
மூலக்கதை
தென் பிராந்தியத்தில், மகிளாரூப்பியம் என்னும் நகரம் இந்திரலோகத்துக்கு இணையானது.
வர்த்தமானன் என்னும் வணிகன் அந்த நகரத்தில் வாழ்ந்து வந்தான். அவன் நற்குணங்கள் உடையவன்; நாணயமானவன். அதிர்ஷ்டவசத்தால் பெருஞ்செல்வம் படைத்தவன்.
ஒரு நாள் இரவு அவன் படுத்திருக்கும்போது தூக்கம் வரவில்லை. ஆழ்ந்த யோசனை உண்டாயிற்று. ‘சேகரித்த செல்வம் நிறைய இருந்த போதிலும் அதைச் செலவழித்துக் கொண்டே போனால் அது மைபோல் கரைந்து போய் விடுகிறது. சேர்த்த செல்வம் சிறிது அளவு இருந்தாலும், அதை மேலும் மேலும் வளர்த்தால், எறும்புப் புற்றுபோல் பெருகிக்கொண்டே இருக்கும். ஆகவே, செல்வம் அதிகமாக இருந்தாலும் அதை மேன்மேலும் பெருக்க வேண்டும். பெறாத செல்வத்தைப் பெற முயல வேண்டும்; பெற்றதைக் காப்பாற்ற வேண்டும்; காப்பாற்றியதை விருத்தி செய்து அதைப் பல துறைகளிலும் முதலீடு செய்ய வேண்டும். பத்திரப்படுத்தி வைக்கும் செல்வம் கூடப் பலவித இடையூறுகளால் நாசம் அடைந்து போகும். வாய்ப்புக் கிடைத்தபோது தகுந்தபடி முதலீடு செய்யாத பணம், கைக்கு வராத பணத்துக்குச் சமம். ஆகவே கிடைத்த பணத்தைப் பாதுகாத்து,பெருக்கி, சிறந்த முறையில் முதலீடு செய்ய வேண்டும்’.
“சேர்த்த பணத்தைக் காக்கவேண்டும் என்றால், அதைப் புழக்கத்துக்குக் கொண்டுவர வேண்டும். குளத்தில் நீர் அதிகம் இருந்தால் வடிவதற்கு வடிகால் வேண்டும் அல்லவா? பழக்கிய யானைகளைக் கொண்டு காட்டு யானைகளைப் பிடிப்பது
போல், பணத்தைப் போட்டுத்தான் பணத்தை ஈட்ட வேண்டும். செய்ய இயலாது. விதியால் தன்னிடம் குவிந்த செல்வத்தை ஆசை இருப்பினும் பணம் இல்லாத ஏழையால் வியாபாரம் இருப்பவன் சுகம் பெற மாட்டான். அவனைப் பணம் படைத்த தானும் அனுபவியாமல், நற்காரியங்களுக்குச் செலவிடாமலும் முட்டாள் என்றே கூறவேண்டும்” என்று எண்ணத்தொடங்கினான். வியாபாரி வர்த்தமானன், பொழுது புலர்ந்ததும் வியாபாரத்துக்குத் தேவையான சரக்குகளைச் சேகரித்தான். நல்ல நாளில் பெற்றோரிடம் இரவு முழுவதும் இவ்வாறு சிந்தித்துக்கொண்டிருந்த விடைபெற்றுக்கொண்டு, வேலையாட்களை உடன் அழைத்துக் கொண்டு சங்கு, பேரிகை முழங்க மதுராபுரிக்குப் புறப்பட்டான். உறவினர், நண்பர்கள் வாழ்த்துக்கூறி வழியனுப்பி வைத்தார்கள்.
வெண்மேகம்போல் ஒளி பொருந்திய நந்தகன், சஞ்சீவகன் எனும் இரண்டு எருதுகள் பூட்டிய வண்டியில் எருதுகளின் கழுத்திலிருந்து, சலங்கை ‘ஜில்ஜில்’என ஒலிக்க, சரக்குகள் ஏற்றிக்கொண்டு, மற்றொரு வண்டியில் வர்த்தமானனும் ஏறிக் கொண்டு புறப்பட்டான்.
