ஸரோஜா ராமமூர்த்தி/ இருளும் ஒளியும்

  1. ரகுபதியின் கடிதம்

கல்யாணத்துக்கு அப்புறம் சில தினங்கள் வரையில் எல்லோரும் ஏக மனதாக ஸரஸ்வதியின் சங்கீத ஞானத்தைப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். அவள் ‘கலீர், கலீர்’ என்று சிரித்தது. குறும்புத்தனம் நிறைந்த அவள் அழகிய முகம், மைதீட்டிய பேசும் விழிகள், கபடமற்ற எளிய சுபாவம் முதலியவை, சந்துருவின் மனதில் அழியாத ஓவியமாகப் பதிந்து விட்டன. தனிமையில் உட்கார்ந்து அவன் மானசிகமாக ஸரஸ்வதியை நினைத்து. நினைத்துப் பார்த்துக் களிப்பெய்தினான், அவளைப்பற்றி வீட்டிலே யாராவது பேசிக் கொண்டிருந்தால் ஆனந்தம் பொங்க அங்கு நின்று அதை முற்றும் கேட்டு விட்டுத்தான் நகருவான். படிக்கும் போது ஒருவருக்கும் தெரியாமல் காகிதத்தில், ‘ஸரஸ்வதி, ஸரஸ்வதி’ என்று எழுதிப் பார்ப்பதில் அவன் மனம் திருப்தியடைந்தது.
கல்யாணமெல்லாம் கழித்து, பாலம் டில்லிக்குப் புறப்படுவதற்கு முதல் தினம் சாப்பிடும் கூடத்தில் உட்கார்ந்து எல்லோரும் பேசிக்கொண்டிருந்தனர். சீதா கல்யாண அவசரத்தில் ஸரஸ்வதியிடமிருந்து புதுப் பாட்டுகளாக இரண்டு கற்றுக் கொண்டிருந்தாள். பூஜை அறையில் அவள் தம்பூரை மீட்டி அதைப் பாடும்போது சந்துரு அங்கு வந்து சேர்ந்தான். பாட்டைச் சிறிது நேரம் கேட்டுவிட்டு அவன், “இந்தப் பாட்டில் தானே அநுபல்லவியில் ‘நிரவல்’ செய்தாள் ஸரஸ்வதி? அபாரமாக இருந்தது. இப்பொழுது கூட என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது சீதா” என்றான் அவன்.
“செதுக்கி எடுத்த சிலை மாதிரி மூக்கும், விழியும், பாவம், பச்சைக் கிளிமாதிரி இருக்கிறது அந்தப் பெண்; கால்கூட அப்படி ஒன்றும் ஊனம் இல்லை; வெளியிலே ஒன்றும் தெரியவில்லை. ஒரே பிடிவாதமாகக் கல்யாணமே வேண்டாம் என்கிறாளாமே. நான்கூட என் மைத்துனனுக்குப் பண்ணிக்கொள்ளலாம் என்று சம்பந்தி அம்மாளை விசாரித்துப் பார்த்தேன்” என்றாள் பாலம்.
“தகப்பனார் வெளிநாட்டில் இருக்கிறாராம். மாசம் இந்தப் பொண்ணுக்கென்று நூறு ரூபாய் அனுப்புகிறாராம். கல்யாணத்துக்கென்று பத்தாயிரம் ரூபாய் வைத்திருக்கிறாராம்! ‘ பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு சங்கீதப் பள்ளிக்கூடம் ஆரம்பித்து விடுகிறேன் அத்தை’ என்று சொல்லுகிறதாம் அந்தப் பெண்! அங்கங்கே கல்யாணத்துக்குப் பணமில்லாமல் பெண்கள் நிற்கறதுகள். இது என்னடா என்றால் புதுமாதிரியாக இருக்கிறது’ என்று மங்களம் நாத்தனாரிடம் சொல்லி அதிசயப்பட்டாள்.
“அதிசயந்தான்! இந்தக் காலத்தில் பெண்களும், பிள்ளைகளும், கல்யாணம் வேண்டாம் என்று சொல்வது ஒரு ‘பாஷன்’ என்று நினைத்துக் கொண்டிருக்கிறதுகள். நம்ப சுப்பரமணியின் பெண்ணும் பி. ஏ. பாஸ் பண்ணிவிட்டு ஆபீஸுக்குப் போய் உத்தியோகம் பண்ணுகிறதாமே! ‘ஏண்டி புருஷாள் எல்லாம் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் அவதிப்படுகிறாளே, நீ ஆபீஸுக்குப் போய்ச் சம்பாதித்துத்தான் ஆகவேண்டுமாடி?’ என்று கேட்டால், ‘எதற்கெடுத்தாலும் புருஷன் கையை எதற்கு எதிர்பார்க்க வேண்டும்?’ என்று கேட்கிறாளே! அதிசயந்தாண்டி அம்மா. என் காலத்திலே புருஷனுக்குத் தெரியாமல் நாலு காசு வைத்துக்கொள்ளத் தெரியாதே எனக்கு?” என்று சொல்லி மிகவும் அதிசயப்பட்டாள் பாட்டி.
