நரசய்யா/முரண்பாடுகள்

வாசு, மேஜையின் பக்கத்தில் வந்து நின்றான் கூட்டமெல்லாம் கலைந்து, ஓரிரு மேஜைகளில்தான் மனிதர்கள். சாதாரணமாக இவ்வளவு நேரத்துக்குப் பிறகு எவரும் காலை ணவுக்கென்று வருவதில்லை. இதோ, இப்போது இங்கு வந்து அமர்ந்திருக்கிறானே… இவன் ஊருக்குப் புதிது போலும். இவனுக்கு என்ன வேண்டும்…? தலையெல்லாம் கலைந்துள்ளது. பஸ்ஸில் வந்து இறங்கியிருப்பான் போலத் தெரிகிறது. கையில் ஒரு நல்ல மாதிரி ஜிப் வைத்த பை. தவிர, தோளில் வேறு ஒரு ஜோல்னாப்பை தொங்குகிறது – நிறைய காகிதங்கள் அதில்.

வாசுவுக்குக் காலையிலிருந்து ஒரு இனம் தெரியாத கோபம். ஏனென்று அவனுக்கே பிடிபடவில்லை. பத்தாவது படிக்கும்போதே, மேலே படிக்க வேண்டும் என்று அவனுக்கு ஆசை. பாஸ்தான்… ஆனால், அவன் வாங்கிய என்று தேர்வெண்களுக்கு ‘ஐ.ஏ.எஸ். படிக்கலாமே!” என்று கேவலமாகச் சொன்ன மாமாவிலிருந்து எல்லோருமே அவனை ஒரு புழு போலத்தான் பார்த்தார்கள்.

வாசு மேல்படிப்பு படிக்க வேண்டும் என்று சொன்னதற்குச் சிரித்தார்கள்.

‘ஒன்னோட மார்க்குக்கு எங்கேடா ஸீட் கிடைக்கும்…?”

பணம் கொடுத்து ஏதாவது பிரைவேட் பள்ளியில் சேரலாமென்றாலோ, “பத்தாதுடா… அதுக்கெல்லாம்  நம்மளண்டே ஏதுடா பணம்…? அதுக்கப்பறமும் என்ன செய்ய…?”

மூளைவளர்ச்சி குன்றிய தனது இரண்டாவது குமாரி சம்பூர்ணத்தை இவனுக்குக் கட்டி வைத்துவிடலாம் என்றுதான்.

எல்லோருக்கும் ஆசைகள் உள்ளன. ஆனால், எல்லாமே நிறைவேறி விடுகின்றனவா…?

அந்தக் கோபம் அவனுள் விசுவரூபம் எடுத்துள்ளது.

இ ப்போது, அதாவது காலை டிபன் மூடிய பிறகு, இந்த ஜன்மம் வந்திருக்கிறது. இதற்கு என்ன வேண்டும்… ? வாசு பக்கத்தில் வந்து நின்றதைக்கூட அவன் கவனிக்கவில்லை. முகத்தில் ஏதோ கலவரம்… வாசு கையில் கொண்டு வந்திருந்த நீர் நிறைந்த டம்ளரை மேஜைமீது ‘டொக்’கென வைத்தபோது, நீர் சிதறியது. அதிர்ச்சியுண்ட அவன் உலுக்கி அமர்ந்தான்.

” ஊம். ?” வாசு மிகவும் பரிதாபமாக ஏறிட்டுப் பார்த்தது அந்த ஜன்மம்! வாசுவுக்கு ஏன் கோபப்பட்டோம் என்றாகிவிட்டது.

“என்ன சார்… ?” – மீண்டும் வாசு.

“என்ன இருக்கு…?”

எரிச்சல் வந்தது வாசுவுக்கு, “என்ன இருக்கும்…? தோசை, இட்லி…”

“தோசையே போதும்… சாதா…!”

வாசு நகர்ந்துவிட்டான். இந்த முகத்துக்குத் தோசை வேண்டியிருக்கு! இதற்குக்கூட ஆசை இருக்கிறதே! ஒரு சாதா தோசை சாப்பிட இவ்வளவு தூரம் சென்று மறைவில் நின்றுகொண்டு, வாசு அம்மனிதனைக் கவனித்தான். முகத்தில் கலவரம் குறையவில்லை. சுற்றிலும் பார்த்துவிட்டு, யாரும் பார்க்கவில்லை என ஊர்ஜிதம் செய்து கொண்ட பின்னர் அம்மனிதன், மடக்கி வைத்திருந்த தனது இடதுகையைத் திறந்து, அதிலுள்ள பணத்தைப் பார்க்கிறான். அவன் பார்வை விலைப் பட்டியல் பக்கமும் செல்கிறது. பரவாயில்லை. பணம் உள்ளது போலும். முகத்தில் கலவரம் குறைந்துவிட்டது.

