நரசய்யா/சுமை

“… வேடிக்கையாக இல்லையா?
உன்னில் நீ முழுமையையும்
நிறைவையும் அனுபவிக்கும்போது
லேசாக உணர்கிறாய். ஆனால்,
உன்னில் நீ வெறுமையைப்
பெறும்போது, நீ உணர்வது
உன்னையே அழுத்தும் ஒரு பெரிய
பளுவை… அது உன்னை நசுக்குவதை!

(இந்திராகாந்தி, தனது கணவர் பெரோஸ் காந்தி இறந்த பிறகு தனது ஸ்நேகிதி டோரத்தி நார்மனுக்கு எழுதிய கடிதத்திலிருந்து)

அலை வந்து சென்ற பிறகு நனைந்திருக்கும் அந்தக் கடற்கரை மணலில் சில நண்டுகள் வந்து சென்ற அடையாளம் ஒரு நவீன சித்திரத்தின் வரைபடம் போல – ஒரு கிராஃபிக்ஸ்
படம் போல் அமைந்திருந்தது.
பார்ப்பதில்தான் கலை உருவம் தெரியுமெனில், இது சந்தேகமின்றி ஒரு கலை உருவம்தான்.
கடலலைகளுக்குத் தாங்கவில்லை! ஒரே கணத்தில் வந்து அந்த கலைக்கோலத்தை அழித்துவிட்டுச் சென்றுவிட்டது. அதற்கு என்ன அவ்வளவு அவசரம்? அவசரம் என்பது ஒரு கால நிர்ணயம்தானே? அலைக்கு அந்த நேரம் பல மணிகளாகத் தேவர்களின் நிமிடங்கள் நமக்கு தோன்றியிருக்கலாம் வருடங்களாக ஆவதைப் போல. நண்டுகளைக் காணவில்லை. வேறு இடங்களுக்கு அவை குடிபெயர்ந்திருக்கலாம். இருட்டு வேகமாகவே ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டது. சுமார் பன்னிரண்டு மணி நேரம் காத்துக் கொண்டிருந்த இரவுக்குப் பொறுக்கவில்லை போலும்! பகலை இரவு வென்றதா, இல்லை அரவணைத்துத் தன்னுள் ஐக்கியமாக்கிக் கொண்டுவிட்டதா? குளிருக்கு இழுத்துக் கொள்ளும் போர்வையைப் போல இருளைத் தன் மேலே பகல் இழுத்துக் கொண்டுவிட்டதோ? யார் ஜெயித்தது? இப்போதைக்கு இரவாக இருக்கலாம். ஆனால், காலையில் பகல் ஜெயித்துவிடாதா என்று நினைத்துத் தனக்குள் சிரித்துக் கொண்டாள் மைத்ரேயி.
வெடிக்கும் பட்டாசுகள், மத்தாப்புகள், குழந்தையின் சிரிப்பு, பொங்கும் பால், ஃபில்டரில் காபி பவுடரைப் போட்டுக் கொதிக்கும் நீரை ஊற்றியவுடன் வரும் வாசனை எல்லாமே மைத்ரேயிக்குப் பிடித்த விஷயங்கள். வாய்விட்டுச் சிரிப்பது, மனதை மற்றவர்களுக்குத் திறந்து காட்டுவதாகும் என்று நம்பினாள். பிறகுதான் தெரிந்தது சமுதாயம் சொல்வதற்கும் செய்வதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளதென்று. நல்ல தாய் தந்தையர். நன்றாகவே வளர்த்தனர். சுதந்திரமாகத் தான் வளர்ந்தாள்.ஒளிவுமறைவு இன்றிப் பேசும் தந்தை சொல்வார், ‘பள்ளிக்கூடங்கள் உன் படிப்பைக் குறுக்கிட விடாதே’… நன்றாகக் காயவைக்கப்பட்ட பட்டாசுகள் பற்றவைத்தவுடன் திடீரென வெடிப்பதைப் போல் இருக்கும் அவர் சிரிப்பது.
