படி இறங்கினான்.
“சீக்கிரம் வந்துடறயா?”
“…ம்”
அழுது அழுது பாகீரதியின் முகம் விகாரமாய் வீங்கிப் போயிருந்தது. கண்கள் சிவந்து இரப்பைகள் உப்பலாகியிருந்தன. மணி பத்துக்கு மேல் ஆகியும் சமையல் வேலையில் நாட்டமின்றி ‘மூர்த்தி வந்து விட்டானா?’ என்று அடிக்கொருமுறை வாசலை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
காகங்கள் விடாமல் கத்திக் கொண்டிருந்தன. ’காக்கா கத்தினா யாராவது விருந்தாளி வருவான்னு சொல்வாளே! யார் வரப் போறா?’ பாகீரதி யோசித்தாள்.
எதிர்பாராத விதமாய் வாசலில் குதிரை வண்டி ஒன்று வந்து நிற்க, அதிலிருந்து கைக்குழந்தை அம்புலுவோடு அக்கா கமலா இறங்குவதைக் கண்டதும் ’இவள் எதற்கு இப்போது இங்கே வந்து நிற்கிறாள்?’ என்று ஆச்சரியப்பட்டாள்.
பலாப்பழம், புளிமுட்டை, பரங்கிக்காய், வாழைத்தார் எல்லாவற்றையும் வண்டிக்காரன் இறக்க, பாடசாலைப் பிள்ளைகள் அவற்றை ஏந்திக்கொண்டு போய் உக்கிராண அறையில் வைத்தார்கள்.
“வா, கமலா என்ன இப்படி திடீர்னு? காஞ்சீபுரத்திலிருந்தா வறே? அப்பா வரலையா?” என்று கேட்டாள் பாகீரதி.
“அப்பா வரத்துக்கு இன்னும் நாலு நாள் ஆகும். பெரியவா இருக்கச் சொல்லிட்டாளாம். அப்பாதான் சொல்லி அனுப்பினார். ’பாகீரதியைத் தனியா விட்டுட்டு வந்துட்டேன். நீ போய் நான் வர வரைக்கும் அவளுக்குத் துணையா இருந்து கவனிச்சுக்கோ. முனியம்மாவை வந்து துணைக்குப் படுத்துக்கச் சொன்னேன். வராளோ, இல்லையோ – கவலையாயிருக்கு’ என்று.”
“உன் ஆத்துக்காரர் வரலையா?”
“கோர்ட்ல கேஸ் இருக்காம். நீ மட்டும் போயிட்டு வான்னுட்டார். என்ன வக்கீல் வேலை வேண்டியிருக்கு?”
“உன் மாமியார் காஞ்சீபுரத்தில்தானே இருக்கா?”
“ஆமாம்; வேலூரிலேருந்து என் நாத்தனார் வேற வந்திருக்கா. எனக்கும் உன்னைப் பார்க்கணும்போல இருந்தது. ஓடி வந்துட்டேன்.”
“அப்பா வர இன்னும் நாலு நாள் ஆகுமா?” என்று பாகீரதி கவலைப்படுவதுபோல் பாசாங்காய்க் கேட்டபோதிலும் உள் மனம் நிம்மதியாக ’அம்மாடி!’ என்றது.
குழந்தை அம்புலு சிணுங்கிக் கொண்டிருந்தது.
“அம்புலுவைக் கொடு இப்படி, பசி போல இருக்கு, பாவம், குழந்தைக்கு, (அம்புலுக்கண்ணு! ஒடியா!) பசும்பால் காய்ச்சி வச்சிருக்கேன். கிண்டிகூட இங்கதான் இருக்கு. போனதடவை நீ இங்க வந்திருந்தப்போ மறந்துட்டுப் போயிட்டாயே!”
“என்னடி உன் கண்ணெல்லாம் இப்படி சிவந்திருக்கு?”
”உரலில் மிளகாய்ப்பொடி இடிச்சேன். கண்ணிலே பட்டுட்டுது. எரிச்சல் தாங்கலை.”
“அவன் எங்கடி?” கமலாவின் கண்கள் வீட்டைத் துருவின.
“எவன்? யாரைக் கேட்கிறே?”
“மூர்த்தியைத்தான்.”
“கார்த்தாலே போனவன்தான். இதோ குளிச்சுட்டு வந்துடறேன்னு போனான். மணி பத்தாகப் போறது. இன்னும் காணல்லே. அப்பா இல்லையோன்னோ? பூஜையும் இல்லே. இஷ்டம்போல வருவான்.”