வாசுவுக்கு இப்போது ஒரு விபரீத உணர்வு தலை தூக்கியது. அம்மனிதன் கையில் உள்ள பணம், தோசைக்கு மட்டும் போதும் போலுள்ளது. ஒரு சிறு குறும்பு செய்தால் என்ன…? உலகத்துக்கு அவ்வப்போது பாடங்கள் கற்பிக்க வேண்டாமா…?

ஒரு தட்டில் இரண்டு இட்லிகள், வடை, ஒரு மசாலா தோசை எல்லாமே வைத்து, சாம்பார், சட்னி கிண்ணங்கள் சகிதம் அம்மனிதன் இருந்த மேஜைக்குச் சென்றான். இருந்த ஓரிருவரும் சென்று விட்டிருந்தனர். வைத்தியநாதய்யரும் வெளியில் சென்றுவிட்டார்.

“சாப்பிடுங்கோ சார்!” அவன் முன் அவற்றை வைத்தான். அவன் முகம் கலவரமடைந்தது. இப்போது பீதியாக மாறிவிட்டது. முகத்திலிருந்து நன்றாகவே தெரிந்தது, வற்றுக்கெல்லாம் அவனிடம் பணம் இல்லையென்று!

‘வேண்டாம்… எனக்கு இதுக்கெல்லாம் கொடுக்கப் பணம் இல்லை… “

நல்ல குடும்பம் மட்டுமல்ல, நாணயஸ்தன் கூட. நல்ல மனதும் உண்மைதான் சொல்ல வேண்டும் என்ற உறுதியும் உள்ளவன்.

குறும்பு செய்ய நினைத்த எண்ணத்துக்கு வெட்கப்பட்டுக் கொண்டான் வாசு. மனம் மாறி, இப்போது கருணை உருவெடுத்தது.

“சார், நீங்க கேட்டது தோசைதான். இதெல்லாம் நானாக் கொடுக்கறது… நீங்க கேட்டதுக்கு மட்டும் பணம் கொடுத்தாப் போதும். சும்மா சாப்பிடுங்கோ!”

தயங்கினவனைப் பார்த்துத் தொடர்ந்தான் வாசு. “சொல்றதைக் கேளுங்கோ… நான் சர்வரா இருக்கலாம். ஆனா, எனக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்கு. நீங்க தைரியமா சாப்பிடுங்கோ!” வாசுவுக்கே ஆச்சரியமாக இருந்தது. ஒரு ஐந்து நிமிஷங்களில் தனது மனம் மாறிய விதம்! ஆண்டவன் படைப்பில் அன்பு எப்போதுமே தலைதூக்குகிறது என்று அவனுக்குத் தெரிந்தது.

தயங்கிய அம்மனிதன் சுற்றிலும் எவருமில்லை எனத் தெரிந்து கொண்ட பிறகு சாப்பிட ஆரம்பித்து, நல்ல பசி போலும்… முடித்தும்விட்டான். அதைத் தெரிந்து கொண்ட வாசு, இரண்டு காபிகளுடன் மேஜைக்கு வந்தமர்ந்தான்.

“எனக்கு உபகாரம் செய்யணும்னு ஒங்களுக்கு எப்படி…?”

“ஒங்களெப் பத்தி மொதல்ல சொல்லுங்கோ!”

“நான் வேற ஊர்… எனக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்லே. நல்ல வசதியான குடும்பம்தான். படிப்பிலே எல்லாம்கூட நல்ல மார்க்கு. எப்பவுமே கிளாஸ்ல மூணாவது நாலாவது ரேங்க்குக்குள்ளே வந்துடுவேன். ப்ளஸ் டூலே ரொம்ப நல்ல மார்க்கு. எனக்குப் படம் வரையணும்னு சின்ன வயசிலேருந்து ஆசை. எங்கப்பா ஒரு இன்ஜினீயர். அவருக்கு நான் ஐ.ஐ.டி-யிலே சேரணும்னு ஆசை.