இப்போது அவர்கள் இருவருமே இல்லை. தன்னந்தனியாக நிற்கும் இவள், இப்போது ஒரு தனிமரம்தான்! திருமணம் ஆகாமல் இருக்கவில்லை. நன்றாகத்தான் நடந்தது. எல்லோரும் பார்த்துத்தான் செய்தார்கள். நல்ல மனிதன்
என்றுதான் எல்லோரும் சொன்னார்கள். அந்த நேரத்தில் தாயாருக்கு விருப்பமில்லை என்றாலும் எல்லோரும் சொன்னதால் தாயாரும் ஒதுங்கிக்கொண்டுவிட, திருமணமும் வைபவமாக நடந்தேறியது.
இரண்டு வருடங்களுக்குள் என்னவெல்லாம் நடந்து விட்டது! ஆரம்பத்தில் ‘மைது… மைது’ என்று அவளை சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்த அவனில் எப்போது மாற்றம் வந்தது? தெரிந்துகொள்ளும் முன்னரே காலம் கடந்துவிட்டது. இரு மனிதர்களுக்கிடையில் இவ்வளவு வித்தியாசம் இருக்க முடியுமா? எப்படி வரும்? வந்துவிட்டதே! படிப்பில் இருவருமே குறைவில்லை. வேலையிலும் குறைபாடில்லை. ஒருவரை யொருவர் புரிந்துகொள்ள இயலாத நிலைக்கு எப்படித் தள்ளப்பட்டார்கள்? எப்போது தள்ளப்பட்டார்கள்?
இப்போது இவள் பார்த்த பகல் இரவாக மாறியது போலத்தான். எப்போது எப்படி என்று தெரிந்து கொள்ளுமுன்னரே முடிந்தும் விடுகிறது. உணர்வுகள் முதுமையடையுமுன்பே நிகழ்ச்சிகள் நடந்து விடுகின்றன. நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து உணர்வுகளை வளர விட இயலாத நிலையில் காலம் ஓடுகையில் யாரால் என்ன செய்ய இயலும்? பகலும் இரவும் போலத்தான். யார் ஜெயித்தது? இப்போதைக்கு இரவாக இருக்கலாம். ஆனால், காலையில் பகல் ஜெயித்து விடாதா?
இவற்றைப் பின்னோக்கிச் செலுத்த முடியாதபோது, நம்மையறியாமல் நாமும் நிகழ்ச்சிகளின் பிடிப்பில் சிக்கிக் கொள்வதைத் தவிர, வேறு என்ன செய்ய இயலும்? மைத்ரேயியின் வாழ்க்கை அப்படித்தான் தள்ளப்பட்டு விட்டதோ? நிகழ்ச்சிகளின் அடிமைகளாக எல்லோரும் வாழ்கிறார்கள். தனக்கும் அதே கதிதானா?
அந்த மாதிரிதான் தானும் சிக்கிக் கொண்டு விட்டோமோ என்ற எண்ணம் தலைதூக்க முயன்றபோது இவளே அதை ஒதுக்கி நிறுத்தினாள். இம்மாதிரி உணர்வுகள் வந்து தன்னைக் கோழையாக்கிவிடக் கூடாது என உறுதி கொண்டதை நினைவுறுத்திக் கொண்டாள். மனதின் சுமையை எப்படியாவது இறக்கிவிட வேண்டுமென்றுதான் நினைக்கிறாள். ஒரு நாளில் சுமார் ஒன்பதிலிருந்து பன்னிரண்டுமணி நேர அளவில் வேலை செய்தும் கூட அவளால் தான் நினைத்தபடி மனத்தின் சுமையை இறக்கிவிட முடியவில்லை.
ஒரு ஸ்நேகிதி சொன்னது நினைவுக்கு வந்தது. சுப்புலெட்சுமி என்ற பெயர் கொண்ட அவளை எல்லோரும் அழைப்பது சுசுமி என்றுதான். நல்ல வைதீக குடும்பத்தில் பிறந்திருந்த அவள், இரண்டு கல்யாணங்கள் செய்துகொண்ட பிறகும் தனித்தே வாழ்கிறாள். முடிந்தால் எவருடனேனும் வாழத்தயார். ஆனால், திருமணம் என்ற பந்தம் கூடாது என்று அடித்துச் சொல்கிறாள். இப்போது கூடத் தன்னைவிட வயதில் சிறியவனுடன்தான் வாழ்ந்து வருகிறாள்.