வழியில் காட்டில் செடிகளும், கொடிகளும், பல வகை மரங்களும் பார்ப்பதற்கு மிக ரம்மியமாயிருந்தது. யானைகள், எருதுகள், காட்டு எருமைகள், காட்டுப்பன்றிகள், மான்கள், புலிகள், சிறுத்தை, கரடி முதலானவை நிறைந்த காடு பயங்கர மாயிருந்தது. அருவியிலிருந்து நீர் பெருகி ஓடிக்கொண்டிருந்தது.
வண்டியின் பாரம் அதிகமாகவே சஞ்சீவகன் என்ற எருது மிகவும் களைத்துப் போய்விட்டது. மலை அருவிப் பக்கம் வண்டி சென்றுகொண்டிருக்கும்போது, சேற்றில் குளம்புகள் சிக்கி சஞ்சீவகன் விழுந்துவிட்டது.
வண்டிக்காரன் பரபரப்புடன் இறங்கினான். வர்த்தமானனை அணுகி, “முதலாளி, சஞ்சீவகன் களைப்புற்றுச் சகதியில் விழுந்து கால் ஒடிந்துவிட்டது” என்று தெரிவித்தான்.
வர்த்தமானன் மிகவும் கவலைப்பட்டான், ஐந்து நாட்கள் தங்கி சஞ்சீவகனைக் குணப்படுத்தப் பாடுபட்டான். அது குணம் அடையவில்லை. பிறகு, அதைக் காப்பாற்றுவதற்குத் தேவையான தீவனங்களுடன் சில வேலையாட்களை அங்கேயே இருக்கச் செய்து “முடிந்தவரை முயன்று பாருங்கள்: உயிர்பிழைத்தால் ஓட்டிக்கொண்டு வாருங்கள்; இறந்து போனால், அடக்கம் செய்துவிட்டுத் திரும்புங்கள்” என்று உத்தரவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தான் வர்த்தமானன்,
வேலையாட்கள் காட்டில் தங்குவதற்குப் பயந்து, மறுநாளே முதலாளியிடம் சென்று, “சஞ்சீவகன் இறந்து விட்டது; அதை நல்லடக்கம் செய்துவிட்டு வந்தோம்” என்று பொய் கூறினார்கள். வர்த்தமானன் கவலைப்பட்டான்; பிறகு ஆறுதல் அடைந்து மதுராபுரி போய்ச் சேர்ந்தான்.
சஞ்சீவகனின் ஆயுள் கெட்டியானதால் அது சாகவில்லை. அருவியின் நீர்த்திவலைகளாலும், தென்றலாலும் உடல் தேறி, மெதுவாக நடந்து யமுனை நதிக்கரையை அடைந்தது. மரகதம் போல் பரவிக்கிடந்த புல்வெளிகளில் மேய்ந்து, சில நாட்களில் தேவலோகத்து நந்திபோல பருத்துக் கொழுத்தது. திமில் வளர்ந்து பெரிதாகிப் பலசாலியாகியது. வளைந்து வளர்ந்த கொம்புகளால் எறும்புப் புற்றுகளின் முகடுகளை முட்டிப் பெயர்த்து எறிந்து, யானை போல் உல்லாசமாக ஓடித் திரிந்தது.
இது இவ்வாறு இருக்கையில், ஒரு சமயம் பிங்களகன் எனும் சிங்கம் தன்னுடைய பரிவாரங்கள் புடைசூழ, யமுனை நதிக்கரைக்கு நீர் அருந்த வந்தது. அப்பொழுது சஞ்சீவகன் போட்ட முக்காரத்தைக் கேட்டதும் சிங்கம் பயந்துவிட்டது. அதைக் காட்டிக் கொள்ளாமல் சிறிது நேரம் தயங்கி நின்று கொண்டிருந்தது. பிறகு பரிவாரங்களுடன் வழக்கமாகத் தங்கும் ஆலமரத்துக்குத் திரும்பிவிட்டது.