எனக்குக் கலைக்கல்லூரியிலே சேரணும். பிரான்ஸுக்குப் போகணும்… லூவர் மியூஸியத்தைப் பார்க்கணும். ஒரிஜினல் மோனாலிசா படம் பார்க்கணும்னு எல்லாம் கனவு காண்பேன்…”

“நிறுத்துங்கோ… அதெல்லாம் பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாது. நான் நான் ஒரு பூஜ்யம்… மார்க்கு நெறைய வாங்கறவாளுக்கெல்லாம் மேலே படிக்கணும்னு தோணாதோ..? மார்க்கே இல்லாமே, எனக்கு நெறைய படிக்கணும்னு ஆசை இருக்கே!'”

‘ஒங்களைப் பாத்தா எனக்குப் பாவமா இருக்கு!”

பரிதாபம்! இவனுக்கு வாசுவைக் கண்டால் பாவமாக இருக்கிறதாம்! வாசுவுக்குப் புரியவில்லை… இதென்ன கண்றாவி! இவனைப் பார்த்தல்லவா வாசு பரிதாபப்படுகிறான்! புரியாத வாசு கேட்கிறான் – “ஏன்…?”

‘ஏன் படிக்கணும்னு ஆசை…?”

“நல்லா மேலே வரலாமேன்னுதான்!”

“அப்போ நல்லா படிச்சவங்க எல்லாமே மேலே வளர்றதா ஒங்க எண்ணமா……?”

“அப்படித்தானே இருக்கும்…?”

“படிச்சப்புறம் வர்ற ஏமாற்றத்தைவிட, படிக்காம வர்ற ஏமாற்றம் குறைச்சல்தான்…” தொடர்ந்தான் ‘ஒங்களுக்கு இந்த வேலை பிடிக்கலையா…?”

அவன் அவன் கேட்ட பிறகுதான் வாசுவுக்கு அந்தக் கேள்வி முதல் தடவையாக மனதில் பட்டது!

“பிடிக்கலைன்னு சொல்ல முடியாது…”

‘ஒரு விஷயம் யோசனை பண்ணிப் பாருங்களேன், எனக்குப் பசி… பணம் இல்லை… நீங்க எனக்கு வயிறாரப் போட்டு நல்லாப் பண்ணியிருக்கீங்க… ஒங்களாலே முடிஞ்சது. ஆனால், என்னாலே அது முடியும்னு நெனைக்கிறீங்களா…?”

‘ஆனா, இதெல்லாம் என் சொந்த பண்டங்களில்லையே!”

”அப்படிச் சொல்லாதீங்க… யாராவது எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. சிபாரிசு செஞ்சதனாலே பிரதம மந்திரி நிதியிலேருந்து ஒரு லட்ச ரூபா இன்னார் இதய ஆபரேஷனுக்காகக் கொடுக்கப்பட்டதுன்னு நியூஸ் பேப்பர்ல விளம்பரப்படுத்திக்கிட்டு நல்ல பேர் வாங்கிப்பாங்க. ஆனா, அந்தப் பணம் அந்த எம்.பி-க்கோ, எம்.எல்.ஏ-க்கோ, பி.எம்-முக்கோ சொந்தமானதில்லையே!”

“பின்னே…?”

“எல்லாம் பொதுஜனம் பணம்தான். அந்த வரி, இந்த வரின்னு போட்டு வாங்கறாங்க இல்லையா…? ஒங்களெக் கேட்டா, அந்தப் பணத்தை அவர்கள் இதய ஆபரேஷனுக்குத் தந்தாங்க…?”

 “இல்லே… எங்கேயோ தட்றது… சரியாயில்லே, நீங்க சொல்றது…”

“சரியில்லைதான்… சரியாப்படாது. நானும் இதுமாதிரி உதாரணம் காட்டக் கூடாதுதான். ஏன்னா, ஜனநாயகம்கிறதுல எம்.பி-யும் எம்.எல்.ஏ-யும் நம்பளை ரெப்ரசண்டு பண்றாங்க… அவங்க கொடுத்தா நாம் கொடுத்த மாதிரிதான்னுகூட சொல்லலாம். ஆனா, இதிலே ரெண்டுலேயும் சில உண்மைகள் இருக்கு…”

‘அதாவது நான் ஒங்களுக்குக் கொடுத்தது போல அவர்களுக்கும் தோணியிருக்குங்கறீளா?”

