நரசய்யா/ஆயுள் தண்டனை

“பாட்டி… அன்னிக்கு யாரோ சொல்லிக்கிட்டு இருந்தாங்களே… ஞாபகம் இருக்கா? சாலிக்கிராமத்திலே யாரையோ கொலை செஞ்சு மூணு வருஷம் ஆகியும்கூட யாரும் ஒரு ஆக்ஷனும் எடுக்கலேன்னு… இப்போ அதைப்பத்தி பேப்பர்லே போட்ருக் கான்… அப்ப அரெஸ்ட் பண்ண ஆறு பேர்லே மூணு பேருக்கு ஆயுள் தண்டனையாம்! ரெண்டு பேர் மேலே ஒண்ணும் ப்ரூவ் செய்ய முடியலையாம். ஒருத்தனுக்குப் பத்து வருஷமாம்!”
சுலோச்சுப் பாட்டிக்கு விளக்கிச் சொன்னது ரகு – சுலோச்சுப் பாட்டியின் கொள்ளுப்பேரன். மூன்று வருடங் களுக்கு முன்பு படிப்புக்காக அமெரிக்கா சென்று இப்போது ஐந்து வார விடுமுறையில் இந்தியா வந்திருக் கிறான்.
‘ஆயுள் தண்டனைன்னா சாகறவரைக்கும் உள்ளேயே இருக்காணாமா?” – சுலோச்சுப் பாட்டி கேட்டாள்.
“அப்படி இல்லே… சாதாரணமா கனடா போல இடங்கள்ளே ஆயுள் தண்டனைன்னா இருபது வருஷம்தான். நாட்டுல முக்கால்வாசிப்பேர் நல்ல நடத்தைன்னு வெளியிலே வந்துடறா. நடு நடுவுலே யாராவது பெரிய மனுஷங்களோடே நூறாவது பொறந்த நாள்னு ஏதாவது வந்தா அந்தக் காரணத்துலே கொஞ்சம் பேர் வெளியிலே வந்துடலாம். ரொம்ப கொஞ்சம் பேர்தான் கடேசி வரைக்கும் உள்ளேயே இருக்க வேண்டியிருக்கும்.”
ரகு பேசி முடிக்கும் முன்பே, சுலோச்சுப் பாட்டி தன்னுள்ளே தன்னையே சுருக்கிக் கொண்டுவிட்டாள். இதைக் குறித்து நன்றாகவே அறிந்திருந்த ரகு, ஒன்றும் பேசாமலேயே அந்த மூதாட்டியையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு நன்றாகவே தெரியும் – இம்மாதிரி சமயங்களில்தான் பாட்டி சில சிறந்த சமாசாரங்களைச் சொல்வாள் என்று. நேற்றுதான் பாட்டியின் சரியான வயதையே அவனால் தெரிந்து கொள்ள முடிந்தது.
“போன விசுவாவசு வருஷத்துக்கு முன்னாடி வந்த விருவாவசு வருஷத்திலேதான் பிறந்தேன். சித்திரை மாசம் அனுராதா நட்சத்திரத்திலேயாக்கும்!” என்றாள் பாட்டி.
ஓடிப்போய் பாம்பு பஞ்சாங்கத்தை எடுத்துப் பார்த்தான் ரகு. அவனுக்குப் பாட்டிதான் சொல்லிக் கொடுத்திருந்தாள். எப்படி, எங்கே, என்ன இந்தப் பஞ்சாங்கத்தில் பார்க்கலாம் என்பதை! அதைப் புரட்டிப் பார்ப்பதே அவனுக்கு ஒரு பொழுதுபோக்கு!
“விசுவாவசுக்கு விசுவாவசு அறுபது – பிரமாதி -அதாவது இந்த வருஷம் – எண்ணிப்பாரு தெரியும்!”
‘அப்பாடியோவ்! பாட்டி, ஒங்க வயசு தொண்ணூத்து நாலா?”
‘ஆயுள் தண்டனைன்னா ரெண்டு தினுசா அதையே பாக்கலாம் – ஒண்ணு நீ சொன்னயே அது மாதிரி – ரெண்டாவது இன்னொரு மாதிரி…”
பாட்டியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் ரகு. இன்னொரு மாதிரி எதாக இருக்கும் என்று அவன் ஊகிக்கும் முன்னரே பாட்டி ஆரம்பித்துவிட்டாள்.
‘தண்டனை ஆயுளுக்கும் இருக்கலாம். ஆயுசாலேயும் தண்டனை இருக்கலாம் இல்லையா?”
‘புரியலையே பாட்டி!”
ரகுவுக்குப் புரிந்த மாதிரியும் இருந்தது. ஆனாலும் அதைப் பாட்டி வாயாலேயே தெரிந்துகொள்ளலாம் அல்லவா?