“ஆத்தங்கரைக்கு யாரையாவது அனுப்பி தேடிப் பாக்கறது தானே?”
“அனுப்பாம இருப்பனா? குண்டு பட்டாபி போய்ப் பார்த்தானாம். அங்கே வரவேயில்லைன்னு அர்ச்சகர் சொல்லிட்டாராம். எனக்கு ரொம்ப பயமாயிருக்கு, கமலா!… “
“வந்துருவான். கவலைப்படாதே. பசங்க சாப்டாச்சா?”
“சமையலே இனிமேத்தான் ஆரம்பிக்கணும். காலம்பற பழையது சாப்பிட்டா.”
கமலா வீடு முழுதும் ஒரு முறை சுற்றி வந்து கண்ணோட்ட மிட்டாள். தோட்டப்பக்கம் போய் பசுமாடுகளைத் தடவிக் கொடுத்துவிட்டு வந்தாள். முற்றத்தில் மஞ்சள் மஞ்சளாய் வேப்பம் பழங்கள் உதிர்ந்து கிடந்தன.
“ஏண்டி இதெல்லாம் பெருக்கி சுத்தப்படுத்தக் கூடாதோ? முனியம்மா வரலையா?” என்று கேட்டுக்கொண்டே தாழ்வாரத்தில் – ராத்திரி மூர்த்தி படுத்திருந்த இடத்துக்கு வந்தாள். சுவர் ஓரமாக அவன் படுத்திருந்த பாயும் தலையணையும் சுருட்டி வைக்கப்பட்டிருந்தன.
படுக்கைக்கு அருகில் வாடி வதங்கிய மல்லிகைப்பூக்கள் பழுப்பு நிறத்தில் சிதறிக் கிடந்தன.
“பூவெல்லாம் இங்கே ஏன் விழுந்து கிடக்கிறது?” என்று கேட்டாள் கமலா,
“கூடத்துலே லட்சுமி படத்துக்கு வச்சிருக்தேன். இந்தக் குருவிகள் அடிக்கிற லூட்டி சகிக்கலே, அதுகள் கொண்டு வந்து போட்டதோ என்னவோ?” விடு பூரா குப்பை பண்ணிண்டு….” என்று சமாளித்தாள் பாகீரதி.
“இன்னும் நீ குளிக்கலையா?”
“காலம்பறவே குளிச்சுட்டேன்.
”பின்னே ஏன் இப்படி அழுது வடிஞ்சுண்டு இருக்கே? தலையை விரிச்சுப் போட்டுண்டு முதல்லே இப்படி வந்து உட்கார். தலைவாரிப் பின்னிடறேன். சீப்பைக் கொண்டா” என்றாள் கமலா,
பாகீரதி வந்து உட்கார்ந்ததும், நீளமான அவளுடைய கூந்தலை இரண்டாகப் பகுத்து வாரிய கமலா, ’எத்தனை நீளம்’ என்று மனதுக்குள் வியந்தவள். அடுத்தகணம் ’பாவம், இந்தப் பெண்ணின் வாழ்க்கை இப்படி ஆகணுமா!’ என்று விசாரப்பட்டாள்.
என்னடி மல்லிப்பூ வாசனை வீசறது உன் தலையில்?..”
“என் தலையிலா! அதுக்கெல்லாம் நான் கொடுத்து வைக்கலையே அக்கா! சோப்பு போட்டு குளிச்சேன். ஒரு வேளை அந்த வாசனையாயிருக்கும்” என்றாள் பாகீரதி.
“அதென்ன சோப்பு? இத்தனை வாசனையாயிருக்கே?”
“வினோலியா ஒய்ட் ரோஸ்”
“ரோஸ்னா ரோஜாவாச்சே, இது மல்லி வாசனை அடிக்கிறதே!”
கமலாவுக்கு ஏதோ சந்தேகமாயிருந்தது. பாகீரதி சொன்ன பதில்களில் உண்மை இல்லை போல் தோன்றியது. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் தீட்சண்யமான பார்வையை அங்கும் இங்கும் செலுத்தியபடி, “மூர்த்தி இப்ப வந்துடுவானோல்லயோ?” என்று கேட்டாள்
“தெரியலையே, மணி பன்னிரண்டாகப் போறதே! இன்னும் வரக் காணோமே?” பாகீரதி கலங்கினாள். அவள் கண்களில் தவிப்பு தெரிந்தது. குரலில் சோகம் ஒலித்தது.

மூர்த்தி வரவே இல்லை.

சாவி/”வேத வித்து” – விருட்சம் நாளிதழ்