”இதல்லாம் ஒன்றும் அதிசயம் இல்லை பாட்டி. நீ அத்தையுடன் வடநாட்டுக்குப் போய் அங்கே நல்ல காப்பிக்கொட்டை கிடைக்காமல் காப்பியையே விட்டுவிட்டு வரப்போகிறாயே, அது தான் ரொம்பவும் அதிசயம் பாட்டி! காசிக்குப் போனால் தனக்குப் பிடித்தமான பண்டம் எதையாவது சாப்பிடுவதில்லை என்று விட்டுவிட வேண்டுமே. காப்பியை விட்டுத் தொலைத்து விடேன்” என்று சீதா பாட்டியைக் கேலி செய்தாள்.
பாட்டியும், பாலத்துடன் காசி க்ஷேத்திரத்தைத் தரிசிக்கப் புறப்பட ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தாள். ‘அங்கே போனால் கோதுமை ரொட்டிதான் சாப்பிடவேண்டும்’ என்று சாவித்திரி பயமுறுத்தினாள் பாட்டியை. ‘நல்ல காப்பிக்கொட்டை கிடைக்காது’ என்று சீதா பயமுறுத்தினாள். ‘எச்சில், விழுப்பு ஒன்றும் பார்க்கக்கூடாது’ என்று சந்துரு மிரட்டினான்.
“நீ பேசாமல் இரு அம்மா. அதுகள் தமாஷுக்குச் சொல்லுகிறதுகள்” என்று பாலம் தாயாரைச் சமாதானப்படுத்தினாள். மாமியாரும், நாத்தனாரும் ஊருக்குக் கிளம்பியதுமே வீடு வெறிச் சென்று போய்விட்டது மங்களத்துக்கு. இன்னும் இரண்டொரு மாதங்களில் சாவித்திரியும் புக்ககம் கிளம்பிவிடுவாளே! மங்களம் இதை நினைத்து மிகவும் வேதனைப்பட்டாள்.
அம்மாவுக்குப் பாட்டியின் துணப்பன் இல்லாமல் பாத்த, பாசு இருக்காது போல் இருக்கிறது” என்று சந்துரு தாயைக் கேலி செய்தான்.
பாட்டியும், பாலமும் ஊருக்குச் சென்ற ஒரு மாதத்துக்கு அப்புறம் சம்பந்தி வீட்டாரிடமிருந்து ராஜமையருக்குக் கடிதம் வந்தது. அதில் சாவித்திரியை நல்ல நாள் பார்த்துக் கொண்டு வந்து விடவேண்டும் என்று எழுதி இருந்தார்கள்.
“எல்லோரும் இப்படி ஒரேயடியாய்க் கிளம்பிவிட்டால் நான் எப்படி ஒண்டியாக இருக்கிறது இந்த வீட்டில்? சந்துரு அவன்பாட்டுக்கு மாடி அறையில் உட்கார்ந்து இருப்பான். சீதாவுக்கு ஹிந்தி வகுப்புக்குப் போகவும், சங்கீதப் பள்ளிக் சுடத்துக்குப் போகவுமே பொழுது சரியாக இருக்கிறது. கொட்டுக் கொட்டென்று வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டு எப்படி இருக்கிறது?” என்று மங்களம் அலுத்துக்கொண்டாள்.
கடிதத்தின் வாசகத்தை உரக்க ஒரு தரம் மனைவியிடம் படித்துக் காண்பித்தார் ராஜமையர் :
அன்புள்ள மாமா அவர்களுக்கு ரகுபதி அநேக நமஸ்காரம். உபய க்ஷேமம். சௌ. சாவித்திரியை இந்த மாசக் கடைசிக்குள் நம் வீட்டில் கொண்டுவந்து விடும்படி அம்மா தங்களுக்கு எழுதச் சொன்னாள். வரும் தேதியை முன்னாடியே தெரியப்படுத்தவும். மாமிக்கு என் நமஸ்காரத்தைச் சொல்லவும்.