“எல்லோருக்குமே இன்னொருத்தருக்குக் கொடுக்க ணும்கற நினைவு இருக்கும். கெட்டவன்னு ஒருத்தருமே இல்லே. பழிவாங்கணும்னு நெனைக்கிறவன்கூட நெகிழ்ந் துடறது சாதாரணம்தான்!”

எவ்வளவு சரியாகச் சொல்கிறான் இவன். வாசுவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“ஒரு பணக்காரன் தர்மத்துக்காக ஒரு அநாதை ஆஸ்ரமத்துக்கு ஒரு பெரிய தொகையை செக்கா அனுப்பறதுக்கும் உங்க மாதிரி ஒருத்தர் ஒரு தட்டு சாப்பாடு கொடுக்கறதுக்கும் நெறய வித்தியாசம் இருக்கு…”

“எப்படி?”

‘அந்த செக் அனுப்பறவன் புண்ணியம் சம்பாதிச்சுக் கலாம். ஆனா, நான் சாப்பிட்டப்போ நீங்க பாத்து எஞ்சாய் பண்ண மாதிரி அந்தப் புண்ணியவானால் நெனச்சுக்கூடப் பார்க்க முடியாது. ஆனா, அந்த ஆஸ்ரமம் நடத்தறவங்களுக்குத் தொகையா பணம் தேவைப்படறது… அதெயும் நெனச்சுப் பாக்கணும். இது நேராக அனுபவிக்கறதிலேருந்து

வித்தியாசப்பட்டது…”

புண்ணியம் செய்வதில் கூட இத்தனை விவகாரங்கள் உள்ளனவா?

“அப்போ கோயில் வாசல்லே உட்கார்ற பிச்சைக்காரங்களுக்குப் போடாதே… அவங்கள்ளாம் சோம்பேறிங்கறாளே…” வாசுவுக்குப் புதுக் குழப்பம்…

“எது வேணாலும் சொல்லலாம். எதை வேண்டுமானாலும் நியாயப்படுத்தலாம். கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்தாப் போதும்… பெரிய மேதாவியாக இருக்காமலேயே, கொடுக்கிறதும் தப்பு; கொடுக்காததும் தப்புங்கிறத சுலபமா, நிரூபிச்சுடலாம்… நிரூபிக்கறது வேறே, நியாயம் வேறே!…”

இந்த ஜன்மம்… ஒரு சாதா தோசை சாப்பிட மட்டும் முடிந்த இந்தப் பிராணி! இவ்வளவு பேசுகிறானே!

“எனக்கு இப்படியெல்லாம் சொன்னாப் புரியாது. தர்மம்னா என்னன்னு மட்டும் சொல்லுங்கோ…

‘அது மனசுக்கு நல்லாத் தெரியும்… ஒருத்தனைப் பார்த்து, அவன் தனக்கு இல்லைன்னு சொன்னால் நாம் இல்லைன்னு சொல்லாம கொடுக்கறதுதான் தர்மம்னு சுவாமி சிவானந்தர் சொல்றார்…

“நீங்க பேசறதைக் கேட்டுண்டே இருக்கலாம் போலே இருக்கு. ஆனா எனக்குக் கொஞ்சம்தான் புரியறது… தர்மத்தைப் பத்தி…”

‘ஆமா… அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தேன் இல்லையா… இல்லைங்கறவங்களுக்கு இல்லைன்னு சொல்லாமே கொடுக்கறதுதான் தர்மம். நம்மகிட்டே இருக்கறதை அது இல்லாதவங்களோட பகிர்ந்துக்கறதுதான்

தர்மம். அந்த மாதிரி பார்க்கப் போனா, செக் கொடுக்கற புண்ணியவானும் தர்மம் செய்யறான்தான். ஆனா, பகிர்ந்து கொண்டு ஆனந்தம் அடையறப்போதான் உண்மையா தர்மமாகிறது. இது என்னோட அபிப்ராயம். இன்கம்டேக்ஸ் கொடுக்காம ஏமாத்தற பணக்காரனும் நியாயப்படுத்துவான். ஒருவேளைக் கஞ்சிக்கில்லாதவன் திருடினப்பறம்கூட நியாயப்படுத்தலாம். ஆனா வித்தியாசங்கள் நெறைய உண்டு. அதைப் புரிஞ்சுக்கிறதலதான் புத்திசாலித்தனம் இருக்கு.” முன்னைவிட இப்போது அதிகக் குழப்பத்தில் இருந்தான் வாசு.