“ஒங்களுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லேயே பாட்டி… நீங்க சொல்றதைப் பாத்தா, ரொம்ப நாள் இருக்கிறதே தண்டனை போலத் தோண்றது. இங்கே ஒரு ப்ராப்ளமும் இல்லே… அமெரிக்கா போல இடங்கள்ளேதான் ஓல்ட் ஏஜ் ஒரு ப்ராப்ளம். நம்ம வீட்டைப் பொறுத்தமட்லே அப்பாவும் மத்தவாளும் ஒங்களே கடவுளாவே பாத்துக்கறா இல்லையா?”
அது சரிதான். சுலோச்சுப் பாட்டியை அவர்கள் பார்த்துக் கொள்வதைக் கண்டு எத்தனை பேர் சொல்லியிருக்கிறார்கள்! தொண்ணூத்து நாலாவது வயதிலும் ஒரு குறையும் இல்லாமல் பேரனும் மற்றவர்களும் பார்த்துக் கொள்வது எங்கேயும் பார்க்க முடியாத விஷயம். அவர்களது சொந்தக்காரர்களிலேயே ராமானுஜம் தனது எழுபதாவது வயதிலிருந்தே ஏதோ ஒரு முதியோர் இல்லத்தில்தான் இருக்கிறார். மாறிக் கொண்டு வரும் சமுதாயத்தின் பல பிரச்னைகளில் இது ஒரு பெரிய பிரச்னை ஆகிவிட்டதல்லவா? சுலோச்சுப் பாட்டிக்கு இது நன்றாகவே தெரியும்.
“நீ சொல்றதுலே தப்பில்லே. ஆனா, நான் சொல்ல வந்தது வேறு விஷயம். கடவுளுக்கு நம்மல்லாம்விட பெரிய சிரமம் ஒண்ணு இருக்கு தெரியுமா ஒனக்கு? இந்தப் பிரபஞ்சத்துலே இருக்கிற அத்தனை கோடி ப்ராணங்களையும் உண்டாக்கறது,
காப்பாத்தறது, அப்புறமா அவா அவா வேலை… அதாவது வந்த காரியம் முடிஞ்ச ஒடனே அவாளே – அதாவது ஜன்மம், சாவு இதுகளை ஜெயிக்காதவாள இன்னொரு இடத்துலே பொறக்க வெக்கறது எல்லாமே கடவுள் செய்யற சிரமமான வேலைகள்தான்…
ரகுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் ஸ்டீபன் ஹாகிங் எழுதிய காலத்தின் சரித்திரத்தைப் படித்திருக்கிறான். இருப்பினும் சுலோச்சுப் பாட்டியிடம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இந்தத் தலைப்பைப் பற்றியவை நிறையவே உள்ளன. வாழ்க்கையின் பரிமாணத்துக்குக் செய்யும் தொழிலுக்குமே உள்ள சம்பந்தம் புரியாமல் இருக்கும் ன்றைய சமுதாயத்தின் நிலையில் வயதானவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள் நிறையவே உள்ளன என்று நம்புகிறவர்களில் அவன் ஒருவன்.
சுலோச்சுப் பாட்டி தொடர்ந்தாள்; “நீ ஒரு ஆபீஸ்லே ஒரு அதிகாரின்னு வெச்சுக்கோ. நீதான் எல்லோருக்கும் வேலை சொல்றவன்னும் வெச்சுக்கோ. ஒருத்தரை ஒரு இடத்திலேருந்து இன்னொரு இடத்துலே மாத்திப் போடணும். அப்போ பாத்து அங்கே இருக்கறவனுக்கு ஒரு ப்ராப்ளம்னா, நீ என்ன செய்வே?”
‘என்ன செய்ய முடியும்? கட்டாயப்படுத்தி அனுப்ப வேண்டியதுதான்… அமெரிக்கான்னா அப்படிச் சொன்ன மாதிரி போகல்லேன்னா வீட்டுக்கு அனுப்பிச்சுடுவான்! இங்கேதான் தயா தட்சண்யம் எல்லாம்” என்றான் ரகு.
வாயைத் திறந்து சிரித்தாள் பாட்டி. “நீ சொன்னது சரியான பதிலில்லே. ஏன்னா, அவன் எங்கேயோ ஒரு இடத்துக்குப் போய்த்தானே ஆகணும். நீதான் அதுக்கும் ஏற்பாடு செய்யணும்னா, அதாவது அந்த ரெண்டாவது பொறுப்பும் உன்னோடதுன்னா என்ன செய்வே?”