அவள் சொன்னாள்: “மைது, சென்ற காலத்தை நம்மால் ஒதுக்கிவிட முடியாது. முழுமையான நிகழ்காலம் என்ற ஒன்றும் கிடையாது. சென்ற காலம் தனது அடிச்சுவடுகளைப் பதித்துவிட்ட நிகழ்காலத்தில்தான் நம்மால் வாழ முடியும். ஆகையால், நான் நிகழ் காலத்தில் மட்டும்தான் வாழ்வேன் என்று அடம்பிடிப்பது அபத்தம். ஆனால் நான், தெரிந்து சென்ற காலத்தைப் பழிவாங்க நினைக்கும்போது என்னால் முடிந்தவரை, நிகழ்காலத்தில் சென்ற காலத்தை வைத்து, அதை நிறுத்தி, அதன் தாக்கத்தைக் கொண்டே அவமானப் படுத்துகிறேன். ஏன் தெரியுமா? மனிதர்களைவிட காலத்தைப் பழிவாங்குவது சுலபம்! மனிதர்களை மட்டும் பழிவாங்கும் போது காலம் தப்பிவிடலாம். ஆனால், காலத்தையே பழிவாங்கும் போது மனிதர்களும் சேர்ந்து அவதிப்படலாம்! ஆனால், சென்ற காலத்தை ஒதுக்கிவிட மட்டும் முடியாது! அது என் வாழ்வுடன் இணைந்துவிட்ட ஒன்று!
அந்த நாட்களில் யயாதி என்ற ஒரு அரசன் இருந்தானாம். ஆனபோதும் முதியவனாக அவனது மனம் அவன் இளமையிலேயே வாழ்ந்தது. இன்பத்தை வேண்டிய அவன், தன் குமாரர்களில் எவரேனும் தங்கள் இளமையைத் தனக்குத் தர வேண்டினானாம். அனைவரிலும் சிறியவனான கடைசிக் குமாரன் தந்தைக்குத் தனது இளமையை அளித்துவிட்டானாம். அதை அடைந்து பூரிப்படைந்த யயாதி இளமையில் திளைத்து
காலத்தை நன்கே கடத்தி வந்தபோது, திரும்பவும் முதுமை உணர்ந்தான்! இரண்டாவது சுற்றும் முடியும் நிலையில்தான் அவன் தெரிந்து கொண்டான்… ‘ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதால் ஆசைகள் அடங்கிவிடுவதில்லை! மாறாக, அவை அதிகமாகத்தான் ஆகின்றன! தீயில் வெண்ணெய் இடுவதற்கு ஒப்பாகும்’ என்று.’
சுசுமியுடன் பேசிக்கொண்டிருந்தால் பொழுதுபோவதே தெரியாது. அவள் சொல்வதையெல்லாம் ஒப்புக் கொள்வது முடியாது. ஆனால், அவள் சொல்வதை அவள் முற்றும் நம்புகிறாள்… அவளால் முடிகிறது… தன்னால் முடிய வில்லையே என்றுதான் மைத்ரேயியால் நினைக்க முடிகிறது.
இப்போது மொத்தமாக இருள் சூழ்ந்துகொண்டுவிட்டது. தனியாக நடந்துவரும் அவளை இரு ஆடவர்கள் திரும்பிப் பார்த்துவிட்டுச் செல்கிறார்கள். தனியாக, இருட்டில் ஒரு பெண் நடந்து செல்வது அவர்களுக்கு விசித்திரமாகப் படுகிறது!
தனது சிறிய புதிய காரில் ஏறி அமர்ந்து சாவியை வைத்து ஸ்டார்ட் செய்த பிறகுதான் எங்கே போவது என்று யோசித்தாள். அவளது இன்றைய நிலை இதுதான்!