‘உண்மை பேசறது, உண்மையா இருக்கறதுங்கறது படிச்சவங்களுக்கு மட்டும்தான்னு இல்லை. எல்லோருக்கும் தான்… நிறைய பணம் இருக்கறவங்க எல்லாம் கெட்டவங்க இல்லை… எல்லா குரூப்கள்லேயும் நல்லவங்களும் கெட்டவங்களும் இருக்கிறாங்க. மொத்தத்தில் எல்லா இடங்கள்ளேயும் நல்லவங்கதான் ஜாஸ்தி. கெட்டவங்க கொஞ்சம் பேர்தான்…”

‘ஆனா அவங்க வெச்ச சட்டம் நிறைய நடக்கிறதே…”

“கரெக்ட். பேரெட்டோ அனாலிஸிஸ் அப்படின்னு ஒரு தியரி உண்டு. அதாவது பேரெட்டோங்கற ஒரு எகானமிஸ்ட் போன நூற்றாண்டிலேயே கண்டுபிடிச்சுச் சொன்னான். அதை 80-20-ம் பாங்க… கேள்விப்பட்டதுண்டா?”

வாசுவுக்குத் தலை சுற்றியது.

”80-20-னு சொன்னா, இந்த உலகத்துலே, 80 சதவிகிதம் பணம் 20 சதவிகிதம் மனுஷா கையிலேதான் இருக்கு. அந்த 20 சதவிகிதம் மனுஷா சொல்றபடிதான் மத்த 80 சதவிகிதம் பேர் ஆடறாங்க…! இந்த ஓட்டலையே எடுத்துக்கோங்கோ, சின்னதுதான்… ஆறு …ஆறு டேபிள்தான் இருக்கு. மொத்தமே முப்பது நாற்காலிதான். இதுலேகூட பாருங்கோ… வர்ற ஜனங்கள்ளே 80 சதம் பேர் இருக்கறதை, கொடுக்கறதைச் சாப்பிட்டுவிட்டு பேசாம பில்லைக் கொடுத்துட்டுப் போயிடுவாங்க. ஒரு இருபது சதம் பேர்தான் எல்லாத்துலேயும் தப்பு சொல்லுவாங்க… சண்டை போடுவாங்க… இல்லையா…?”

“கரெக்டா சொல்றேள்.’

‘ஆனா, நீங்க என்ன செய்வீங்க… அந்த இருபது சதம் பேருக்குத்தான் ஜாக்கிரதையாக் கவனிச்சுக்குவீங்க.”

“கரெக்ட்!”

“அதுலே என்ன விசேஷம்னா, அந்த இருபது சதவிகிதம்காரன் போடற சண்டையாலே மத்தவங்களுக்கும் நல்லது கெடச்சுடறது. அதுதான் இயற்கையா நடக்கறது…

‘இவ்வளவு சமாசாரம் இந்த ஓட்டல்லேயே இருக்கா…!

‘ஆமா… பக்கத்திலிருந்து பார்த்தாத்தான் தெரியும் – தர்மத்தைப் பத்தி சொன்னேன் இல்லையா? மழை எப்படி பெய்யறது?”

“இதென்ன கேள்வி? ஆகாசத்திலிருந்து கொட்றது…”

‘அதான்… ஆகாசம் கடல்லேருந்து ஆவியா வர்ற நீரைச் சுமந்துண்டு போயி எங்கேயோ மலையிலே முட்டி மழையாக் கொட்றது. ஆகாசம் வாங்கினது சமுத்திரத்திலேருந்து, கொட்டறது என்னமோ மலைச்சாரல்லே!”

வாசு அதிர்ந்துவிட்டான் – சாதாரண சமாசாரங்களையே இவன்  வேதாந்தம் போலல்லவா பேசுகிறான்! “இவ்வளவு சமாசாரம் தெரிஞ்சு வெச்சுண்டு, மேலே படிச்சு டிகிரியெல்லாம் வாங்கணும்னு தோணவே இல்லையா ஒங்களுக்கு…?”