ரகுவுக்குப் புரிந்தது. மாற்றுவது மட்டுமல்ல. மற்றொரு இடம் அமைத்துத் தருவதும் தனது பொறுப்பென்றால்? கடவுளுக்கு அந்தப் பொறுப்பும் உள்ளதென்பதைத்தான் பாட்டி உணர்த்துகிறாள் என்பதும் புரிந்தது. அமெரிக்காவில் அங்கேயே
நாற்பது வருடங்களாக வாழ்ந்து கொண்டு முக்கியமாக இந்திய மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் புரொபசர் ராமமூர்த்தி ஒரு தடவை வாழ்க்கை பற்றிய இரண்டு விதமான தியரிகளைச் சொன்னது நினைவுக்கு வந்தது. முன்னது, ஒன்றின் காரணத்தால் உண்டாகும் நிகழ்ச்சி. மற்றொன்று, தானாகவே ஒரு காரணமும் இல்லாமலேயே நிகழக்கூடியது. மாறிக் கொண்டிருக்கும் சமுதாய அமைப்பில் நாமும் நம்மைத் திருத்தி அமைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார் அவர். இப்போது பாட்டியும் அதையே விவரிப்பது போலத்தான் அவனுக்குத் தோன்றியது.
“கஷ்டம்தான்! என்ன செய்ய முடியும்? போகவேண்டிய இடம் காலியாகற வரைக்கும் இந்த ஆளை நிறுத்திவைக்க வேண்டியதுதான்!”
“அதைப் பத்தித்தான் நான் சொல்லிண்டு இருக்கேன்! நான் போகணும்னா என்னோடே ஆத்மா போய்ச் சேர்றதுக்கு ஒரு இடம் வேண்டாமோ? இந்த அண்டசராசரம் இருக்கே… அதுலே மொத்தம் ஒரே எண்ணிக்கைதான்! இடம்தான் மாறி மாறி அமையறது! நான் எங்கே போகணுமோ அது இன்னும் காலியாகல்லே! தொண்ணூத்து நாலு வருஷம் ஆகியும் நான் போக வேண்டிய இடம் காலியாகாததாலேதான் நான் இருக்க வேண்டியிருக்கு.
மை காட்! கூட்டமைப்பின் தொடர்ந்த மாற்றங்களைப் பற்றி எவ்வளவு சுலபமாக பாட்டி சொல்லிவிட்டாள்! தொடர்ந்தான் ரகு – “ஆனா, அதுனாலே ஒங்களுக்கு ஒண்ணும் ப்ராப்ளம் இருக்கறதுலே இல்லையே? இருந்துண்டே தப்பில்லையே! எங்களுக்கெல்லாம் நீங்க இருக்கறது சந்தோஷமாகத்தானே இருக்கு!”
மூன்று நாட்களுக்கு முன்னால் பாட்டிக்காக ரகு குடும்ப டாக்டரைப் பார்த்துவிட்டு வந்திருந்தான். அவர் சொல்லியிருந்தார்… “சும்மா சொல்லக்கூடாது… இந்தப் பாட்டி ஆரோக்கியத்திலே ஒரு விதமான குறையும் இல்லே. எல்லா செயல்பாடுகளும் ஃபர்ஸ்ட் க்ளாஸ் லெவல்லே இருக்கு. க்ளினிக்கல் அற்புதம் இது…” என்றார்.
பாட்டி கலகலவென சிரித்தாள். கண்களில் நீர் வர, அதைத் துடைத்துக் கொண்டு திரும்பவும் பேச ஆரம்பித்தாள். ‘தண்டனையே அதுதாம்பா! இப்போ ராமானுஜம் மாமாவையே எடுத்துண்டேன்னா ஒனக்குப் புரியும். அவரைக் கொண்டுபோய் ஒரு முதியோர் இல்லத்துலே சேத்துட்டா இல்லையா? அவர் இருக்கறது அவாளோட மனுஷாளுக்கு ஒரு சுமையா இருந்திருக்கும். அதாலே ஒரு விஷயத்துலே அந்த மனுஷாளுக்குத்தான் தண்டனைன்னு வெச்சுக்கலாம். இருந்தாலும் போனாலும் ரெண்டு பேர்லே ஒருத்தருக்குக் கஷ்டம். ஆனா, என்னோடே சமாசாரம் வேறே.”
பாட்டி சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டு தலையை பின்பக்கம் சாய்த்துக் கொண்டு ஏதோ கடவுளுடனேயே சம்பாஷிப்பது போல அமர்ந்து இருந்தாள். ரகுவும் பொறுமையாகக் காத்திருந்தான். ஒருவேளை தாகமாக
இருக்கலாம் என்பதால் ஒரு டம்ளர் நீர் கொண்டுவந்ததைக் கண்ட பாட்டி – “ரகு, நீ நூறாயுசு நன்னா இருக்கணும்டா!” இப்போது சிரிப்பது ரகுவின் முறையாயிற்று. “ஏன் பாட்டி, இப்பதானே சொன்னேள்… நெறைய நாள் இருக்கறதே ஒரு தண்டனைன்னு! இப்ப என்னை மட்டும் நூறாயுசு இருக்கணும்ங்கறது வேடிக்கையாயிருக்கே?”