திடீரென ஞாபகம் வரவே, மெக்கானிக் மாரியப்பன் வொர்க்ஷாப் நோக்கி ஓட்டினாள். அவள் வைத்திருந்த பழைய காரை பல வருடங்களாக மெக்கானிக் மாரியப்பன்தான் பழுதுபார்த்துக் கொண்டிருந்தான். அது மட்டுமல்ல, வீட்டில் எந்த வேலையாயினும் அவன்தான் செய்து தருவான். சின்ன வயதிலிருந்தே தெரிந்தவன். முறையாகப் பயிலவில்லை யாகினும் எல்லாவிதப் பழுதுகளையும் சரிசெய்துவிடுவதில் காலம் அசகாயசூரன்! வீட்டின் ப்ரெஷர் குக்கரிலிருந்து, கார் வரை… இப்போது எல்லாமே அவன்தான்! ஆனால், மாறிவிட்டது. புதுகார் வாங்கினதிலிருந்து கார் மட்டும் கம்பெனியில்தான். மற்றபடி சிறு ரிப்பேர்கள் எல்லாம் மெக்கானிக் மாரியப்பன்தான்.
அவனைப் பார்க்க அவள் செல்வது இரண்டு விஷயங்களுக்காக, ஒன்று சமையலறைக்குழாய் சொட்டிக் கொண்டிருப்பதை நிறுத்துவதற்கு.
இரண்டாவதும் ஆனால், முக்கியமானதுமான காரணம் அவன் வளர்த்து வரும் இரண்டு வயது நிரம்பிய பெண் குழந்தை ராணியைப் பற்றித் தெரிந்து கொள்ளத்தான்.
மெக்கானிக் மாரியப்பன் ஒரு நாள் இவளுக்குத் தனது கதையைச் சொல்லிக் கொண்டிருந்தான்… “கல்யாணம் செஞ்சு வெச்சப்போ ஒண்ணும் ப்ராப்ளம் இல்லேம்மா. நல்லாத்தான் இருந்தா.ஊரெல்லாம் சுத்தினோம். எங்க ஆளுங்கள்ளேயே இவதாம்மா அழகா இருப்பா. எங்க அம்மா சொல்லுவா, ‘இம்புட்டு அழகா ஒரு பொம்பளை நம்மாளுங்களுக்குள்ளே இல்லேடா. கண்ணுபடாம பாத்துக்கணும்டா’ம்பா. ஒரு வருஷத்துலே வயித்துவலின்னு சொல்ல ஆரம்பிச்சா. ஜாஸ்தி ஆயிட்டே போச்சு. நடுவுலே நாலு மாசம் குளிக்காம இருந்துச்சு. அதுக்காகத்தாம்மா டாக்டர்கிட்டே கூட்டிகினு போனேன்.”
தனது கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டு மாரியப்பன் தொடர்ந்தான்: “அம்மா சந்தோஷப்பட்டா. டாக்டர்கிட்டே கூட்டிகிட்டுப்போக அம்மாதான் சொல்லிச்சு. பாத்த டாக்டர் ஒடனே ஏதோ படம் எடுக்கணும்னு சொல்லிடுச்சு. எக்மோர்கிட்ட ஒரு எடத்துலே போயி நெறய பணம் கொடுத்துதான் என்னமோல்லாம் செஞ்சாங்க. கடைசியா அவளைப் பாத்து என்னையும் பாத்து ஏதேதோ பேசிக் கிட்டாங்க. எனக்கு அவங்க பேசிக்கறதைப் பார்த்துப் பயமா இருந்தது. ‘ஏம்ப்பா கொஞ்ச நாளைக்கு முன்னாலேயே கூட்டிக்கிட்டு வரலே?’ன்னாங்க. எனக்கு ஒண்ணும் புரியல்லே.”
நிறுத்திவிட்டுக் கூரையைப் பார்க்க ஆரம்பித்தான். அவனது எண்ணங்களைத் தடை செய்யக்கூடாது என மைது ஒன்றும் பேசாது அமர்ந்திருந்தாள்.