வெடியாகச் சிரித்தான் அந்த அந்நியன்! “பாத்தீங்களா எப்படி ‘டிகிரி’க்கு மனிதனை அடிமையாக்கிவிட்டது இந்தச் சமுதாயம்…! தொழில்களால்தான் ஒரு நாடு முன்னேறலாம். டிகிரியாலே இல்லை. இப்ப நான் ஒரு கேள்வி கேக்கறேன்… நீங்க பதில் சொல்லுங்கோ…”

ஊம்.

“நல்லா படிச்சு, ஐ.ஐ.டி. முதலான பெரிய கல்லூரிகள்ளே படிச்சப்புறம் முக்கால்வாசிப் பேர் என்ன செய்யறாங்க…?”

தெம்பு வந்தது வாசுவுக்கு… இந்தக் கேள்விக்கு அவனுக்குப் பதில் தெரியும்…

“அமெரிக்கா போவாங்க…!”

 வாசுவுக்குத் தைரியம் வந்தது. “கோடிவீட்டு ராமபத்ரன் அமெரிக்காலே இருக்கான். அவங்க அப்பா அம்மா எவ்வளவு பெருமையா சொல்லிக்கிறா தெரியுமா…!”

“கரெக்ட்… இந்தியாவிலே இப்ப இல்லையா…?”

 “இல்லை… ” திடீரென்று வாசுவுக்குப் பயம் வந்தது. இந்த மனுஷன் எங்கேயோ மடக்கப் பார்க்கிறான்!

‘அப்படின்னா இந்தப் படிப்பு இந்த ஊருக்கு அவசியமில்லைன்னு ஆயிடறது இல்லையா?”

வாசுவுக்கு சவுக்கால் அடிப்பது போலிருந்தது… சமுத்திரத்திலேருந்து தண்ணியெடுத்து ஆகாசம் மலையிலே ஏன் பொழிகிறது!

வாசு குழப்பத்துடன் நோக்கினான்.

“பயந்துடாதீங்க… அதை நான் தப்புன்னு சொல்லல்லே! ஆனா, இங்கேயே இருந்து கொண்டு நல்லது செய்யணும்னு ஆசைப்படறவங்களும் அதிலே இருக்காங்க… நான் சொல்ல வந்தது என்னன்னா, நல்லது செய்யணுங்கறதுக்குப் படிச்சுதான் ஆகணும்னு ஒண்ணும் இல்லை. நீங்க இருக்கீங்க… எவ்வளவு நல்லது செய்யறீங்க! எனக்கு ஒலகமே மோசம்னு இன்னி காலைவரை நெனப்பு இருந்தது.  ஒங்க கையாலே சாப்பிட்டப்புறம் ஒரு ஓட்டல் சர்வர் இவ்வளவு நல்லது செய்யறப்போ நானும் ஏன் நல்லதா நெனக்கக் கூடாதுன்னு தோணறது.   ஒங்களாலே எனக்கு ஒரு ஞானோதயமே ஆயிருக்கு தெரியுமா… நான் ஒங்களைவிட நல்லா படிச்சவன். இன்னிக்கு ஒங்களைப் பாத்தப்பறம்தான் உலகமே வேறுவிதமாகத் தெரிகிறது. நீங்க எனக்குச் சாப்பாடு போடல்லே, ஒரு பாடமே கத்துக் கொடுத்துட்டீங்க. அதனாலேதான் சொல்றேன்…”

அதற்குப் பின்னும் அவன் பேசிக் கொண்டே சென்றான்… ஆனால், வாசு உடலால்தான் அங்கு இருந்தானே தவிர, உள்ளம் அலையாய்ப் பாய்ந்து கொண்டிருந்தது.

“…வர்றேன்…” இதைச் சொன்ன பிறகுதான் அந்த மனிதன் எழுந்துவிட்டதைத் தெரிந்து கொண்டான் வாசு.

**************

வைத்தியநாதய்யருக்கு ஒன்றுமே புரியவில்லை. நேற்று வரை சிடுமூஞ்சியாக இருந்த வாசு இன்று சொல்கிறான் ”மாமா நான் ஒரு பிளான் சொல்றேன்… நம்ம ஓட்டலையே பிரமாதமா ஆக்கி இந்த ஊரே புகழ்ற மாதிரி செய்றேன் பாருங்கோ…!”

9.11.1997,

ஆனந்த விகடன்

நரசய்யா/ஆயுள் தண்டனை – விருட்சம் நாளிதழ்

One Comment on “நரசய்யா/முரண்பாடுகள்”

Comments are closed.