அந்தக் காட்டுக்குப் பிங்களகனே அரசன். அதன்கீழ் அதிகாரிகளும் சிப்பந்திகளும் பணியாட்களுமாகப் பல விலங்குகள் இருந்தன.
சிங்கம், சிங்கத்தின் மெய்க்காப்பாளர்கள், மத்திய அதிகாரிகள், பணியாட்கள் என்ற வகையில் நான்கு பிரிவுகளை அமைத்துக் கொண்டு அந்த பிங்களகன் எனும் சிங்கம் ஆட்சி புரிந்து வந்தது.
காட்டிலுள்ள ராஜ்யங்கள், தலைநகரங்கள், பட்டினங்கள், சிற்றூர்கள், அங்காடிகள், குடியிருப்புகள், எல்லைப்புற பகுதிகள், மான்யங்கள், மடாலயங்கள், பொதுஇடங்கள் ஆகியவற்றை பிங்களகன் தனது நேர்பார்வையிலே வைத்துக் கொண்டது.
தனக்கு மெய்க்காப்பாளர்களாகச் சில மிருகங்களை மட்டுமே நியமித்துக் கொண்டது. பல்வகை மிருகங்கள் பணியாட்களாகச் சில விலங்குகள் எல்லைப் பகுதிகளில் கூட்டாக இணைந்து மத்திய அதிகாரிகளாகப் பணிபுரிந்தன; அமர்த்தப்பட்டன. இம் மூன்று பிரிவுகளிலும் மேல்நிலை, மத்தியநிலை, கீழ்நிலை என்று மூன்று உள் வகுப்புகள் பிரிக்கப்பட்டிருந்தன. அமைச்சர்களும் நெருங்கிய நண்பர்களும் புடைசூழ, இவ்வாறு சிங்கம் ராஜ்யம் நடத்தி வந்தது.
பிங்களகன் ஆட்சியிலே வெண்குடை, வெண்சாமரம், வாகனங்கள், கேளிக்கைகள் ஆகிய ஆடம்பரங்கள் எதுவுமே இல்லை. ஆனாலும் உண்மையான வீரம் செறிந்த பெருமையினால் அதனுடைய ஆட்சி உயர்வாக விளங்கியது. தோல்வியே காணாத ரோஷமும், கர்வமும், நிறைவான சுயமதிப்பும் பிங்களகனின் பிறவிக் குணங்கள். கட்டுப்பாடில்லாத அதிகாரத்தில் அதற்கு மிகுந்த மோகம் உண்டு. தனக்குப் போட்டியாக எவரையும் தலைதூக்க விடுவதில்லை. தலைதாழ்த்திக் குழைந்து பேசும் வழக்கம் அதற்குத் தெரியாது. கோபம், பரபரப்பு, அவசரம், அகந்தை ஆகியவற்றைக் கொண்டே தன் காரியத்தைச் சாதித்து வந்தது. பயமின்றி எங்கும் திரிவது, இச்சகம் பேசுவதை இகழ்வது, காலைப் பிடித்துக் கெஞ்சுவதை வெறுப்பது, கலங்காமல் இருப்பது இவையே பிங்களகனின் ஆண்மை குணங்கள், இனிமையாகப் பேசி, ஏமாற்றி, காரியம் சாதித்துக்கொள்ள விரும்புவதே இல்லை. அதற்கு மாறாக, முயற்சி, வீரம், சுயமதிப்பு ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டு அது சிறப்படைகிறது. பிறரோடு சேராமலும், பிறரிடத்தில் அதிக ஈடுபாடு கொள்ளாமலும் தன்னைப் பற்றிய கவலை எதுவும் இல்லாமலும் வாழ்ந்தது. மற்றவர்களுக்கு உபகாரம் செய்து மகிழ்ச்சியடை வதிலேயே தன் வீரத்தைக் காட்டியது. தற்காப்பு ஏற்பாடுகளை அது பெருக்கிக் கொள்ளவில்லை. என்றாலும் அதை யாராலும் வெல்ல முடியவில்லை.