பாட்டி தனது இரண்டு கைகளாலும் ரகுவின் கன்னங்களைத் தொட்டு திருஷ்டி கழித்தாள். “என்னையே ‘ மாட்டிவிட்டுட்டையே! ஆமா, நெறைய நாள் இருக்கறதே ஒருவிதமான தண்டனைதான்!”
‘அதையெல்லாம் விடுங்கோ! இப்போ அந்த தண்டனை ஒங்களுக்கு இல்லேங்கறதை ஒப்புக்கோங்கோ!”
‘தண்டனை வேறு தினுசானது… பாரேன்.. எனக்குப் பதினஞ்சாவது வயசுலே கல்யாணம் ஆச்சு. ஒங்க தாத்தா பொறந்தது என்னோடே பதினெட்டாவது வயசுலே. அதுக்கப்பறம் ரெண்டு பொண்கள், மூணு பசங்க எல்லாம் பொறந்தாச்சு. எனக்கு நாப்பதுகூட ஆகலே. அப்பதான் என்னோடே மொதல் தண்டனை… அவர் போனது! அதுக்கப்பறம் ஒவ்வொருத்தரா நிறையபேர் போனதைப் பார்த்தாச்சு. ஒரு தடவை ஏதோ ஒரு வியாதி வந்து என்னைப்
பாடாப் படுத்தித்து. நான் போயிடுவேன்னு எல்லாரும் நிச்சயம் பண்ணிட்டா. ஆனா கடேசிலே என்ன ஆச்சு தெரியுமா? நான் நன்னாயிட்டேன். ஆனா, என்னைப் பாத்திண்டிருந்த ஒங்க தாத்தா, அதாவது என்னோட மொதல் பையன் ஒரு காரணமும் இல்லாமே திடீர்னு தலையைப் போட்டான். பாவம், ஒங்க பாட்டி கதறிக் கதறி அழுதா? அவ சின்னவதானே? அவளுக்கு எப்படி இருந்திருக்கும்? அதோடே போச்சா? இல்லே! அப்புறம் ஒரு பொண்ணு அறுத்துண்டு வந்து நின்னா. குத்துக்கல்லாட்டம் இருந்தேன்… ஆனா, சின்னவா எல்லாரும் ஒவ்வொருத்தரா போயிண்டிருந்தா. அதாவது நீ என்னோட இடத்துலே இருந்தா எப்படி ஒனக்கும் இருந்திருக்கும். இந்தக் கண்றாவியை இப்ப நெனச்சாலும் பத்திண்டு வர்றது.”
திரும்பவும் பாட்டி சுருக்கிக் கொண்டுவிட்டாள். சிறிது நேரம் கழித்து விரலை விட்டு எண்ணிவிட்டுச் சொன்னாள். “மொத்தம் முப்பத்தஞ்சு சாவுகளைப் பாத்தாச்சு. அதுலே ஒண்ணு ஒரு பேத்திக்குக் செத்தே பொறந்த கொழந்தை! இனிமே பாக்கறதுக்கு சக்திகூட இல்லே! நீயே சொல்லு… இது ஒருவிதமான ஆயுள் தண்டனை இல்லையா? இதுலே நல்ல நடத்தைன்னு சொல்லியோ, யாரோட பொறந்த நாள்னு சொல்லியோ தப்பிச்சுக்க முடியாது!'”
ரகுவுக்குத் தலை சுற்றியது. பாட்டியே சொல்லிக் கொடுத்தது நினைவுக்கு வந்தது.
பாட்டி சொன்னாள். “முகூர்த்தம் ஜ்வலிதம் ஸ்ரேயோ ந து தூமாயுகம் சிரம்’. இது மகாபாரதத்துலே உத்யோக பர்வத்துலே வர்றது. ராணி விதுலை சொல்றா… அப்படின்னா யுகங்களுக்குப் பொகஞ்சுண்டு இருக்கிறதைவிட ஒரு கண நேரத்துக்கு பிரகாசிச்சுட்டுப் போயிடறது உசிதம்!”
ஆயுள் தண்டனையைவிட ஆயுளால் கிடைக்கும் தண்டனை கொடியதுதான்!

16.1.2000,
ஆனந்த விகடன்.

One Comment on “நரசய்யா/ஆயுள் தண்டனை”

Comments are closed.