தங்கள் அன்புள்ள,
ரகுபதி.

காதில் ஜ்வலிக்கும் வைரக் கம்மல்களைப் புடைவை முன்றானையால் துடைத்துக் கொண்டே மங்களம், “என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கணவரைக் கேட்டாள்.
ராஜமையர் யோசனையுடன் தலையைத் தடவிக்கொண்டார், பிறகு, கம்மிய குரலில் வருத்தம் தேங்கும் முகத்துடன், பார்த்தாயா மங்களம்! நேற்றுவரை பெற்று வளர்த்தவர்களுக்கு இல்லாத உரிமை ரகுபதிக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது! பெண்ணை அழைத்து வர வேண்டும் என்று சொன்னவுடன் கதறிக்கொண்டு ஓடுகிறோம். இது விந்தை அல்லவா?” என்றார்.
“ஆமாம். . ஆமாம் . . உங்கள் காலத்தைக் கொஞ்சம் நினைவு படுத்திக்கொள்ளுங்கள். நமக்குக் கல்யாணம் முடிந்ததும், ‘என் அண்ணா பிள்ளைக்கு ஆண்டு நிறைவு. அத்தை பெண்ணுக்குச் சீமந்தம்’ என்று என்னை எங்கே பிறந்தகத்தில் தங்கவிட்டீர்கள்? வேண்டியதுதான் உங்களுக்கும்!” என்று மங்களம் பழைய விஷயங்களை நினைவு படுத்தினாள். இருந்தாலும், அவள் குரலும் கம்மிப்போயிருந்தது.
இவர்கள் கூடத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த சமயம் காமரா அறையில் சாவித்திரி தன் கணவன் எழுதி இருந்த கடிதத்தைப் படித்துக்கொண்டிருந்தாள். திரும்பத் திரும்பப் படிக்கும்படியாக அக்கடிதம் காதல் ரஸத்தில் தோய்ந்த தாகவோ, சிறிது இன்ப மொழிகளைக் கொண்டதாகவோ இல்லை. அதற்கு மாறாகக் கடிதத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரையில், ஸரஸ்வதி, சாவித்திரியைத் தினமும் எதிர்பார்ப்பதைப் பற்றியும், அவன் மனம் கோணாமல் அவள் ஸரஸ்வதியிடம் சங்கீதம் பயின்று இன்னும் சில வருஷங்களில் ஒரு பாடகி ஆக வேண்டும் என்பதை வற்புறுத்தியும் எழுதப்பட்டிருந்தது.
சாவித்திரி பற்றிவரும் எரிச்சலுடன் கடிதத்தைப் பெட்டியில் வைத்து, ‘டப்’ பென்று அகங்காரத்துடன் மூடினாள். கீழே சந்துருவின் குரல் பலமாகக் கேட்டது.
“ஊருக்குப் போகும்போது நல்ல வீணையாக ஒன்று வாங்கித் தந்துவிடேன். மாப்பிள்ளைக்குப் பரம திருப்தியாக இருக்கும்” என்று சொல்லிக் கொண்டிருந்தான் சந்துரு.
தடதடவென்று கோபத்தில் இரண்டொரு படிகளைத் தாண்டி இறங்கிக் கீழே வந்தாள் சாவித்திரி. வந்த வேகத்தில் மேல்மூச்சு வாங்குவதையும் பாராட்டாமல், “எனக்கு வீணையும் வேண்டாம்! பூனையும் வேண்டாம். உங்களுக்கெல்லாம் வேறு வேலையே கிடையாதா என்ன?’ என்று எரிந்து விழுந்தாள் அவள்.
சீதாவும், சந்துருவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கண்னைச் சிமிட்டிக்கொண்டனர்.

“நம் வழக்கப்படி சீர் செய்து விடுவோம்; புருஷன்பாடு, மனைவி பாடு. நாம் ஒன்றும் வீணை வாங்கவேண்டாம்” என்று கூறி மங்களம் அங்கே ஆரம்பிக்க இருந்த சண்டைக்கு முற்றுப் புள்ளி வைத்தாள்,

ஸரோஜா ராமமூர்த்தி/இருளும் ஒளியும் – விருட்சம் நாளிதழ்

One Comment on “ஸரோஜா ராமமூர்த்தி/ இருளும் ஒளியும்”

Comments are closed.