தொடர்ந்தபோது அவனது ஏக்கம் நன்றாகவே தெரிந்தது. ‘குழந்தை பொறக்கறதுலே சில கஷ்டங்கள் இருக்கலாம்னு டாக்டர் சொன்னப்போ எனக்கு ஒண்ணும் புரியல்லம்மா… குழந்தையா,தாயான்ன பாக்க வேண்டியிருக்குன்னபோது தான்
‘அம்மாவும் நானும் அவளோட ரெண்டு நாளாப் பேசிப் பார்த்தோம். குழந்தையை எடுத்துடலாம்னா அவ ஒரே அட்டகாசம் செஞ்சுட்டா – ‘குழந்தையைக் கொல்லணுமா நான் பொழைக்க? வேண்டவே வேண்டாம். நான் செத்தாலும் பரவாயில்லே’ன்னுட்டா. எனக்கும் எங்கம்மாக்கும் ஒண்ணுமே புரியல்லே. கடவுள் மேலே பாரத்தைப்போட்டோம். ஆனா, கடைசியிலே இவளெப் பெத்துப் போட்டுட்டு அவ போய்ட்டா. என்னோட அம்மாதான் குழந்தையைப் பார்த்துக்கிட்டிருந்தா. அவளும் அழுது அழுது ஒரு நா என்னையும் இவளையும் விட்டுட்டுப் போய்ட்டா…” தன்னையும் அறியாமல் அழ ஆரம்பித்த அவனை ஒரு மாதிரியாக சமாதானப்படுத்திவிட்டு வந்தாள் மைது.
இது நடந்து ஒரு வாரமாகிறது. இந்த ஒரு வாரமாக அவள் மனத்தை உறுத்திக் கொண்டிருக்கும் எண்ணத்தை வெளிப் படுத்த இன்று நிச்சயம் செய்து கொண்டாள். அந்தக் குழந்தையை அதாவது ராணியைத் தன்னிடமே மெக்கானிக் மாரியப்பன் தந்துவிட்டால், தான் அந்தக் குழந்தையை வளர்த்து வரலாம். மெக்கானிக் மாரியப்பனின் சுமை குறையும். தனது சுமையும் தனிமையும் தவிர்க்கப்பட இதைவிட வேறு சிறந்த வழி இல்லையென்று நிச்சயித்துக் கொண்டாள்.
அன்று அவளுக்கும் அவனுக்கும் நடந்த சம்பாஷணை தனிப்பட்ட இரு மனிதர்களுக்கிடையில் நடந்த ஒரு குருஷேத்ர மஹா தர்க்கம். தனிப்பட்ட இரு மனநிலைகள். நமக்குப் புரியலாம். ஆனால், நாம் புரிந்து கொள்வது, அவரவர் மனநிலையைப் பொறுத்துத் தவறாகவோ, சரியாகவோ தோன்றலாம்.
மொத்தத்தில் தனது மனச்சுமையை இறக்க அவள் வேண்டியது அக்குழந்தைச் சுமையை. ஆனால் அவன் குழந்தையைச் சுமையாக நினைக்கவேயில்லையே! மாறாக, தான் வாழ்வதே அக்குழந்தையின் நிமித்தமெனவே எண்ணுகிறான்! அவன் பேச்சில் ஒரு மானிட வாழ்வின் பொருளே இருப்பது மைதுவுக்குப் புரிய ஆரம்பித்தது.
மெக்கானிக் மாரியப்பன் சொன்னதன் பொருள் இதுதான்:
சோகமும் இழப்பும் வேதனையையும் வலியையும் தரும். அதுதான் இயற்கை. ஆனால், அதன் மூலம் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள முடியும். அவற்றின் மூலம்தான் நம்பிக்கையும் தைரியமும் பிறக்கின்றன. இவற்றின் முடிவுதான் வாழ்க்கையின் உற்சாகம். உயிர் வாழ்வதன் பலன் அவள் நினைத்துக் கொண்டாள் – அதைத்தான் ‘dignity in suffering ‘ என்கிறார்களோ?
இந்த ரகசியத்தைச் சுசுமி புரிந்து கொண்டதற்கும் மெக்கானிக் மாரியப்பன் புரிந்து கொண்டதற்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. அவர்கள் அமைத்துக் கொண்டுவிட்ட வாழ்க்கைகளும் மாறுபட்டவைதாம். ஆனால், இருவர் உள்ளங்களிலும் நம்பிக்கையும் தைரியமும் வேரூன்றிருப்பதில் சந்தேகமேயில்லை!
மைதுவுக்கு இந்த சம்பாஷணையின் மூலம் தனது சுமையை இறக்க ஒரு வழி இருப்பது மட்டும் நன்றாகவே தெரிகிறது!

15.7.2001,
ஆனந்த விகடன்

நரசய்யா/முரண்பாடுகள் – விருட்சம் நாளிதழ்

One Comment on “நரசய்யா/சுமை”

Comments are closed.