அற்பத்தனம் எதுவும் அதனிடம் இல்லை. வரவு – செலவு கணக்கு அது வைத்துக்கொள்ளவில்லை. சுற்றி வளைத்துப் பேசுவதும், காலத்துக்கேற்ற தாளம் போடுவதும் அதனிடம் ல்லை. உயர்ந்த நோக்கத்தோடு உற்சாகமாக இருந்தது. ஆயுதங்களையும் ஆபரணங்களையும் திரட்டிக் குவிக்கவில்லை; ஆறுவித உபாயங்களைப் பற்றிச் சிந்திப்பதிலும் விவாதிப்பதிலும் அது நேரத்தைச் செலவிடவில்லை. அதிகாரம் செலுத்துவதில் அதற்கு அதிக ஆசை; அது யாரையும் நிந்திப்பதோ, யாரிடமும்
அவநம்பிக்கை கொள்வதோ இல்லை. தன் மனைவிகளையும் அவர்கள் சிந்தும் கண்ணீரையும் கூச்சல்களையும் அது சட்டை செய்வது இல்லை. மறைவிலிருந்து தாக்குபவர்களையும் அதுபொருட்படுத்துவதில்லை. அது குற்றம் குறையற்றது. ஆயுதப் பயிற்சியில் அதற்குச் செயற்கைப் பயிற்சி இல்லை. ஆபத்து வருவதை எதிர்பார்த்து அறியும் சக்தி அதற்கு உண்டு. ஏவலாட்களின் உதவி இல்லாமலேயே அதற்கு உணவும் இருப்பிடமும் திருப்தியாகக் கிடைத்தன. இதர காடுகளுக்குள் அது அஞ்சாமல் செல்லும். எவ்வித பயமும் இல்லாமல் நிமிர்ந்த தலையுடன் கம்பீரமாக நடந்து செல்லும்.
வலிமையும் கர்வமும் கொண்டு காட்டில் தனியே திரியும் சிங்கத்துக்கு ராஜதந்திரமும் கல்வியும் தேவையில்லை. அதனை எல்லா விலங்குகளுமே ‘ராஜா, ராஜா’ என்று போற்றி வணங்குகின்றனவே.
சிங்கத்துக்கு முடிசூட்டு விழாவோ, சடங்குகளோ விலங்குகள் செய்து வைக்கவில்லை. தன்னுடைய பராக்கிரமத்தினால் அல்லவா சிங்கம் அரச பதவி வகிக்கிறது.
மதநீர் பெருக்குகின்ற யானையின் மாமிசமே சிங்கத்துக்கு ஆகாரம். விரும்பிய உணவு கிடைக்காவிட்டால் சிங்கம் புல்லைத் தின்னாது.
பிங்களகனிடம் கரடகன், தமனகன் என்ற இரண்டு நரிகள் இருந்தன. அவை அமைச்சரின் பிள்ளைகள். வேலை இல்லாமல் இருந்தன. அவை இரண்டும் உரையாடுகின்றன.
“இனிய கரகடனே! அதோ பார்த்தாயா? நீர் பருகுவதற்கு வந்த நம் எஜமானர் ஏன் மனம் கலங்கி நிற்கிறார்?” என்று கேட்டது தமனகன்.
“நண்பனே! இந்த விவகாரம் உனக்கு எதற்கு? பேசாமல் இரு; பிறர் விவகாரத்தில் தலையிட விரும்புகிறவன் ஆப்பைப் பிடுங்கிய குரங்கைப் போல் தன் உயிரையே இழப்பான்”என்று
கூறியது.
“அது எப்படி?” என்று தமனகன் கேட்டது.
அதற்கு, ‘ஆப்பைப் பிடுங்கிய குரங்கு’ எனும் கதையைக் கூறத்தொடங்கியது கரடகன்.
